தெளிவு பெறு ஓம்சில கோயில்களில் கொடி மரம் இருப்பதில்லை அது போன்று சிமெண்ட், மணல், செங்கல் கொண்டு உருவாக்கப்பட்ட சிலைகளை வணங்கி
வருகிறார்கள். மூலவர் மட்டும் கல்லால்! எந்தச் சிலையில் சக்தி அதிகம்?

 - R. விஸ்வநாதன், பண்ருட்டி.

பதில்: முறைப்படி, ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்ட ஆலயங்கள் என்றால், கண்டிப்பாகக் கொடிமரம் இருக்க வேண்டும். சிமெண்ட், செங்கல் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிலைகள், வழிபாட்டிற்கு உகந்தவை அல்ல. மூலவர் கல்லால் அமைக்கப்படக் காரணம், ஒலி அதிர்வுகளைத் தேக்கி வைத்து வெளிப்படுத்தும் ஆற்றல், கல்லிற்கு அதிகமாக உண்டு. அதனாலேயே, அடிக்கடி மந்திரங்கள் உச்சரிக்கப்படும் கருவறையில் உள்ள மூலவர் வடிவம், கல்லால் அமைக்கப் பட்டுள்ளது. அதிலும் முக்கியமான தகவல், பெண் தெய்வங்கள் என்றால், பெண் கல்லிலும்; ஆண் தெய்வங்கள் என்றால், ஆண் கல்லிலும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். (கல்லிலும் ஆண்-பெண் உண்டு) அடிக்கடி மந்திரங்கள் உச்சரித்து வழிபாடு செய்யப்படும் மூலவர் திருமேனி, இதன் காரணமாகவே கல்லில் அமைக்கப்பட்டது.

?ஆலயங்களில் கோபுரங்கள் அமைப்பதன் தாத்பர்யம் என்ன?

- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

பதில்: ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ `கோபுர தரிசனம் கோடி பாவ நாசம்’ - என்பதெல்லாம் முன்னோர்கள் வாக்கு. தொலை தூரத்தில் இருந்து பார்க்கும்போதே, மனதை இழுத்துப் பரவசப் படுத்துவது கோபுரம். என்னவெல்லாமோ சிந்தனையில் இருந்து குழம்பித் தவிப்பவருக்குக் கோபுரத்தைப் பார்த்த உடனே, அவரை அறியாமலே மனம் தெய்வத்திடம்
சென்றுவிடுகிறது. மனதில் இருந்த அனைத்தும் விலகி, விநாடி நேரமாவது மனம், தன்னுடைய உண்மை வடிவான ஆத்ம வடிவிற்குப் போய் விடுகிறது. அதன்பிறகு மனம் பழையபடியே திரும்பினாலும், அதில் சற்று தெளிவு இருக்கும். இதற்காகவே, கோபுரம். இது தூரப்பார்வை; அதாவது ‘லாங் ஷாட்’. அடுத்தது, கிட்டப்பார்வை.

கோபுரத்தை நெருங்கிப் பார்த்தால், தெய்வத்தின் பல நிகழ்வுகள் கோபுரத்தில் பொம்மைகளாக இடம் பெற்றிருக்கும். குறிப்பாக, அந்தக் கோயில் உள்ள ஊரில் நிகழ்ந்த தெய்வச் செயல்கள் இடம் பெற்றிருக்கும். தெய்வத்தின் அருளாடல்களையும் உள்ளூர் தகவல்களையும் இடம்பெறச் செய்து, அடுத்த தலைமுறைக்கும் ஆன்மிகத் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது கோபுரம்.

?பிள்ளைப்பேறுக்காக ஆஸ்பத்திரி விளம்பரங்கள் ஒரு புறம், ஆலயச் சிறப்புகள் குறித்த விளம்பரம் மறுபுறம் என்றாலும், `மகப்பேறு’ என்பது எதன் நிமித்தம் கிடைக்கிறது?
 - வி.ஜெயலட்சுமி, நெல்லை.

பதில்: மகப்பேறு என்பது, கொடுக்கல் - வாங்கல் அடிப்படையிலே அமைந்துள்ளது. அன்பைக் கொடுப்பதில் - அன்பைப் பெறுவதில்; தீமை செய்வதில் - தீமையைப் பெறுவதில்; செல்வம் கொடுப்பதில் - செல்வத்தைப் பெறுவதில்; எனப் பிறவிகள் அனைத்துமே, இந்தக் கொடுக்கல் - வாங்கல் அடிப்படையில்தான் அமைகின்றன. இதன் சூட்சுமம் நமக்குப் புரிவதில்லை.

இதைப் புரிய வைக்கவே ஞானநூல்கள், முனிவர்கள் சாபம் கொடுத்தார்கள்; இவர் அவருக்குப் பிள்ளையாகப் பிறந்தார்; இப்படியெல்லாம் செய்தார்; அதன் விளைவாகத் தெய்வமாக ஒருவர் வந்து அருள் செய்தார்; அல்லது தண்டித்தார், என்றெல்லாம் அந்த ஞானநூல்கள் சொல்கின்றன. அந்த ஞான நூல்கள் சொல்வது, இந்தக் கொடுக்கல் - வாங்கல் அடிப்படையிலேயே.

சந்திரமௌலி