அவனுக்கு உண்டு உனக்கு இல்லை



திருக்கச்சி நம்பிகள் அவதாரம்: மாசி, மிருகசீரிஷம் 1.3.2023

காஞ்சிப் பேரருளாளன் கோயில். நடை சாற்றியாகிவிட்டது. ஆனாலும், உள்ளே ஒரே ஒருவருக்கு மட்டும் அனுமதி. அவர் பெருமாளோடு ஏகாந்தமாகப் பேசுபவர். அவரிடம் பேசுவதில் பெருமாளுக்கும் பிராட்டிக்கும் அத்தனை இன்பம், சந்தோஷம். பெருமாளுக்கு வாஞ்சையோடு ஆலவட்ட கைங்கரியம் செய்து கொண்டிருந்தார் அவர். திடீரென்று அவரிடம் ஒருகேள்வி கேட்டார் பெருமாள்.‘‘இன்று என்ன விசேஷம்?” இப்படி அவர் தினசரி கேட்பது வழக்கம்தான். இவர் விசிறியால் விசிறிக்  கொண்டு பதில் சொன்னார்.

”தேவருக்குத் தெரியாத விசேஷமா நான் சொல்லித் தெரியப்போகிறது. நீர் சர்வக்ஞர் (எல்லாம் அறிந்தவர்) அல்லவா!”‘‘அதெல்லாம் சரி, ஆனால் உம்முடைய திருவாயால் கேட்பதில் ஒரு ஆனந்தம் இருக்கிறது அல்லவா. அது மட்டும் இல்லை. இன்று நீர், ஏதோ என்னிடம் கேட்க வேண்டும் என்று நினைப்பது போல் தோன்றுகின்றது. மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு, கேட்பதில் தயக்கம் ஏன்? கேட்டுவிடலாமே?” அப்பொழுது இவர் சொன்னார்.‘‘ம்.. ஒரு கேள்வி கேட்கத்தான் நினைத்திருந்தேன். தேவரீரே அடியேன் மனதை அறிந்து கொண்டு கேட்டுவிட்டீர்.”

‘‘சொல்லும்”‘‘அடியேன் தினசரி காலையில், தீர்த்தக் கைங்கரியத்துக்காக, குடம் எடுத்துக் கொண்டு ஆற்றுக்குச் சென்று வருவது உண்டு. அப்போது வரும் வழியில் எளிய குடியானவர் ஒருவர் காத்திருந்து கைகூப்பிக் கொண்டு நிற்பார். நான் அவர் நிற்கும் இடத்தைக் கடந்தவுடன் என்னுடைய காலடி மண்ணை எடுத்து தன்னுடைய தலையில் தெளித்துக் கொண்டு, கை கூப்பி, நான் திரும்பி கண்ணுக்கு மறையும் வரையில் நின்று கொண்டே இருப்பார்” பெருமாள் சுவாரஸ்யமாக தலையை அசைத்தார்.

‘‘ஆம்; அறிவோம். மேற்கொண்டு சொல்லும்.”
“ இன்று அந்த குடியானவர் ஏதோ ஒரு கேள்வியை என்னிடம் கேட்க நினைப்பது போல் தோன்றியவுடன், நான் சற்று நின்று, “உமக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர் பதில் சொன்னார்”
“ம்..”

“சுவாமி, அடியேனுக்கு வயதாகிவிட்டது. இன்னும் எத்தனை நாள் இருப்பேனோ தெரியவில்லை. என்று சொல்லி ஒரு பாசுரத்தைச் சொன்னார்”

‘‘என்ன பாசுரம்?”

“குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்,
நலங்களாய நற்கலைகள் நாலிலும் நவின்றிலேன்,
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின் -
இலங்கு பாதம் அன்றி மற்று ஓர் பற்று இலேன் எம் ஈசனே!”
“திருமழிசை ஆழ்வார் பாசுரம்..

அபாரம்.”
“நானும் மெய் மறந்து கேட்டேன். திருமழிசை ஆழ்வார் பாசுரத்தை ஏனோ அவ்வளவு உருக்கமாக இன்று அவர் பாடினார். நான் சொன்னேன் “அபாரமாக ஆழ்வார் பாசுரத்தைப் பாடுகின்றீர். உம்மிடத்திலே நைச்சிய பாவம் (அடக்கம்) இருக்கிறது. அடியார்களை வணங்கி நிற்கின்றீர். உமக்கு என்ன குறை?” அவர் உடனே சொன்னார்.

‘‘சுவாமி தேவருடைய திருவடி பலமே அடியேனுக்கு பலம். அதனால்தான் தேவரீருடைய திருவடிபட்ட அந்தத் துகளை (கால் மண்ணை) நான் தலையில், ஐஸ்வர்யம் போல நினைத்து தரித்துக்கொள்ளுகின்றேன். அப்படியாவது என்னுடைய ஜென்மம் கடைத் தேறாதா?”

‘‘நிச்சயம் உம் எண்ணம் நிறைவேறும்”‘‘அப்போது அவர் கேட்டார். அடியேனுக்கு ஒரு ஆசை. தேவரீர் வரதராஜ பெருமாளுடன் நேரில் பேசக்கூடிய பெருமையைப் பெற்றவர் என்று எல்லோரும் சொல்லுகின்றார்கள். அப்படிப்பட்ட பெருமையைப் பெற்ற நீங்கள், இந்த எளியேன் கடைத்தேறுவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று, பெருமாளிடம் கேட்டுச் சொல்லச்  சொன்னார்”‘‘அதற்கு நீர் என்ன பதில் சொன்னீர்”
‘‘அடியேனும் சம்மதித்தேன்”

‘‘பிறகு என்ன தயக்கம்? கேட்டுவிட வேண்டியது தானே?”
‘‘அதுதான் இப்பொழுது கேட்டுவிட்டேனே. தேவரின் திருவுள்ளம் தெரிவித்தால், அதை அப்படியே அந்த ஏழைக் குடியானவரிடம் நாளை தெரிவித்துவிடுவேன்” பெருமாள் இப்பொழுது உற்சாகமாகச் சொன்னார்.

‘‘ நாளை அந்தக் குடியானவனைப் பார்க்கும்போது உறுதியாகச் சொல். உனக்கு இந்த பிறவியிலேயே மோட்சம் என்று சொல்” திருக்கச்சி நம்பிகள் சந்தோஷமாக தலையாட்டினார்.
 ``ஆசாரிய அபிமானமே உத்தாரகம் என்பதுதானே வைணவ சமயத்தின் அடிப்படை.

 ஒரு குருவினுடைய திருவருள் கிடைத்துவிட்டால் அவன் கடைத்தேறிவிடுவான் என்பதுதான் உண்மை. பகவானைப் பிடிப்பதைவிட, பகவானைப் பிடித்த பாகவதனைப் பிடிப்பதன் மூலம், ஒருவன் உஜ்ஜீவனம் பெறலாம் என்கிற கொள்கை தானே உயர்ந்த கொள்கை. அந்த அடிப்படையில் பகவானுடன் பேசும் பேறு பெற்ற உம்முடைய திருவடித் தூசியை, அவன் தன் தலையில் தரித்துக்கொண்ட உடனே, அவன் பாவம் போய்விட்டது.

உம்மைவிடச் சிறந்த ஆசாரியன் அவனுக்கு வேறு யார் இருக்க முடியும்? மோட்சத்தைவிட சிறந்ததாகத் தருவதற்கு எதுவும் இல்லை. ஆகையால் நிச்சயம் மோட்சம் என்று சொல்.’’ சந்தோஷமாக இருந்தார். சற்று நேரம் மௌனமாக இருந்தார். அப்பொழுது பெருமாள் ஒரு கேள்வி கேட்டார்.

‘‘என்ன தயக்கம்? இன்னும் ஏதோ கேள்வி பாக்கி இருக்கிறது போல தெரிகிறதே?”‘‘ ஆம்.. சுவாமி.. அந்த ஏழை குடியானவனுக்குத் தேவரீர் மோட்சத்தைத் தந்தது குறித்து எல்லையற்ற மகிழ்ச்சி. ஆனால், பேறு தனக்கும் கிடைக்காதா என்று ஏங்குவது மனித இயல்பு தானே”‘‘அப்படி என்ன உமக்கு ஏக்கம்?”‘‘ அடியேனுக்கு இந்த பிறவியிலே மோட்சம் உண்டா?” பகவான் கடகடவென்று சிரித்தார்.

‘‘அது சரி. பக்கத்து இலைக்குப் பாயாசம் போடு என்றால், தன்இலைக்கும் சேர்த்துக் கேட்பதாக கிராமத்தில் சொல்லுவார்கள். அந்த குடியானவனுக்கு மோட்சம் உண்டு என்று சொல்லிவிட்டேன். உமக்கு மோட்சம் உண்டா என்று கேட்கிறீர்.”

‘‘ஆமாம்”‘‘ அந்த குடியானவனுக்குத்தான், மோட்சத்தில் சந்தேகம் இல்லை என்று சொல்லிவிட்டேனே”‘‘அப்படியானல் அடியேன் விஷயத்தில்………..””சம்சயம் (சந்தேகம்) உண்டு என்று பொருள்” திடுக்கிட்டார்..பெருமாளோடுபேசும் தனக்கு மோட்சத்தில், சந்தேகமா..
‘‘குடியானவனுக்கு மோட்சத்தில் சந்தேகம் இல்லை ஆனால் உன்னுடைய மோட்சத்தில் சந்தேகம் இருக்கிறது”
“!!!!!!!”

“என்ன காரணம் என்றுதானே கேட்கிறீர்..? பகவானிடம் பேசும் பலம் பெற்ற நமக்கு மோட்சம் கிடைத்துவிடும் அதில் சந்தேகம் இருக்காது என்று தானே நினைக்கிறீர். அது உண்மை அல்ல. பகவானிடம் பேசும் வாய்ப்பு பெற்றாலும், ஒரு குருவினுடைய கருணையைப் பெறவில்லை. ஒரு ஆச்சாரியனின் தொடர்பு கிடைக்கவில்லை என்று சொன்னால், அவருக்குப் பலவிதமான புண்ணிய பலன்கள் கிடைக்குமே தவிர, மோட்சம் கிடைக்காது. ஆகையினால் நீரும் ஒரு ஆச்சாரியனிடம் கைங்கர்யம் செய்து  அபிமானத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்” இப்படி விளக்கம் சொல்லி நிறுத்திக் கொண்டார் பெருமாள்.

பெருமாளிடமே கேள்வி கேட்டவர் யார் தெரியுமா?

அவர்தான் திருக்கச்சி நம்பிகள்.ஸ்ரீராமானுஜருடைய குருநாதர்களில் ஒருவர் திருக்கச்சி நம்பிகள். பூவிருந்தவல்லியில் பிறந்தவர். காஞ்சிபுரம் பெருமாளிடம் நேரடியாகப் பேசும் சிறப்பு பெற்றவர்.

வரதராஜப் பெருமாளுக்குத் தனிமையில் திருவாலவட்ட (விசிறி) கைங்கரியம் செய்தவர். திருக்கச்சி நம்பிகள் தேவப் பெருமாளிடம் எம்பெருமானுக்கு உகந்த திருநாமம் ஒன்றை தனக்குச் சூட்டுமாறு வேண்டி நிற்க, (கஜேந்திராழ்வான் காஞ்சியில் தேவபெருமாளை வழிபட்டதால், கஜேந்திராழ்வான் தேவப்பெருமாளுக்கு மிகவும் பிடித்தமானவர் என்பதால்) எம்பெருமானும் கஜேந்திரதாஸர் என்ற திருநாமத்தை திருக்கச்சி நம்பிகளுக்கு சூட்டி மகிழ்ந்தார்.

(ஆதாரம்: பெரியாழ்வார் திருமொழி - 3.7.8 - திருவாய்மொழிப் பிள்ளை ஸ்வாபதேச வியாக்யானம்)ஸ்ரீ ராமானுஜருடைய வாழ்க்கை எப்படி அமையப்போகிறது என்பதை காஞ்சிபுரம் வரதராஜரிடத்தில் கேட்டு, ஆறு வார்த்தைகளை பதிலாக வாங்கி, ஸ்ரீ ராமானுஜருடைய வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொடுத்தவர்.

அந்த ஆறு வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல... வைணவத்தின் அடிப்படை நெறியையே விளக்கும் வார்த்தைகள்.

1. அஹமேவ பரம் தத்வம்
2. க்ஷேத்ரங்ஞ - ஈச்வரயோர் பேத:
3. மோக்ஷ உபாய: ந்யாஸ ஏவ
4. ந அந்திம ஸ்ம்ருதிரிஷ்யதே
5. தேஹாவஸானே பரமம் பதம்
6. பூர்ணாசார்யம் ஸமாச்ரய
- என்று ஆறு நல்வார்த்தைகளை
அருளினார். இந்த ஆறு வடமொழி வார்த்தைகளின் பொருள் இதுதான்.1) நானே உலகிற்குக் காரணமான தத்துவங்களுக்கும் காரணமான பரதத்துவமாவேன்.

2) ஜீவனுக்கும், ஈஸ்வரனுக்கும் வேற்றுமை (எல்லா பிரமாணங்களாலும் தேறியே நிற்கிறது)(விஷிஸ்ட அத்வைதம்)

3) மோட்சத்தை விரும்பும் ஜனங்களுக்கு என்னைச் சரணமாக (உபாயமாக) அடைவதாகிற ந்யாஸமே மோட்ச உபாயமாகும்.

4) இப்படி என்னை உபாயமாகக் கொண்ட பக்தர்களுக்கு `அந்திம ஸ்ம்ருதி’ என்கிற கடைசி நினைவு அவசியமில்லை.

இந்த விஷயத்தை விளக்குவது பெரியாழ்
வாரின் பாசுரம்
துப்புடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்துத் துணையாவ ரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்
ஆனைக்குநீ அருள்செய் தமையால்
எய்ப்புஎன்னை வந்துநலியும்போது
அங்குஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி
வைத்தேன்
அரங்கத் தரவணைப் பள்ளியானே

5) இத்தகைய பக்தர்களுக்கு, இந்த ஜென்மத்தின் முடிவிலேயே பரமபதத்தை நானே அருளுகிறேன். அதுவரை பொறுத்திருக்க வேண்டும்.
சரணமென தனதாள் அடைந்தவர்க்கெல்லாம்  
மரணமானால் வைகுண்டம் அளிக்கும் பிரான்
  - என்பது நம்மாழ்வார் பாசுரம்.

6) நற்குணநிதியான மஹாபுருஷரான பெரிய நம்பியை அடைவீர்.ஒரு வைணவன் எப்படிப்பட்ட நெறியோடும், மன நிலையோடும் இருக்க வேண்டும் என்பதை இவருடைய வாழ்க்கை
தெள்ளத் தெளிவாக விளக்கும். தினமும் காஞ்சிக்குச் சென்று கைங்கர்யம் செய்துவந்த நம்பிகள், முதுமையின் கண் ஏற்பட்ட தாளாமைக் கண்டுவருந்தியிருக்க பெருமாள் இவருடைய இல்லத்திலேயே வைணவ திவ்யதேசங்களில் முதன்மையாகப் போற்றப்படும் திருவரங்கம், திருமலை, திருக்கச்சி (காஞ்சி) ஆகிய தலங்களில் உறைகின்ற காட்சியும் கொடுத்து முக்தியும் அருளினார்.

அத்தலமே, சென்னைக்கு அருகே பூந்தமல்லி பேருந்துநிலையம் அருகில் வரதராசப் பெருமாள் கோயில். பூவிருந்தவல்லி திருக்கோயிலில் இவருக்குச் சந்நதி உண்டு. அங்கு இவருடைய அவதார உற்சவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.தனக்கு ஒரு ஆச்சரிய சம்பந்தம் வேண்டும் என்பதற்காகவே திருவரங்கம் வந்து, தன்னை மறைத்துக்கொண்டு, (காரணம், தான் பெருமாளிடம் பேசும் பேறு பெற்றவர் என்று தெரிந்தால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அல்லவா!) மாறுவேடம் கொண்டு, ஒரு மாட்டுவண்டி ஓட்டும் எளியேனாக, ஒரு ஆச்சாரியனுக்கு தொண்டு செய்து, மோட்சம் அடைந்தார் என்பது வைணவ குரு பரம்பரைக் கதை.

முனைவர் ஸ்ரீராம்