காத்திருந்தேன், கண்கள் பூத்திருந்தேன் என் கண்ணன் எங்கே?குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம், மாசி புனர்பூசம் - 3.3.2023

ஒவ்வொரு ஆழ்வாரும் ஒவ்வொரு அவதாரத்தில் அதிகமாக ஈடுபட்டு இருப்பார்கள். அதில் இராமாவதாரத்தில் அதிக ஈடுபாடு காட்டிய ஆழ்வார் குலசேகர ஆழ்வார்.

ராமனுக்கு வைணவ மரபில் பெருமாள் என்று பெயர். ராமாவதாரத்தில் அதிக ஈடுபாடு காட்டியதால் குலசேகர ஆழ்வாருக்கும் பெருமாள் என்று பெயர். அவர் பாடிய திருமொழிக்கும் பெருமாள் திருமொழி என்றுதான் பெயர் சூட்டினார் நாதமுனிகள். ஒரு அவதாரத்தில் அதிக ஈடுபாடு காட்டும் ஆழ்வார்கள், மற்ற அவதாரங்களைப் பற்றிப் பாடவில்லை என்று சொல்ல முடியாது. ராமாவதாரத்தில் அதிக ஈடுபாடு காட்டிய குலசேகர ஆழ்வார், கிருஷ்ணாவதாரத்தைப் பற்றியும் மிக அற்புதமாகப் பாடியிருக்கின்றார்.

அந்தப் பாசுரங்கள் நம்முடைய மனதை நெகிழ வைக்கவே செய்கின்றன. பெருமாள் திருமொழியில் உள்ள இரண்டு திருமொழிகள் குலசேகர ஆழ்வாரின் கிருஷ்ணானுபவச் சுவையைக் காட்டும் திருமொழிகள் ஆகும்.

தேவகியின் அனுபவம்

அதில் ஒரு திருமொழி தேவகியின் நிலையில் இருந்து, ஒரு தாயின் குரலாக நாம் அனுபவிக்கிறோம். பகவானையே பிள்ளையாகப் பெறும் வாய்ப்பைப் பெற்றும்கூட, ஒரு நாள்கூட அந்தக் குழந்தைக்குப் பால் கொடுக்கும் அனுபவமோ, மடியில் வைத்துக் கொஞ்சும் அனுபவமோ, கால்களில் போட்டு நீராட்டும் அனுபவமோ, பெற முடியவில்லையே என்று தவிக்கும் தவிப்பு மனதை உருக்கும். புராணத்தில், அந்த தேவகி தவித்தாளோ, தவிக்கவில்லையோ, நமக்குத் தெரியாது. ஆனால், குலசேகர ஆழ்வார் அவ்வளவு தவிப்புதவிக்கிறார்.

ஒருவகையில், கண்ணனைப் பிள்ளையாகப் பாவித்துப் பாடிய பெரியாழ்வாரின் பிள்ளைத் தமிழைவிட, குலசேகர ஆழ்வாரின் அனுபவம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.
பொதுவாகவே, பெற்ற இன்ப அனுபவத்தை விட, இழந்த சோகம் அதிகமாகவே இருக்கும். பெற்ற சுகத்தை, பெரியாழ்வார் யசோதை பாவனையில் பாடுவதால் அந்தப் பாசுரங்கள் இனிக்கின்றன. ஆனந்தத்தைத் தருகின்றன.

ஆனால், பெற்றும் இழந்த அனுபவத்தை, குலசேகர ஆழ்வார் தேவகியின் நிலையிலிருந்து, பாடிக் கதறும் பாசுரவரிகள் நம்மை உருக வைக்கின்றன. தேவகி புலம்பலின் நியாயத்தைப் பாருங்கள். ‘‘கண்ணா, உன்னை என் வயிற்றில் சுமந்து பெறும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என்ன பயன்?’’ ‘‘வசுதேவ சுதம் கம்ச சாணூர மர்த்தனம், தேவகி பரமானந்தம்” என்று பாடி யிருக்கின்றார்கள். ஆனால், எனக்கு என்ன பரமானந்தம் கிடைத்தது? கண்ணா, உன்னைப் பெற்றும் இழந்த அனுபவம் தானே எனக்குக் கிடைத்தது.

எந்தத் தாயும் தன்னுடைய குழந்தையின் மழலையை ரசிக்கவே செய்வாள். அந்தக் குழந்தையை, தொட்டிலிட்டு தாலாட்டுப் பாடும் பொழுது மனம் குதூகலிக்கும். ஆனால், ஒரு நாள்கூட உன்னைத் தொட்டிலில் இட்டு நான் தாலாட்டு பாடவில்லையே! அப்படியானால், நான் குழந்தைகள் பெற்ற தாய்மார்களிலேயே எந்த பாக்கியமும் இல்லாத அபாக்கியவதியான தாயாகிவிட்டேனே கண்ணா. அதோ, தாயின் மடியில், அந்தச் சின்ன குழந்தையைப் பார்க்கிறேன். தாய் கவிழ்த்துப் போடும் பொழுது, அந்தக் குழந்தை திரும்ப மல்லாந்து படுத்துச் சிரிக்கிறது. என் கண்ணா.... நீ ஒரு நாளாவது மல்லாந்து படுத்திருக்கும் அழகை காண முடியாத பாவியாகி விட்டேனே... உன்னைப் பெற்றது வசுதேவன். ஆனால், ஒரு நாள்கூட, ‘‘அப்பா’’ என்று நீ வசுதேவனை அழைக்கவில்லையே.

அப்படி அழைக்கும் பெருமையை நந்தகோபன் அல்லவா பெற்றுவிட்டான்.என்னிடமும் உனக்கு அணிவிப்பதற்கு நகைகள் இருக்கின்றன. ஆடைகள் இருக்கின்றன. ஆனால், என் கையால் ஒரு நகையும் அணிவிக்க வில்லையே.... ஒரு ஆடையும் நான் போட்டு அழகு பார்க்கவில்லையே... கண்ணா, அந்தப் பெருமை எல்லாம், யசோதைக்கு அல்லவா கிடைத்தது.

 உன்னைப் பெற்றும் பெறாதவளாகிவிட்டேன். யசோதை பெறாதவளாக இருந்தும் பெற்றவளாகிவிட்டாள். அப்படியானால், நான் எத்தனை கொடுமையான வினைகளைப் புரிந்திருக்க வேண்டும். அப்படிப் புரிந்திருந்தால் தானே உன்னை நான் பெற்றும் இழந்திருக்க முடியும்... அப்படிப்பட்ட பாவியாகிவிட்டேனே.உன்னைத் திருடன் திருடன் என்று குற்றம் சொன்னார்களாம். அதை பொறுக்க முடியாத யசோதை எங்கிருந்தோ ஒரு தாம்புக் கயிற்றைக் கொண்டு வந்து உன்னை அடிப்பதற்காக வந்தாளாம். நீ ரொம்ப பயந்து போனது போல நடித்தாயாம்.

உன் வாயெல்லாம் வெண்ெணய்... ஆனால், அழுவதற்கு தயாரானது போல உன்னுடைய புருவங்களை எல்லாம் சுருக்கி, இதோ... இப்பொழுதே அழுது விடுவேன் என்பது போல உன்னுடைய சிவந்த வாயை நெளித்துக் கொண்டு, அதே நேரத்திலே அம்மா அடித்து விடுவாளோ என்று பயந்ததுபோல் நடித்தாயாம்.

சர்வ லோக பிதாவான நீ, நாலு பசு மாடுகளை வைத்து பால் கறந்து விற்கும் ஒரு ஆயர் குல ஏழைப் பெண்ணுக்கு அஞ்சி, இரண்டு கைகளையும் சேர்த்து அஞ்சலி செய்து ‘‘அம்மா என்னை அடிக்காதே, என்னை அடிக்காதே. உன்னுடைய அடியை நான் தாங்க மாட்டேன்’’ என்பதுபோல் நடித்தாயாமே, அந்த அழகை நான் காணவில்லையே. கண்ணா.... எல்லா ரிஷிகளும், முனிகளும், தேவர்களும், மனிதர்களும் கைகூப்பித் தொழுகின்ற உன்னை, கைகூப்பி தொழும் படியாக வைத்த அந்த யசோதை அல்லவா எல்லா இன்பத்தையும் பெற்றாள்’’
தேவகியின் கதறலையும், ஆற்றாமையின் வெடிப்பையும் பாருங்கள்.

முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்  
முகிழ் இளஞ் சிறு தாமரைக் கையும்
எழில்கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு
எள்கு - நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்  
அணிகொள் செஞ் சிறுவாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லை - இன்பத்து இறுதி கண்டாளே
இந்தப் பாசுரத்தை ஒருமுறை படித்தாலே, நம்முடைய கண்களில் கண்ணீர் துளிர்க்கும்.
கண்ணனின் காதலி
நிலை அனுபவம்
இன்னும் ஒரு கிருஷ்ணானுபவம். இது ஏமாந்த காதலின் சோகம். பிரேம பாவத்தில், குலசேகர ஆழ்வார் நாயகி பாவத்தில் பாடிய பதிகம். இதிலே கண்ணனைக் காதலிக்கும் ஆயர் குல பெண்களில் ஒருத்தியாக, அல்ல அல்ல, ஒவ்வொருத்தியாக, தன்னை நினைத்துக் கொண்டு பாடிய பாடல்கள் அகச்சுவையில் மிஞ்சி நிற்கும். அற்புதமான பக்திச் சுவையிலும் விஞ்சி நிற்கும். இதில் ஒரு பாசுரம்; முதலில் பாசுர வரிகளைப் பார்த்து விடுவோம்.

ஏர் மலர்ப் பூங்குழல் ஆயர் மாதர்  
எனைப் பலர் உள்ள இவ் ஊரில் உன்தன்
மார்வு தழுவுதற்கு ஆசையின்மை அறிந்தறிந்தே
உன்தன் பொய்யைக் கேட்டு
கூர் மழை போல் பனிக் கூதல் எய்திக்  
கூசி நடுங்கி யமுனை யாற்றில்
வார் மணற் குன்றிற் புலர நின்றேன்  
வாசுதேவா உன் வரவு பார்த்தே
ஒரு அற்புதமான காதல் காட்சியை குலசேகர ஆழ்வார் தன்னுடைய அனுபவமாக வருணிக்கிறார். ஒரு பெண் கண்ணனுக்காகக்காத்திருந்தாள்.

‘‘இன்று மாலை நீ ஆற்றங்கரையில் எனக்காக காத்திரு. யாரிடமும் சொல்லாதே. யாரும்பார்க்கும் படியாக நிற்காதே. நான் சரியான நேரத்தில் உன்னை வந்து சந்திக்கின்றேன். மறந்து விடாதே’’ என்று சத்தியம் அடித்துச் சொல்லியிருந்தான். இந்த அப்பாவிப் பெண்ணும், அதை நம்பி யாரிடமும் சொல்லாமல், கண்ணன் வரவுக்காக, மாலையிலே சென்று, யாரும் இல்லாத ஆற்றங் கரையிலே, மணல் குன்றின் பின்னால், ஒளிந்து கொண்டு காத்திருந்தாள். அவளுக்கு ஒரு பக்கம் பயம்.

யாராவது பார்த்து விடுவார்களோ என்ற அச்சம். அதனால் வருகின்ற நடுக்கம். அதே நேரம், கண்ணன் வந்துவிடுவான், இதோ வந்து விடுவான், இன்னும் கொஞ்ச நேரம் காத்திருக்கலாம், என்கின்ற எதிர்பார்ப்பில் ஒவ்வொரு நிமிடத்தையும் ஒவ்வொரு யுகங்களாகக் கழித்துக் கொண்டிருக்கிறாள். அந்த ஆயாசத்தாலும், வரவில்லையே என்ற துக்கத்தாலும் வந்த நடுக்கம் ஒரு பக்கம். ஏதேனும் கோடை காலத்தில் சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. நல்ல குளிர் காலத்தில் ஆற்றங்கரையில் போய் காத்திரு என்று சொல்லிவிட்டான். அதை நம்பி இந்தப் பெண் வந்துவிட்டாள்.
 
பனிக்காற்று வீசிக் கொண்டிருக்கிறது. அந்த காற்று கூர்மையான முள்ளைப் போல உடம்பில் தைத்து ஊசிபோல் சுடுகின்றது. அதனால், நிலைகொள்ளாமல் அவளுடைய மென்மையான உடம்பு நடுங்குகிறது. இவளுக்கு ஏற்கனவே தெரியும். இப்படி கண்ணனிடம் ஏமாறுவது முதல் முறை அல்ல. பலமுறை இப்படிச் சொல்லிச் சொல்லி ஏமாற்றி இருக்கின்றான். ஒவ்வொரு முறை ஏமாறும் பொழுதும், கண்ணன் மீது கோபம் வரும்.

‘‘இனி அவனை நம்புவதே இல்லை” என்ற முடிவுக்கு வருவாள். ஆனாலும், எப்படியோ அவன் வந்து, இவளிடம் ஆறுதலாகப் பேசி, இனி இந்தத் தவறை செய்யமாட்டேன், மிகச்சரியாக உன்னைப் பார்க்க வந்துவிடுவேன் என்று சத்தியம் செய்யாத குறையாகச் சொல்லுகின்ற பொழுது சின்னதாக ஒரு நம்பிக்கை பிறக்கும். ஏனோ தெரியவில்லை; இன்று மாலை அவன் சொல்லும்பொழுது, “இவன் வழக்கம்போல் என்னை ஏமாற்றி விடுவான்” என்று என்னுடைய உள் உணர்வு கூறியது.

ஆனாலும் ஒரு நப்பாசை. அவன் சரியான நேரத்தில் வந்துவிடுவான்; வந்து என்னிடம் பேசுவான்; என்னை மகிழ்விப்பான்; அவனோடு ஆடலாம்; பாடலாம் என்று இந்தப் பாழும் ஆசை மனது நம்பியது.ஆழ்வார்களுக்கு கண்ணனின் பொய்கள் எல்லாம் தெரியும். “ஏலாப் பொய்கள் உரைப்பான்” என்றுதான் அவர்களும் பாடியிருக்கிறார்கள். ஆனால், ஏனோ தெரியவில்லை கண்ணனுடைய பொய்யை அத்தனை கவிஞர்களும்ரசிக்கிறார்களே....ஆழ்வார்களை விடுங்கள். மகாகவி பாரதிகூட கண்ணனைப் பற்றி இப்படித்தானே பாடுகின்றார்.

கோளுக்கு மிகவும் சமர்த்தன் - பொய்ம்மை
குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்
ஆளுக்கு இசைத்தபடி பேசி - தெருவில்
அத்தனைப் பெண்களையும் ஆகாதடிப்பான்

இன்னொரு பாடலிலே பாரதியே ஒரு தோழியை அனுப்பி, ‘‘அவன் என்ன மனநிலையில் இருக்கிறான்’’ என்பதை தெரிந்து கொண்டு வா, பிறகுநான் அவனிடம் போய்ப் பேசுகிறேன் என்று கூறி அனுப்புவதாகப் பாடுகின்றார்.

‘‘கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்
கண்டு வர வேண்டுமடி தங்கமே தங்கம்’’

குலசேகர ஆழ்வார் அனுபவம், பின்னால் வந்த அத்தனைக் கவிஞர்களுக்கும் இருக்கிறது. இப்பொழுது பாருங்கள்... இந்தப் பெண், கண்ணன் வருவான் என்கின்ற நம்பிக்கையிலும், வரமாட்டான் என்கின்ற அவநம்பிக்கையிலும், யாராவது பார்த்து விடுவார்களோ என்ற அச்சத்திலும், கிடந்து, தவித்து, உருகி, துடித்து, ஒரு யுகம் போல், ஒவ்வொரு நொடியையும், அந்த கனத்த இருளில் கழிக்கிறாள்.

இவள் விழிகள் எல்லாம் விடியும் வரை விழித்திருந்தன. ஒவ்வொரு நொடியும் கண்ணனின் வரவுக்காக தவித்து இருந்தன. கண்ணீர் சுமந்த அந்த விழிகளுடன் காத்திருந்த அவள் துடித்த துடிப்பு ‘‘உன்தன் பொய்யைக் கேட்டு கூர் மழை போல் பனிக் கூதல் எய்திக் கூசி நடுங்கி யமுனை யாற்றில் வார் மணற் குன்றிற் புலர நின்றேன் வாசுதேவா உன் வரவு பார்த்தே’’ என்ற வரிகளில் கொப்பளிப்பதைப் பாருங்கள்.

எத்தனை உணர்வுகள்...? எத்தனை உணர்வுகள்...?

ஒரு பெண் மனதை, ஒரு ஆணால் உணர முடியுமா? முடிந்திருக்கிறதே... காரணம், அவரே அந்தப் பெண்ணாக மாறிவிட்டார்.

1. கண்ணன் காண வரவில்லையே, வருவானா மாட்டானா என்ற சந்தேகம் ஒரு புறம்

2. சொன்னான் சொன்னபடி வந்து விடுவான் என்கின்ற நம்பிக்கை மறுபுறம்

3. அவன்தான் பொய்யனாயிற்றே. அவன் வார்த்தையை ஏன் நம்ப வேண்டும் என்ற எண்ணம் ஒரு புறம்

4. நம்பினால் என்ன? அவன் ஒன்றும் நட்டாற்றில் விடமாட்டான் என்கின்ற எண்ணம் மறுபுறம்

5. ‘‘ஐயோ, இருட்டாகிறதே இன்னும் காணவில்லையே” என்று மனது படபடவென்று அடிக்கும் சத்தம் ஒருபுறம்  

6. விடிய விடியப் பேசுவோம் என்ற ஆசை மனதை சமாதானப்படுத்தியது மறுபுறம்.

இத்தனைக்கும் சாட்சியாக யமுனை நதி சுழித்துக் கொண்டு ஓடுகிறது. வசுதேவன்பெற்றவுடன், குழந்தையை ஒரு கூடையில் சுமந்து வந்த போது, கண்ணனுக்கு வழிவிட்டு நின்ற அந்த யமுனையாறு, என்னுடைய எண்ணத்தையும் தலை கட்டாதா என்று ஏங்குகிறது இவள் மனம்... காற்றில் அந்த நதி கைகளை ஆட்டுவது போல் தெரிகிறது...

ஓ... அந்த நதிக்கும் சந்தேகம் போலிருக்கிறது. ஏனென்றால் கண்ணன் வருவான் என்று அந்த நதியாலும் உறுதிபடச் சொல்ல முடியவில்லை. வரமாட்டான் என்றும் சொல்ல முடியவில்லை. இந்த ஊரில் என்னிடம் மட்டுமா அவன் சொல்லி இருப்பான்? என்னிடம் சொன்னது போலவே பல பெண்களிடமும் அவன் சொல்லி இருப்பான். தலையில் அடித்து சத்தியம் செய்து சொல்லி இருப்பான்.

“சரி அவன் தான் பொய் சொல்கிறான் என்பது தெரிகிறதே, அவன் பொய்யை நம்பி நீ ஏனடி வர வேண்டும்?” என்று கேட்கலாம். உண்மைதான். என்ன செய்வது? பொய் என்று தெரிந்தும் அவன் விஷயத்தில் ஏமாந்துவிடுகிறேன். எத்தனையோ உண்மைகள் பொய்யாகி விடுகின்ற பொழுது, இவன் சொல்லுகின்ற பொய் உண்மையாகி விடாதா என்று நினைத்துக் கொண்டு தானே, இங்கே வந்து, பனிக்காற்றிலே காத்து கிடக்கிறேன்.

கண்ணன் விஷயத்தில் என்னைப் போன்ற பெண்களின் பலவீனம் இது. இந்த பலவீனம்தான் அவனுக்கு பலம். ஆனால், இந்த பலவீனத்தை விட்டுவிட முடியவில்லை. நான் விரும்புகின்ற பலவீனமாக அல்லவா இருக்கிறது.கண்ணனை நம்பிய அந்த எளிய பெண்ணின் மனது தவிக்கிறது. சிந்திக்கிறது. குழம்புகிறது.

தெளிவடைகிறது மறுபடியும் தவிக்கிறது. நேரமோ வினாடிகள் வினாடிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. கார் இருள் கரையாமல் காத்திருக்கிறது. அவனும் கார் இருள் நிறம் தானே... இந்த இருள் என் கண்ணை மறைத்தது போல, அந்த கார் வண்ணனும் தன் எண்ணத்தை மறைத்து விட்டு, இங்கே கொண்டு வந்து விட்டு விட்டான்.தவித்து, தவித்து, துடித்து, துடித்து, நீண்ட இரவு நேரமும் போய்விட்டது.

கீழ் வானில் மெல்ல சூரிய வெளிச்சம்....
விடிய மட்டும் கண்ணனுக்காக நின்று நின்று
கண்கள் இமைக்க மறந்து மரத்துப் போனது.
உதடுகள் துடிக்க மறந்து மரத்து போனது.
கால்கள் நிற்க மறந்து மரத்துப்போனது.
மனம் நினைக்க மறந்து மரத்துப்போனது.

இத்தனை மன ஓட்டத்தையும் அடக்கி, ஆழ்வார் பாடிய இந்த அற்புதமான பாசுரத்தின் கடைசிவரிகளை, ஆழ்வாரின் அவதார நாளில் (3.3.2023) உங்கள் அனுபவமாக நினைத்துப் பாருங்கள். குலசேகர ஆழ்வார், கிருஷ்ணானுபவம் உங்களுக்குப் புலப்படும். அவருடைய அருந்தமிழின் அழகும் அப்பாசுரத்தில் வெளிப்படும்.

பாரதிநாதன்