சமயம் வளர்த்த நாயன்மார்கள்-3உலகெலாம்…

அநபாயச் சோழனின் மகனான இராஜராஜன் அரண்மனை வாயில் வரை வந்து சேக்கிழாரை வரவேற்றான். நேராக அடர்ந்து செழித்து மணம் பரப்பிக் கொண்டிருந்த பூஞ்சோலைக்குள் அழைத்துச் சென்றான். அங்குள்ள ஓர் உயர்ந்த ஆசனத்தில் அமரச் செய்தான். ஆனால், சேக்கிழார் அமராது பூஞ்சோலையை வலம் வந்தார்.

அக்னியின் கரங்கள் போலிருந்த இருவாட்சியை கண்டு வியந்தார். பவழ மல்லியின் மணத்தில் சொக்கினார். ஒவ்வொரு பூங்கொடிக்கும் அருகே நகர்ந்து இதழ்களை மெல்ல நீவினார். உயர்ந்திருந்த வில்வ மரத்தினடியில் ஆசனத்தை மாற்ற முடியுமா என்றார். மன்னனும் உத்தரவிட அங்கேயே இருவரும்
எதிரெதிரே அமர்ந்தனர்.

சேக்கிழார் என்ன பேசினாலும் ஏதோ ஒரு இலக்கியச் சுவையோடுதான் தொடங்குவார் எனும் ஆவல் முகம் முழுதும் பரவி யிருந்தது. சேக்கிழாரும் மன்னனிடமோ, இளவரசனிடமோ தான், இதுவரை எவ்வித மேட்டிமை குணத்தையும் கண்டதில்லையே. தேன் தமிழ் மீது இத்தனை காதலா எனும் கூடிய வியப்பினூடே கூர்மையாக பார்த்தபடி இருந்தார்.

‘‘புலவர் பெருமானே, தாங்கள் சீவகசிந்தாமணியை உள்ளம் தோய வாசித்திருப்பீர்கள் அல்லவா?’’ இராஜராஜன் ஆவலோடு தொடங்கினான்.
‘‘ஆஹா... மிக நிச்சயமாக. திருத்தக்கதேவர்  உயர் நுண் தமிழில் யாத்த அற்புதக் காவியமல்லவா அது. ஆனால்...’’ சேக்கிழார் கொஞ்சம் நிறுத்தினார்.
‘‘தாங்கள் ஏன் தயங்குகிறீர்கள் பெருமானே. உங்கள் நோக்கில் அதில் எவ்வித திரிபர ஐயமும் இல்லையல்லவா?’’ இளவரசன் தான் நினைக்கும் பதிலை சேக்கிழாரிடம் எதிர்பார்த்தான்.

‘‘இளவரசரே... சீவகன் உங்களைப் போன்ற அரச மரபினன். அதனால் வரலாற்றுரீதியாக நீங்கள் அவரை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். உங்களை அவன் ஈர்ப்பது இயல்பு. நான் மறுக்கவில்லை. காவிய நயம் சொட்டச் சொட்ட விளங்கும் அற்புத நூல் அது. ஆனால், இப்போது நான் சொல்லப் போவதை கொஞ்சம் உற்றுக் கேளுங்கள். இம்மாதிரி நூல்கள் இப்பிறப்பில் இன்பத்தைத் தரும்.

காவிய ரசனையை எதிர்பார்ப்போருக்கு செவிக்குள் நுழையும் மொழியின் கிளர்ச்சியும், புத்தியில் அது ஏற்படுத்தும் மயக்கமும் அது தரும் இன்ப நுகர்வும் நிச்சயம் நன்றாகவே இருக்கும். ஆனால், அது ஆத்ம லாபத்திற்கு என்ன செய்யும் என்றொரு வினா வருகையில் இக்காவியத்தை கொஞ்சம் ஓரமாகத்தான் வைக்க வேண்டியிருக்கும். இக சுகம் தரும் இனிய காவியம் இது. ஆனால், பரசுகம் அளிக்கும் காவியத்தையும் அறிய வேண்டியதென்பது ஒரு அரச மரபினரின் தலையாய கடமையும் கூட. அது சைவத்தை செழிக்க வைக்கும்.’’ சுருக்கமாக சொல்லி பெருக்க ஒரு விஷயத்தை உணர
வைத்தார், சேக்கிழார்.

தெய்வப் புலவரான சேக்கிழார் ஏற்கனவே அங்கு ஓடிக் கொண்டிருந்த ஒரு ஊற்றை தட்டி மேலெழச் செய்கிறார். தன்னுள் அப்படியொரு சிவ ஊற்று ஆதிநாளிலிருந்து பொங்கிக் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டியவுடன் அந்த இளவரசன் உணர்கின்றான்.
 
‘‘புலவர் பெருமானே... நிச்சயம் தாங்கள் சொன்னதை புரிந்து கொள்கின்றேன். அப்படிப்பட்ட வரலாறுகள் எவை எவை என விளக்க வேண்டுகின்றேன்.’’‘‘மக்களிடம் உயர்ந்த ரசனையை ஊட்டி வளர்க்கும் இலக்கியங்கள் ஒரு பக்கம் இயங்கினால், மறுபக்கம் அவர்களின் அகத்து இயக்கம் சீரடையவும் உள்ளொளி பெற்று உய்யவும் ஒரு காவியம் வேண்டும்.

அதற்கு, திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தர மூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகரின் வரலாறுகளை நிச்சயம் அளித்தே ஆகவேண்டும். நால்வரும், நாயன்மார்களும் எப்படி இந்த லௌகீக உலக வாழ்வைத்தாண்டி வேறொரு பெருவாழ்வானது ஆத்ம நதியாக ஓடிக் கொண்டிருப்பதை நிச்சயம் அனுபூதியில் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.

ஒரு ஜீவன் ஏன் பிறக்கிறான். அவனின் யாத்திரை எங்கு சென்று ஓடுங்குகின்றது என்பதை ஞானியரான மகோன்னதர்களை கொண்டுத்தான் கூற இயலும். அதற்கொரு பெரும் புராணம் இயற்றிடலே இப்போதைய தேவையப்பா… நீர் கூறும் காப்பியம் மனமயக்கம் தருவது. நான் உரைப்பது மனதை தாண்ட வைப்பது’’ இளவரசன் பெருமூச்சொரிந்தான். நிமிர்ந்து அமர்ந்தான். கண்களில்  கூர்மை செறிந்திருந்தது.

‘‘ ஐயா... தாங்கள் பேச்சில் தெய்வீகம் பொலிகின்றது. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே. இது குறித்து நான் தந்தையிடம் பேசுகின்றேன். நாளை அரசரோடு இது குறித்து அவையில் பேசுவோம்’’ என்று கூறி வணங்கி விடை கொடுத்தான். அரசவை கூடியது. சேக்கிழார் பெருமான் முதன்மையாக அமர்ந்திருந்தார். அநபாயச் சோழன் இளவரசர் சொன்ன அனைத்தையும் முன்னரே தமக்குள்
தொகுத்துக் கொண்டார்.

‘‘ புலவர் பெருமானே... இளவரசர் என்னிடம் அனைத்தையும் கூறினார். நேரடியாகக் கேட்கிறேன். அத்தகைய சிவனடியார்களின் சீர்மிகு வரலாற்றை எழுதவும் உரைக்கவும் யார் உளர். எப்போதோ நிகழ்ந்த விஷயங்களை எப்படி சேகரிப்பது’’ பொதுவாகக் கேட்டு சேக்கிழாரின் பதிலை எதிர்பார்த்து நம்பிக்கையோடு அமர்ந்திருந்தார்.

‘‘மன்னா... உங்கள் உள்ளத்தில் சிவனே இந்த விஷயத்தை கூட்டி வைத்திருக்கின்றார். என்னை எப்போது அமைச்சராக அமர்த்தினீர்களோ அப்போதே இதற்கான வேலையை தொடங்கி விட்டேன். நால்வர் பாடி நயந்த அனைத்து தலங்களுக்கும் சென்று வந்தேன். எந்தெந்த நாயன்மார்கள் எங்கெங்கு வாழ்ந்தனரோ அங்கேயே சென்று, அங்குள்ள மக்களிடம் செவிக் கதைகளாக சொல்லப்பட்டு வரும் கதைகளை கேட்டுச் சேகரித்திருக்கின்றேன். குறிப்புகளை சிறு சிறு செய்யுட் வடிவில் சுருக்கி நினைவினை விட்டு அகலாதவாறு மனனம் செய்திருக்கின்றேன்.

மேலும், சுந்தரர் மிக அழகாக நமக்கு அருளிய திருத்தொண்டர் தொகை வேறு இருக்கிறது. இப்போது இவை அனைத்தையும் விரித்து எழுத வேண்டும் அவ்வளவே. என் உள்ளம் முழுதும் நுண்மையான சொற்களால் நிரம்பியிருக்கின்றது. உடுக்கையை சுழற்றினால் வரும் சப்தம்போல என்னுள் எப்போதும் கவித்தறி இடதும் வலதும் நகர்ந்து செய்யுட்களை நெய்தபடி இருக்கின்றது. என்னால் இதை இயற்றாமல் இருக்க முடியாது’’  என்றொரு நீள் உரையை நிகழ்த்தி விட்டு அமர்ந்தார்.

ஏதோவொரு பெருங்காரியம் நிகழவிருக்கின்றது என்பதை அங்குளோர் உணர்ந்தனர். அநபாயன் வியப்பினோடு கூடிய மனோநிலையிலேயே ஆர்வம் உந்த, ‘‘ஐயா... அந்த மேன்மைமிகு சிவப் பரஞ்சோதியோடு ஒன்றாகிக் கலந்த நாயன்மார்களில் ஏதேனும் ஒன்றை உரைக்க முடியுமா’’ என்று
கேட்டான். சேக்கிழாரும், ‘‘அதற்கென்ன மன்னா... இப்போதே உரைக்கின்றேன். என்னுள் இருக்கும் சிவம் அதை இங்கே வெளிப்படுத்த விழைகிறான். நானொரு கருவி மட்டுமே...’’ என்று பணிவோடு சொல்லிவிட்டு நாயன்மார் கதையினை சொல்லத் தொடங்கினார். அவருள் தீந்தமிழ் துள்ளிக் கொண்டு செய்யுட்களாக வெளிவந்தது. சிவச் செந்தழல் பக்தி, ஞான, யோக வடிவாக வழிந்தது. அங்குள்ளோர் இதுவே இப்படியிருக்கின்றதெனில் இது பெரும் புராண வடிவில் வந்தால் எப்படியிருக்கும் என்று அலமலர்ந்து கிடந்தனர்.

அநபாயன், சேக்கிழார் அருகே நகர்ந்தார். அணைத்துக் கொண்டார். கண்களில் பெருகும் நீரோடு, ‘‘ நான் இந்தப் பிறப்புக்கான பயனை இன்றுதான் அடைந்தேன். எனக்கு வெகுநாட்களாக எப்படியேனும் சிவத் தொண்டர்களின் வரலாற்றை எழுதிடவே ஆவல் கொண்டிருந்தேன். ஆனால், அது இத்துனை வேகம் கொண்டு அந்த ஆடலரசன் நடத்திக் கொள்வான் என்பதை என் கனவிலும் அறியேன். எப்போது தொடங்குகிறீர்கள்? எங்கு தொடங்குகிறீர்கள்? நான் என்ன செய்ய வேண்டும்’’ என்று அடுக்கடுக்காக சிவத் தொண்டு புரியும் சேவகனாக தன்னை மாற்றிக் கொண்டு நின்றார்.
‘‘மன்னா... நான் தில்லையில் தங்கியே இதைச் செய்யலாம் என்று உள்ளேன்’’ என்று கூறினார்.

அநபாயன் தில்லையில் சேக்கிழார் தங்குவதற்கு ஒரு மாளிகையை ஏற்பாடு செய்தார். சேக்கிழார் அநபாயனோடு நேராக தில்லைக் கோயிலுக்குச் சென்றார்.தில்லைச் சிற்றம்பலத்தின் முன்பு சேக்கிழார் என் முயற்சியென்று இதில் எதுவும் இல்லை. அனைத்தையும் நீயே நடத்திக் கொள்கிறாய். ஏதோ என்னை உந்தி இந்தத் தருணத்தில் நிறுத்தியிருக்கின்றாய். இப்போது எங்கு முதலில் தொடங்குவது என்பதைக் கூட நான் அறியேன்... இறையே... என் தந்தையே... எல்லாமுமாக நின்ற ஞானப் பரஞ்சோதியே முதல் மூச்சுபோல முதற் சொல்லை நீயே எனக்கு அருள்வாயாக… என்று தம்மையிழந்து நின்றிருந்தார். அங்குபேரமைதி நிலவியது.

எல்லாவற்றிற்கும் அப்பாலுக்கும் அப்பாலாக விளங்கும் நடராசப் பெருமானின் சிலம்பொலிபோல ஒலியொன்று பெருகிக் கொண்டே வந்து அவ்விடத்தை நிறைத்தது. சட்டென்று டமருகத்தின் ஒலியைப்போல எழுந்த ஒலியொன்றின் முடிவில் ‘‘உலகெலாம்....’’ எனும் சிவச் சொல்லொன்று எட்டுத் திக்கும் ஒலித்து எல்லோரின் செவிக்குள்ளும் படருமாறு சென்றொடுங்கியது.

சேக்கிழார் அங்கேயே முதற் செய்யுளான,  
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்  

- என்று தம்முள்ளிருந்து பீறிட்டு வரும் செய்யுளை முதன்மையாகப் பாடினார். ‘‘ஆஹா... இனி என்ன கவலை’’ என்று சேக்கிழார் திருப்தியுற்றார். அநபாயனும் இதைவிட ஆனந்தம் வேறேது எனக்கு தில்லைக் கூத்தனின் சிலம்படியை பணிந்தான். அன்றிலிருந்து மிகச் சரியாக ஒரு வருடத்திற்குள் சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணத்தை இயற்றினார். அநபாயன் அவற்றை அரங்கேற்றம் செய்யும் பொருட்டு சிற்றரசர்கள், பெரும் அரசர்கள், புலவர்கள், பண்டிதர்கள், பக்தர்கள் என அனைவரையும் தில்லைக்கு அழைத்தான். எல்லோரும் வந்து குவிந்தனர். தில்லையா கயிலையா என்று பிரித்தறியா முடியாதபடி சிவனடியார்களால் நிறைந்திருந்தது.

சிற்றம்பலநாதனுக்கு முன்பு பெரும் ஆசனத்தில் அமர்ந்து சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணத்தை ஓதினார். அங்குள்ளோர் அனைவரின் உள்ளத்தில் சிவஜோதி எழுந்தெழுந்து கால்வீசி நடனமாடியது. திருத்தொண்டர் புராணத்தினுள் சிவம் நீண்டு பரவியிருப்பதை செவிகளின் மூலம் கேட்டு உள்ளத்திற் தரிசித்தனர்.  

அநபாயன் அதோடு நில்லாது யானை மீது சேக்கிழார் பெருமானை அமர்வித்து அவருக்குப் பின்னால் கவரி வீசி மகிழ்ந்தான். ‘‘தொண்டர் சீர் பரவுவார்’’ எனும் பட்டப் பெயரையும் அளித்தான். பல சிற்றூர்களை தானமாகக் கொடுத்தான்.

‘‘தெய்வச் சேக்கிழாரே… இனி நீங்கள் எனக்கு அமைச்சரல்லர். நீங்கள் தவ முனிவர். இனியும் உங்களை  நான் அரசு வேலையில் வைத்திருப்பது பாவம். நீங்கள் தலயாத்திரை மேற்கொண்டு மக்கள் சிவனடி சிந்தித்து முக்திக்கு நல்வழி நல்கும் பாதையை காட்டுங்கள்’’ என்றார். சேக்கிழாரும் அப்படியே பல்வேறு தலயாத்திரைகள் செய்த வண்ணம் இருந்தார். அடியார்களான நாயன்மார்களின் சிவப் பரம்பொருள் மேவிய கதைகளை மக்களுக்கு தொடர்ந்து கூறினார். அப்படி அவர் கூறிய நாயன்மார்களின் அருள் வெள்ள கதையினை வரும் இதழிலிருந்து பருகுவோம். சிவ ஊற்றில் நனைவோம்.   

( சிவம் ஒளிரும்)

கிருஷ்ணா