ஆன்மிக அதிசயங்கள்
 *திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாதையில் பூந்தோட்டம் அருகே உள்ள செதலப்பதி என்ற திருத்தலத்தில், மனித முகத்துடன் விநாயகர் உள்ளார். இந்த தலம் தசரதருக்கு ராமர் திதி கொடுத்த தலமாகும். *திருவாரூர் மாவட்டம் குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள ‘‘ வாஞ்சியம்’’ திருத்தலத்தில் எமன், இறைவனுக்கு வாகனமாக உள்ளார். இது ஓர் ஆயுள் தோஷ பரிகாரத் தலமாகும். இங்குள்ள குளம், கங்கைக்குச் சமமாகும். எனவே இந்த குளம், ‘குப்தகங்கை’ என அழைக்கப்படுகிறது.
*சிதம்பரம் கோயில் சிவகங்கைத் தீர்த்தக் கரையில், ‘‘திருத்தொண்டத் தொகை ச்சரம்’’ என்ற பெயரில் ஒன்பது லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை ஒன்பது தொகையடியார்களாக எண்ணி வழிபடுகின்றனர்.
*திருவாரூர் மாவட்டம் சிக்கலில் வீற்றிருக்கும் சிவபெருமான் பெயர் வெண்ணெய்ப்பிரான். பக்தர்களின் வேண்டுதலுக்கு வெண்ணெயாக உருகி அருள்செய்வார்.
*திருவிடைமருதூரில் மகாலிங்க சுவாமி சந்நதி நடுவில் இருக்க, கிழக்கே விஸ்வநாதர் கோயிலிலும், மேற்குவீதியில் ரிஷிபுரீஸ்வரர் கோயிலும், தெற்கில் ஆத்மநாதர் கோயிலும் வடக்கே சொக்கநாதர் கோயிலும் இருப்பதால், பஞ்சலிங்கத் தலமாக விளங்குகிறது.
*திருப்புகலூர் கோயிலில் அக்னி பகவான் மூலஸ்தானம் உள்ளது. ஏழு தீப்பொறி போன்ற தலை, வஜ்ரதந்தம், ஏழுகைகள், மூன்று கால்கள், நான்கு கொம்புகள் அமைந்த இந்த திருஉருவம் அபூர்வமானது.
*செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை என்ற ஊரில் உள்ள சிவன்கோயிலில் மிகவும் அதிசயக் காட்சியைக் காணலாம். இந்த கோயிலில் பார்வதி தேவியின் மடியில் பரமசிவன் படுத்திருப்பது போல காட்சி தருகிறார். பாற்கடலில் அமுதம் கடைந்த போது, அதில் எழுந்த விஷத்தைக் குடித்த சிவன் ஓய்வெடுக்கும் பொருட்டு பார்வதி தேவியின் மடியில் தலை சாய்ந்ததை இந்த காட்சி நினைவுபடுத்துகிறது.
*மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று பெருமைகளிலும் சிறந்து விளங்கும் திருவெண்காட்டில் எல்லாமே மூன்றாக அமைந்துள்ளன. இந்த தலத்திற்கு உரிய மூர்த்திகள் மூவர். சுவேதாரண்யேஸ்வரர், அகோர மூர்த்தி, நடராஜர்.
*திருக்கடையூரில் சங்காபிஷேகம் செய்யப் பயன்படும் தீர்த்தத்தில் 1000-க்கும் மேற்பட்ட மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன. இது இங்கு விசேஷம்.
ஆர்.ஜெயலெட்சுமி
|