இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-50ஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாள்- ஆடிப்பூரம் 24-7-2020

திருமாலை இருமாலையால் திகழவைத்த திருப்பாவையே ஆண்டாள்! அவள் பாடிக் கொடுத்தப் பாமாலையாலும், சூடிக் கொடுத்தப் பூமாலையாலும் பெருமாள் மேலும் பேரழகுப் பெற்றுத் திகழ்ந்தார். ஆடிப்பூரம் ஆண்டாளின் அவதார நன்னாளாக ஏற்றம் பெறுகின்றது.

‘இன்றோ திருஆடிப்பூரம்! எமக்காக
அன்றோ  இங்கு ஆண்டாள் அவதரித்தாள்! - குன்றாத
வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளா ராய்!

ஒன்பதாம் நூற்றாண்டில், தமிழகத்தின் வில்லிப்புத்தூரில், பெரியாழ்வார்க்கு துளசி நந்தவனத்தில் அரங்கன் தந்த அன்பளிப்பாகக் கிடைத்தவளே ஆண்டாள்! ராமாயண ஜனகருக்குச் சீதை கிடைத்தது போல தனக்கு கிடைத்த பெண் மழலைக்குக் ‘கோதை’ என்று பெயரிட்டார் பெரியாழ்வார்!
அரும்பத் தொடங்கிய பிள்ளைப் பருவத்திலேயே பெருமாளை விரும்பி ‘மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன்’ என்று விரதம் ஏற்று அரங்கனையே மணாளனாக அடைவது என்ற தீர்மானத்துடன் வாழ்ந்தாள் கோதை! பூமிப் பிராட்டியின் அம்சமாகப் போற்றப்பெறும் கோதை தினசரி தந்தையார் வடபெருங்கோயிலுடையானுக்கு அணிவிக்கப் புனைந்து வைத்திருந்த பூமாலையை அவர் இல்லாத போது, தான் அணிந்தாள்! அழகுப்பார்த்தாள்! ‘நாரணர்க்கு ஏற்ற நாயகி நான் ஆவேனா?’

என்று எண்ணினாள். பெருமாள் மாலையைப் பிரியமுடன் அணிந்து ஒருநாள் கண்ணாடி முன் கோதை நிற்பதைக் கண்ட பெரியாழ்வார் கோபித்தார். பதை பதைத்தார். அபசாரம் நேர்ந்து விட்டதே என நினைத்து அன்றைய நாள் இறைவனுக்குப் பூமாலையை அணிவிக்கவில்லை அவர். ஆனால் பெருமாள் பெரியாழ்வாரின் கனவில் தோன்றி ‘கோதை  சூடிக்களைந்த மாலையே என் தோள்களுக்குச் சுகமானது’ என்றார்.  இவ்வாறு பூமாலை  சூடிக் கொடுத்தும், பின்னர் பாசுரங்கள் பாடிக் கொடுத்தும் புகழ் பெற்ற ஆண்டாளின் பாடல்கள் ஆன்மிக உலகில் அதிகப் புகழ் பெற்று, அடியவர் பலரால் அன்றாடம் பாடப்பெறுகின்றன. நாராயணரின் திருமுடி குடமாய்ச் சுடர்விடும் நாலாயிர  திவ்ய பிரபந்தத்தில் ஒளி வீசும் மாணிக்கமாகச் சுடர் விடுகிறது ஆண்டாளின் உன்னதத் தமிழ்.

‘பாதகங்கள் தீர்க்கும்! பரமன் அடிகாட்டும்!
வேதம்  அனைத்திற்கும் வித்தாகும்!
- கோதை தமிழ்
ஐயையந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு!

மகா விஷ்ணுவின் திவ்யதேசங்கள் அனைத்திலும் , திருக்கோயில்களிலும் தினசரி ஓதப்பெறும் உயர்வுடையது ஆண்டாளின் பாசுரங்கள். கன்றை நினைத்த அடுத்த விநாடியே தாய்ப்பசுவிற்கு எவ்வாறு தானாகப் பால் சுரக்குமோ அவ்வாறு பகவானை எண்ணிய மறுகணமே பாவலர்களுக்குச் சுரப்பது தான் பாசுரம் என்று சொல்வார்கள்.

"ஆண்டாள் தமிழை ஆண்டாள்’ என்று அறிஞர்கள் அனைவரும் ஏற்றிப் போற்றும் வண்ணம் இறைச்சுவையும் இலக்கியச்சுவையும் இணைந்து ஒளி விடுகின்றன ஆண்டாள் பெருமாட்டியின் அற்புதப் பாடல்கள். ‘அப்போதைய தேவைக்காகவும், ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவுமா அரங்கனின் வழிபாடு? அல்லவே’ பிறவிகள் தோறும் தொடரும் பெருமாளின் வழிபாடு என்று குரல் கொடுக்கிறாள் கோதை.

‘சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ
குற்றேவல்  எங்களைக் கொள்ளமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்! உனக்கே நாம் ஆட் செய்வோம்!
மற்றைதம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!

திருப்பாவை - மாதம் முழுவதும் பாடுகின்ற கீதமாகவும் - மேலான ஆன்ம போதமாகவும் - பக்தியின் அடி நாதமாகவும் - செந்தமிழ் வேதமாகவும் விளங்குகின்றது.‘தமிழில் அர்ச்சனை செய்யுங்கள்’ என்றால் சமஸ்கிருத மொழி பெயர்ப்பை நாம் தேட வேண்டியதில்லை ஆண்டாளின் இந்த ஒரு பாடல் போதும். பக்திச் சுவை நனி சொட்ட, பரந்தாமனின் பராக்கிரமங்களை வித்தகமாக விவரிக்கிறது கீழ்க்கண்ட போற்றிப்பாடல்.

அன்றிவ்  உலகம் அளந்தாய் அடிபோற்றி!
சென்றங்கு தென்னியங்கை செற்றாய் திறல் போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி!
தன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி!
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி!
என்றென்றும் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம்! இரங்கலோர் எம்பாவாய்!
பெரியாழ்வார் வளர்த்த பெண் பிள்ளைக்குப் பேசக்கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன?

நாச்சியார் திருமொழியும், திருப்பாவையும் கவிதை இலக்கியத்தின் இரு கண்களாகச் சுடர் விடுகின்றன என்று சொன்னால் அது மிகையில்லை. கண்ணின் மணியாகக்கருதி தான் வளர்த்த ஆண்டாளை இறைவனை ஏற்றுக் கொண்டதில் பெரியாழ்வார்க்குப் பெருமிதம் தான் என்றாலும் தன்னை விட்டு மகார் பிரிகின்றாளே என்ற ஆறா ஏக்கத்தில் திருவாய் மொழியில் அருளிச் செய்கின்றார் பெரியாழ்வார்.

ஒருமகள் தன்னை உடையேன்
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்
செங்கண் மால்தான் கொண்டு போனான்
வைணவத்தின் வடி வெள்ளியான்
 ராமானுஜர் வடமொழியில் தான்

தன் என்பது நூல்களையும் எழுதினார். ஆனால் அவர் தன் நித்திய அநுசந்தானத்தில் ஆண்டாளின் திருப்பாவைக்கே முதன்மை அளித்தார். அப்பாடல்களின் அனுபவங்களில், பக்திப் பெருக்கில் ‘ஆழ்வாராய்’ மாறினார். அதனால் அவர் ‘திருப்பாவை ஜீயர்’ என்றே அழைக்கப் பெறுகிறார்.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி நான்!

கனவு பலித்து கடவுளையே கரம் பற்றிய ஆண்டாள் தன் அவதார நாளான ஆடிப் பூரத்தில் வில்லிப்புத்தூரில்  பிரம்மாண்டமான தேரில் ரங்கமன்னாரோடு எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். சூடிக் கொடுத்த நாச்சியாரான ஆண்டாளின் திருவருளை ஆடிப்பூரத்தில் பெறுவோம். இன்று விரதம் ஏற்கும் இளம் பெண்கள் சிறந்த வாழ்க்கைத் துணையைப் பெறுவார்கள்.

‘எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்! உமக்கே நாம் ஆட் செய்வோம்!
என்றபடி ஆண்டாளின் உறுதியான இலட்சியப்
பிடிப்பை நாம் அனைவரும் பெற ஆண்டவன் அருள்வான்!
திரு ஆடிப்பூரத்து செகத்து வதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினால் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே!
பெரும்புதூர் மாமுனிக்குப் பின் ஆனாள் வாழியே!

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!
உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்துஅளித்தாள் வாழியே!
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே!
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப் பதங்கள் வாழியே!

(தொடரும்)

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்