தெளிவு பெறுஓம்ஆடி மாதத்தில் சுபநிகழ்ச்சிகளைச் செய்யலாமா, கூடாதா?
 - வெற்றிவேல், திருவண்ணாமலை.

 ஆடிமாதத்தில் எந்த விதமான சுபநிகழ்ச்சியும் செய்யக்கூடாது என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஆடி மாதத்தில் குலதெய்வத்தின் கோவிலுக்குக் குடும்பத்துடன் செல்லும் பழக்கத்தினை உடையவர்கள் சுபநிகழ்ச்சியினைத் தவிர்த்தனர். திருமணம் முடிந்த கையோடு தம்பதியரை பிரிக்க வேண்டியிருக்குமே என்பதால் திருமணத்தை தவிர்த்தனர்.

அதே நேரத்தில் கிரகப் பிரவேசம், வீடு குடி போதல், புதிய வீடு வாங்குதல், நிலம் வாங்குதல், திருமண நிச்சயதார்த்தம், வளைகாப்பு சீமந்தம் செய்தல் முதலானவற்றை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆடியில் வாஸ்து புருஷனே நித்திரை விடுவதால் தாராளமாக வீடு குடி போகலாம். ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களில் மட்டுமே வீடு குடிபோவதைத் தவிர்க்க வேண்டும் என்றுரைக்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆடி மாதத்தில் தாராளமாக சுபநிகழ்ச்சிகளைச் செய்யலாம்.ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள் கூட சில காலகட்டங்களில் பாதிக்கப்படுகின்றனர்.  நல்லவர்களை இறைவன் இவ்வாறு சோதனைக்கு உள்ளாக்குவதேன்?
 - ரமேஷ்பாபு, மும்பை.

 காரணம் இல்லாமல் இறைவன் ஒருபோதும் செயலாற்றுவதில்லை. கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டும்கூட, அதிலிருந்து குணமாகி மீண்டும் புதுவாழ்வு பெற்றவர்களை நீங்கள் கண்டதில்லையா. இதற்கு யார் காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்..? ஒருமுறை சுவாமி விவேகானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் கேட்டாராம். நல்லவர்களுக்கு மட்டும் எப்போதும் துன்பம் ஏன் என்று. அதற்கு ராமகிருஷ்ணர் அளித்த பதில் : உரசாமல் வைரத்தை பட்டை தீட்ட முடியாது. நெருப்பில் இடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள்.

ஆனால், அவர்கள் பாதிப்பிற்கு உள்ளாக மாட்டார்கள். அந்தச் சோதனையின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களே தவிர கீழே செல்ல மாட்டார்கள். உத்தமர் ஆன பகவான்  ரமணரும் கூட புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் என்பதை அறிகிறோம். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தன்னுடைய உடல்நிலையைக் கண்டு வருந்திய பக்தர்களிடம் பகவான் சொன்னது : “ஏன்  இந்த வெற்றுடம்பை எண்ணி வருந்துகிறீர்கள். நான் என்பது இந்த வெறும் உடம்பு அல்ல. நான் வேறெங்கும் சென்று விட மாட்டேன்.

இங்கேதான் உங்களோடு நீக்கமற நிறைந்திருக்கிறேன். நீங்கள் உங்கள் கேள்வியில் குறிப்பிட்டுள்ளது போல் உத்தமராய், ஒழுக்க சீலராய், எவருக்கும் எந்த தீங்கும் செய்யாது தனது கடமையை மட்டும் சரிவரச் செய்து வந்த ஒருவர் திடீரென்று நோய்வாய்ப்பட்டு இறந்தார் என்று வைத்துக் கொண்டால், அவர் இறைவனின் சோதனைகளுக்கு ஆட்பட்டு புடம்போட்ட தங்கம் ஆகி இறைவனின் பாதங்களைச் சரண் அடைந்தார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். மறுபிறவி இல்லா வீடுபேறு என்ற முக்தி அவருக்கு கிடைத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இறைவனின் செயல்களில் சாமானியர்களான நாம் குறை காணக் கூடாது.

வரலட்சுமி விரத பூஜையை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் ஒன்றாக இணைந்துதான் செய்ய வேண்டுமா?
 - லக்ஷ்மி நரசிம்மன், பெங்களூரு.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அதாவது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மருமகள்கள் ஒன்றாக இணைந்து வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிப்பது சாலச் சிறந்தது. வேலை நிமித்தம் அவரவர் ஒவ்வொரு ஊரில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பட்சத்தில் தனியாக கலசம் வைத்து விரதத்தை அனுஷ்டிக்க விரும்பும் பெண்கள் முதல் வருடத்தில் தனது மாமியார், அல்லது வீட்டின் மூத்த மருமகள், தாயார் அல்லது வயதில் மூத்த சுமங்கலிப் பெண்கள் இவர்கள் மூலமாக விரதத்தினை அனுஷ்டிக்கத் தொடங்க வேண்டும். முடிந்தவரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மருமகள்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிப்பதே மிகவும் நல்லது.
 
தங்கள் இல்லத்தில் கலசம் வைத்து பூஜிக்க இயலாதவர்களுக்காக அந்தந்த ஊரைச் சேர்ந்த புரோகிதர்கள் பொதுவான ஒரு இடத்தில் கலசம் வைத்து பூஜை செய்வர். அங்கு சென்றும் வரலட்சுமி விரதத்தினை அனுஷ்டிக்கலாம். இறப்புத் தீட்டு காரணமாக ஒரு வருடத்திற்கு பண்டிகை கொண்டாட இயலாதவர்கள் அருகில் விரதம் அனுஷ்டிக்கும் இல்லத்திற்குச் சென்று அங்கு பூஜிக்கப்பட்ட நோன்பு சரடை வாங்கி கையில் கட்டிக் கொள்ளலாம். கூட்டுப் பிரார்த்தனைக்கு ஒரு தனி மகத்துவம் உண்டு என்பதால் ஒரே குடும்பத்தில் கூட்டாக இணைந்து வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிப்பது சிறப்பான நற்பலனைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

உறக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் நேரத்தில் எதனைக் காணவேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது?
- தமிழ்செல்வன், ஊரப்பாக்கம்.

தாமரை புஷ்பம், பொன், தீபம், கண்ணாடி, சூரியன், தணல், சந்தனம், கடல், வயல், சிவலிங்கம், கோபுரம், மேகம் சூழ்ந்த மலை, கன்றையுடைய பசு, தனது வலதுகை, மனைவி, மிருதங்கம், கருங்குரங்கு ஆகியவை தூங்கி எழுந்தவுடன் பார்க்கத் தக்கவை என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதி இரவில் தூங்கி அதிகாலையில் எழுபவர்களுக்கு மட்டும் பொருந்துமே தவிர, மற்ற நேரங்களில் உறங்கி எழும்போது பொருந்தாது.
எங்கள் வீட்டுச் சுவற்றில் ஒட்டிக் கொண்டிருக்கும் பல்லி அவ்வப்போது சத்தமிடுகிறது. இது நல்லதா?
- ராமகிருஷ்ணன், விழுப்புரம்.

பல்லி சொல்லுக்குப் பலன் என்று பஞ்சாங்கத்தில் விளக்கமாக சொல்லியிருப்பார்கள். பல்லி சத்தமிடும் சமயத்தில் நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோமோ அல்லது எந்த விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோமோ,  அதனைப் பொறுத்து அதற்கான பலன் மாறுபடும். நாளும் கிழமையும், பல்லி உட்கார்ந்து சத்தமிடும் திசையும் இதற்கான பலனில் முக்கியமாக இடம்பிடிக்கின்றன. உதாரணத்திற்கு ஞாயிற்றுக்கிழமையில் வடக்கு திசை நோக்கி பல்லி சத்தமிட்டால் ‘தன லாபம்’ என்ற பலன் உண்டாகும்.

 திங்கட்கிழமையில் ஈசான்ய பாகத்தை நோக்கி அதாவது வடகிழக்கு திசையை நோக்கி சத்தமிட்டால் திருமணம் தொடர்பான பேச்சு வெற்றி பெறும் என்பது பலன். அதே நேரத்தில் அதே வடகிழக்கு திசை நோக்கி சனிக்கிழமையில் சத்தமிட்டால் கள்வர் பயம், பொருட்கள் திருட்டு போகும் என்று பலன் உரைப்பர். இதுபற்றிய விரிவான பலன் எல்லா பஞ்சாங்கங்களிலும் தெளிவாக சொல்லியிருப்பார்கள். இதுபோன்ற பலன்கள் தத்தம் அனுபவத்தின் மூலமாக நம் முன்னோர்களால் தொகுக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி உயிரியல் விஞ்ஞானிகள் இந்த பலன்களை உண்மையென்று ஏற்றுக்கொள்வதில்லை.

பகவத்கீதையில் சொல்லியுள்ள கருத்துக்களைப் பின்பற்றி நடக்க முயற்சித்தாலும் முடிவதில்லை. அவ்வாறு நடந்துகொள்ள பற்றற்ற நிலை வேண்டும்போல் உள்ளது. சாமானிய மனிதர்களுக்கு இது சாத்தியம்தானா?
- ஜி.டி.சுப்ரமணியன், கொளத்தூர்.

பகவத்கீதையின் உபதேசங்களைப் பின்பற்ற பற்றற்ற நிலை வேண்டும் என்று யார் சொன்னது..? பற்றற்ற நிலையில்
உள்ளவர்களுக்கு கீதையின் உபதேசம் எதற்கு..? பகவத்கீதை சொல்லும் கருத்துக்களை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். சாதாரண மனிதன் தனது வாழ்க்கையில் பின்பற்ற  வேண்டிய கடமைகளைத்தான் பகவத்கீதை சுட்டிக் காட்டுகிறது.
பற்றற்ற நிலைக்குச் சென்று சந்நியாசியாகப் போகச் சொல்லவில்லை.

“நகர்மணாமனாரம்பாந் நைஷ்கர்ம்யம் புருஷோச்னுதே, ந ச ஸந்யஸனாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி” என்கிறது பகவத் கீதையின் கர்மயோகம். அதாவது வெறும் சந்யாசத்தால் நிறைநிலையைப் பெற இயலாது, அவரவருக்கு உரிய கர்மங்களை அதாவது கடமைகளை சரியாக அனுஷ்டித்தல் வேண்டும். நன்றாக பழுத்த பழம் மட்டுமே மரத்தை விட்டுப் பிரிய இயலும். அதுவே சந்யாசம். அது பிஞ்சு அல்லது காயாக இருக்கும்போது மரத்தை விட்டுப் பிரிப்பதால் பழமாகி விடாது. எந்த ஒரு மனிதனும் முழுமையடைய வேண்டும் என்றால் அவனுக்கு உரிய கடமையைச் சரிவர செய்ய வேண்டும் என்கிறார் பகவான். அதனால் பற்றற்ற நிலை என்பதை பகவத்கீதை அறிவுறுத்தவில்லை.

உங்களுக்கு என்று எந்த செயல் விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதனை எந்தவித தயக்கமும் இன்றி சரிவரச் செய்து வாருங்கள் என்றே அழுத்திச் சொல்கிறது. உங்களுக்கு என்று விதிக்கப்பட்ட கடமையில் இருந்து சிறிதும் வழுவாது நடந்துகொள்ள வேண்டும் என்பதையே பகவான் கீதையின் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறார். அதற்கான பலன் என்ன என்பதைப் பற்றிக் கவலைப்படக்கூடாது. எது நடந்தாலும் எல்லாம் இறைவன் செயல் என்று விடாமல் பணியாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு மாணவனின் கடமை ஆசிரியருக்கு கீழ்பணிந்து நடப்பது, ஆசிரியரின் கடமை மாணவர்களுக்கு உரிய கல்வியை சரிவர போதிப்பது, மகனின் கடமை தந்தை சொல்படி நடப்பது, தந்தையின் கடமை மகனின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவது, அரசனின் கடமை மக்களைக் காப்பது, மக்களின் கடமை அரசின் ஆணைக்கு கட்டுப்பட்டு நடப்பது என்று எல்லோரும் அவரவருக்கு உரிய கடமையைச் சரிவர கடைபிடித்து வந்தாலே போதும், நலமுடன் வாழ இயலும் என்பதே பகவத்கீதை சொல்லும் கருத்து. கடமையைச் செய்வதற்கு பற்றற்ற நிலைதான் வேண்டும் என்பது அவசியமில்லை.இறைவனின் அருளைப் பெற என்ன செய்ய வேண்டும்? சாஸ்திர, சம்பிரதாயங்களின் கடைபிடிப்பதன் மூலமும், வேதத்தினை கற்றுக்கொள்வதன் மூலமும்தான் முக்தி அடைய இயலுமா..?
- குருராஜன், மடிப்பாக்கம்.

ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பகவான் ரமண மகரிஷி திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்தபோது, அவரைப் பார்க்க பல வேதவிற்பன்னர்கள் வருவார்கள். முக்தியடைவது பற்றி பல விஷயங்களை ரமணரும் அவர்களுடன் விவாதிப்பார். அவருக்கு சேவை செய்யும் பக்தர் ஒருவர், இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருப்பார்.

இந்த வேத விற்பன்னர்களைப் போல நம்மால் பேச முடியவில்லையே.. வேதத்தைப் படிக்காததால் முக்தி கிடைக்கும் வாய்ப்பு போய்விட்டதே என்று மனம் வருந்துவார். அவரது ஏக்கத்தைப் புரிந்துகொண்ட பகவான் ரமணர் ஒருநாள் தனக்கு அவர் பணிவிடை செய்துகொண்டிருந்தபோது, ‘இன்று நீ சவரம் செய்து கொண்டாயா’ எனக் கேட்டார். அந்த பக்தர் ஏதும் புரியாமல், ஆமாம் ஸ்வாமி என்றார். கண்ணாடியைப் பார்த்துதானே சவரம் செய்தாய்? என்று திரும்பவும் கேட்டார் ரமணர்.

பக்தர் கலவரத்துடன் ஏதும் புரியாமல் ஆமாம் என்று பணிவுடன் தலையாட்டினார். “கண்ணாடியைப் பார்த்து நீ சவரம் செய்தாய், அதாவது நீ சவரம் செய்யும்போது கண்ணாடி உனக்கு தேவைப்படுகிறது, உன் முகத்தை அழகாக்கும் வரை அது உதவுகிறது, ஆனால் அந்தக் கண்ணாடியில் உன் முகத்தைப் பார்க்கலாமே தவிர, கண்ணாடியே உனக்கு சவரம் செய்து விடுமா..” என்றார் பகவான். முடியாது ஸ்வாமி என்றார் பக்தர்.

அதுபோலத்தான் வேதங்களும், உபநிஷதங்களும், சாஸ்திரங்களும். நீ சிரமப்படாமல், காயப்படாமல், முக்தியடைய அவை உதவும். அவ்வளவுதான்.. அவற்றால் உனக்கு முக்தியை வாங்கித்தர முடியாது. தீவிர பக்தியும், இறைவழிபாடும் மட்டுமே உனக்கு முக்தியைத் தரும். உன்னை இறைவனடியில் சேர்க்கும். அதை மட்டும் நீ செய்தால் போதும் என்றார் பகவான்.

ஆகையால் நமக்கு தெரிந்த அளவில் உண்மையான அன்போடு இறைவனை வழிபடுதலும்,  இறைவனின் அங்கமான ஒவ்வொரு உயிருக்கும் தொண்டு செய்வதுமே உண்மையான பக்தி. அதுவே உண்மையான இறைவழிபாடு. ஆக அனைவரோடும் அன்போடு பழகுங்கள். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துங்கள். அவரவருக்கு உரிய கர்மானுஷ்டானங்களைச் சரிவரச் செய்து வாருங்கள். அதுவே உங்களை பக்தி மார்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். முக்திக்கும் வழி காட்டும்.