சிவ லிங்கங்களோடு இணைந்த சிறப்புமிக்க தீர்த்தங்கள்



சில சிறப்புமிக்க ஆலயங்களில் மூலமூர்த்தியான சிவலிங்கத்திற்கு குறிப்பிட்ட கிணற்றிலிருந்து கொண்டு வருகின்ற தண்ணீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. வேறு தீர்த்தங்களைக் கொண்டு அபிஷேகம் செய்தால், இந்தச் சிவலிங்கங்கள் சில்லு சில்லாகப் பெயர்ந்து விடும் என்கின்றனர். இவ்வாறான சில செய்திகளை இங்குக் காணலாம்.

*அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான திருக்கடவூரில், மார்க்கண்டேயரால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் அமிர்தகடேஸ்வரர் எனும் பெயரில் உள்ளது. இந்த மூலத்தான லிங்கம் அமுதத்தால் ஆனது. இந்த லிங்கத்திற்கு, இந்த கோயிலுக்கு நேர் கிழக்கில் ஏறத்தாழ 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ள (திருக்கடவூர்மயானம்) திருமெஞ்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்குத் தெற்கிலுள்ள அசுபதி தீர்த்தத்தால் மட்டுமே இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தீர்த்தம் நான்குபுறமும் சுவர் எழுப்பிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து தினமும் மாட்டுவண்டி மூலம் பெரிய செப்புப் பாத்திரங்களில் தண்ணீரைக் கொண்டுவந்து அபிஷேகம் செய்கின்றனர்.

*காளத்தியிலுள்ள காளத்தியப்பர் லிங்கம், நாகங்களின் பாஷாணத்தால் உண்டாக்கப்பட்டதென்று கூறுகின்றனர். இதற்குச் சூரிய தீர்த்தம் எனும் கிணற்று நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த நீருடன் பச்சைக் கற்பூரம் சேர்த்து அபிஷேகம் செய்கின்றனர். இந்தத் தீர்த்தத்தை சங்கு வடிவமான செப்புப் பாத்திரத்தில் முகந்து அன்பர்களுக்குப் பிரசாதமாக அளிக்கின்றனர்.

இந்த சூரிய தீர்த்தம், ஆலயத்திலிருந்து சொர்ணமுகி ஆற்றிற்குச் செல்லும் வழியில் சிறு மண்டபத்திற்குள் உள்ளது. இதனையொட்டி அமைந்துள்ள சிறு சந்நதியில் சிவபெருமான் சிவசூரியனாக எழுந்தருளியிருக்கிறார்.

*தொண்டை நாட்டுத் திரிபுராந்தகத் தலமான திருவிற்கோலம் இந்நாளில் கூவம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் சிவலிங்கமூர்த்திக்குத் திரிபுராந்தகேஸ்வரர் என்பது பெயராகும்.

இந்தச் சிவலிங்கமூர்த்திக்கு 2 கி.மீ தொலைவில் ஓடும் கூவம் ஆற்றிலுள்ள திருமஞ்சன மேடை என்ற இடத்திலிருந்து நீர் கொண்டுவந்து நான்கு காலங்களிலும் அபிஷேகம் செய்யப்படுகிறது. வேறு தண்ணீரைக் கொண்டு அபிஷேகம் செய்தால், சுவாமி மீது சிற்றெறும்புகள் படர்ந்து விடும் என்கின்றனர்.*காவிரிக் கரையிலுள்ள தலம் வாட்போக்கி எனும் இரத்தினகிரி மலையாகும். இங்குள்ள மலைமீது பெருமான் இரத்தினகிரீஸ்வரர் எனும் பெயரில் எழுந்தருளியுள்ளார்.

இப்பெருமானுக்கு தினமும் காவிரியாற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்கின்றனர். அபிஷேக பண்டாரத்தார் எனும் வகுப்பார் ஆண்டாண்டு காலமாகக் காவிரியிலிருந்து மலைக்கோயிலுக்கு நீர் எடுத்துச் சென்று அபிஷேக சேவை செய்து வருகின்றனர். இவ்வாறு அனேகத் தலங்களில் சிவலிங்கங்களோடு இணைந்த வகையில் தீர்த்தங்கள் உள்ளன. குறிப்பிட்ட சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய மட்டுமே இவை பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் சிறப்பு கருதி இவற்றைச் சுற்றி மதில்களும் மண்டபங்களும் அமைத்துப் பாதுகாத்து வருகின்றனர்.

- அருள்ஜோதி