முத்துக்கள் முப்பது-மகத்தான வாழ்வு தரும் மாசி மக நீராட்டம்



ஒவ்வொரு தமிழ் மாதத்தின் அமாவாசையும், பௌர்ணமியும் வழிபாட்டுக்கும், விரதத்திற்கும், கோயில் உற்சவங்களுக்கும் உகந்த நாட்களாக இருக்கின்றன. அந்த வகையில், மாசி மாதம் பௌர்ணமியை ஒட்டி, மக நட்சத்திரத்தில் நடைபெறும் நீராட்டம், ‘‘மாசி மகம்’’ என்று அழைக்கப்படுகிறது. மாசி மகத்தின் பல்வேறு சிறப்புகளை முப்பது முத்துக்களாகக் காண்போம்.

1. சூரியனும் சந்திரனும்

நம்முடைய வாழ்வுக்கு மிக முக்கியமான இரண்டு விஷயங்கள் சூரியனும் சந்திரனும். ஆண்டாள், பகவானை “சூரிய சந்திர இணைப்பாகக் காண்கிறாள். “கதிர் மதியம் போல் முகத்தான்” என்று வர்ணிக்கிறாள். மற்ற கிரகங்களைப் பற்றி சாத்திரத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், அவைகள் பிரதானமானவை அல்ல. ஒரு நாளின் இரண்டு அங்கங்கள் பகலும் இரவும். பகல்நேர ஒளிக்குச்சூரியனும், இரவு நேர ஒளிக்குச்சந்திரனும் பொறுப்பு ஏற்றுக் கொள்கின்றன.

பகல் நேரத்தில் சூரியன் நேரடியாகவே தன்னுடைய ஒளியை பூமிக்கு வழங்குகிறான். இரவு நேரத்தில் சந்திரன் மூலமாகச்சூரியன் பூமிக்கு ஒளியை வழங்குகின்றான். எனவே இந்த இரண்டும் மிக முக்கியமானவை. பெரும்பாலான உற்சவங்களையும் விழாக்களையும் தீர்மானிப்பவை சூரிய சந்திரநதிகள்தான். மாசி மகமும் சூரிய சந்திரனின் அமைப்பை ஒட்டித்தான்தீர்மானிக்கப்படுகிறது.

2. கும்ப மாதம்

மாதங்களைக் கணக்கிடும் பொழுது, சூரியனின் கதியை ஒட்டி, மாதங்களின் பெயர்களை நிர்ணயித்திருக்கிறார்கள். இதை சௌரமான முறை என்று சொல்வார்கள். வான மண்டலத்தை 360 பாகைகளாகப் பிரித்து, ராசி மண்டலமாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். (கற்பனைக்கோடுகள்தான்) ராசி மண்டலத்தை 12 பாகங்களாகப் பிரித்து, தோராயமாக முப்பது பாகைக்கு ஒரு ராசி என்று, “மேஷம் முதல் மீனம்” வரை 12 ராசிகளாகப் பெயர்சூட்டி வைத்திருக்கிறார்கள். ராசியின் பின்னணியில் நட்சத்திர மண்டலங்களும் இருக்கின்றன. இதில் முதல் ராசியான மேஷ ராசியின் முதல் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலம் சித்திரைமாதத் தொடக்கம்.

அப்படியே வைகாசி, ஆனி, ஆடி என்று 12 மாதங்களைச் சொல்கிறோம். இந்த அடிப் படையில் சூரியன், தன்னுடைய 300-வது பாகையில் இருந்து 330-வது பாகை வரை செல்லும் காலம் கும்பமாதம் அல்லது மாசிமாதம் என்று வழங்கப்படுகிறது.

3. அமாவாசையும், பௌர்ணமியும்

மாசி மாதத்தில் சூரிய சந்திர சேர்க்கையை ஒட்டி இரண்டு பெரிய திருவிழாக்கள் நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றன. சூரிய சந்திர சேர்க்கை என்பது அமாவாசை பௌர்ணமி என்று இரண்டு நிலைகளில் வரும். சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் ஒரே நட்சத்திரத்தில் இணையும் காலம் அமாவாசை என்றும், சூரியன் இருக்கும் ராசிக்கு நேர் எதிர் ராசியில் இருந்து கொண்டு சூரியனும் சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் காலம் பௌர்ணமி என்றும் அழைக்கப் படுகிறது. மாசி மாதம் அமாவாசையை ஒட்டி சிவராத்திரிப் பெருநாளும், பௌர்ணமியை ஒட்டி மாசி மகமும் கொண்டாடப்படுகிறது.

4. பௌர்ணமியா? மக நட்சத்திரமா?

மாசி மகத்திருவிழாவின்போது, கும்ப ராசியில் சூரியனும், நேர் எதிர் ராசியான சிம்ம ராசியில் சந்திரனும் இருப்பார்கள். சிம்ம ராசியில் மகம், பூரம், உத்திரம் என்று மூன்று நட்சத்திரங்கள் உண்டு. மக நட்சத்திரம் கேதுவுக்கு உரிய நட்சத்திரம். பூர நட்சத்திரம், சுக்கிரனுக்கு உரிய நட்சத்திரம். உத்திர நட்சத்திரம், சூரியனுக்கு உரிய நட்சத்திரம்.

இதில் மக நட்சத்திரத்தின் நாலு பாதங்களும், பூர நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும், சூரியனுக்குரிய சிம்ம ராசியில் இருக்கும். சிம்ம ராசியில் சந்திரன் பிரவேசித்து, சூரியனைப் பார்க்கும் காலம் பௌர்ணமி. அந்த பௌர்ணமி சில நேரங்களில் மக நட்சத்திரத்திலேயே வரும். சில நேரங்களில் பௌர்ணமிக்கு அடுத்த நாளில் மக நட்சத்திரம் வரலாம்.

சில கோயில்களில், பௌர்ணமியை முக்கியமாகக் கருதி தீர்த்தவாரியை வைத்துக்கொள்வார்கள். சில கோயில்களில் மக நட்சத்திரம் இருக்கும் நாளை தீர்த்தவாரிக்குத் தேர்ந்தெடுப்பார்கள்.

5. ‘‘மாசி மகம்” பெயர்க்காரணம்

சூரிய கதிமுறையில், அதாவது சௌரமான முறையில், கும்ப ராசியில் சூரியன் பிரவேசிக்கும் காலம் மாசி மாதம் என்று வழங்கப்படுகிறது. சாந்திரமான முறையில், அதாவது சந்திரகதியைக் கொண்டு, மாதங்களை நிர்ணயிக்கும் முறையில், மாசிமாதத்திற்கு “மாக மாதம்” என்று பெயர். பெரும்பாலும், பௌர்ணமியில் என்ன நட்சத்திரம் வருகிறதோ, அந்த நட்சத்திரத்தை ஒட்டி, மாதங்களின் பெயர்கள் சூட்டப்படுவதுண்டு.

சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால், சித்திரை மாதம் என்றும், விசாக நட்சத்திரத்தை ஒட்டி பௌர்ணமி வருகின்ற பொழுது வைகாசி மாதம் என்றும், திருவோண நட்சத்திரத்தை ஒட்டி பௌர்ணமி வருவதால் ஸ்ரவணமாதம் அல்லது ஆவணி மாதம் என்றும் பெயர் சூட்டுவது போல, மக நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் அந்த மாதத்தை மாக மாதம் என்று பெயர் சூட்டி அழைத்தனர்.

சாந்திரமான மாசத்துள் பதினொன்றாவது மாதம் என்று சேது புராணத்தில் உள்ளது. மாகம் என்பது பின் மகமாகியது. இந்த மாதத்தில் நீராடி அகத்தூய்மையும் புறத் தூய்மையும் பெற வேண்டும் என்பதால் மாசி மக நீராட்டத்தை சிறப்பாகச் சொன்னார்கள்.

6. மாசி மகமும், மஹாமகமும்

குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு வருடம் இருப்பார். இப்பொழுது அவர் மீன ராசியில் தன்னுடைய ஆட்சி வீட்டில் இருக்கிறார். இவர் சிம்ம ராசியில், மக நட்சத்திரத்தில், சந்திரனோடு இணைந்து சூரியனைப் பார்க்கும் காலம் `மகா மகம்’ என்று கொண்டாடப்படுகிறது. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் திருவிழாவாகும்.

புனித நதிகளான கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி, சரயு, தாமிரபரணி ஆகிய 9 நதிகளும், பிறர் பாவங்களைப் பெற்றுக் கொண்டதால் வந்த, தங்கள் பாவங்களை, இந்த நாளில் போக்கிக் கொள்வதால், மகாமக நீராட்டம் என்பது புனிதத்திலும் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்த ஒன்பது நதிகளும் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்ட ஊர் கும்பகோணம்.

போக்கிக் கொண்ட தீர்த்தம் மகாமக குளம் அல்லது மகாமக தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. கடைசியாக மகாமகம் நடைபெற்ற ஆண்டு 2016. அடுத்த மகாமகம் ஐந்து வருடங்கள் கழித்து, 2028-ல் நடைபெற உள்ளது.

7. பஞ்சபூதங்களும், மாசி மகமும்

மாசி மகத்திற்கும் பஞ்சபூதத்திற்கும் தொடர்பு உண்டு. மாசி என்பது கும்ப ராசியைக் குறிக்கும். கும்ப ராசி காற்று ராசி. சிம்ம ராசியில் சந்திரன் இருக்கும் காலம்தான் மாசிமகம் நடைபெறுகிறது. சந்திரன் நீர் தத்துவத்தைக் குறிக்கும் கிரகம். சந்திரன் இருக்கும் சிம்ம ராசி நெருப்பு ராசி. மாசி மகம் இந்த பூமியில்தான் நடைபெறுகின்றது எனும் பொழுது பூமியாகிய மண் தத்துவம் வந்துவிடுகிறது. இந்த பூமிக்கு மேல்தான் ஆகாயம் இருக்கிறது என்பதால் ஆகாய தத்துவமும் வந்துவிடுகிறது.

இந்த பூமியின் மேல், ஆகாயத்திற்கு கீழ் நாம் உயிரோடு இருக்க காற்று அவசியம் (கும்ப ராசி); நீர் அவசியம் (சந்திரன்); நெருப்பு அதாவது உஷ்ணம் அவசியம் (சிம்ம ராசியும், சூரியனும்); இத்தனைத் தொடர்புகளும் மாசி மக தீர்த்த வாரியில் கிடைத்துவிடுகிறது.

8. நீராட்டம் ஏன் அவசியம்?

ஆண்டாள் நாச்சியார் ஒரு பாசுரத்திலே வழிபாடு எப்படி அமைய வேண்டும் என்பதை விவரித்துப் பாடியிருக்கிறார். “தூயோமாய் வந்து, தூ மலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, போயப் பிழையும் புகுதருவான் நின்றனவும், தீயினில் தூசாகும் செப்பு” என்பது பாசுரம். வழிபாட்டுக்கு முக்கியம் தூய்மை. தூய்மைக்கு முக்கியம் நீராடுதல். இந்த நீராடுதல் இரண்டு வகைப்படும். ஒன்று அகநீராட்டம். இன்னொன்று புறநீராட்டம். புறத்தூய்மை தண்ணீரில் குளிப்பதால் உண்டாகும்.

அகத்தூய்மை, உண்மையைப்பேசுவதாலும், நல்ல வார்த்தைகளைப் பேசுவதாலும், நல்ல சிந்தனையை வளர்த்துக் கொள்வதாலும், இறைவழிபாட்டின் மூலமும் உண்டாகும்.
இதை வள்ளுவரும்,
புறத்தூய்மை நீரால் அமையும்
அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்
 - என்றார்.

அகம், புறம் தூய்மையாகிவிட்டால்,நம்முடைய பாவங்கள் தீயினில் பட்ட தூசாக மாறிவிடும். இந்த அகத்தூய்மையும் புறத்தூய்மையும் பெறுவதற்காகத்தான் மாசிமகத்திலே நீராடி பகவானை வணங்குகின்றோம்.

9. பூர்வ புண்ணிய பலன்களைத் தரும்

பழங்காலம் தொட்டு மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வின் ஒரு பகுதியாக மாசி மகத் திருவிழாவை நடத்திவந்தனர். மாசிக் கடலாடுதல் என்று இந்த விழாவிற்கு பெயர். கடலும், நீர்நிலைகளும் இந்த புனித நாள்களில் சற்று மாறுபட்டே இருக்கும். எல்லா பௌர்ணமி நாள்களிலும் கடலில் நீராடலாம் என்றாலும், மாசி மகத்திலே நீராடுவது மிகவும் சிறப்பு. ஆயிரக்
கணக்கான மக்கள் அன்று இறைவழிபாடு செய்து நீராடுவதால், மாபெரும் கூட்டு வழிபாட்டின் சக்தியும் அன்றைக்குக் கிடைத்துவிடுகிறது.

மாசி மகத்தன்று நீராடுவதால் ஆபத்துக்கள் போகும். பாவங்கள் கழியும். புண்ணியங்கள் சேரும். காரணம், மக நட்சத்திரம் உள்ள ராசி சிம்ம ராசி. கால புருஷனுக்கு ஐந்தாவது ராசி, புண்ணியங்களைத் தரும். எனவே மக நட்சத்திரம் உள்ள பூர்வ புண்ணிய ராசியில் சந்திரன் இருக்க, கும்ப ராசியில் சூரியன் இருக்க, மாசி மகத்தில் நீராடுவது மகத்தான பூர்வ புண்ணிய பலன்களைத் தரும்.

10. நீர் நிறைந்த குடம்

கும்பமாதமாகிய மாசி மாதத்தில் மகாமகம் வருகிறது. கும்ப ராசி ஒரு கும்பத்தில் அல்லது குடத்தில் நீர் நிறைந்து இருப்பதைக் குறிக்கும் ராசி. நீர் நிறைந்த குடம் அதன் அடையாளம். அண்டம் ஒரு குடம். பிண்டம் ஒரு குடம். குடம் என்பது இந்த சரீரத்தைக் குறிக்கும், நம்முடைய சரீரத்தின் பெரும் பகுதி நீர்தான். சித்தர் பாடல்களில், இந்த உடம்பு நீர் நிறைந்த குடமாக வர்ணிக்கப்படுகிறது.

நந்தவனத்தில் ஒரு ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதை
கூத்தாடி கூத்தாடிப் போட்டு உடைத்தாண்டி
நீர் நிறைந்த குடத்தைக் குறிக்கும் கும்பமாதமாகிய மாசி மாதத்தில், நீர் நிறைந்த இந்த சரீர குடத்தை தூய்மையாக்கி நிலைநிறுத்தவே, மாசி நீராட்டம் அமைந்திருக்கிறது.

11. மாசி மகத்தின் நோக்கம்

அடுத்து, கும்ப ராசி என்பதை காற்று ராசி என்று பார்த்தோம். காற்று எங்கே இருக்கிறதோ, நீர் எங்கே இருக்கிறதோ, அந்த இடத்திலே உயிரினங்கள் வாழும். இந்த பிரபஞ்சத்தில் எத்தனையோ நட்சத்திர மண்டலங்கள் உண்டு. எத்தனையோ கிரகங்கள் உண்டு. ஆனால் உயிர் வாழத் தகுதியான, நீரும் காற்றும் உள்ள ஒரே இடம் பூமிதான்.

இந்த காற்று இருக்கும் வரை உயிர் இருக்கும். “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்ற பழமொழி உண்டு. அதனால், காற்று ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாசிமாதத்தில் நாம் நீராடி இறைவனை வணங்கி ஆன்மப்பலனை அடைய வேண்டும் என்பதுதான் மாசி மகத்தின் நோக்கம்.

12. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

தூற்றி என்றால் என்ன பொருள்? நெல், பருப்பு போன்ற தானியங்களில் உள்ள பதர் முதலியவற்றைப் போக்குவதற்காக, முறத்தில் வைத்து ஆட்டிப் பதரையும் தானியத்தையும் பிரிந்து விழச் செய்தலுக்கு தூற்றி என்று பொருள். தூற்றுவதன் நோக்கம் நெல்லை காப்பாற்றுவது. பதரைப் பிரிப்பது.

அதற்கு காற்று வேண்டும். நம்மிடம் நெல்மணிகளான நல்ல எண்ணங்களும், பதர்போல பிரகிருதி தொடர்பால் வந்த கெட்ட எண்ணங்களும் உண்டு. காற்று இருக்கும் போது பதரை பிரிக்க முடியும். அதாவது காலம் இங்கே முக்கியம். அது போல மனதின் அசுத்தமான, பதர் போன்ற எண்ணங்களை பிரித்தெடுக்க காற்று வேண்டும். மாசி மாதம் காற்று ராசியில் வருவதால் அந்த மாதத்தை ஆன்ம அழுக்குகளை நீக்கிக்கொள்ளத் தேர்ந்தெடுத்தார்கள்.

13. கடல் தீர்த்தவாரி

மாசி மகத்தில் கடல் தீர்த்தவாரி சிறப்பானது என்று பார்த்தோம். இந்தியாவில் கோயில்கள் அதிகம். அதிலும், தென்னகத்தில் அதிகம். அதிலும், தமிழகத்தில் அதிகம். இதில் என்ன சிறப்பு என்று சொன்னால், தமிழகத்தின் கிழக்குக்கடற்கரைக்கு வங்கக்கடல் என்று பெயர். வங்கக் கடற்கரையை ஒட்டி ஏராளமான ஆலயங்கள் உள்ளன.

இந்த ஆலயங்களின் மாசி மக தீர்த்தவாரி உற்சவங்கள் அந்தந்த ஊருக்கு அருகாமையில் உள்ள கடற்கரையில் நடக்கும். மொத்தத்தில், சென்னையில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரை உள்ள மிக நீண்ட கடற்கரையில் ஆயிரக்கணக்கான சைவ, வைணவ, அம்மன் ஆலயங்களின் உற்சவமூர்த்திகள் மாசி மகத்துக்கு எழுந்தருளுவதும், அவர்களோடு லட்சக்கணக்கான மக்கள் மாசிக் கடல் ஆடுவதும் மிகச் சிறப்பு.

14. வங்கக்கடல் கடைந்த மாதவனை

ஆண்டாள் திருப்பாவையில் கடைசிப் பாசுரத்தினை, வங்கக்கடல் என்ற வார்த்தையோடு தொடங்குகிறாள். அந்தப் பாசுரம் இது.

வங்கக்கடல் கடைந்த மாதவனை
கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார்
சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு
மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்
திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

15. ஏன் வங்கக்கடல்?

இதில், “வங்கக்கடல்” என்பது கப்பல்கள் நிறைந்த கடல் என்ற ஒரு பொருள் இருந்தாலும், `ஷீராப்தி’ என்று சொல்லப்படும் பாற்கடலுக்கு வங்கக்கடல் என்று பெயர். தமிழ்நாட்டின் கிழக்குக்கடற்கரைக்கும் வங்ககடல் என்று பெயர். அதனால், வைணவ ஆலயங்களினுடைய உற்சவமூர்த்திகள் கிழக்குக் கடற்கரையை, பாற்கடலாகவே கருதி, தீர்த்தவாரி உற்சவத்தில் எழுந்தருளுகின்றனர். இதில் இன்னொரு தத்துவமும் உண்டு.

எத்தனையோ நதிகள் இருந்தாலும், அந்த நதிகள் பெரும்பாலும் கடலில் போய்தான் சங்கமிக்கின்றன. நதியை பெண்ணாகவும், கடலை ஆணாகவும் கருதுவது நமது சமய மரபு. எல்லாத் தத்துவங்களும் ஒரே இறைவனைத் தான் காட்டுகின்றன என்பதை கீழ்வரும் பாடல் நமக்கு உணர்த்துகிறது.

பொங்குபல சமயமெனும் நதிகளெல்லாம்
புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எங்கும்
கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந்
தணிக்கின்ற தருவே பூந்தடமே ஞானச்
செங்குமுத மலரவரு மதியே எல்லாம் செய்யவல்ல கடவுளே தேவதேவே
(திருவருட்பா 2118)

எல்லா நதிகளும் ஒரே கடலில் சென்று சேர்வது போல, எல்லா சமயத்தவர்களும், அவரவர்கள் வழிபாட்டு உற்சவ மூர்த்திகளோடு கடல் என்னும் ஏக பரம்பொருள் குறியீட்டில் இணைகின்றனர் என்பது மாசி மக தீர்த்தவாரியின் மையக்கருத்து.

16. கடலில் கிடைத்த பொருள்கள்

கடல் தீர்த்தவாரிக்கு, புராண ரீதியாகவும், இதிகாச ரீதியாகவும் சுவையான பல காரணங்கள் உண்டு. உதாரணமாக, தேவர்கள் அமுதம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். அதில் அமுதம் மட்டுமா கிடைத்தது? வரிசையாக பல பொருள்கள் தோன்றின. என்னென்ன கிடைத்தன தெரியுமா? இதோ பட்டியல்.

ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, கிருகத்தலை, சிகத்தலை, சகசந்திசை, பிரமலோசத்தி, அநுமுலோசை, கிருதாசி, விசுவாசி, உருப்பசி, பூர்வசித்தி, சங்கநிதி, பதுமநிதி, சிந்தாமணி, இரதி, இலக்குமி, அகலிகை, இந்திராணி, ஸகேசி, மஞ்சுகோஷ், சித்திரலேகை என அறுபதாயிரம் (60,000) அரம்பையர்கள், உச்சை ச்ரவஸ் எனும் வெள்ளைக்குதிரை, ஐராவதம் என்ற வெள்ளை யானை, புண்டரிகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் என எட்டு யானைகள்.

கௌஸ்துபமணி, சிந்தாமணி, கவுத்துவமணி, கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் முதலிய ஐந்து மரங்கள், மதுரசம், பிரம்ம தண்டலம் - பிரம்ம கமண்டலம், சூரியமணி, சமந்தகமணி, கவுஸ்துபமணி, தேவதத்த சங்கு, புஷ்பகவிமானம், நந்தி கோஷ ரதம், ஆலகால விஷம், வாருணி, தன்வந்திரி, சூரியன், சந்திரன், சங்கநிதி, சந்திரன்,
இறுதியாக அமுதமும் வெளிவந்தது.

17. மாமனார் வீட்டுக்கு மருமகன்

பத்மம், மஹாபத்மம், மகரம், கச்சபம், குமுதம், நந்தம், சங்கம், நீலம், ஜஜபத்மினி வண்டோகை, மனோகை, பிங்களிகை, பதுமை, சங்கை, வேசங்கை, காளை, மகாகாளை, சர்வரத்னம் நவநிதிகள் என இத்தனைப் பொருள்களோடு, இந்த ஐஸ்வர்யங்களுக்கெல்லாம் மூல காரணமாக விளங்குகின்ற சாட்சாத் மகாலட்சுமியே கடலில் தோன்றினாள். தேவர்கள் வெறும் உப்புச்சாறு (அமுதம்) பெற, மஹாவிஷ்ணு பெண்ணமுது (மஹாலஷ்மி) பெற்றார் என்பது வைணவ உரையாசிரியர்கள் கூற்று.

மஹாலட்சுமிக்குரிய மிக முக்கியமான ஸ்லோகங்களில், ``ஷீர சமுத்திர ராஜ தனயாம் ரங்க தாமேஸ்வரீம்’’ என்பது பிரபலமான ஸ்லோகம். ‘‘கடல் அரசன் பெண்ணே” என்பது பொருள். கடல் அரசனின் பெண்ணை மணந்ததால், கடல் அரசன், மஹாவிஷ்ணுவுக்கு மாமனார் ஆகிறார். மாமனார் வீட்டுக்கு மருமகன் மனைவியோடு போகும் குதூகலம்தான் மாசிமக கடல் தீர்த்தவாரி.

18. ‘‘மால்” திருமால் ஆனார்

பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமி, மகாவிஷ்ணுவின் மார்பிலேயே அமர்ந்தாள். அதனால், மால் திருவோடு இணைந்து திருமால் ஆனார். திருவாழ் மார்பனாகவும், திருவுக்கும் திருவாகிய செல்வனாகவும், ஸ்ரீனிவாசனாகவும் ஆனார். மகாவிஷ்ணுவும் திருவாகிய ஸ்ரீதேவியும் ஒன்றாக இணையக் காரணமாக இருந்தது வங்கக் கடல்தான், அதாவது பாற்கடல். பகவானுக்கே ஐஸ்வரியம் (செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீதேவியைத்) தந்தது கடல்.

ஐஸ்வர்யம் பெற்றதால், அப்படி பெற்ற கடலுக்கு மாசிமாதம் வருகிறார். எங்கும் திருவருள் பெற வேண்டும் என்பதற்காக, தானே தீர்த்தவாரி செய்து கொள்கிறார். அந்த நாளில் (மாசி மக நாளில்) நாமும் கடல் நீராடினால் எம்பெருமானின் இணையற்ற திருவருள் கிடைக்கும் என்பதற்காகவே கடல் தீர்த்த வாரியை சிறப்பான ஒரு உற்சவமாகக் கொண்டாடுகிறோம்.

19. கடல் செல்வம்

இன்னும் ஒரு காரணமும் கடல் தீர்த்தவாரிக்கு உண்டு. பாற்கடலில் மட்டும் எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைத்துவிடவில்லை. நீங்கள் நினைத்துப் பாருங்கள். கடல் என்கின்ற ஒரு பகுதி இல்லாவிட்டால் இந்த உலகம் நிலைத்திருக்காது. கடலில் இருந்துதான் நன்னீர் கிடைக்கிறது. கடலில்தான் அத்தனை செல்வங்களும் நிறைந்து இருக்கின்றன.

பல்வகை மீன்கள், சிப்பிகள், சங்குகள், நண்டுகள் கடலின் மூலம் கிடைக்கின்றன. சுண்ணாம்பு, மணல், சரளை போன்ற பொருட்கள் மற்றும் கடல் அடிவாரத்தில் கரைந்துள்ள கனிமங்கள் கிடைக்கின்றன. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைக்கிறது. கடல் நீரில் இருந்து உப்பு கிடைக்கிறது. கடல்வாழ், உயிரினங்களில் முத்துக்களை உற்பத்தி செய்யும் திறனுடைய யூனியோ, க்வாட் ருலா என்ற பெயருடைய சிப்பிகள் உள்ளன.

ஆழ்கடலில் எடுக்கப்படும் முத்து, உயர் ரகமாகும். கடல் வளம் இல்லாத நாடு, பொருளாதாரத்தில் சிறப்படைவதில்லை. எனவேதான் கடல் சிறப்பான ஒரு அம்சமாகக் கருதப்பட்டு, கடலை பூஜிக்கும் வண்ணம், கடல் தீர்த்தவாரி நடைபெறுகின்றது. எல்லா ஐஸ்வர்யங்களையும் தரும் கடல், நமக்கு நீண்ட வாழ்நாளும், நிறைந்த செல்வமும் தரும் என்பது கடல் தீர்த்தவாரியின் நோக்கம்.

20. தத்துவம் இதுதான்

தத்துவ விசேஷமும் இதில் உண்டு. நமது மனம் “கடல்” போன்றது. எண்ணற்ற நினைவுகளைக் கொண்டது. கடலுக்கு எப்படி எல்லை
இல்லையோ, அதைப்போல நம் மனதில் முடியும் எண்ணங்களுக்கும், ஆசைகளுக்கும் எல்லை இல்லை. கவியரசு கண்ணதாசன் இதை அற்புதமான ஒரு பாடலிலே பாடுவார்.
கையளவு உள்ளம் வைத்தான் கடல் போல் ஆசை வைத்தான் இது உண்மைதான். இந்தக் கடலைக் கடைந்தால், பாற்கடலில் எப்படி அமுதம் கிடைத்ததோ, அப்படி இறைவனாகிய அமுதம் நமக்கு கிடைப்பான், அந்த அமுதம் ஆரா அமுதம்.

21. மாசி மகத்தில் நமக்கு என்ன கிடைக்கும் தெரியுமா?

ஆரா அமுதே! அடியேன் உடலம்
நின்பால் அன்பாயே,
நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே,
சீரார் செந்நெல் கவரி வீசும்
செழுநீர்த் திருக்குடந்தை,
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்!
கண்டேன் எம்மானே!
  - என்பது நம்மாழ்வார் திருவாய்மொழி.

 கும்பகோணத்தில் உள்ள பெருமாளுக்கு ஆரா அமுதப் பெருமாள் என்று பெயர். மாசி மகத்தில் தீர்த்தமாடி வழிபாடு நடத்துவதன் மூலம் அமுதம் கிடைத்தது போல, அந்த ஆராவமுதப் பெருமாள் கிடைப்பார். கடலைக் கடைந்த பொழுது பெருமாளுக்கு மகாலட்சுமி தாயார் கிடைத்தாள். மகாலட்சுமிக்கு பெருமாள் கிடைத்தார். ஆனால், நமக்கு மாசி மகத்தில் பெருமாள் தீர்த்தமாடிய தீர்த்தத்தில் நீராடும் பொழுது மகாலட்சுமியோடு இணைந்த பெருமாள் கிடைப்பார். கும்பகோணத்தில் உள்ள பெருமாள் ஆலயங்களின் உற்சவமூர்த்திகளுக்கு பொற்றாமரை குளத்திலும், காவிரி ஆற்றிலும் தீர்த்தவாரி நடைபெறும்.

22. கும்பகோணத்தில் மாசி மகம்

மாசி மகம் என்றால் உடனே நம் நினைவுக்கு வருவது கும்பகோணம்தான். கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தின் சிறப்பு என்ன தெரியுமா? மாசி மகத்தின் பொழுது நீர்க்கிரகமான சந்திரன் நெருப்பு ராசியான சிம்ம ராசியில் இருப்பது போல, கும்பகோணத்தின் அக்னி மூலையில், நீர் நிறைந்த மகாமக குளம் அமைந்திருக்கிறது. மக நீராடலுக்கென்றே அமைந்த ஒரே குளம் உலகத்தில் இதுதான்.

மாசி மகம் அன்று கும்பகோணத்தில் உள்ள காசி விஸ்வநாதர், கும்பேஸ்வரர், நாகேஸ்வரர் சோமேஸ்வரர், கௌதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், பாணபுரீஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அமிர்தகலசநாதர் என எல்லா சிவாலய உற்சவமூர்த்திகளும் மாசி மக குளத்திற்கு வந்து தீர்த்தவாரி நடத்துகின்றன.

23. ‘‘கும்பகோணம்” பெயர்க்காரணம்

உலகம் அழியும் பிரளய நேரம் வந்தபோது, பிரம்மா தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் இட்டு அந்தக் குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்றபோது பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வந்தது. பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே கும்பகோணம். குடமூக்கு என்ற பாடல் பெற்ற தலம்.

சிவபெருமான் தரை தட்டிய குடத்தின் மீது அம்பைச் செலுத்தி, குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி ஐக்கியமானார். இவர் ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் தங்கினார் குடத்தின் வாசல் ‘‘குடவாசல்’’.

குடத்தின் கோணம் ‘‘கும்பகோணம்’’. சிவபெருமான் அம்பால் அடித்து அந்தக் குடத்தை உடைத்தபோது, அதிலிருந்து வெளிவந்த அமுதம் நீராகப் பெருகி, மகாமக குளமாக உருவானதாக புராண வரலாறு. மாசி மகம் அன்று நீராடுவதால் சர்வ தோஷங்களும் நீங்கும்.

24. தண்ணீரின் குற்றம் தண்ணீரால் நீங்கியது

பஞ்சபூதங்களில் நீர் முக்கியமானது. நீருக்கு அதிபதி வருணன். வருணன் ஒரு முறை பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு நலிந்தான். மழைக் கடவுள் பலமின்றி இருந்ததால் உலகம் வாடியது. சிவனை நோக்கித்தவமிருந்தான். மாசி மக நட்சத்திரத்தில் நீராடினால் தோஷம் தீரும் என சிவபெருமான் கூறினார்.

தண்ணீர்க்கடவுளான வருணன் மாசு தீர, மாசி மகம், பௌர்ணமி நாளில், நீராடினான். இறைவனை வழிபட்டு, குற்றம் நீங்கினான். தூய்மை அடைந்த வருண பகவான், பழைய நிலையை அடைந்தான். எல்லாக் குற்றங்களையும் நீக்கும் தண்ணீரின் குற்றத்தை நீக்கி அருளினார் இறைவன். அந்த நன்னாளில் நாமும் நீராடி இறைவனைவணங்கினால் நம்முடைய மாசுகளும் தீரும்.

25. பற்பல தானங்கள்

செய்த பலன்கள் கிட்டும் கடலில் சென்று இறைவனுக்கு நீராட்டி தானும் நீராடுதல் உடல் நலத்திற்கும், உயிர் நலத்திற்கும் நன்மை தரும் என்று ஜோதிடசாஸ்திரங்களும், ஆகமசாஸ்திரங்களும்
கூறுகின்றன.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
  - என்பது குறள்.

மாசிமகத் திருநாள் அன்று இறைவனே நீர் நிலைகளில் வந்து நீராடுகின்றார். அப்பொழுது அவருடைய திருவடியை நினைத்து நாமும் அதே நீரில் நீராடினால் பிறவிப் பெருங்கடலை நீந்திவிடலாம்.

மாக ஸ்நாநைர் விபந் நாசா: மாக ஸ்நாநைர் அகஷயா:
ஸர்வ யஜ் ஞாதி கோ மாக ஸர்வ தான பலப்ரத:
 மாசிமகத்தன்று நீராடுவதால் ஆபத்துக்கள் போகும். பாவங்கள் அழியும். எல்லாவிதமான யாகங்கள் செய்த பயன்களும் ஏற்படும். பற்பல தானங்கள் செய்த பலன்கள் கிட்டும் என்பது ஸ்லோகத்தின் பொருள்.

26. இலக்கியத்தில் தீர்த்தவாரி

மாசிக் கடலாடுதல் என்பது தமிழ்நாட்டுத் தொன்மையான பழக்க வழக்கங்களிலும் இருந்துவரும் உன்னதமான விழாவாகும். சங்க கால இலக்கியங்களிலும், செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் மாசிக் கடலாடுதல் குறித்து அதிகமான செய்திகள் காணப்படுகின்றன. மதுரைக் காஞ்சி எனும் சங்கநூலில் மாசி நீராடல் விழா அமைந்தது பற்றிக் குறிப்பிடுகின்றார். அதன் ஆசிரியர் மாங்குடி மருதனார். புறநானூற்றுப் பாடலில் சங்க காலப் பாண்டிய மன்னன் `முந்நீா் விழாவின் நெடியோன்’ என்று அழைக்கப்படுகிறான்.

முந்நீர் என்னும் சொல் கடலைக் குறிக்கும். கடலில் பொழிந்து கடல் வளத்தைப் பெருக்கும் மழைநீர், ஆறு அடித்துக்கொண்டு வரும் மழைநீர், மண்ணிலிருந்து ஊறிவரும் ஊற்றுநீர் ஆகிய மூன்று நீரும் கலந்தது என்னும் கருத்துடன் முந்நீர் என்னும் சொல் உருவாக்கப்பட்டுள்ளது. தேவாரத்தில் திருஞானசம்பந்தா் சென்னை கபாலீசுவரரின் மாசிமகக் கடலாடு விழாவைப் பற்றிக் கூறுகிறார். கடலும் ஆறும் சங்கமிக்கும் சங்கமத்தில் நீராடுதல், பெரும் புண்ணியத்தைத் தரும் என்று குறிப்பிடுகிறது சிலப்பதிகாரம்.

பூம்புகாருக்கு அருகில் காவிரி நதி சங்கமிக்கும் சங்கமுகத்தில் பெரும்பாலான மக்கள் அன்று வந்து நீராடுவர். மக்கள் எல்லாம் ஒன்றாகக் கூடி கடலில் இறைவன் தீர்த்தவாரி கண்டருளிய நீரில் தாங்களும் நீராடுவது பாவங்களைப் போக்கி உன்னதமான வாழ்வைத் தரும், என்பதைச் சிலப்பதிகாரம், ‘‘கடலோடு காவிரி சென்று அலைக்கும் மூன்றில் மடல் அவிழ் நெய்தல் காணம் தடம் உரை’’ என்று தெரிவிக்கிறது.

27. சமூக விழா

இவற்றையெல்லாம்விட பெரிய செய்தி மாசி மக விழா எல்லா சமூக மக்களையும் இணைக்கிறது. அன்றைய தினம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை, சென்னை, மகாபலிபுரம், மரக்காணம், புதுச்சேரி, அரியாங்குப்பம், கடலூர், சாமியார்பேட்டை, பரங்கிப்பேட்டை, கிள்ளை, பூம்புகார், காரைக்கால், திருமலை ராயன்பட்டினம், நாகப்பட்டினம் என வரிசையாக கிழக்குக் கடற்கரையில் அமைந்த அத்தனை சிறிய, பெரிய நகர கடற்கரைகளிலும் தீர்த்த வாரிக்கு உற்சவமூர்த்திகள் வருவார்கள்.

குறிப்பாக, ஒவ்வொரு கிராமங்களில் இருந்தும் அந்தந்த ஊர் உற்சவமூர்த்திகளை அலங்கரித்து, டிராக்டர் முதலிய வாகனங்களில் வைத்து, ஊர் மக்கள் எல்லோரும் திரண்டு அந்த வாகனத்தில் ஏறி, மேளதாளங்களுடன் குதூகலமாக கடற்கரையில் வந்து, கடல் நீராடி, அன்னதானம் செய்து கொண்டாடுவது அற்புதமாக இருக்கும். ஒவ்வொரு கடற்கரையிலும் 15 முதல் 20 உற்சவ மூர்த்திகளும் 20, 30 கிராமத்தின் ஒட்டுமொத்த மக்களும் திரண்டு ஆன்மிகத் திருவிழாவாக இணைவது இந்த ஒரு உற்சவத்தில் தான்.

28. வேறு பல சிறப்புகளும் உடைய நாள்

மாசி மகம் தீர்த்தவாரி எனும் நீராட்டம் தவிர வேறு பல சிறப்புகளும் உடைய நாள்.

1. வராகப் பெருமாள் இரணியனை அழித்து பூமியை உத்தாரணம் செய்த தினம் மாசி மகம்.

2. முருகப்பெருமான், சுவாமிமலையில் பிரணவப் பொருளை தந்தைக்கு உபதேசம் செய்த நாள் மாசி மகம்.

3. கால தேவதையான எமன் அவதரித்த நாள் மாசி மகம். எனவே மாசி மகம் அன்று கடலில் நீராடி அல்லது சுவாமி தீர்த்தவாரி கண்டருளும் ஆறுகளிலோ குளங்களிலோ நீராடி, அதன் கரைகளில், பிதுர் தர்ப்பணம் செய்வதன் மூலமாக முன்னோர்களின் பூரணமான ஆசியும் கிடைக்கும்.

4. தட்சனின் மகளாகப் பார்வதி தேவி தோன்றிய நாள்.

29. எப்படி விரதம் இருப்பது?

மாசி மகத்தன்று முறையாக விரதம் இருந்து தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்து கொள்ள வேண்டும். விரதம் இருப்பதோடு, குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வங்களையும் வணங்கி நம்மால் இயன்ற தானங்கள் ஏழைகளுக்குச் செய்வது பூரண பலனைத்தரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாசி மக விரதத்தை அனுஷ்டித்தால், குழந்தைப்பேறு உண்டாகும். புனிதமான நீர் நிலையில் நீராடி, எழுந்ததும், நவ நதிகளைப் போல ஒன்பது பெண்களைக் கருதி, அவர்களுக்கு தாம்பூலம், பழம், தட்சணை, தேங்காய், குங்குமம், ரவிக்கைத் துணி கொடுப்பது சிறப்பான பலனைத் தரும்.
 
30. எப்படித் தீர்த்தமாடுவது?

மாசிமகம் அன்று கடல் அல்லது புண்ணிய நதிகளில் புனித நீராடும் போது எக்காரணத்தை முன்னிட்டும் ஒரே ஆடையை மட்டும் உடுத்திக் கொண்டு நீராடக்கூடாது. தீர்த்தமாடுவதற்கு முன், வடக்கு அல்லது கிழக்கு நோக்கி மூன்று முறை சிறிதளவு தீர்த்தத்தை உள்ளங்கையில் எடுத்து தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். ஈர ஆடையுடன் நீராடக்கூடாது. இரவில் நீராடக்கூடாது. ஒரு முறை மூழ்கி எழுந்தால் பாவங்கள் போகும். இரண்டு முறை மூழ்கினால் சொர்க்கத்தில் வாழும் பேறு கிடைக்கும்.

மூன்று முறை மூழ்கி எழுந்தால் ஈடு இணையற்ற புண்ணிய பலன் கிடைக்கும். அன்று முழுவதும் சிவ பக்தர்கள் சிவனுடைய ஸ்தோத்திரங்களையும், விஷ்ணு பக்தர்கள் விஷ்ணுவினுடையபுராணங்களையும் வாசிக்க வேண்டும். குறிப்பாக மாசி மக புராணம் வாசிப்பது மகத்தான பலனைத் தரும்.

எஸ்.கோகுலாச்சாரி