ஊருக்கு ஒன்றாக ஊரைக் காத்த பிடாரிதமிழகக் கிராமங்களில் ‘ஊருக்கொரு பிடாரியும் ஏரிக்கொரு ஐயனாரும் வேண்டும்’ என்று சொல்வதில் இருந்து ஒவ்வொரு ஊரிலும் பிடாரி அம்மனுக்குக் கோயில் இருந்தது உண்மையாகிறது. இன்று தென் மாவட்டங்களில் பிடாரி அம்மன் கோயில்கள் சில காணப்பட்டாலும் வட பகுதியிலும் மதுரை போன்ற மத்தியப் பகுதியிலும் காணப்படவில்லை.

பிடாரி அம்மனைப் பிடாதி, முப்பிடாதி  என்ற பெயரில் தென் மாவட்டங்களில் வழிபடுகின்றனர். பிடாரி பற்றி காப்பியங்களில் சில தகவல்கள் கிடைக்கின்றன. நாட்டுப்புறக் கதைப்பாடல்களில் அவளைக் காளி என்ற பெயரில் குறிப்பிட்டாலும் காளியும் பிடாரியும் ஒன்றல்ல. இருவரும் வெவ்வேறு. காளிக்கு புராணத் தெய்வம் தகுதி உண்டு. பிடாரி என்பவள் புராணக் கதாபாத்திரமாகவில்லை. இறைவியைக் குறிக்கும் பெயர்களில் ஒன்றாக மட்டுமே விளங்குகிறாள்.

பிடாரி யார்?

பிடாரி என்பவள் நாகர் குலத்தின் அல்லது தொல் திராவிடர் குலத்தின் தெய்வம் ஆவாள். ஆதியில் தென்னிந்தியா முழுக்க வாழ்ந்த தொல் தமிழர் நாகத்தை தமது குல முதுவராகக் [TOTEM] கருதி வழிபட்டதால் அவர்கள் தம்மை நாகர் இனத்தவர் என்று கருதினர். ஆண்கள் பிடாரன் என்றும் பெண்கள் பிடாரி என்றும் தம்மை அழைத்துக் கொண்டனர்.

நாகத்தைப் பிடிப்பவன் அல்லது நாகத்திடம் இணங்கிப் பழகுபவன் பிடாரன் எனப்பட்டான். பெண்கள் கொடிய நஞ்சுள்ள நாகத்தைக் கண்டும் அஞ்சாத நெஞ்சம் கொண்டவர் என்பதால் பிற்காலத்தில் யாருக்கும் அஞ்சாத பெண்களை ‘அடங்காப் பிடாரி’ என்றனர். பாம்புக்கே அஞ்சாதவள் மனிதனுக்கு அஞ்சுவாளா? அதனால் அடங்காத பெண்ணை கட்டியவனை ‘பிடாரியை பெண்டு வைத்ததுக் கொண்டது போல’ என்று சுட்டிக் காட்டினர். இப் பழமொழியும் பிடாரி என்பவள் யாருக்கும் அஞ்சாத  நெஞ்சுரம் கொண்டவள் என்ற பொருளையே தருகிறது.

 வேட்டைத்தெய்வத்தின் எச்சம் பிடாரி

மனித குல வரலாற்றை வேட்டைக் காலம், வேளாண் காலம், தொழிற் புரட்சி  காலம்; மின்னணு காலம் என நான்கு பெரிய வகைமைகளாகப் பகுக்கலாம். வேட்டைக் காலத்தில் இனக்குழுவின் மூத்த பெண் ஒருத்தி தலைமையில் ஆண்கள் அவளைப் பின் தொடர்ந்து வேட்டைக்குச் சென்று கிடைத்த வேட்டைப் பொருளை அவள் பகுத்துத் தர அனைவரும் உண்டு மகிழ்ந்தனர்.
 
அடுத்த காலக் கட்டத்தில் ஓரிடத்தில் தங்கி அங்கு நிலத்தைப் பண்படுத்தி வேளாண்மை செய்யத் தொடங்கிய போது ஆண் முதன்மை பெறுகிறான். குடும்ப அமைப்பு உருவாகிறது சொத்துடைமை சொத்து உரிமை ஆகியன  நடைமுறைக்கு வருகின்றன. [அடுத்த இரண்டு  காலங்களைக் குறித்து தற்போது விளக்க வேண்டியதில்லை. அது ஓரளவு தெரிந்ததே]வேட்டைக் காலத்தின் ஆற்றல் மிகுந்த தலைவி ஒரு பெண்.  அவளது தாய்மைப் பேற்றுக்காக அவளை ஆண்கள் பயந்து வணங்கினர். அவளே தாய்த் தெய்வத்தின் அடையாளம். அடுத்த சில நூற்றாண்டுகளில் குழந்தைப் பேற்றில் ஆண்களின் பங்கு இருப்பதை உணர்ந்ததும் பெண்களை வீட்டுப் பிராணிகளாக்கி விட்டனர்.

வேளாண் காலத்தில்  பெண் அடிமையானாள். வேட்டைக் காலத்தின் பெண் சிறப்பை உணர்த்தும் தெய்வங்களுள் ஒன்றாக பிடாரி விளங்குகிறாள் இவள் யாருக்கும் அடி பணியாதவள்; அஞ்சா நெஞ்சுரம் கொண்டவள். இதனால் வேளாண்காலம் தொட்டு இன்று வரை இவளை அடங்காப் பிடாரி என்றனர்.

அடங்காதவளை அடக்கி ஆள்வதையே ஆண்கள் பெண்டாளுதல் [பெண்டாட்டி] என்ற சொல்லால் குறித்தனர். அடங்காப் பிடாரியை பெண்டு வைத்தது போல என்ற பழமொழியும் இச் சமூகப் பழக்கத்தால் உருவானது.  அடங்காத பெண்ணை பெண்டாட்டியாகக் கொள்வது ஆணுக்கு சவாலானது என்பதால் அடக்கமான் பெண்ணையே அனைத்து ஆண்களும் மணமுடிக்க விரும்பினர். இன்று காலமும் கருத்தும் மாறியிருக்கிறது.  
திராவிடர்களின் நாகர் வழிபாடு பிடாரியை  வேட்டைத்  தெய்வம் என்பதை விட தெய்வத்துக்கும் முந்தைய தெய்வம் என்று கூடக் கருதலாம். ஆதிகாலத்து மனிதர்கள் அல்லது நாகர்கள் அல்லது தமிழர்களின் தெய்வம் எனலாம்.

ஏனெனில் நாகர் வழிபாடு இன்றும் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது, தமிழ்நாட்டில் எல்லா கோயில்களிலும் நாக வழிபாடு ஏதேனும் ஒரு வடிவில் இருக்கிறது . சிவன் திருமால் ஆகியவர்களோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.  மலையாளத்தில் ஆந்திராவில் கர்நாடகத்தில் என அனைத்து மாநிலங்களிலும் கிழக்காசிய தீவுகளிலும், ஆப்பிரிக்காவிலும் நாகர் வழிபடு தெய்வமாக உள்ளது. க. ப. அறவாணன் ஐயா SERPENT CULT என்ற பெயரில் நாகர் வழிபாடு குறித்து ஆங்கிலத்தில் நூல் ஒன்றும் எழுதினார்.

வேட்டை காலத்தில் வெப்ப பூமியான தென்னிந்தியாவில் அல்லது திராவிட நாட்டில் படம் எடுத்து ஆடிய நாகப் பாம்புகளில் இருந்து தான் மனித குலம் தோன்றியதாக நம்பினார். இந்நம்பிக்கை ஒன்றும் மூட நம்பிக்கை அல்ல. இது ஓர் ஆரம்பக்கட்ட அறிவியல் தேடல். மண்ணுக்குள் இருந்து வெளியே வந்து மீண்டும் மண்ணுக்குள் போகும் பாம்பை மனிதர்கள் தம் மூதாதையராகக் கருதினர். அதன் பெயரால் தம்மை நாகர்கள் என்று அழைத்து கொண்டனர்.

குல முதுவர் வழிபாடு

உலகெங்கும் ஆதி காலத்தில் ஏதேனும் ஒரு விலங்கு, பறவை, செடி, கோடி, மரம் போன்றவற்றை தமது குல முதுவராகக் [TOTEM] கருதும் பழக்கம் இருந்து வந்ததை சர் ஜேம்ஸ் ஃபிரேசர் என்னும்  அறிஞர் பன்னிரெண்டு பாகங்களாக எழுதிய தனது நூலில் ஆதாரங்களோடு விளக்கினார். தமிழகத்தில் பல பகுதிகளில் தங்களை நாகர் கூட்டம், குருவிக்  கூட்டம், செங்கீரை கூட்டம், காடை கூட்டம் என்று அழைக்கும் மரபு உண்டு. இவர்கள் தம் கூட்டத்தின் விலங்கு, பறவை, செடி, கொடியை உண்பது [எச்சில்படுத்துவது] கிடையாது.  இப்போது இருப்பவர்களுக்கு காரணம் தெரியாது. ஆனால் முன்னோர்கள் தமது குல முதல்வராகக் கருதி வழிபட்டு வந்தனர். இவ்வழிபாட்டை ஆதிகாலச் சமயத்தின் குல முதல்வர் வழிபாடு [TOTEMIC WORSHIP OF PRIMITIVE RELIGION] என்பர் சமயவியல் அறிஞர்கள் பிடாரன் - பிடாரி

பிடாரி அம்மனின் பெயர்க் காரணம் பற்றி அறிய முற்படும் போது அச்சொல்லை பீட ஹரி எனப் பிரித்து தீமைகளை அழிப்பவள் என்று பொருள் சொல்கின்றனர். இவ்விளக்கம் சமூக சமய வரலாறு தெரியாதவர்களின் கருத்து.  நாட்டார் தெய்வங்களை  சமஸ்கிருதமாக்குவதால் அவை நிறுவனச் சமயத் தெய்வங்கள் [DEITIES OF iNSTITUTIONAL RELIGIONS] ஆகி விடா. இது ஒருவிதமான உயர்நிலைப்படுத்தும் முயற்சி ஆகும். பேச்சியம்மன் கூட  பேச்சுக்குரிய அம்மன் சரஸ்வதி என்கிறார்கள். இது கூட முழுமையல்ல. ஆனால் ஒன்று. யட்சிணி போன்றவள். பிள்ளை தின்னி ராக்காச்சி [இடாகினி போல] போன்ற துடியான பெண் தெய்வங்கள் இன்னும் உயிர்ப்போடு உள்ளன.

பிடாரி என்பவள் நாகர் குலம் என்று அழைக்கப்பட்ட திராவிடர் அல்லது தமிழர் இனத்தின் ஆதி தெய்வம். திராவிடம் தமிழ் என்ற பெயர்கள் காலத்தால் பிந்தியது அவை மொழி இனம் என்ற அடிப்படையில் பெற்ற பெயர்கள் நாகர் இனம் என்பது வழிபாட்டின் அடிப்படையில் உருவான பெயர். இவள் குழந்தை பிறப்புடனும் இறப்புடனும் தொடர்புடைய பெண் தெய்வம் ஆவாள். பிறப்புடன் தொடர்புடையவள் என்பதால் இவளைத்  தாய்த் தெய்வம் என்றும் இறப்பு, சுடுகாடு, போன்றவற்றுடன் தொடர்பு கொண்டிருப்பதால் அடங்காதவள், அழிவுக்குக் காரணமானவள்  என்றும் நம்பிக்கை நிலவுகிறது.

காப்பியங்களில் பிடாரி

தமிழில் காப்பியங்கள் இயற்றப்பட்ட போது தமிழ் நாட்டில் ஆசிவகம்,  சமணம், பவுத்தம் ஆகிய சமயங்கள் இருந்தன.  சிலப்பதிகாரத்திலும்  நீலகேசியிலும் பிடாரி பற்றிய குறிப்புகளை காண்கிறோம். சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் எனப்படும். அது மன்னர்கள் அல்லது கடவுளர் பற்றியதன்று. பாண்டியன் அவைக்கு நீதி கேட்க வந்து வாயிலில் நின்ற கண்ணகியைப் பற்றி மன்னனிடம் தகவல் தெரிவித்த வாயில் காப்பாளன் அவளைப் பிடாரி போலத் தோன்றுகிறாள் என்கிறான்.

நீலகேசியில் சுடுகாட்டுக்குள் இருக்கும் பிடாரி கோயிலில் ஒருவன் ஆடு வெட்டிப் பலி கொடுக்க வரும் போது முனி சந்திரன் என்ற துறவி அதனைத் தடுத்து நிறுத்துகிறார். உயிர்க் கொலை கூடாது என்று போதிக்கிறார். களிமண்ணால் ஆட்டுக்குட்டி செய்து அதனை வெட்டுமாறு குறிக்கிறார். அவனும் அவ்வாறே செய்கிறான்,.  பிடாரி என்ற தெய்வத்துக்குத் தனிக் கோயில் இருந்ததை நீலகேசி தெரிவிக்கிறது. அங்கு குழந்தை வரம் வேண்டி உயிர்ப் பலி கொடுக்கும் பழக்கம் இருந்ததையும் அறிகிறோம். நீலகேசி என்ற காப்பியம் தமிழில் முதன் முதலில் தோன்றிய நூல் அன்று. அந்நூல் ஒரு மொழிபெயர்ப்பு  நூல்.  அந்நூலிலும் பிடாரி வழிபாடு காணப்படுகிறது. பிடாரி இறப்புடன் தொடர்பு படுத்தப்பட்ட கடவுளாக இருந்திருக்கிறாள்.

பிடாரிக்குரிய புராணக் கதை

தென் தமிழகத்தில் வில்லுப்பாட்டில் பிடாரிக்குரிய கதை பாடப்படுகிறது. சிவபெருமானுடன் பார்வதி சல்லாபித்திருந்த வேளையில்  விளையாட்டாக அவள் சிவபெருமானின் கண்களை மூடினாள். விளையாட்டு வினையாகி விட்டது. சிவபெருமான் வெகுண்டார்.  பார்வதியைப் பாதாளலோகத்தில் வசிக்கும்  நாக கன்னிகையின் வயிற்றில் பிறக்கும்படி சபித்தார். சாபம் கொடுத்தும் கோபம் தணியாத சிவபெருமான் முன்பு தன்னிடம் பிள்ளை வரம் கேட்டிருந்த நாக கன்னியிடம் பார்வதியை எட்டுத் துண்டங்களாக வெட்டிக் கூறு போட்டுக் கொடுத்தார்.

நாக கன்னி தான் இட்ட பாம்பு முட்டைகளுடன் இந்த எட்டுத் துண்டங்களையும் அடைகாத்து வந்தாள்.  எட்டும் ஆக்ரோஷத்துடன்  அஷ்ட காளிகளாக வளர்ந்தன. ஆடி மாதத்தில்  செவ்வாய்க்கிழமை அன்று சரியான ராகு காலத்தில் எட்டும் அஷ்ட காளிகளாகப் பிறந்தன. இவர்களில் மூன்றாவதாக பிறந்த முப்பிடாரி அல்லது  முப்பிடாதி  என்பவள் இரும்பு, வெள்ளி, தங்கக் கோட்டைகளைத்  தகர்த்த திரிபுர சுந்தரி என்று போற்றப்படுகிறாள். இக்கதை தென் தமிழகத்தில்  வழங்கி  வரும் கதை ஆகும்.

பொதிகையும் பிடாரி புராணமும்

பிடாரி தொல் தமிழர் தெய்வமாக இருந்தாலும் அத்தெய்வ வழிபாட்டைப் பாதுகாத்து வைத்தது பவுத்த மதம் ஆகும். பவுத்தம் மண்ணின் தெய்வங்களைப் பாதுகாத்து தன் மதத்தைப் பரப்பியது. குறிப்பாக  பெண் தெய்வங்களின் வழிபாட்டைப் பாதுகாத்தது. இதனால் பவுத்த சமயத்தில் பிரிவுகள் தோன்றின. வஜ்ராயன் என்ற பவுத்த பிரிவு பெண் தெய்வ வழிபாட்டுக்கு மதிப்பளித்தது.  பிடாரியில் பவுத்த செல்வாக்கை உறுதி செய்யும் சில வரலாற்று தகவல்கள் உள்ளன.

பிரம்மனுக்கும் தானாவதிக்கும் பிறந்த எட்டுப் பேர் பொதிகை மலைக்கு வருவர். இவர்கள் எட்டு பேரும் மகிஷாசுரனை அழிக்க பிறந்தவர்கள் ஆவர். இக்குழந்தைகள் நாகலோகத்தில் உதித்தவர் ஆவார். இவர்களில் மூன்றாவது பெண்  முப்பிடாரி எனப்படும் முப்புடாதி ஆவாள். இவர்கள் பொதிகை மலைக்கு இவர்கள் வந்தனர் என்ற குறிப்பு பொதிகை வாழ் போதிசத்துவர்களால் பிடாரி தெய்வ வழிபாடு  செல்வாக்குப் பெற்றதைப் புலப்படுத்துகிறது. திருக்குற்றால மலையில் பல இடங்களில் ஏழு கன்னிமார் எனப் போற்றப்படுவோரின் புடைப்புச் சிலைகளும் வஜ்ராயன பவுத்த மதம் அங்கு செலவாக்குப் பெற்றிருந்ததற்கான  ஆதாரங்களும் காணப்படுகின்றன.

பிடாரிக்குக் கோயில்கள்

முப்பிடாரி அல்லது முப்புடாதிக்கு பவுத்தம் செல்வாக்குப் பெற்றிருந்த கேரளாவிலும் [பாலக்காடு] தென் தமிழ் மாவட்டங்களில் கடையம், செந்தட்டி, ஆழ்வார்க்குறிச்சி,  பரம்பு, புளியங்குடி, மேலத்  தாழையூத்து ஆகிய ஊர்களில் கோயில்கள் உள்ளன. பவுத்தம் ராஜராஜ சோழன் காலம் வரை செல்வாக்குப் பெற்றிருந்த தஞ்சை, திருச்சி, அரியலூர், பட்டுக்கோட்டை  பகுதிகளில்  பிடாரிக்குக் கோயில்கள் உண்டு. போதிசத்துவர்கள் மிகுதியாக வாழ்ந்த மலையான பொதினி எனப்பட்ட பழனி மலைக்கு அருகில் உள்ள மூணூர், கேசரப்பட்டி  போன்ற இடங்களிலும் பிடாரி வழிபாடு நடந்து வருகிறது. இதனால்  இப்பிடாரி  வழிபாட்டை ஊக்குவித்து  பாதுகாத்தவர்கள் பவுத்தர்கள் என்பது புலனாகின்றது.

மயிலை. சீனி. வேங்கடசாமி என்ற  தமிழறிஞர் பவுத்த பெண் தெய்வமான தாரா தேவி கோயில் பிற்காலத்தில் பிடாரியம்மன் கோயிலாக உருமாற்றம் பெற்றது என்பார். வேறு சிலர் ஒலிப்பு ஒற்றுமை கருதி தாராதேவி கோயில் திரவுபதி கோயில்  என பெயர் மாதரம் பெற்றது என்பர். மணிமேகலை, சம்பாபதி, தாராதேவி, பத்மாவதி போன்ற பவுத்த பெண் தெய்வங்கள் சைவ சமய எழுச்சிக்குப் பின்பு காளியம்மன், மாரியம்மன், செல்லாண்டியமான், எனப் பெயர் மாற்றம்  அடைந்தது உறுதிப்படுத்தப்பட்ட வரலாறு.

குழந்தையைக் காக்கும் பிடாரியம்மன்

 தென்னிந்தியா, ஆப்பிரிக்கா,  தென்கிழக்காசியத் தீவுகளில் வாழ்ந்த நாகர் இனத்தின் தெய்வமாக விளங்கிய பிடாரியை மக்கள் தம் குலம்  தழைக்கச் செய்யவும் கடவுளாக போற்றினர். அவள் காவல் தெய்வம்,. இன்றும்  குழந்தை மரணத்தைத் தடுக்கும் கடவுளாகக் கருதுகின்றனர்.  கருக்காத்தம்மன் என்ற பெயரிலும் சில இடங்களில் பிடாரியை வணங்குகின்றனர்.

நாக தோஷம் இருந்தால் கருத்தங்காது. வயிற்றில் உள்ள கருவை நாகம் தீண்டிவிடும். அதனால் கரு அழிந்துவிடும் நாகப்பாம்பை அடித்துக் கொன்றால்  குடும்பம்  விருத்தி ஆகாது என்று மக்கள் நம்பினர். தமது குல முதுவரான நாகத்தை கோபப்படுத்தக் கூடாது நாகத்தின் சாபத்துக்கு ஆளாகக் கூடாது என்ற ஆதி கால நம்பிக்கை இதற்கு முக்கிய காரணம் ஆகும். எனவே, பிடாரி அம்மனை வழிபட்டால்  தோஷம் தீரும் என்று சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.

பிடாரனும் பிடாரியும் நாகத்தை தமது வசப்படுத்தும் ஆற்றல் பெற்றவர். பிடாரியால் கருவை நாகம் தீண்டாமல் நாகத்தால் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் காப்பாற்ற முடியும் என்று நம்பினர். எனவே, அவளைக் கருக்காத்த அம்மன் என்ற பெயரிலும் வழிபட்டனர்.

சூலப் பிடாரியும் தூக்குதேர்த் திருவிழாவும்

தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அருகே சூரப் பள்ளம் என்ற ஊரில் உள்ள பிடாரி அம்மனை, சூலப் பிடாரி அல்லது சூரமகா காளி என்று அழைக்கின்றனர்.  இங்கு மூன்று நூற்றாண்டுகளாகத்  தூக்குத் தேர் திருவிழா நடைபெறுகின்றது. தேரில் அம்மனை வைத்துத் தேரையே தூக்கி வரும் இத்திருவிழா சாளுவன் நாயக்கர் காலத்தில் தோன்றியது.

அப்போது சாமியை அழைத்து வந்த தேர் மண்ணுள் புதைந்ததால் அன்று முதல் இங்கு வாழும் மக்களே தேரை தூக்கி கொண்டே நகர் வலம் வருகின்றனர். இங்கு நடக்கும் பத்து நாள் திருவிழாவில் கடைசி நாள் அன்று சூலப் பிடாரி வலம் வருவாள். இவள் துர்சக்திகளை விரட்டி மறு நாள் வரும் தேருக்கு வழிகாட்டியாக அமைவதால் இவளை வழிகாட்டிப் பிடாரி என்று அழைக்கின்றனர். பிடாரி அம்மன் கெட்ட ஆவிகளையும் தீய சக்திகளையும் அகற்றி மக்களைக் காக்கும் காவல் தெய்வம் என்பதால் இவளுக்கு எடுக்கப்படும் விழா என்பதை விழா நிகழ்ச்சிகள் மூலமாக அறியலாம்.  
நிறைவு

பிடாரி அம்மன் ஆதி மனித குலமான நாகர் குலத்தின் மூத்த காவல் தெய்வம். குலம் காக்கும் தாய்த் தெய்வம். இவள் உயிரைக் கொடுப்பவள் அல்ல. இவள் வேட்டைக் காலத்தின் போது தோன்றிய தெய்வம் என்பதால் பகை அழிக்கும் தெய்வம். கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்பது போல உயிருக்குப் பதிலாக மறு உயிரை காவு வாங்கும் தெய்வம்.  

பெண் ஆதிக்க காலத்துத் தெய்வம் என்பதால் பிடாரி ஆணுக்கும் அடங்க மாட்டாள். யாருக்கும் அடங்க மாட்டாள். அதனால் அவள் அடங்காப் பிடாரி.  காளியுடன் ஆட்டத்தில் போட்டி போட்டு அவளைத்  தோற்கடித்த சிவனின் ஆட்டமும் தென்மதுரையின் அரசி மும்முலையாளான மீனாட்சியைப் போரில் தோற்கடித்து அவளை நாணப்பட வைத்து மணந்துகொண்ட சொக்கனின் திருவிளையாடலும் பிடாரியிடத்தில் செல்லுபடியாகவில்லை. அவள் பாம்புப் பிடாரி என்பதால் அவள் ஆதி காலத்தாய். ஆதிகாலத் தலைவி. அவளை வெல்லக் கூடிய ஆண் தெய்வம் இங்கு படைக்கப்படவில்லை.

முனைவர் செ. ராஜேஸ்வரி