வீரபத்திரர்*மந்திர சாஸ்திரங்களில் உருவில் பெரியதாகவும் அட்சர எண்ணிக்கையில் ஆயிரம் கொண்டதாகவும் உள்ள யந்திரம் வீரபத்திரருக்கே உரியது. மற்ற தெய்வங்களுக்கும் இவ்வளவு பெரிய யந்திரம் இல்லை.

*தன்னை அழைக்காமல் அவமதித்து யாகம் செய்த தட்சனின் யாகத்தை அழிக்க பரமேஸ்வரனால் படைக்கப்பட்டவரே வீரபத்திரர்.

*ஈசனின் நீலகண்ட விஷத்திலிருந்து ஆயிரம் முகங்கள், இரண்டாயிரம் கரங்கள், அவற்றிற்குரிய ஆயுதங்களோடு மணிமாலைகள், ஆமையோட்டு மாலைகள், பன்றிக்கொம்பு மாலைகள், கபால மாலை அணிந்து வீரபத்திரர் தோன்றினார்.

*வீரபத்திரரின் பெருமைகள் ஸ்கந்தபுராணம், சிவமகாபுராணம், காசிக்காண்டம், தக்கயாகப் பரணி, காஞ்சிப் புராணம் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

*வீரபத்திரருக்கு தும்பைப்பூ மாலை சாத்தி வழிபட்டால் அவர் நம்மை எதிரிகள் தொல்லைகளிலிருந்து காத்து நம் துன்பங்களை நீக்கி நல்வாழ்வு அளிப்பார் என்பது நம்பிக்கை.

*வீரபத்திரருக்கு கரையில்லாத வெள்ளைநிற ஆடைகளே அணிவிக்கப் படவேண்டும் என அவர் பூஜைமுறையில் கூறப்பட்டுள்ளது.

*கோபத்தால் உஷ்ணமாக உள்ள வீரபத்திரரை குளிர்விக்க அவர் மேல் வெண்ணெய் சாத்தும் முறை வழக்கத்தில் உள்ளது. மதுரை மீனாட்சி ஆலய கம்பத்தடி மண்டபத்தில் அருளும் வீரபத்திரருக்கு இந்த பிரார்த்தனை விசேஷமாக செய்யப்படுகிறது.

*வீரபத்திரர் தேர் வாகனத்தில் விருப்பமுடன் சஞ்சாரம் செய்வதாக ஐதீகம். அவரது தேரை வைதீகத் தேர் என புராணங்கள் குறிப்பிடுகின்றன.

*சரப புராணத்தில் வீரபத்திரமூர்த்தியே சரபராக மாறி, நரசிம்மரை சாந்தப்படுத்தினார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

*செவ்வாய்க்கிழமையன்று கடைப்பிடிக்கப்படும் விரதம் வீரபத்திரவிரதம் என போற்றப்படுகிறது. அன்று சிவந்த நிற பூக்களாலும், செஞ்சந்தனத்தாலும் வீரபத்திரரை வணங்க, வாழ்வு வளம் பெறும்.

*ஐப்பசி மாத வளர்பிறை அஷ்டமி, மகாஅஷ்டமி என்று அழைக்கப்படும். அன்று தும்பைப்பூ, நந்தியாவட்டைப்பூ, மல்லிகை போன்ற வெண்ணிற மலர்களால் வீரபத்திரரை அர்ச்சித்து வெண்பட்டு சாத்தி வழிபட, அவரது திருவருள் கிட்டும்.

*தட்ச யாக சம்ஹாரமான திருப்பறியலூரில் ஈசன், அகோரவீரபத்திரமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

*கும்பகோணம் மகாமகத் தீர்த்தத்தில் கலக்கும் கங்கை முதலிய புண்ணிய நதிகளுக்குக் காவலாக கங்கை வீரபத்திரர் எழுந்தருளியுள்ளார்.

*சிங்கப்பெருமாள் கோயிலுக்கு 5 கி.மீ தொலைவிலுள்ள அனுமந்தபுரத்தில் வீரபத்திரர் அருள்கிறார். இவருக்கு வெற்றிலை படல் பிரார்த்தனை செய்வதாக நேர்ந்து கொண்டால் அனைத்து பிரச்னைகளும் தீர்வாகின்றன. துர்தேவதைகளிலிருந்து காப்பவர் இவர்.

*அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர், ஜலவீரபத்திரர், பவனவீரபத்திரர், ரணவீரபத்திரர், உக்ர வீரபத்திரர், உத்தண்ட வீரபத்திரர் என பல வடிவங்களில் இவர் வணங்கப்படுகிறார்.

*ஆடிப்பூர நாளன்று வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை சாத்துவது அநேகமாக எல்லா வீரபத்திரர் ஆலயங்களிலும் நடக்கிறது. அன்று அனுமந்தபுரம் வீரபத்திரருக்கு 12800 எண்ணிக்கை வெற்றிலைகளால் தொடுத்த மாலையை சாத்துகின்றனர்.

*திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி ஆலய தூணில் அருளும் வீரபத்திரமூர்த்தி பல குடும்பங்களுக்கு குல தெய்வமாக அருள்கிறார். இவர்மீதான வீரமாலை எனும் நூல் புதுக்கோட்டை சமஸ்தானபுலவர் ஸ்ரீகேசவபாரதி என்பவரால் பாடப்பட்டுள்ளது.

*சென்னை ராயபுரம் மாகாளி அம்மன் ஆலயத்தில் ஏழடி உயரமுள்ள வீரபத்திரமூர்த்தி திருவருள் புரிகிறார்.

- கலைச்செல்வன்