நாய் தேவதையான சரமா தேவி



பரீக்ஷித்தின் மகனான ஜனமேஜெயன், குருக்ஷேத்திரத்தில் ஒரு அற்புதமான யாகம் செய்து கொண்டிருந்தான். அவனுக்குத் துணையாக அவனது மூன்று சகோதரர்களான, சுருதசேனன், உக்ரசேனன் மற்றும் பீமசேனன் இருந்தார்கள். தெய்வீகப் பெண் நாயான சரமா தேவியின், குழந்தை, அதாவது நாய்க் குட்டி, அவர்கள் வேள்வி செய்யும் அந்த அற்புத இடத்திற்கு வந்து சேர்ந்தது.
“உயர்ந்ததான ஒரு வேள்வியில் கேவலம் ஒரு நாய் புகுந்து விட்டதே” என்று எண்ணிய, ஜனமேஜெயன் தம்பிகள் மூவரும், அந்த நாய்க் குட்டியை கல்லால் அடித்து துன்புறுத்தினார்கள். அந்த நாய்க் குட்டி இரத்தம் சொட்டச் சொட்ட, கண்ணீர் வழிய தனது தாயான சரமாதேவியிடம் சென்று முறையிட்டது.

சரமா தேவி, தன் குட்டியின் உடலில் ரத்தம் சொட்டுவதைக் கண்டு பதறியது. ‘‘ஏன் அழுகிறாய்? எப்படி காயம் ஏற்பட்டது? யார் உன்னை அடித்தார்கள்?’’ என்று அதிர்ச்சியுடன் வினவியது. ‘‘என்னை ஜனமேஜெயன் தம்பிகள் அடித்து விரட்டினார்கள்’’ என்று நாய்க் குட்டி அழுதபடியே நடந்ததை சொன்னது.‘‘அவர்கள் அடிக்கும் விதத்தில் நீ என்ன செய்தாய்’’ சரமா பொறுமையாக விசாரித்தது.‘‘நான் ஒன்றுமே செய்யவில்லை. வேள்விச்சாலையில் நுழைந்தேன் அவ்வளவுதான்’’.

‘‘இறைவனுக்கு படைக்க வைத்திருந்த வேள்வித் திரவியங்களை, சுவைத்தாயா? முகர்ந்தாயா? அப்படி ஏதாவது செய்திருந்தால், அவர்கள் செய்ததே சரி. நிவேதனப் பொருளை நாய் தீண்டலாமா? நாம் தெய்வீக நாயாக இருந்தாலும், தவறு செய்தால் தண்டனை ஏற்படத்தான் செய்யும்’’ மகன் அடிபட்டு துன்பப் படும் நேரத்திலும் தர்மநெறியை போதித்து, அதர்ம வழியில் நீ சென்றிருந்தால் உன்னை அடித்தது நியாயம்தான் என்று சொல்லும் பக்குவம் உடைய சரமா, தான் தெய்வீகநாய் என்பதை நிரூபித்தது.

‘‘அம்மா! நிவேதனப் பொருளையோ, வேள்வியின் நெய்யையோ நான் திருப்பிக் கூட பார்க்க வில்லை. நாவால் தீண்டவும் இல்லை. நினைத்தும் பார்க்கவில்லை. இது சத்தியம்’’ நாய்க் குட்டி சத்தியம் செய்தது. குட்டியின் சத்தியத்தைக் கேட்டு பொங்கியது சரமா, ஒரு தவறும் செய்யாத என் மகனை அடிக்க அவர்களுக்கு எவ்வளவு துணிவு.

உலகாளும் மமதையால் அதர்மம் செய்யும் அவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணிய சரமா, தனது குட்டியை வேள்விச் சாலைக்கு அழைத்துச் சென்றது. நேராக ஜனமேஜயன் முன் சென்று நின்றது. சரமாவின் தெய்வீக ஒளியைக் கண்டு அதைத் தடுக்க யாரும் முன் வரவில்லை. ஆகவே தைரியமாக, மன்னன் முன் நின்றது.

‘‘இதோ இங்கிருப்பது என் மகன். ஒரு தவறும் செய்யாத இவனை எப்படி நீங்கள் தாக்கலாம்?’’ என நீதிக்குரல் எழுப்பியது நாய். அந்தக் குரல் முன்னே தலைகுனிந்தார்கள் ஜனமேஜெயன் தம்பிகள். அதைக் கண்ட மன்னனுக்கு, தவறு தங்கள் மீதுதான் என்று புரிந்தது. ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது. கோபத்தின் உச்சியில் இருந்த சரமா ‘‘ஒரு தவறும் செய்யாத என் மகன் தண்டிக்கப்பட்டதிலிருந்து, உனது நீதி நன்கு தெரிகிறது.

நீதியே இல்லாத மன்னனான உன்னைத் தக்க சமயத்தில் தீமை வந்து சேரும். வினைப்பயனை யாராக இருந்தாலும் அனுபவிக்காமல் கழிக்க முடியாது. நான் வருகிறேன்’’ என்று இடியாய்ச் சபித்துவிட்டு, தனது குட்டியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டது.

ஆனால், அந்த நாய் இட்ட சாபம் ஜனமேஜெயன், மனதைப் போட்டு பிசைந்துகொண்டிருந்தது. இந்த சாபத்திற்கு தக்க பரிகாரம் செய்ய ஒரு நல்ல குருவைத் தேடினான் அவன். இருமுறை அவன் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது, சுருதசிரவன் என்ற முனிவரின் மகனான சோமசிரவன் என்ற மாமுனிவரைக் கண்டான். அவரைத் தனது குருவாக ஏற்க விரும்பியவன், அவரது தந்தையான சுருதசிரவரிடம் கேட்டான்.

அவரும் மனமுவந்து சம்மதித்தார், ‘‘சிரவனுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றத்தை தவிர மற்ற எல்லா குற்றங்களுக்கும் பரிகாரம் சொல்லுவதற்கு இவன் இயன்றவன்’’ என்று கூறி ஆசி வழங்கினார். நல்ல குரு கிடைத்த சந்தோஷத்தில் அவன், மனத்துயர் நீங்கியவனாக, போருக்குச் சென்றான்.

மகாபாரதத்தின் ஆதி பருவத்தில் வரும் இந்தக் கதை, அந்தக் காலத்தில் ஒரு நாய்க்குக்கூட தீங்கு செய்யாமல் மக்கள் வாழ்ந்து வந்தார்கள் என்று காட்டுகிறது. மனுநீதி, சோழன் பசுவுக்கு நீதி வழங்கினான் என்றால், இங்கு ஒரு நாய், தனக்கான நீதியைத் தானே கேட்டுப் பெற்றுக்கொண்டது.

அந்த நாயின் சாபத்தினால்தான், தக்ஷகனை பழிவாங்க ஜனமேஜெயன் செய்த யாகம் நின்றுபோனது என்று சிலர் சொல்லுவார்கள். வேறு சிலர், சர்ப்ப யாகத்தில் பல சர்ப்பங்களை கொன்றதாலும், சரமாவின் குட்டிக்கு தீங்கு செய்ததாலும், அவனுக்குத் தொழுநோய் ஏற்பட்டது என்றும், அதை அவன் குருவாயூர் அப்பனை பூஜித்து நீக்கிக்கொண்டான் என்றும் சொல்கிறார்கள்.

சரி யார் இந்த சரமாதேவி என்ற கேள்வி வருகிறது அல்லவா? இந்த நாய் தேவியை பற்றி, ரிக் வேதத்தில் மூன்று நான்கு மற்றும் ஐந்தாம் அத்தியாயத்தில், ஒரு அழகான கதை விளக்கப் படுகிறது. ஆங்கிரச முனிவரின் மகன்களின் பசுக்களை, பானிஸ் என்ற அரக்கர்கள் கொள்ளை அடித்துச் செல்கிறார்கள். அந்த முனிவர்கள் இந்திரனிடம் முறையிடுகிறார்கள். இந்திரன், சரமா என்னும் தனது நாயை அந்த பசுக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து வருமாறு உத்தரவிடுகிறான். சரமா நாயும் ‘‘என் குழந்தைகளுக்கு, நீ பாலைத் தருவாயேல், நான் செல்கிறேன்’’ என்று சொல்கிறது. இந்திரனும் சம்மதிக்கிறான்.

மோப்பம் பிடித்து, பசுக்கள் இருக்கும் இடத்தை இது கண்டு பிடிக்கிறது. அதைக் கண்ட பானிஸ் அரக்கர்கள், சரமாதேவி இந்திரனிடம் சென்று பசுக்கள் இங்குதான் இருக்கிறது என்று சொல்லிவிட்டால், நமக்குத்தான் ஆபத்து என்று உணர்கிறார்கள். உடன், சரமா தேவிக்கு லஞ்சம் தர முயல்கிறார்கள். ‘‘ஹே சரமா, நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய், எங்களுக்கு நீ தங்கை போன்றவள். ஆகவே நீ எங்களுக்குத் துணையாக இருந்தால், உனக்குப் பல செல்வங்களை அளிப்போம்’’ என்று ஆசை காட்டுகிறார்கள். ஆனால் சரமா சம்மதிக்கவில்லை. இந்திரனிடம் சொல்லி பசுக்களை மீட்கிறது. இதை உண்மையின் வழியில் நின்று சரமா பசுக்களை மீட்டது என்று வேதம் சொல்கிறது.

இதன் உண்மையான பொருள் என்னவென்றால், உண்மையான ஞானத்தின் வழியில் நின்று, அஞ்ஞானத்தை, அதாவது இருட்டைக் குறிக்கும் அசுரர்களை வென்று ஞானஒளியை அதாவது பாலை, பால் தரும் பசுவை மீட்பதுதான்.

அதாவது ஞானம் என்னும் ஒளிகொண்டு அஞ்ஞானத்தை வெல்வது. ஆதலால், இந்த நாயை ‘‘உஷஸ்’’ என்ற உதய கால தேவியின் மற்றொரு வடிவம் என்றும் சொல்கிறார்கள்.ஆண் நாயை பைரவரின் வாகனமாக வணங்கும் நமக்கு, பெண் நாயும் ஒரு தேவியே, என்பதை அறிய வியப்பாக இருக்கிறது இல்லையா? காணும் அனைத்திலும், அனைத்து உயிரிலும் இறைவனைக் கண்ட நம் முன்னோர்களை நினைத்து பெருமை கொள்ள வேண்டும்.

- ஜி.மகேஷ்.