பிறவா வரம்



சைவ சமயத்தில் ‘கோயில்’ என்று போற்றப்படும் தலம் தில்லை (சிதம்பரம்) ஆகும். அந்த தலத்தையே அடியார்கள் பலரும் அதிகமாக விரும்பினர். விரும்புகின்றனர். அப்படியிருக்க காரைக்கால் அம்மையார் மட்டும் திருவாலங்காட்டிற்குச் சென்று வழிபாடு செய்தார். அதற்குக் காரணமுண்டு.
அம்மையார் முன்பு கயிலைக்குத் தலையால் நடந்து சென்றபோது, உமையம்மையே அதிசயித்தார். உமையம்மைக்கும் அப்பனுக்குமிடையே நடந்த நடனத்தின்போது, அப்பன் தன் காலை உயர்த்தி ஆடினார். அவ்வாறு உமையம்மையால் ஆடமுடியவில்லை.

‘‘கடவுளின் பாதியாக இருக்கும் தன்னாலேயே காலை மேலே தூக்கி ஆட முடியவில்லை. ஆனால், மானிடப் பிறவியாகப் பிறந்த காரைக்கால் அம்மையார் தன் இரண்டு கால்களையும் மேலே தூக்கி நடந்துவருகிறாரே” என்று உமையம்மையார் அதிசயித்தார்.அவ்வகையில், உமையம்மைக்கும் சிவபெருமானுக்கும் நடனம் நடந்த இடம் திருவாலங்காடாகும்.

உமையம்மையால் செய்யமுடியாத செயலை காரைக்கால் அம்மையார் செய்தார் என்ற செயற்கருஞ் செய்கையை உலகுக்கு அறிவிக்கவே அம்மையாரை திருவாலங்காட்டிற்குச் செல்லுமாறு ஆண்டவன் அருளினார். அதன் காரணமாகவே, அம்மையாரும் திருவாலங்காடு சென்று வழிபாடு செய்தார். உமையை வெல்லும் வகையில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவமாடிய வரலாற்றை,

“இறைவனை ஆடல்கொண்டு அருளிய அணங்கு
சூருடைக் கானகம் உகந்த காளி”
என்று சிலப்பதிகாரம் பேசும்.

மூவர் பெருமக்களும் தேவாரம் பாடிய இத்திருத்தலமானது, தொண்டை நாட்டு அரக்கோணத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வடாரண்யம், என்று போற்றப்படும் இந்த தலம் பஞ்சசபைத் தலங்களுள் முதன்மையாக விளங்கும் இரத்தின சபையை உடையது. ஆலங்காட்டு அப்பர், தேவர்சிங்கப் பெருமான், வடாரண்யேஸ்வரர் என்பவை இறைவனின் திருப்பெயர்களாகும். அம்மையின் திருப்பெயர்களோ, வண்டார்குழலி மற்றும் பிரம்மராளகாம்பாள் என்பதாகும்.

முக்தி நல்கும் முக்தி தீர்த்தம் இங்கு சென்றாடு தீர்த்தம் என்ற பெயரில் பெருங்குளம் காட்சியளிக்கிறது. இந்த சென்றாடு தீர்த்தத்தை,
‘‘சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே
திரு ஆலங்காட்டுறையும் செல்வர் தாமே”
என்று சிறப்பித்துப் பாடுகிறார் திருநாவுக்கரசர்.

ஆண்டவனுடன் நடனமாடித் தோற்ற உமையின் காளி உருவும் இக்குளக்கரையில் அமைந்துள்ளது. கார்க்கோடகன், சுகந்த முனிவர், காரைக்கால் அம்மையார் ஆகியோருக்கு ஆடற்கோலத்தைக் காட்டும் ஆடல்வல்லானுக்கு இங்கு “இரத்தின சபாபதி” என்று திருப்பெயர் திகழ்கிறது. இங்கு அமைந்துள்ள தாளமிட்டுப் பாடும் வகையில் அமைந்துள்ள காரைக்கால் அம்மையாரின் திருவுருவம் காணத் திகட்டாதது.

இங்குள்ள கோபுரத்தில் அம்மையார் பாடல் பாடுவது போன்றும், இறைவன் ஆடுவது போன்றும், அம்மையாரின் அருள் வரலாறு பேசும் சு(க)தைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த தலத்தில்தான் அம்மையாரவர்கள்,“கொங்கை திரங்கு” என்று தொடங்குகிற அற்புதப் பதிகத்தையும் “எட்டி இலவம்” என்று தொடங்குகிற அரும் பதிகத்தையும் அருளிச் செய்தார்கள். இலக்கிய மரபில் முதன்முதலாக பதிகம் பாடிய பெருமை அம்மையாரையே சாரும்.

பதிகம் பாட அடித்தளமிட்ட அம்மையாரைப் போற்றி நினைவுகூரும் வகையிலேயே திருஞான சம்பந்தர் தனது ‘‘தோடுடைய செவியன்” எனத் தொடங்கும் முதற்பதிகத்தை, அம்மையார் தன் முதற்பதிகத்தில் அமைத்துப் பாடிய நட்டபாடைப் பண்ணைப் பயன்படுத்தியே பாடினார் என்பர் பெரியோர்.இங்கு பாடப்பட்ட மூத்த திருப்பதிகத்தில் இசை குறித்த சில செய்திகள் இடம்பெற்றுள்ளன.

``துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம்,
உழை, இளி ஓசைபண் கெழுமப் பாடிச்
சச்சரி, கொக்கரை, தக்கை யோடு,
தகுணிதம் துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
தமருகம், குடமுழா, மொந்தை வாசித்
தத்தனை விரவினோ டாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங்காடே’’

என்ற பாடலில் அமைந்துள்ள ‘துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உளை, இளி’ ஆகியவை சுரங்களாகும். மேலும் சச்சரி, கொக்கரை, தக்கை, தகுணிதம், துந்துபிதாளம், வீணை, மத்தளம், கரடிகை, வன்கை, தமருகம், குடமுழா மற்றும் மொந்தை ஆகியவை இசைக்கருவிகள் ஆகும்.இவ்வாறு, இசையைப் பற்றியும் இசைக்கருவிகள் பற்றியும் பாடியுள்ள அம்மையார், தான் பாடிய பதிகத்தின் இறுதியில் தன்னை “காரைக்காற் பேய்” என்று குறிப்பிட்டுக்கொண்டார்.

அம்மையாரைப் பின்பற்றிய திருஞானசம்பந்தரும், தான் பாடும் பதிகத்தின் நிறைவில் தன்னைக் குறிப்பிட்டுக்கொண்டார். அம்மையார் கயிலைக்குச் சென்றபோது கண்ணுதற் கடவுள், அம்மையாரை ‘அம்மையே’ என்று தன்னை அழைத்தவுடன் மறுமொழியாக, ‘அப்பா’ என்று அழைத்தார் அம்மையார்.

உலகமெல்லாவற்றையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும், காக்கும் காரணனை ‘அப்பா’ என்று அழைப்பதுதானே பொருத்தம். அம்மையார், சுவாமியை ‘அப்பா’ என்று அழைக்கும்முன் சுவாமி, அம்மையாரை ‘அம்மையே’ என்று முந்துற அழைத்தது என்பது கடவுளின் கருணையின் வெளிப்பாடு ஆகும்.

இன்று ஒருவர் நம்மிடம் பேசியபின் பேசுவது; பணிந்தபின்தான் பணிவது என்ற ஆணவப்போக்கே அதிகமாக உள்ளது. ஆண்டவனோ, அடியாரை முந்திக்கொண்டு அழைத்துப் பேசுகிறார் எனில், இதுவே நாம் ஆணவத்தை அறுத்துக்கொண்டு பண்பெனும் பிடியுள் அடியெடுத்து வைப்பதற்கான வாயில் மற்றும் வாழ்வியல்
பாடமாகும்.

உலகனைத்திற்கும் அம்மையப்பனாக விளங்குபவன் அந்த உமாமகேஸ்வரன். அதனால்தான் மாணிக்கவாசகர், ‘‘தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ” என்று பாடுகிறார். இதுமட்டுமின்றி நன்றுடைய நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணுக்காக சீராகப் பள்ளி குன்றுடைய சிவபெருமானே இறங்கி வந்து பிரசவம் பார்த்து தாயுமானவரானார்.

இத்தகு தாயுமானவராகிய தழல்நிறக் கடவுள் சிவபெருமான் காரைக்கால் அம்மையாரை ‘‘அம்மா” என்று அழைத்தற்குக் காரணமுண்டு. பெண்மையானது தாய்மையை அடையும்போது ஒரு நிறைவை எய்துகிறது. இந்த நிறைவு அம்மையாரின் வாழ்வில் ஏற்படவில்லை. சிவபெருமான் மட்டும் அம்மையாரின் திருமனைக்கு விருந்தாளியாகச் சென்று திருவிளையாடல் செய்யாமல் இருந்திருந்தால் அம்மையாருக்கு மகப்பேறு எய்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம்.

ஆகவே, தானே அம்மையாருக்கு மகனாகி அம்மையாருக்கு தாய்மை என்ற நிறைவைத் தருகிறேன் என்று சிவபெருமான், அம்மையாரை ‘அம்மா’ என்று அழைத்தருளினார்.
கயிலையில் இறைவன் அம்மையாரை ‘அம்மா’ என்று அழைத்ததும் ‘அப்பா’ என்று ஆண்டவனை அன்புடன் அழைத்து, அவரது அடிமலர்களில் வீழ்ந்து வணங்கினார் அம்மையார். உடனே, இறைவன் அம்மையாரிடம் தாங்கள் வேண்டும் வரம் யாது? என்று வினவ, அம்மையார் தன் வேண்டுதலை அறிவிக்கின்றார், அதனை,

இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன்
அடியின்கீழ் இருக்க என்றார் (1776)
என்று பதிவு செய்கிறார் தெய்வச் சேக்கிழார்.

இப்பாடல் மிகுந்த சிந்தனைக்குரியதாகும். அம்மையார், இறைவனிடம் என்றும் இறவாத தன்மையுடைய நித்தியத்துவம் மிக்க அன்பை வேண்டுகிறார். அதற்கு “பிறவாமை வேண்டும்” என்று கேட்கிறார். அப்படிக் கேட்டவுடன் ஆண்டவன் திருவுள்ளம் தனக்கு அடுத்த பிறவியைத் தர எண்ணியிருக்கலாம். அந்த எண்ணத்தைத் தன் வேண்டுதல் தடைப்படுத்திவிடக்கூடாதே என்று எண்ணி அடுத்த அடியிலேயே “மீண்டும் பிறப்புண்டேல் உன்னை மறவாமை வேண்டும்” என்று கேட்கிறார். அடுத்த பிறவியைத் தருவதும் தராமல் இருப்பதும் ஆண்டவனின் விருப்பம். அப்படிப் பிறந்துவிட்டாலும்கூட உன்னை மறவாமல் இருக்க வேண்டும் என்று தன் வேண்டுதலைச் சற்று தளர்த்திக் கொள்கிறார் அம்மையார்.

எனக்கு இந்த வரத்தைத் தந்தாக வேண்டும் என்று விடாப்பிடியாக இல்லாமல், இறைவனுக்கே ஒரு வாய்ப்புக் கொடுத்து விழுமியமான பக்தியை அம்மையார் வெளிப்படுத்துகிறார். இப்படி வேண்டியவுடன் இன்னுமொரு வேண்டுதலை வைக்கிறார். “இறைவா! நீ ஆடுகின்றபோது உன் திருவடியின் கீழ் அமர்ந்து பாடுகிற பேற்றை அருள வேண்டும்” என்று வேண்டினார். இப்படி வேண்டியதால் அந்த வரத்தை அருளினார் இறைவன். அவ்வகையில் திருக்கோயிலுள்ள அறுபான்மும்மை நாயன்மார்களின் திருவுருவங்களைக் கண்டால், அனைவரும் நின்றவண்ணம் இருப்பர். ஆனால், அம்மையார் மட்டும் அமர்ந்த வண்ணம் அருள்பாலிப்பார். அதற்குக் காரணம் அம்மையாரின் வேண்டுதலே ஆகும்.

“அடியின்கீழ் நிற்க” என்று கேட்டிருந்தால், அம்மையாரும் மற்ற நாயன்மார்களைப் போலவே நின்ற வண்ணம்தான் இருந்திருப்பார். “அடியின்கீழ் இருக்க” என்று வேண்டியதால்தான் அம்மையார் சிவலோக நாயகனின் சேவடிக்கீழ் இருக்கும் செம்பேற்றைப் பெற்றார்.

ஆண்டவனின் அடிக்கு ஆண்டவனைக் காட்டிலும் பெருமை அதிகமாகும். அதனால்தான்,
“நின்னினும் சிறந்தது நின்கால் இணையே”

என்று பரிபாடலும் திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் அமைந்துள்ள பத்தில் எட்டு குறட்பாக்களும் பாதங்களையே பரவுகின்றன.இறைவன்தான் உலகத்தையே தாங்குகிறார். ஆனால், அந்த இறைவனையே திருவடிகள்தான் தாங்குகின்றன. அத்தகு அடியின்கீழ் அமர்ந்திருப்பது அம்மையாருக்கு மட்டுமே கிடைத்த அரும்பேறாகும். ஆண்டவன் அம்மையாரின் வேண்டுதலுக்கு இணங்க, அருள்செய்து, தென்திசையிலே நீடிய வாழ்வுதரும் திருவாலங்காட்டில் நாம் ஆடும் நடனத்தைக் கண்டு ஆனந்தத்துடன் நம்மைப் பாடிக் கொண்டிருப்பாயாக என்று அருள்செய்தார்.

அதன்படி அம்மையாரும் திருக்கயிலையிலிருந்து வந்து பழையனூர் திருவாலங்காட்டிற்கும் தலையாலேயே நடந்து சென்று சேர்ந்தார். அங்குவந்து இருபெரும் பதிகங்களைப் பாடி, இறவாத இன்ப அன்புடன் இறைவன் திருவடி நிழலியேயே இருக்கும் பேறுபெற்றார். இறையருளால் பிறவாநெறி பெற்று அம்மையார் பாடியருளிய பதிகத்தைப் பாடி, ஆலங்காட்டு அப்பனை அகம் மகிழ வேண்டினால் பிறவாவரம் கிடைக்கும் என்பது திண்ணம்.

திருச்சிற்றம்பலம்

1. கொங்கை திரங்கி நரம்பெழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள்நீண்டு பரடுயர்
நீள்கணைக் காலோர்பெண்பேய்
தங்கி அலறி உலறுகாட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும்வீசி
அங்கங் குளிர்ந்தனல் ஆடும்எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே.
கள்ளிக் கவட்டிடைக் காலைநீட்டிக்

2.கடைக்கொள்ளி வாங்கி மசித்துமையை
விள்ள எழுதி வெடுவெடென்ன
நக்கு வெருண்டு விலங்குபார்த்துத்
துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச்
சுட்டிட முற்றுஞ் சுளிந்துபூழ்தி
அள்ளி அவிக்கநின் றாடும்எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே.

3. வாகை விரிந்துவெண் ணெற்றொலிப்ப
மயங்கிருள் கூர்நடு நாளையாங்கே
கூகையொ டாண்டலை பாடஆந்தை
கோடதன் மேற்குதித் தோடவீசி
ஈகை படர்தொடர் கள்ளிநீழல்
ஈமம் இடுசுடு காட்டகத்தே
ஆகங் குளிர்ந்தனல் ஆடும் எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே.

4.குண்டிலோ மக்குழிச் சோற்றைவாங்கிக்
குறுநரி தின்ன அதனைமுன்னே
கண்டிலோம் என்று கனன்றுபேய்கள்
கையடித் தோடிடு காடரங்கா
மண்டலம் நின்றங் குளாளம்இட்டு
வாதித்து வீசி எடுத்தபாதம்
அண்டம் உறநிமிர்ந் தாடும்எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே.

5. விழுது நிணத்தை விழுங்கியிட்டு
வெண்தலை மாலை விரவப்பூட்டிக்
கழுதுதன் பிள்ளையைக் காளியென்று
பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்
புழுதி துடைத்து முலைகொடுத்துப்
போயின தாயை வரவுகாணா
தழுதுறங் கும்புறங் காட்டில்ஆடும்
அப்பன் இடந்திரு ஆலங்காடே.

6.பட்டடி நெட்டுகிர்ப் பாறுகாற்பேய்
பருந்தொடு கூகை பகண்டைஆந்தை
குட்டி யிடமுட்டை கூகைபேய்கள்
குறுநரி சென்றணங் காடுகாட்டில்
பிட்டடித் துப்புறங் காட்டில்இட்ட
பிணத்தினைப் பேரப் புரட்டிஆங்கே
அட்டமே பாயநின் றாடும்எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே.

7.சுழலும் அழல்விழிக் கொள்ளிவாய்ப்பேய்
சூழ்ந்து துணங்கையிட் டோடிஆடித்
தழலுள் எரியும் பிணத்தைவாங்கித்
தான்தடி தின்றணங் காடுகாட்டிற்
கழல்ஒலி ஓசைச் சிலம்பொலிப்பக்
காலுயர் வட்டணை இட்டுநட்டம்
அழல்உமிழ்ந் தோரி கதிக்கஆடும்
அப்பன் இடந்திரு ஆலங்காடே.

8.நாடும் நகரும் திரிந்துசென்று
நன்னெறி நாடி நயந்தவரை
மூடி முதுபிணத் திட்டமாடே
முன்னிய பேய்க்கணம் சூழச்சூழக்
காடுங் கடலும் மலையும் மண்ணும்
விண்ணுஞ் சுழல அனல்கையேந்தி
ஆடும் அரவப் புயங்கன்எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே.

9.துத்தங் கைக்கிள்ளை விளரிதாரம்
உழைஇளி ஓசைபண் கெழுமப்பாடிச்
சச்சரி கொக்கரை தக்கையோடு
தகுணிதம் துந்துபி தாளம்வீணை
மத்தளங் கரடிகை வன்கைமென்றோல்
தமருகங் குடமுழா மொந்தை வாசித்
தத்தனை விரவினோ டாடும்எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே.

10. புந்தி கலங்கி மதிமயங்கி
இறந்தவ ரைப்புறங்காட்டில்இட்டுச்
சந்தியில் வைத்துக் கடமைசெய்து
தக்கவர் இட்டசெந் தீவிளக்கா
முந்தி அமரர் முழவின்ஓசை
திசைகது வச்சிலம் பார்க்கஆர்க்க
அந்தியில் மாநடம் ஆடும்எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே.

11.ஒப்பினை இல்லவன் பேய்கள்கூடி
ஒன்றினை ஒன்றடித் தொக்கலித்துப்
பப்பினை யிட்டுப் பகண்டை யாடப்
பாடிருந் தந்நரி யாழ்அமைப்ப
அப்பனை அணிதிரு ஆலங்காட்டுள்
அடிகளைச் செடிதலைக் காரைக்காற்பேய்
செப்பிய செந்தமிழ் பத்தும்வல்லார்
சிவகதி சேர்ந்தின்பம் எய்துவாரே.

சிவ.சதீஸ்குமார்