படிக்காசும் பழமொழியும்



பெரும் புலவர் ஒருவர்; அந்தக்கால வழக்கப்படி, கல்வி மானான அவர் காசு இல்லாமல் கஷ்டப்பட்டார். ஏதோ, நல்ல மனம் படைத்தவர்கள் கொடுத்ததை வைத்து, அந்தப் புலவரின் வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. புலவரும் நடந்து கொண்டிருந்தார்; தன் கல்வித் திறமையை வெளிப்படுத்தி, அடுத்தவர் கொடுக்கும் மிகக் குறைந்த பணத்தையும் பெற்றுக் கொண்டார்.
நடந்து வந்து கொண்டிருந்த புலவர், நடராஜரின் புகழ் பரப்பும் தில்லைக்கு வந்தார். ‘ஐங்காதம் போனாலும் தன் பாவம் தன்னுடனே ஆகும் தானே’ என்பதற்கு இணங்க, தில்லையிலும் புலவரை வறுமை தொல்லைப் படுத்தியது. பார்த்தார் புலவர், நேரே சிதம்பரநாதர் சந்நதியில் சென்று நின்று, அன்னை சிவகாமியிடம் முறையிட்டார்.

‘‘அம்மா! திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு வேல் கொடுத்தாய். உன் மணவாளரான சிவபெருமானுக்கு, திருக்கல்யாணத்தின் போது அம்மியின் மீது வைக்கக் கால் கொடுத்தாய். திருஞானசம்பந்தருக்குப் பால் கொடுத்தாய். அனைவரையும் ஆட்டிப்படைக்க, மன்மதனுக்குச் செங்கோல் கொடுத்தாய். அன்னையே! இப்படிப் பலருக்கும் கொடுத்த நீ, எனக்கு ஏதும் கொடுக்க வில்லையே தாயே!’’ என வருந்தி வேண்டினார்.

வேல் கொடுத்தாய் திருச்செந்தூரர்க்கு
அம்மியின் மீது வைக்கக்
கால் கொடுத்தாய் நின் மணவாளனுக்குக்
கவுணியர்க்குப்
பால் கொடுத்தாய் மதவேளுக்கு
மூவர் பயப்படச் செங்
கோல் கொடுத்தாய் அன்னையே
எனக்கு ஏதும் கொடுத்திலையே

இவ்வாறு புலவர் பாடி முடித்த அதே வேளையில், அங்கிருந்த பஞ்சாட்சரப் படியின் மீது ஐந்து பொற்காசுகள், மேலிருந்து விழுந்தன. கூடவே, அங்கிருந்த அனைவரும் அறியும்படியாக, ‘‘இது புலவர்க்கு அம்மையின் பொற்கொடை’’ என்ற வாக்கும் அசரீரியாக ஒலித்தது. அம்பிகையால் இவ்வாறு படிக்காசு அளிக்கப் பட்டு, அம்பிகையின் வாக்காலேயே சொல்லப்பட்ட அந்தப்புலவர் ‘படிக்காசுப் புலவர்’ என அழைக்கப்பட்டார். திருமணமான படிக்காசுப் புலவருக்கு ஒரு ஆண்குழந்தை இருந்தது. குழந்தை பிறந்த அந்த நேரத்தில், புலவரிடம் இருந்த கல்விச்செல்வத்தைவிட அதிகமாக இருந்தது வறுமை. குழந்தைக்குப் பாலூட்டத் தாயிடம் சக்திஇல்லை.

வேறு ஏதாவது கஞ்சி முதலானவைகளைக் கொடுக்கலாம் என்றால், பச்சைக் குழந்தைக்கு அது செல்லுபடியாகாது. பசும்பால் வாங்கி ஊட்டலாம் என்றால், கையில் காசு இல்லை. அனை வருக்கும் அறிவுப் பசியைத் தீர்க்கக் கூடியவர் பிள்ளையின் வயிற்றுப்பசியைத் தீர்க்க உதவுவோர் யாரும் இல்லை. புலவரின் உள்ளம் மிகவும் வருந்தியது.அந்த வருத்தத்தைத் தீர்க்கக்கூடிய வள்ளல், வல்லமாநகர் எனும் ஊரில் காளத்தி பூபதி என்ற பெயரில் இருக்கிறார் எனும் தகவல், படிக்காசுப் புலவருக்குத் தெரிந்தது.

வறுமைத் துயர்தீர, வல்லமாநகர் போனார் புலவர். போனவர் அங்கே காளத்தி பூபதி எனும் வள்ளலிடம், தன் நிலையை ஒரு பாடலாக எடுத்துச் சொன்னார். ‘‘கற்றவர்களை ஆதரிக்க வில்லை என்றால், கல்வி எப்படிப் பரவும்? எதிர்காலத் தலைமுறையின் கதி என்னவாகும்?’’ என்று வருந்திய அந்தக் காளத்தி பூபதி எனும் வள்ளல், நன்கு கறக்கக் கூடிய ஒரு பசு மாட்டையும் ஏராளமான பொருளையும் தந்து, புலவரின் மனம் மகிழச் செய்தார்.

தன்னைப் பிடித்திருந்த வறுமையை விரட்டிய, வல்லமாநகர் வள்ளலை வாழ்த்தி, புலவர் ஊர் திரும்பினார். நேரம் வந்தால் எல்லாம் கூடி வரும் என்பதற்கு ஏற்ப, வள்ளல் காளத்தி பூபதி கொடுத்த பெரும் செல்வத்தோடு புலவர் வாழ்ந்து வந்த நேரத்தில்... மாவண்டூரில் இருந்த கறுப்ப முதலியார் என்பவர் கல்வி கேள்விகளில் சிறந்தவராக இருந்தார். வள்ளல் தன்மையிலும் சிறந்தவராக இருந்தார்.

அவர், படிக்காசுப் புலவரின் திறமையை அறிந்து, ‘‘புலவரே! நம் தொண்டைமண்டலத்தின் பெருமைகளை எல்லாம் விளக்கி, நீங்கள் ஒரு சதகம் பாட வேண்டும்’’ என்று வேண்டினார்.
அவரின் வேண்டுகோளை ஏற்று, படிக்காசுப் புலவரும் ‘தொண்டைமண்டல சதகம்’ எனும் அருந்தமிழ் நூல் ஒன்றைப் பாடினார்.

அந்த நூல் அரங்கேற்றம் ஆனது. அரங்கேற்றம் முடிந்ததும், நூலைப்பாடச்செய்த கறுப்ப முதலியார் எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தார். படிக்காசுப் புலவருக்கு ஏராளமாகச் செல்வம் அளித்ததோடு, படிக்காசுப் புலவரின் பல்லக்கையையும் தானே தூக்கி, புலவரைப் பெருமைப் படுத்தினார். காலங்கள் கடந்தன. ஊர்ஊராகப் போய், தெய்வ தரிசனம் செய்தவாறே தில்லையை அடைந்தார்.

நல்லவர்கள் நான்கு பேர்கள் இருந்தால், தீயவர்கள் நான்காயிரம் பேர்கள் இருப்பார்களே! அது தில்லையிலே படிக்காசுப் புலவருக்கு உண்மையானது. வம்பர் கூட்டம் ஒன்று படிக்காசுப் புலவருக்குப் பற்பல தொல்லைகள் கொடுக்கத் தொடங்கியது. புலவரும் என்னென்னமோ சொல்லிப் பார்த்தார். ஊஹும்! வம்பர் கூட்டம் திருந்துவதாக இல்லை. அதற்காக அவர்களுடன் சண்டை போடவா முடியும்? படிக்காசுப் புலவர் அங்கே தில்லையில், ஈசர் சந்நதியில் நின்று முறையிட்டார்.

பொல்லாத மூர்க்கருக்கு எத்தனை தான் புத்தி போதிகினும்
நல்லார்க்கு உண்டான குணம்
வருமோ? நடு ராத்திரியில்
சல்லாப் புடவை குளிர் தாங்குமோ? நடுச்சந்தை தனில்
செல்லாப்பணம் செல்லுமோ? தில்லை வாழும் சிதம்பரனே
- என்று பாடி முறையிட்டார்.

தில்லைநாதர் திருவருளால் வம்பர் கூட்டம் வாய் மூடியது. விலகி ஓடியது. அந்த நேரத்தில்தான், தொடக்கத்தில் பார்த்த `படிக்காசுப் புலவர்’ எனும் பெயர் பெறும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின் ராமநாதபுரம் சென்ற புலவர், அங்கே சேது மன்னரான ரகுநாத சேதுபதியைக் கண்டு, அவரால் சன்மானங்கள் அளிக்கப்பட்டு, காயல் பட்டினம் எனும் ஊரை அடைந்தார். அங்கு இருந்த சீதக்காதி எனும் பெரும் வள்ளல், படிக்காசுப் புலவரின் வருகையை அறிந்தார். புலவர்களை ஊக்கத்தோடு ஆதரிக்கும் அவ்வள்ளல், படிக்காசுப் புலவரை நல்லமுறையில் வரவேற்று, அள்ளிக் கொடுத்தார்.

சீதக்காதியின் அன்பில் கட்டுப்பட்ட படிக்காசுப் புலவர், சில நாட்கள் அங்கேயே தங்கி சீதக்காதியின் எல்லையில்லாத அன்பையும் உபசரிப்பையும் அனுபவித்தார். அதன்பின், அங்கிருந்து புறப்பட்டுத் திருத்தல யாத்திரையாக வந்து கொண்டிருந்த படிக்காசுப் புலவர், தஞ்சையில் உள்ள ‘திருத்தண்டலை நீணெறி’ எனும் திருத்தலத்தை அடைந்தார்.

அங்கே தங்கி, நாள்தோறும் ஈசரைத் தரிசித்துக்கொண்டிருந்தார் புலவர். புலவரின் வருகையை அறிந்த ஊர்ப் பெருமக்கள் சிலர், புலவரிடம் வந்து; ‘‘ஐயா! தெய்வஅருள் பெற்ற பெரும் புலவரான நீங்கள், இந்த ஊரில் எழுந்தருளி இருக்கும் இறைவவன் மீது, ஏதேனும் ஒரு நூல் இயற்றி அருள வேண்டும்’’ என வேண்டினார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்றார் படிக்காசுப் புலவர்.

‘பழமொழி விளக்கம் எனும் தண்டலையார் சதகம்’ எனும் நூலைப் பாடி முடித்தார். நல்வழி காட்டும் அறநெறிகள் ஏராளமாக இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. கூடவே, பழமொழிகளும் இடம்பெற்றுள்ளன. பழமொழிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவோ - ஆராய்ச்சி செய்யவோ விரும்புபவர்களுக்கு, இந்த நூல் ஒரு பெரும் பொக்கிஷம்.

எளிமையான நடையில் அமைந்த நூல் இது. நூலைப்பாடி முடித்த படிக்காசுப்புலவர் அங்கேயே தங்கி இருந்த காலத்தில், வள்ளல் சீதக்காதியைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. உடனே புறப்பட்டுவிட்டார். பல நாட்கள் வழி நடந்து, காயல்பட்டணத்தைப் படிக்காசுப் புலவர் அடைந்த நேரம், ‘‘வள்ளல்சீதக்காதி வானுலகை அடைந்துவிட்டார்’’ என்ற தகவல் படிக்காசுப் புலவரை எட்டியது.

அதிர்ச்சி அடைந்தார்; ‘‘வள்ளலைப் பார்க்க முடியவில்லை. வள்ளலைப் புதைத்த இடத்தையாவது நான் பார்க்க வேண்டும்’’ என்ற படிக்காசுப் புலவர், வள்ளல் புதைக்கப்பட்ட இடத்தை அடைந்தார். அங்கு போனதும் புலவரின் கண் களில் கண்ணீர் வழிய, அவரை அறியாமலே வள்ளலின் நற்குணங்கள் தமிழ்ப் பாடல்களாக வெளிப்பட்டன.

அதே வேளையில், வள்ளலை அடக்கம் செய்திருந்த அடக்கக் குழியின் ஒரு பக்கத்தில் வெடிப்பு உண்டானது. அந்த வெடிப்பில் இருந்து வெளிப்பட்ட வள்ளலின் கை, தன் கையில் இருந்த மோதிரத்தைப் புலவர் முன்னால் போட்டுவிட்டு, மறுபடியும் வெடிப்பில் மறைந்தது. அடக்கக்குழி பழையபடியே மூடிக்கொண்டது. புலவர் மோதிரத்தை எடுத்தார். அதைக் கண்ட வள்ளலின் உறவினர்கள், ‘‘ஐயா! புலவரே! சீதக்காதி வள்ளல் உயிர் விடும்போது, தன் கையில் உள்ள மோதிரத்தைக் கழற்ற வேண்டாம் என்று கூறினார். காரணம், இப்போதுதான் புரிகிறது’’ என்று கண்ணீர் சிந்தினார்கள்.

அன்று முதல், ‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்ற பழமொழி உண்டானது. படிக்காசுப் புலவர் தன் பிற்காலத்தில் துறவியாகி, பல அருந்தமிழ் நூல்கள் பாடி, தில்லையிலே
சிவனடி சேர்ந்தார். அவர் பாடிய ‘பழமொழி விளக்கம் எனும் தண்டலையார் சதகம்’ எனும் நூலில் இருந்து ஒரு பாடலைப் பார்க்கலாம். நூறு பாடல்களுக்கு மேல் உள்ள நூல் இது. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பழமொழியைக் கொண்டுள்ளது.

வைதிடினும் வாழ்த்திடினும் இன்ப துன்பம்
வந்திடினும் வம்பு கோடி
செய்திடினும் தண்டலை நீள் நெறியார் தம்
செயலென்றே தெளிவதல்லால்
மெய் தவிர அவர் செய்தார் இவர் செய்தார்
என நாடி வெறுக்கலாமோ?
எய்தவர் தம் அருகிருக்க அம்பை நொந்த
தருமம் என்ன? இயம்புவீரே!

கருத்து: இகழ்ந்தாலும் புகழ்ந்தாலும், இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும், கோடிக் கணக்கான வஞ்சனைகளைப் பிறர் செய்தாலும், அவை அனைத்துமே சிவன் செயல் என்பதே உண்மை. அதை விட்டுவிட்டு, அவர் செய்தார் இவர் செய்தார் என்று அடுத்தவரை வெறுக்கலாமா? எய்தவன் இருக்க அம்பை நொந்து என்ன பயன்?  எனும்
பழமொழி இந்தப் பாட்டில் இடம் பெற்றுள்ளது.

இதை அழகாக, எளிமையாகச் சொல்வார் தமிழறிஞர் கி.வா.ஜ, ‘‘நாம் செய்த நல்லது, அடுத்தவரை விட்டுப் புகழச்செய்து மாலை அணிவிக்கச் செய்கிறது. கெட்டது, அடுத்தவரை விட்டு இகழச் செய்கிறது’’ என்பார். படிக்காசுப் புலவரின் தமிழ்ப் பாடல்கள் தமிழின் ஆழத்தை மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் வரலாறுகள் பலவற்றையும் விவரிக்கின்றன. படிப்போம்! உணர்வோம்! உயர்வோம்!

பி.என். பரசுராமன்

ஓவியம்: வெங்கி