மகா பிரதோஷ விழா -சனி பிரதோஷம் 1 - 8 - 2020வரலாறும் வழிபாடும்

யோகியர்கள் தமது யோக சாதனையால் மனத்தினை அடக்கி உடலில் உள்ள ஆறாதாரங்களைக் கடந்து உச்சியில் உள்ள சகஸ்ரதள தாமரையில் வீற்றிருக்கும் இறைவனை தரிசித்து அங்குப் பெருகும் பேரானந்த வெள்ளமாகிய அமுதத்தை உண்டு இறவாநிலை பெற்றுள்ளனர். இவ்விருவரும் பெற்றுண்டது முறையே சித்தாமிர்தமும், ஞானாமிர்தமும் ஆகும். இவை அவர்களுக்கு மட்டுமே பயன் தருவதாகும். இதனை உட்கொண்டு அவர்கள் இறைவனைப் போன்றே ஐந்தொழில் புரியும் வல்லமை பெற்றவர்களாக கரையற்ற இன்ப வெள்ளத்தில் மூழ்கிக் களிக்கின்றார்கள்.

அவர்கள் கொண்டுள்ள மானுட தேகம் பல விக்கிரியா சக்திகளை உடையதாக, பல கோடி ஆண்டுகளுக்கு இளமை நலம் மாறாததாக இருந்து வருகின்றது. இதுபோன்றே அமரர்களாகிய தேவர்கள், அசுரர்களால் அடிக்கடி உதைபட்டு அடிபட்டு மரணமடையாது இருக்கவும், ஆயுதங்களால் தாக்கப்பட்டு உடல் சிதையாதிருக்கவும், உடலில் வலிகள் தோன்றாதிருக்கவும், வைரம் போன்ற உறுதியான தேகம் பெறவும், அனந்த சுகங்களையும் இடையறாது அனுபவிக்கவும் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற்று உண்டனர்.

இவர்கள் உட்கொண்ட அமிர்தம் இந்த ஊழிக்காலம் வரையே பயன்தரத் தக்கதாகும். ஊழிமுடிவில் இவர்கள் யாவரும் அழிந்து சிவபெருமானுள்ளேயே ஒடுங்குவர். ஆனால், சித்தர்களும், ஞானிகளும் உண்ட அமிர்தம் எல்லையற்ற காலம் அழியாததாகும். முற்பிறப்பில் செய்த தான, தருமங்களின் பயனால் உயர்நிலை எய்தி, முப்பத்து முக்கோடி தேவர்களாக நிலை பெற்றுள்ள அமரர்கள் உண்டது தேவாமிர்தமாகும். இந்த அமிர்தத்தை அவர்கள் அடைந்ததைப் பல்வேறு புராணங்கள் பலவாறு விளக்குகின்றன. சிவமகாபுராணம், வாமன, புராணம், பிரம்மாண்ட புராணம், ஸ்ரீமத் பாகவதம் முதலிய நூல்களில் தேவர்கள் அமிர்தம் பெற்று அதனை உண்ட வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

பாற்கடல் கடைந்த கதை

நீண்ட காலத்திற்கு முன்பு தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பெரும் போர் மூண்டது. இரண்டு புறத்திலும் ஏராளமான பேர் மடிந்தனர். பலர் நோயுற்றனர். எனவே, தேவர்கள் பரமலை அடைந்த அசுரர்களுடன் நீண்ட நாள் தொடர்ந்து போரிடுவதற்கான வலிமையும், அழியாத உடலும், இறவாத உயிரும், பெறவேண்டி, அதற்கு என்ன வழி என்று கேட்டனர்.

அவர் அவர்களைத் திருப்பாற்கடலில் துயிலும் நாராயணனிடம் அழைத்துச் சென்றார். நாராயணன் தேவர்களை நோக்கி தேவர்களே! பாற்கடலை கடைந்தால் அமிர்தம் கிடைக்கும். அதனை நீங்கள் உண்டால் இறவாத நிலையையும், அளவற்ற வலிமையையும் பெறலாம். ஆனால் பாற்கடலைக் கடைவதென்பது அவ்வளவு எளிதல்ல. நீங்கள் தனியே சென்று அதனைக் கடைந்து விடவும் முடியாது. எனவே, அசுரர்களையும் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

அசரர்களை இதற்காகத் துணைக்கு அழைத்தால் அமிர்தத்தில் அவர்களுக்கும் பங்கு தரவேண்டும் என்பதால், தேவர்கள் முதலில் தயங்கினர் என்றாலும் பின்னர் வேறுவழி இல்லாததால் பாற்கடலைக்கடைய அசுரர்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டனர். பின்னர், அனைவரும் கூடி மந்திர மலையை மத்தாகப் பயன்படுத்த முடிவு செய்தனர்.

ஆனால் அதனைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு பாதி வழிவரை வருவதற்குள்ளேயே அவர்கள் சோர்ந்து விழுந்து விட்டனர். பின்னர், நாராயணன் கருடனை ஏவி அந்த மலையைக் கொண்டு சென்று பாற்கடலில் சேர்த்தார். இப்போது, மலையாகிய மத்து கிடைத்து விட்டது. கடைவதற்குக் கயிறு வேண்டுமல்லவா? அனைவரும் கூடி அஷ்டமா நாகங்களில் ஒருவனும் பாம்புகளின் அரசனுமான வாசுகியைத் தங்கள் வேலைக்குக் கயிறாக இருக்கும்படி வேண்டினர்.

 பின்னர், ஒரு நல்ல வேளையில் சூரியனை (சில நூல்களில் சந்திரன் என்று குறிக்கப்பட்டுள்ளது) தறியாகவும், மந்திர மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைய முற்பட்டனர். அப்போது தேவர்கள் வாசுகியின் தலைப் பக்கம் நின்றனர்.
அசுரர்கள், தேவர்களை நோக்கி, நாங்கள் வேதம் பயின்று மேன்மை பெற்றவர்கள் இப்பாம்பின் வாலைப் பிடிப்பது எங்களுக்குக் கேவலம். அதனால் நாங்கள் தலைப்பகுதியில் நிற்கின்றோம் என்றனர். அதன்படியே அவர்கள் தலைப்பகுதியிலும் தேவர்கள் வால்பகுதிகளிலும் பிடித்துக் கொண்டு பாற்கடலைக் கடைய முற்பட்டனர்.

ஆனால், மத்தாகிய மந்திரமலை சற்றும் அசைவதாக இல்லை. மேலும் அது கடலுக்குள் அழுந்தத் தொடங்கியது. அப்போது திருமால் ஆமை அவதாரம் எடுத்து அதைத் தாங்கிப்பிடித்தார். அதன் பிறகு இருசாரரும் கூடிக் கடலை கடையத் தொடங்கினர். இவ்வாறு இவர்கள் பாற்கடலைக் கடையத் தொடங்கி ஓராயிரம் ஆண்டுகள் ஆயின.

இவர்கள் முதலில் சிவபெருமானைத் துதிக்காமலும் அவருடைய அனுமதி இன்றியும் பாற்கடலைக் கடையத் தொடங்கியதால் அவர்களுக்கு உரிய பயன் கிடைக்கவில்லை. மேலும், இரண்டு பக்கத்தினரும் மாறிமாறி இழுத்ததால் வாசுகியின் உடல் புண்ணானது. அத்துன்பத்தால் அவனது கண்கள் சிவந்தன. அவன் தன்னையும் அறியாமல், வலி பொறுக்க மாட்டாமல் தன் ஆயிரம் வாயினாலும் விஷத்தைக் கக்கினான்.

அந்தச் சமயத்தில் கடலில் இருந்தும் ஒருவகை விஷம் பொங்கியது. இப்படி பாம்பினால் கக்கப்பட்ட காளம் என்கிற நீல விஷமும், பாற்கடலில் பறந்த ஆலம் என்கிற கருப்பு விஷமும் சேர்ந்து கருப்புப் புயல்போல கொடிய வெப்பமும், கரும்புகையும் கொண்டதாக இடமும் வலமுமாக மாறிமாறி உலகமெங்கும் சூழ்ந்தது. அதற்கு அஞ்சிய தேவர்கள் தறிகெட்டு இடமும் வலமுமாக ஓடினர்.

பாம்பின் தலைப்பக்கம் நின்ற பல நூற்றுக்கணக்கான அசுரர்கள் விஷத்தின் வெப்பத்தால் எரிந்து சாம்பலாகிவிட்டனர். எஞ்சியவர்களுடைய உடல்கள் தீயில் வெந்து கருப்பாகவும், சிவப்பாகவும், கோரமாகவும், அழகற்றதாகவும் மாறிவிட்டன. பொங்கி வரும் விஷத்தைக் கண்டு பிரம்மன் ஓடி ஒளிந்து விட்டான். பிரகாசமான முத்தைப் போன்று ஒளி வீசும் வெண்ணிறம் கொண்ட திருமால் இந்த விஷத்தை நான் எளிதில் அடக்குவேன் என்று முன் வந்து நின்றார். உடனேயே, அவர் உடல் கருத்து மயங்கி வீழ்ந்தார். அன்று முதல் அவர் கருப்பு உடல் கொண்டவரானார். அதன் பின்னர், அவர் ஒருவாறு  தேறி அனைவரையும் அழைத்துக் கொண்டு கயிலாய மலையை அடைந்தனர்.

அங்கு திருவாயிலில் வீற்றிருக்கும் நந்தியம் பெருமானிடம் அனுமதி பெற்று உட்சென்று சிவபெருமானை வணங்கி, பொங்கி வரும் விஷவேகத்திலிருந்து தம்மைக் காப்பாற்ற வேண்டுமென்று முறையிட்டு அழுது தொழுதனர். அப்போது அவர் பார்வதியை நோக்கி, ‘‘என்ன செய்யலாம்’’ என்று கேட்க, பார்வதி தேவியும் தேவர்களைக் காத்து அருள்புரியுமாறு வேண்டினாள்.

அப்போது சிவபெருமான் தன் நிழலில் இருந்து தோன்றியவரும், பேரழகருமாகிய சுந்தரர் அப்போது சிவபெருமான் எனும் தமது அணுக்கத் தொண்டரை அனுப்பி, அவ்விஷத்தைத் திரட்டிப் பற்றிக்கொண்டு வருமாறு கூறினார். சுந்தரரும் வெளியே சென்று, உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கும் அந்தக் கொடிய ஆலகாய விஷத்தைப் பற்றித் திரட்டி ஒரு கருநாவற் பழம்போல ஆக்கி அதனை அடக்கிச் சிறிய பாத்திரத்தில் வைத்துக் கொண்டு வந்து பெருமானிடம் அளித்தார். அப்போது தேவர்கள், ‘‘ஐயனே எங்கும் வியாபித்து எங்களைத் துன்புறுத்திய இந்த விஷம் உங்கள் கையில் கட்டுண்டு கிடக்கின்றது. ஆதலின் இதை வெளியே விடாது தாங்களே தங்களுடைய திருமேனியில் அடக்கியருள வேண்டும்’’ என்று கூறினர்.

சிவபெருமான் ஒரு கணநேரம் விஷாபஹக்ரண மூர்த்தி என்னும் ரௌத்திர வடிவம் தாங்கி, அவ்விஷத்தை உண்டருளினார். அப்போது தேவியார் அந்த விஷத்தை, ‘‘பெருமான் உட்கொண்டால் சகல புவனமும் அழியுமே’’ என்று பார்வதிதேவி அவ்விஷம் உட்செல்லவொட்டாமல் அவருடைய கழுத்திலேயே தங்கும்படி செய்தாள்.

அப்போது தேவர்கள் அவருடைய அச்சமூட்டும் வடிவைக்கண்டு அஞ்சி, ‘‘பெருமானே! எங்களையும் சகல புவனங்களையும் நீங்கள் காத்தருளியதன் அடையாளமாக தங்கள் கண்டத்திலேயே அந்த விஷம் விளங்கட்டும்’’ என்று வேண்டினர். பின்னர் அவர் மீண்டும் இயல்பான வடிவம் பெற்றார்.சிவபெருமானும் அதற்கு இசைந்து அந்த விஷத்தை ஒரு நீலமணியைப்போல தமது கழுத்தில் நிறுத்தினார். பின்னர், ஒரு திருவிளையாடல் புரியக் கருதி மயக்கம் கொண்டவர்போலப் படுத்துக் கொண்டார்.   

அமுதாம்பிகை

சிவபெருமான் விஷமருந்தியபோது அதனை அமிர்தமாக்கியவள் அம்பிகை பார்வதிதேவியே ஆவாள். இதனால் அவளுக்கு அமிர்தேஸ்வரி என்பது பெயராயிற்று. அபிராமிபட்டர் அபிராமி அந்தாதியில் அருந்திய நஞ்சை அமுதம் ஆக்கிய அம்பிகை என்று குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும். இவ்வாறு சிவன் உண்ட நஞ்சை அமிர்தமாக்கித் தன்னுடைய மாங்கல்யத்தைக் காத்துக் கொண்டதுடன் அந்த விஷம் பிறரை வருத்தாது இந்திராணி முதலான அனைவரின் மாங்கல்யத்தையும் காத்ததால் அவள் மங்களேஸ்வரி என்று பெயர் பெற்றாள்.

 இவ்வாறு படுத்துக் கொண்டதை அறிந்த தேவர்கள் கலங்கினர். எல்லோரும் அவரைப் போற்றித் துதிபாடியவாறு இருந்தனர். ஏகாதசியன்று விஷத்தை உண்ட சிவபெருமான் துவாதசி முழுவதும் பள்ளிகொண்ட நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் மாலை வேளையில் எழுந்து உமையவளை ஒரு பக்கம் கொண்டு சூலத்தைச் சுழற்றி டமருகத்தை ஒலித்து சந்தியா நிருத்தம் எனும் நடனம் ஆடினார். இந்த நாட்டியத்தைக் கண்ட தேவர்கள் அஞ்சியதுடன், மகிழ்ச்சியும் கொண்டனர். இந்த நடனத்திற்கு நந்திதேவர் மட்டும் சுத்த மத்தளம் வாசித்தார். அனைவரும் ஹர... ஹர... என்று துதித்தனர். அவருடைய நீலகண்டத்தையும் அவர் உலக உயிர்கள் உய்யும் பொருட்டு விடம் உண்டதையும் போற்றி பதிணென்கணங்களும் பலவகையான வாழ்த்தி வணங்கினர்.

(அன்று முதல் பெருமான் ஒவ்வொரு நாளும் அந்திவேளையில் இக்கூத்தை நிகழ்த்துகின்றார். இக்கூத்தில் சரஸ்வதி வீணையையும், திருமால் தாளத்தையும், நந்தி மத்தளத்தையும், திருமால் புல்லாங்குழலையும் பூத கணங்கள் எண்ணற்ற இசைக் கருவிகளையும் இசைக்கின்றனர் என்பர்.) பிறகு, மீண்டும் தேவர்கள் பாற்கடல் கடைந்து அமிர்தம் பெற விரும்ப, அதற்குச் சிவபெருமானின் அனுமதியைக் கேட்டனர். அவரும், ‘‘அப்படியே செய்யுங்கள்’’ என்று ஆசியளித்து அனுப்பினார்.பின்னர், தேவர்களும் அசுரர்களும் தங்கள் களைப்பை நீக்கிக் கொண்டு புத்துணர்ச்சியுடன் பாற்கடலை அடைந்து அதனை முன்போலவே கடையத் தொடங்கினர்.
 
பிரதோஷ வேளை என்றால் என்ன?

இரவும், பகலும் சந்திக்கின்ற நேரத்திற்கு உஷத் காலம் என்பது பெயர். உஷத் காலத்தைப் பகற்பொழுதின் முகம் என்பர். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவியாகிய உஷா என்பவள். அவள் பெயராலேயே இது உஷத் காலம் என அழைக்கப்படுகின்றது. இதற்கு நேர் எதிராகப் பகலும், இரவும் சந்திக்கும் நேரம் ப்ரத்யுஷக் காலம் எனப்படும். சூரியனின் இன்னொரு மனைவியாகிய பிரத்யுஷா இக்காலத்திற்கு அதிதேவதையாதலின்  அவள் பெயரால் இது பிரத்யுஷத் காலம் என்று அழைக்கப்பட்டு, இப்போது பேச்சு வழக்கில் பிரதோஷ காலம் என வழங்குகிறது என்பர்.

பிரதோஷ வேளையை ரஜ்னி முகவேளை எனவும் அழைப்பர். இதற்கு இரவின் முகம் என்று பொருள். நிகண்டுகள் பிரதோஷ காலத்தை, இரவின் முகம் என்றே குறிப்பிடுகின்றன. இந்தப் பொழுது சாயும் நேரத்திற்கு அதிதேவதையான பிரத்யுஷாவிற்குச் சாயா என்பது ஒரு பெயராகும். இந்த வேளையில் பகல் முழுவதும் உழைத்துக் களைத்த உயிர்கள் அவளால் ரட்சிக்கப்படுகின்ற காலம் என்ற பொருள்பட இந்த நேரம் சாயரட்சை எனவும் அழைக்கப்
படுகிறது என்பர்.

‘‘தோஷம்’’ என்றால் குற்றமுடையது என்பது பொருள். பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது. எனவே, குற்றமற்ற இந்தப் பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்று பிரதோஷ வேளைக்குப் பண்டிதர்கள் விளக்கம் கூறுவர்.
 
பிரதோஷ ரிஷப வாகனம்

சிவபெருமான் பிரதோஷ காலங்களில் உலா வருவதற்காகச் சிறிய அளவில் அமைந்த ரிஷப வாகனமே பிரதோஷ ரிஷபம் எனப்படும். இது மரத்தால் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டதாகும். மயிலாப்பூர் முதலிய பல தலங்களில் வெள்ளியால் அமைந்த பிரதோஷ ரிஷபவாகனங்களைக் காணலாம். சென்னை சிவா விஷ்ணு ஆலயத்தில் பித்தளையால் ஆன பிரதோஷ ரிஷபம் உள்ளது. பிரதோஷ காலத்தில் வலம் வரும் இந்த நந்தியைச் சுற்றி வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய முனிவர் சிற்பங்களையும் அமைக்கின்றனர். திருவக்கரை சந்திரமௌலீசுவரர் ஆலயத்தில் இடபத்திற்குப் பதிலாக அதிகார நந்தியில் பிரதோஷ நாயகரை அமர்த்தி உலாவரச் செய்யும் வழக்கம் உள்ளது.
 
விஷாபஹரண மூர்த்தி

நீலகண்ட பரமேஸ்வரரின் விஷமருந்திய திருவடிவைச் சிவாகமங்கள் விஷாபஹரண மூர்த்தி என்று குறிக்கின்றன. அபகரணம் என்பதற்கு ஏற்றுக்கொள்ளுதல் என்பது பொருள். எனவே விஷத்தை விரும்பி ஏற்று அருந்திய பெருமானை விஷாபஹரணர் என்று அழைக்கின்றனர். இம்மூர்த்தியின் வடிவை இரண்டு நிலையில் சிற்ப நூல்கள் குறிக்கின்றன. முதல் வகையில் காரணமாகமம் இம்மூர்த்தியைப்பற்றிக் குறிப்பிடுவதைக் காணலாம். இவர் ஜடாமகுடம் தரித்து மூன்று கண்களும் நான்கு கரங்களும் கொண்டவராக விளங்குகின்றார்.

மேற்கரங்களில், மானும், மழுவும் கொண்டவராய் முன் கரங்களில் இடது கையைத் தேவர்களுக்கு அபயமளிக்கும் பாவனையிலும் வலக் கரத்தில் விஷம் நிறைந்த பாத்திரத்தையும் கொண்டவராகவும் விளங்குகின்றார். அவர் விஷம் அருந்த முற்படுபவராகவும், அருகிலுள்ள பார்வதிதேவி சிவபெருமானைத் தழுவிக் கொண்டு வலக் கரத்தால் அவருடைய கழுத்தைப்பற்றி அவ்விஷத்தை அவருடைய கண்டத்தில் நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் முகத்தில் வேதனையும், குழப்பமும் கொண்டவளாக விளங்குகின்றாள்.

 மற்றோர் வகையில் அம்மூர்த்தியைத் தழல் முடி கொண்டவராக விழித்த பார்வையும், கோரைப்பல் துலங்க புலித்தோலாடை அணிந்து சிறுமணிகளால் ஆன மாலையையும் தேள்களால் கோர்க்கப்பட்ட மாலையையும், பாம்பணிகளையும் அணிந்தவராகச் சித்தரிக்கின்றனர். இவர் முன் வலக்கரத்தில் விஷப்பாத்திரத்தையும் முன் இடக்கரத்தில் அஞ்சி நிற்கும் தேவியை அணைத்து அச்சம் நீக்குபவராகவும், பின் வலக்கரத்தில் திரிசூலத்தையும் பின் இடக்கரத்தில் மணியையும் (சிலர் கபாலம் எனவும் எழுதுவர்) ஏந்தியவராகக் காட்சியளிக்கின்றார்.

இருவரும் இடப வாகனத்தில் வீற்றிருக்கின்றனர். சிதம்பரம், மதுரை முதலான திருத்தலங்களில் விஷம்பஹரண மூர்த்தியை ஓவியமாகவும் சிற்பமாகவும் அமைந்துள்ளனர். ஆனால், இவை யாவும் ஆகமம் கூறும் வகையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். பல நூல்களில் விஷாபஹரண மூர்த்தியைப் பள்ளி கொண்டிருப்பவராகவும் அவருக்குப் பார்வதிதேவி பணிவிடை புரிபவளாகவும்  சித்தரித்திருக்கின்றனர்.
 
பிரதோஷ நாயகர்

பிரதோஷ காலங்களில் கோயிற் பிராகாரத்தில் வலம் வருவதற்காக அமைந்துள்ள உற்சவமூர்த்தியே பிரதோஷ நாயகர் என்று அழைக்கப்படுகின்றார். இவர் அளவால் சிறிய மூர்த்தியாவார். ஏறத்தாழ ஒன்றரை அடி உயரத்திற்கு உட்பட்டதாகவே இவர் வடிவம் அமைக்கப்பட வேண்டும் என்பது மரபாகும். இந்த மூர்த்தி சந்திரசேகரரைப் போலவே தோற்றமுடையவர். பன்னிரு கரங்களில் மான், மழுவும்; முன்னிரு கைகளில் அபய, வரத முத்திரையும் தாங்கியவராய் நின்ற நிலையில் விளங்குகின்றார். தலையில் ஜடாமகுடம் விளங்க, அதில் வெண்பறை, கங்கை, ஊமத்தை மலர் தரித்தவராய் மூன்று கண்களும் கருத்த கண்டமுடையவராய் எல்லையில்லா மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன் அமைந்துள்ளார்.

அவரது இடப்புறத்தில் அம்பிகை தனது வலக் கரத்தில் நீலோற்பல மலர் ஏந்தி, இடது கரத்தைத் தொங்கவிட்ட நிலையில் நின்றவாறு காட்சியளிக்கின்றாள். பொதுவாக இருவரையும் தனித்தனியே ஒரே பீடத்தில் நின்றவாறே அமைப்பது தான் வழக்கம் என்றாலும் காலப்போக்கில் கலைஞர்கள் சில மாறுதல்களை ஆகம அடிப்படையில் செய்யத் தொடங்கினர்.

சிவன் விடமுண்ண முற்பட்டதைக்கண்டு தேவி அஞ்சினாள். அவளுடைய பயத்தைப் போக்கும் வகையில் அவர் அவளை அணைத்துக் கொண்டார். இந்த அடிப்படையில் முதல் நிலையில் இறைவன் அம்பிகையைத் தனது இடக்கரத்தால் அணைத்துக் கொண்டிருப்பது போன்ற பிரதோஷ நாயகர் உருவம் அமைக்கப் பெற்றது. இந்த மூர்த்தியை உமா ஆலிங்கன மூர்த்தியென்றும், அணைத்தெழுந்த நாதர் என்றும் அழைக்கின்றனர். இரண்டாவது நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் அணைந்த நிலையில் எழுந்தருளியுள்ளனர்.

இந்த மூர்த்தியைப் பரஸ்பர ஆலிங்கன மூர்த்தி என அழைக்கின்றனர். சென்னை பெசன்ட் நகர் இரத்தினகிரீஸ்வரர் ஆலயத்திலுள்ள பிரதோஷ நாயகர் உமா ஆலிங்கனமூர்த்தியாகவும் சென்னையை அடுத்த மண்ணிவாக்கம் என்னும் ஊரில் உள்ள மூர்த்தி பரஸ்பர ஆலிங்கனமூர்த்தியாகவும் விளங்குவதைக் காணலாம். பிரதோஷ தினத்தின் மாலையில் இந்தப் பிரதோஷ மூர்த்தியை இடப வாகனத்தில் வைத்து அலங்கரித்துக்கோயிலின் உட்பிராகாரத்தில் வலம் வருகின்றனர். திரயோதசி நாளில் பிரதோஷ காலத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்னதாகவே மூலவருக்கும் உற்சவமூர்த்திக்கும்  ருத்ரம் முதலான மந்திரங்களால் பல்வகைப் பொருள்களைக் கொண்டு திருமுழுக்காட்ட வேண்டும்.

தமிழில் பூசிப்பவர்கள் நீலகண்டப் பதிகம், திருக்கடவூர், திருப்பாசூர் பதிகங்கள் முதலியவற்றைப் பாராயணம் செய்யலாம். பின்பு மூலவரை அலங்கரித்துத் தூப, தீப நிவேதனங்களால் ஆராதிக்க வேண்டும், பின்னர், உலாத்திருமேனியை இடப வாகனத்தில் வைத்து மலர்களால் அலங்கரித்து உட்பிராகாரத்தில் மும்முறை வலம் வரச் செய்ய வேண்டும்.

இவ்வாறு வலம்வரும்போது ஒவ்வோர் முறையும் கருவறையை நோக்கி அமைந்துள்ள பிரதான நந்தி (கொடி மரத்தின் அருகில் உள்ளவர்) யின் அருகில் சுவாமியை வடக்கு நோக்கியவாறு நிறுத்தி உலாத்திருமேனிக்கும், நந்திக்கும், மூலவருக்கும் ஒரே நேரத்தில் தீப ஆராதனை செய்யவேண்டும். மூன்றாவது சுற்று வரும் போது மட்டும் ஈசான (வடகிழக்கு) திசையில் பெருமானைத் தெற்கு நோக்கியவாறு நிறுத்திச் சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும். இந்த ஈசான திக்கில் நடைபெறும் வழிபாட்டினைக் காண்பது சிறந்த புண்ணியமாகக் கருதப்படுகிறது.

சிவபெருமான் விஷத்தை அருந்தி மயங்கியதுபோலக் கிடந்தபோது எப்போதும் மகிழ்ச்சியில் திளைத்து விளையாடி மகிழும் அவருடைய கணங்களான பூதகணங்கள் தாமும் மயங்கி வீழ்ந்து வருந்தின. பின்னர் அவர் திருநடனம் புரிந்தபோது தாமும் மகிழ்ந்து தாமும் தனது விளையாட்டு நடனங்களை நிகழ்த்தின. இவை பூத நிருத்தம் எனப்படும். இதனால் பூதர்கள் வாழும் ஈசான திசையில் பிரதோஷ வேளையில் சுவாமியின் முன்பு பூத நிருத்தம் நடத்தப்படுகின்றன. இதற்கான வாத்திய அமைப்பு ராகம், தாளம் ஆகியன உள்ளன.

பின்னர், உலாத்திருமேனிக்கு உரிய உபசாரங்களைச் செய்து அவருடைய இருப்பிடத்தில் சேர்க்கவேண்டும். பிரதோஷ நாயகருக்கு வில்வ மாலைகளை அணிவிப்பது பெரும் புண்ணியம் தருவதாகும். பன்னீர் அபிஷேகம் செய்தல், வடைகளை நிவேதனம் செய்தல் ஆகியனவும் சிறப்பு உடையதாகும்.

பூசை. ஆட்சி லிங்கம்