மகம் ஜகத்தை வெல்லும்!



தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும், மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுவது மாசி மாதம். இந்த மாதம் முழுவதும் கடலாடும், மற்றும் தீர்த்தமாடும் மாதம் என்றும் சொல்வார்கள். மாசி மாத நாட்களில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரதம் இருந்து, குலதெய்வம், இஷ்டதெய்வங்களை வழிபட்டுவந்தால், எல்லா விதமான தோஷங்களும், பாவங்களும் விலகி, குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் என்பது ஐதீகம். மகம் ஜகத்தை ஆளும் என்பது பழமொழி. சிம்ம ராசியைச் சேர்ந்த இந்த நட்சத்திரத்தின் ராசி அதிபதி சூரியன் என்பதால், இந்த நட்சத்திரத்திற்கு ஆளுமை தன்மை அதிகம். மகம் என்பது கேதுவின் நட்சத்திரம். மோட்சகாரகன் எனப்படும் கேதுவின் மகம் நட்சத்திரத்தில், சந்திரன்
சஞ்சாரம் செய்கிறார்.

மாசி மகம் அன்று சிவபெருமானையும், விஷ்ணு பகவானையும், பித்ருக்களையும் வணங்கினால் சகல நல்ல பலன்களை பெற்று வளமான வாழ்க்கையை பெறலாம். மகம் நட்சத்திரத்தின் அதிதேவதை பித்ருக்கள். ஆகையால், அன்றைய தினம் பித்ருக்கள் வழிபாடு செய்ய முன்னோர்களின் ஆசிகிடைக்கும். கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர்கடன் செய்வது நன்மையை தரும்.மேலும், சிவன், விஷ்ணு, முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பதும் ஐதீகம்.

தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் தெப்பத்தில் மாசி மகத் திருவிழா, மகாமகம் விழாவாக மிகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். குறிப்பாக மாசி மகத்தன்று கடல், குளம், ஆறு ஆகிய நீர்நிலைகளில்கூட புண்ணிய நதியாகிய கங்கையும் கலந்திருப்பதாக நம்பிக்கை உள்ளது. அது மட்டுமின்றி மாசி மகம் அன்று புனித நீராடலால் ஏழு ஜென்ம பாவங்களை அடியோடு போக்கும் என்பது ஆன்றோர்களின் கூற்று.

இதனால்தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் மகாமகம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் வடபகுதிகளில் இதனை கும்பமேளா என்பார்கள்.இந்த வருடம் மாசி மாதம் பௌர்ணமியும், மகம் திதியும் சேர்ந்து வரக்கூடிய அற்புத நாள் `மாசிமகம்’ என கொண்டாடப்படுகிறது. பெளர்ணமியுடன் கூடிய மாசிமகம் திதி மார்ச் 6, 2023 திங்கட்கிழமை (மாசி 22-ஆம் தேதி) அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

மாசி மகம் வரும் நேரம்
ஆரம்ப நேரம் - மார்ச் 05, 2023 அன்று இரவு 09:30
முடியும் நேரம் - மார்ச் 07, 2023 அன்று 12:05
மார்ச் 6-ஆம் தேதியே மகம் கொண்டாடப்படுகிறது. காரணம், அன்று முழுவதுமே மகம் நட்சத்திரம் இருக்கிறது.
கும்பகோணத்தில் மாசிமக திருவிழா கோலாகலம்
மாசி மகம் 06.03.2023 திங்கட்கிழமை  பகல் 12.00 - 12.45 மணிக்குள் மகாமகக்குளத்தில் சைவ ஆலயங்களின் உற்சவ மூர்த்திகள் தீர்த்தவாரி கண்டருளல். பொற்றாமரைகுளத்தில் ஸ்ரீ சாரங்கபாணி ஸ்வாமி தெப்பத்திருவிழா நடைபெறும்.

குடந்தை நடேசன்