திருமகளின் திருப்பாதத்தில் சேர்ப்பாய் குருவாயூரப்பா!



கோயில் முன்னே கூடி நின்று கோடான கோடி ஜென்ம பாவம் தீர, பக்த கோடிகள் பலர் குருவாயூர் அப்பனை தொழுதபடி இருந்தார்கள். அவர்களுக்கு குருவாயூர் அப்பனது மதி முகமே ஆறுதல் அளிப்பது போல இருந்தது. ஆனால், பக்த கோடிகளுக்கு ஸ்ரீ அப்பனின் திருமுகத்தை விட, நாராயண பட்டத்ரியின் திருவாயில் இருந்து வரும் நாராயணீயம் என்ற கவி அமுதே இதமாக இருந்தது.

பிறவி நோய்க்கும் பிறந்த பின் வரும் நோய்க்கும் மருந்தாக பட்டத்ரி படைக்கும் காவியம், அந்த ஸ்ரீ அப்பனையும் அல்லவா மயக்கி விட்டது. அதனால்தானே பட்டத்ரி  நாராயணீயத்தின் ஒவ்வொரு ஸ்லோகத்தை முடித்த பின்னும் தலை அசைத்து ஆமோதித்தான். பட்டத்ரியும் சளைத்தவர் இல்லை. ஸ்ரீ அப்பன் திருமுடி அசைத்து ஒப்புதல் தந்தால் ஒழிய, அடுத்த பாடலை பாட மாட்டார்.

சுற்றி இருந்து பார்த்த பக்தர்கள் அனைவருக்கும் அது ஒரு கண்கொள்ளாக் காட்சி என்று சொல்லவும் வேண்டுமா.?

அதனாலேயே அந்த அற்புதத்தை தரிசனம் செய்ய ஜனம் கூட்டம் கூட்டமாக கூட ஆரம்பித்தது. கூடிய கூட்டமும், அவர்கள் பட்டத்ரிக்கு தந்த மரியாதையும் அவரது மனதில் ஆணவத்தை நன்கு வளர்த்து வந்தது.

ஸ்ரீ அப்பனும் ஆடவிட்டு பின் அடக்குவோம் என்று பொறுமையாக இருந்தான். ஆனால், பட்டத்ரி ஸ்ரீ அப்பனின் பொறுமைக்கே சவால் விடும்படி நடந்து கொண்டார். பக்த சிரோமணியான பூந்தானம் என்பவரை அவமானப்படுத்தியது பட்டத்ரியின் ஆணவத்தின் உச்சக் கட்ட செயல் என்று சொன்னால் மிகையாகாது.

பூந்தானம் என்பவர் ஒரு ஏழை பக்தர். அவர் தவமாய் தவமிருந்து ஒரு ஆண் மகவை ஈன்றார். அதற்கு அன்னப் பிராசனம் (முதல் சோறூட்டுதல்)  செய்வதற்காக ஸ்ரீ அப்பனின் சந்நிதானத்திற்கு  கொண்டுவந்த போது குழந்தை இறந்து விட்டது. மனம் நொந்து போன பூந்தானம், இந்த சம்பவத்திற்கு பிறகு அந்தக் கண்ணனையே தனது குழந்தையாக பாவித்தார்.

கண்ணனை குழந்தையாக எண்ணி பக்திப் பாமாலையாக ‘‘ஞானப் பானை” என்ற நூலை இயற்றினார். அந்த நூலை இயற்றி முடித்த கையோடு நாராயண பட்டத்ரியிடம் தான் வந்தார். பட்டத்ரியிடம் தான் எழுதிய நூலை படித்துப் பார்த்து திருத்தித் தர வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். ஆனால், பட்டத்ரி அவரை  அவமதித்து அனுப்பி விட்டார். மனம் நொந்த பூந்தானம் அந்தக் கண்ணனையே சரண் புகுந்தார். இந்தச் சம்பவம் ஒன்று போதாதா? ஸ்ரீ அப்பன் தனது நாடகத்தை தொடங்கிவிட்டான்....

என்றும் போல அன்றும் பட்டத்ரி நாராயணீயம் பாடுவதற்காக ஸ்ரீ அப்பனின் சந்நிதானத்தின் முன், அமர்ந்தார். அவரது அமுத கவியை கேட்கக் கூட்டமும் கூடியது. அதை தனது ஓரக் கண்ணால் பார்த்த பட்டத்ரி, உள்ளம் பூரித்த படியே பாட ஆரம்பித்தார்.

எப்போதும்போல பாடிவிட்டு ஸ்ரீ அப்பனின் ஆமோதிப்பிற்காக அவனை நோக்கினார். அவன் சிரத்தை சற்றும் அசைக்காமல் நிச்சலமாக பட்டத்ரியை பார்த்துக் கொண்டிருந்தான். மை தீட்டி இருந்த கரு நீல விழியை உருட்டி உருட்டி பட்டத்ரியை பார்த்தான். பட்டத்ரிக்கு சுருக்கென்று இருந்தது. இருப்பினும், சற்று தன்னை தேற்றிக்கொண்டு ஸ்ரீ அப்பனை நோக்கி பேச ஆரம்பித்தார்.

‘‘ஹே பிரபோ. நாராயணா... கருணைக் கடலே எனது அனைத்துப் பாடலையும் சிரம் அசைத்து சரி என்று சொன்ன நீ, இந்த ஸ்லோகத்தை நான் பாடும் போது ஏன் அந்த ஒப்புதலை தர மறுக்கிறாய்? நான் செய்த தவறு என்ன சுவாமி? தயை கூர்ந்து சொல்லுங்கள்.’’ குரல் தழுதழுத்த படியே பட்டத்ரி மொழிந்தார்.

அதைக்கண்ட ஸ்ரீ அப்பனின் முகத்தில்,  என்றும் மாறாத அதே மர்மப் புன்னகை தவழ்ந்தது.  சற்றே புன்னகை தவழும் இதழை விரித்து, பேச ஆரம்பித்தான் ஸ்ரீ அப்பன்.

‘‘தவறு தான் பட்டத்ரி... பெரிய தவறுதான்’’
‘‘தவறு என்னவென்று தெரியவில்லையே பிரபா’’
‘‘பூந்தானத்திடம் கேள்.’’ ஸ்ரீ அப்பன் நிதானமாகத்தான் சொன்னான். கேட்ட பட்டத்ரிக்கு நிலமே பிளந்தது போல இருந்தது. தான் அவமதித்து அனுப்பியவனிடமே உதவி கேட்கும் கொடுமை.

‘‘என்ன. பூந்தானத்திடமா?’’ பட்டத்ரியின் இதழ்கள் அவரையும் அறியாமல் மொழிந்தது‘‘ஆம். சாட்சாத் பூந்தானமே தான்.’’ ஸ்ரீ அப்பன் உறுதியாக சொன்னான்.

அதைக் கேட்ட கூட்டம் தங்களுக்குள் கிசுகிசுக்க ஆரம்பித்தது. அந்த கிசுகிசுப்பின் ஒலி பட்டத்ரியின் செவிவழியே அவரது உள்ளம் புகுந்து, அவரது உள்ளத்தைப் போட்டு பிசைந்தது. இப்படி ஊரே, நம்மைப் பற்றி கிசுகிசுக்கும் நிலைக்கு நம்மை ஆளாக்கி விட்டானே அந்த குருவாயூர் அப்பன், என்று அவரது உள்ளம் அவருக்கு மட்டும் கேட்கும் த்வனியில் சொல்லியது.

எதிரே நிச்சலமாக ஸ்ரீ அப்பன் சிரித்தபடி இருந்தான். அவனது திருமுகத்தை ஒருமுறை ஏக்கமாகப் பார்த்துவிட்டு, கைகளில் தான் எழுதிய ஓலைகளை எடுத்துக் கொண்டு பூந்தானத்தை நோக்கி விரைந்தார்.நாராயண பட்டத்ரி தனது இல்லத்திற்கு வருவார் என்று சற்றும் எதிர்பாராத பூந்தானம் திக்கு முக்காடிப் போனார். அவரை முறையாக உபசரித்தார் பூந்தானம். உபசரித்தவர், அவருக்கு எதிரில் அமர்ந்தார்.

‘‘தாங்கள் இந்த சிறியவன் வீட்டிற்கு வந்ததன் காரணம் என்ன சுவாமி...’’ பக்தியோடு வினவினார் பூந்தானம்.‘‘அது.... வந்து.... அது..’’‘‘தயங்காமல் சொல்லுங்கள் சுவாமி’’ பூந்தானம் விடவில்லை. பட்டத்ரியும் ஒன்று விடாமல் அவரிடம் சொன்னார். சொல்லும்போது விழியோரமாக வழியும் கண்ணீரை கைகளால் துடைத்த படியே பட்டத்ரி பேசியது பூந்தானத்தை பாடாய் படுத்தியது. ஏன் இந்த குருவாயூர் அப்பன் இவ்வளவு கல் நெஞ்சக்காரனாக இருக்கிறான்? என்று அவரது மனம் நொந்தது. தனது மனவலியை தனது புன் சிரிப்பில் மறைத்தபடியே, ‘‘அந்த ஸ்லோகத்தை இப்படி காட்டுங்கள்’’ என்று சொன்னார்.  பட்டத்ரி காட்டினார்.

‘‘வைகுண்டத்தின் மின்னல் கோடியே. பல தேவ மாதர்கள் சூழ கொலுவிருக்கும் திருமகளே. அழகின் பிறப்பிடமே. அனைத்து செல்வத்தின் தலைவியாக இருந்தபோதும், திருமாலின் பாதமே கதி என்று இருப்பவளே. அவனது தாமரை மலர் போன்ற பாதத்தின் மணத்திலேயே லயித்த மனம் உடையவளே. எனக்கும் உன்னருகில் ஒரு இடம் தரக்கூடாதா என்று பாடியிருக்கிறீர்கள் சரிதானே.’’
ஆம் என்பதற்கு ஏதுவாக தலையசைத்தார் பட்டத்ரி.

‘‘எனக்கு ஒன்று தோன்றுகிறது சொல்ல அனுமதி உண்டா.’’ பயபக்தியோடு கேட்டார் பூந்தானம்.தயை கூர்ந்து சொல்லுங்கள் என்பதுபோல பட்டத்ரி கைகுவித்தார். ‘‘இதில் அம்பிகையின் பெருமைகள் தானே இருக்கிறது. பிராட்டிதான் பெருமானின் பெருமைகளுக்கு காரணம் என்பதை நான் மறுக்கவில்லை.

ஆனால், நம் குருவாயூர் அப்பன் ஒரு குழந்தை. ஒரு குழந்தையிடம் இன்னொரு குழந்தையை புகழ்ந்து பேசினால் அது எப்படி ஒப்புக்கொள்ளும்? நீங்கள் சொன்னது உண்மையே, ஆனாலும், இதில் திருமாலின் பெருமை இல்லையே.’’பட்டத்ரிக்கு இப்போதுதான் விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக புரிய வரவே, அவரது முகம் பிரகாசமானது.

‘‘இந்த ஸ்லோகத்தை நீக்கி விட்டு வேறு ஸ்லோகம் பாடவா?’’ ஆர்வமாகக் கேட்டார் பட்டத்ரி‘‘அதெல்லாம் வேண்டாம் சுவாமி. விபவா என்றசொல்லுக்குப் பதிலாக விபவம் என்று மாற்றி விடுங்கள். அப்படிச் செய்தால், மேலே சொன்ன பெருமைகளை உடைய மகாலட்சுமியின் பாதத்தில் என்னை சேர்ப்பாய் குருவாயூர் அப்பா என்று பொருள் மாறிவிடும்.

குருவாயூர் அப்பனும் ஏற்றுக் கொள்வான். சொல்லிவிட்டு முகம் மலர பட்டத்ரியை பார்த்தார் பூந்தானம். விழிகளில் நன்றி வழிய அவரை கையெடுத்து வணங்கினார் பட்டத்ரி. அவரது கூப்பிய கரங்களை ஆதரவாக விலக்கினார் பூந்தானம். இவர்கள் இப்படி அன்பை பரிமாறிய படி இருக்க, அங்கு குருவாயூரப்பன் ஈடு இணை இல்லாத இரு திருமால் அடியார்களை சேர்த்து வைத்த பெருமையில் கள்ளப் புன்னகை பூத்தபடி இருந்தான்.