குறளின் குரல்: 128முதுமையையும் மூத்தோரையும் போற்று!

வாழ்க்கையின் எல்லா நிலைகளைப் பற்றியும் ஆராயும் திருக்குறள் முதுமைப் பருவத்தைப் பற்றிப் பேசாமல் இருக்குமா? முதுமையைப் பற்றிக் கூறி அது எச்சரிக்கிறது. முதுமை வரும் முன் நல்ல அறச் செயல்களைச் செய்துவிட வேண்டும் என வலியுறுத்துகிறது. இறப்பு வருகிற காலம் எப்படி இருக்கும் எனச் சொல்கிறது. இறப்பைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை எனவும் சொல்கிறது.

`அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.’
(குறள் எண்-36)

பிறகு செய்து கொள்ளலாம் என எண்ணாது, அறம் செய்யலாம் என எண்ணியபோதே அறம் செய்துவிட வேண்டும். அந்த அறம் தான் உடல் அழியும் காலத்தில் அழியாத துணையாக இருக்கும்.
`உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.’
(குறள் எண் - 339)
இறப்பைப் பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை. உறங்குவதைப் போன்றது இறப்பு.
உறங்கி விழிப்பதைப் போன்றது பிறப்பு. அவ்வளவே.

`அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றா டமியள்மூத் தற்று.’
(குறள் எண் -1007)

வறியவனுக்குக் கொடுத்து உதவாமல் சேமித்து வைக்கப்படும் செல்வம், அழகுடைய ஒரு பெண், திருமணம் செய்து கொள்ளாமலே முதுமை அடைந்ததைப் போன்று பயனற்றது ஆகும்.

`மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்.’
(குறள் எண் - 70)

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை. மகன்(வயதில் மூத்த) தன் தந்தைக்குச் செய்கிற கைம்மாறு என்ன? இத்தகைய மகனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று பிறர் சொல்வார்களேயானால் அந்தச் சொல்லே கைம்மாறு.

`நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.’
(குறள் எண் - 335)

முதுமை காரணமாக நாக்கு பேசமுடியாமல் போகும். இறக்கும் தருவாயில் விக்கல் மேலே மேலே வரும். அதற்கு முன் நல்ல தர்மச் செயல்களை ஒருவன் செய்துவிட வேண்டும். நம் புராணங்களில் முதுமை பலவிதங்களில் பேசப்படுகிறது. கந்த புராணத்தில், குமரன் என்றே பெயர்பெற்ற முருகன் கிழவனாக வந்த காட்சி விவரிக்கப்படுகிறது.

தினைப்புனம் காவல் காத்துக் கிளிகளையும் பிற பறவைகளையும் பயிரைத் திண்ணாதவாறு ஆலோலம் பாடி கவணில் கற்களை வைத்து எறிந்து விரட்டிக் கொண்டிருக்கிறாள் வள்ளி. அங்கே கிழவேடம் பூண்டு வருகிறான் குமரன். கிழவர் வள்ளியிடம் தாகம் என்று சொல்லித் தண்ணீர் கேட்கிறார். அவருக்குத் தாகமல்ல, மோகம்! தண்ணீர் கொடுக்க வந்தவளின் கையைப் பற்றுகிறார். வள்ளி திமிறுகிறாள். முருகனின் அண்ணன் விநாயகன் யானையாக வந்து வள்ளியைத் துரத்த வள்ளி அஞ்சி, கிழவரை அடைக்கலம் புக யானை மறைகிறது. கிழவர் முருகப் பெருமானாக வள்ளிக்குக் காட்சி தருகிறார் என வளர்கிறது அந்தப் புராணம்.

அந்தக் கால நாடகங்களில் புகழ்பெற்ற நாடகம் வள்ளி திருமணம். அதில் கிழவர் வேடத்தில் வந்து முருகன் பேசும் வசனங்கள் பலத்த கைதட்டல் பெறும்.யயாதி என்ற மன்னன் சாபத்தால் முதுமை அடைந்ததைப் பற்றியும் பின் எவ்விதம் அவன் இளமை பெற்றான் என்பதைப் பற்றியும் மகாபாரதம் பேசுகிறது. அசுர குருவான சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானியை மணந்தான் மன்னன் யயாதி. பின் அவளறியாமல் அவள் தோழி சர்மிஷ்டையையும் மணந்தான். காலம் கொஞ்சம் சென்றது.  

ஒருநாள் தன் கணவன் இன்னொருத்தியையும் மணந்துள்ளான் என்ற உண்மையை அறிந்து சீற்றமடைந்த முதல் மனைவி தேவயானி, தன் தந்தை சுக்கிராச்சாரியாரிடம் முறையிட்டாள். தன் மகள் வஞ்சிக்கப் பட்டதை அறிந்த அவர் யயாதிக்கு `நீ கிழவனாகக் கடவது!’ என்று சாபமளித்தார். அடுத்த கணம் கிழத்தன்மை யயாதியை வந்தடைந்தது.

நடுநடுங்கினான் யயாதி. கிழவனானால் உடல் நடுங்கும்தான். ஆனால் அவனின் அப்போதைய அந்த நடுக்கம் அதனால் மட்டும் வந்ததல்ல. இனி எப்படி இளமையைப் பெறுவோம் என்ற அச்சத்தால் வந்த நடுக்கம் அது. மன்னிப்புக் கேட்டு மன்றாடினான். சுக்கிராச்சாரியார் மனம் இளகியது. `உன் புதல்வர்களில் யாரேனும் ஒருவரிடம் நீ உன் முதுமையைக் கொடுத்து இளமையை உனக்கு வேண்டிய காலம் வரை பெற்றுக் கொள்ளலாம்’ என சாப விமோசனம் அளித்தார் அவர்.

ஆனால், எந்த மகன் தந்தையின் முதுமையைத் தான் பெற்றுக் கொள்ள சம்மதிப்பான்? எல்லாப் பிள்ளைகளும் மறுத்துவிட, நல்லவேளையாக இரண்டாம் மனைவி சர்மிஷ்டைக்குப் பிறந்த கடைசி மகன் புரு மட்டும் அதற்குச் சம்மதித்தான். மகன் முதுமையடைய தந்தை இளமையடைந்த விசித்திர நிகழ்ச்சி நடந்தேறியது. வயோதிக மகனின் வாலிபத் தந்தை தன் இரு மனைவியருடன் ஆயிரம் ஆண்டுகள் இன்பம் துய்த்ததாகச் சொல்கிறது மகாபாரதம். அதன் பின்னர்தான் உடலின்பங்கள் மேல் சலிப்பு வந்தது யயாதிக்கு.

தன் மகன் புருவை அழைத்தான். அவனது இளமையை மீண்டும் அவனுக்கு வழங்கி, தன் முதுமையைத் தான் வாங்கிக்கொண்டான். அவனுக்கே முடிசூட்டினான். பின்னர் கானகம் சென்று தவம் செய்து முக்தி அடைந்தான். இளமை மாறி முதுமை வந்த கதையை மகாபாரதம் சொல்வதுபோல், முதுமை மாறி இளமை பெற்ற கதையைப் பெரியபுராணம் சொல்கிறது. திருநீலகண்ட நாயனார் சரிதத்தில் இறுதியில் நிகழும் அற்புதம் அது.

திருநீலகண்டர் தன்னைத் தவிர்த்து இன்னொரு பெண்ணுடன் இருந்ததை அறிந்தாள் அவர் மனைவி. கடும் சீற்றமடைந்த அவள் `எம்மைத் தீண்டுவாராயின் திருநீலகண்டம்’ எனச் சூளுரைத்தாள். தன்னைத் தீண்டலாகாது எனச் சொன்ன அவள் `என்னை’ என்ற ஒருமைச் சொல்லைப் பயன்படுத்தாமல் `எம்மை’ என்ற பன்மைச் சொல்லை அல்லவா பயன்படுத்தினாள்? எனவே `இனி எந்தப் பெண்ணையும் தீண்டமாட்டேன்’ எனத் திருநீலகண்டர் விரதம் பூண்டார். ஆண்டுகள் பல கடந்தன. இருவரும் முதுமை அடைந்தனர்.

அவர்களது தூய தவ வாழ்வை உலகறியச் செய்ய விழைந்தது சிவபெருமான் திருவுள்ளம். சிவயோகியார் வேடம் பூண்டு அவர்கள் இல்லம் வந்த அவர், ஒரு திருவோட்டைக் கொடுத்து பத்திரமாக வைத்திருக்கச் சொன்னார். பின்னர் வந்து வாங்கிக் கொள்வேன் எனச் சொல்லித் தானும் மறைந்தார். திருவோட்டையும் மறைத்துவிட்டார். மறுபடி வந்து திருவோட்டைத் திரும்பக் கேட்டார். என்ன செய்ய? அது போன இடம் தெரியவில்லையே? பதறினார் திருநீலகண்டர்.

கணவனும் மனைவியும் கைப்பிடித்துக் குளத்தில் மூழ்கித் தாங்கள் ஓட்டை எடுக்கவில்லை என்று சத்தியம் செய்யுங்கள் என்றார்சிவன். மனைவியைத் தொட இயலாத சபதத்தைச் சொல்லி, இருவரும் ஒரு மூங்கில் கொம்பின் இரு முனைகளைப் பற்றிக் குளத்தில் மூழ்கி எழுந்தபோது அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது.முதியவர்களாகக் குளத்தில் மூழ்கியவர்கள் இளமை படைத்தவர்களாக எழுந்தார்கள். அவ்விதம் முதுமை மாறி இளமை பெற்ற வரலாறு திருநீலகண்டருடையது.

`வாவியின் மூழ்கி ஏறும்
கணவரும் மனைவி யாரும்
மேவிய மூப்பு நீங்கி
விருப்புறும் இளமை பெற்றுத்
தேவரும் முனிவர் தாமும்
சிறப்பொடு பொழியும் தெய்வப்
பூவின்மா மழையின் மீள
மூழ்குவார் போன்று தோன்ற..’

என இந்நிகழ்ச்சியை அழகாகப் பெரியபுராணத்தில் காட்சிப் படுத்துகிறார் பக்திச் சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய சேக்கிழார்.....
பொதுவாக எல்லோரும் இளமையை விரும்புவார்கள். முதுமை வந்தாலும் தோற்றத்திலாவது இளமை இருக்க வேண்டும் என்பதற்காக இன்று பற்பலரும் மேற்கொள்ளும் முயற்சிகள் நாம் அறிந்தவையே. முதுமையால் நரைத்த முடி உடைய பலர், இன்று `தலை - மை’
தாங்கி இளமைக் கோலம் காட்டுவதையும் அறிவோம்!

ஆனால், இதற்கு மாறாகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒருவர் இறைவனிடம் முதுமையை வேண்டிப் பெற்றார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அதிலும் அப்படி வேண்டிப் பெற்றவர் ஒரு பெண்பாற் புலவர். இல்லற வாழ்வில் ஈடுபடுவதை வெறுத்த அவ்வையார், தம் இளமைப் பருவத்திலேயே விநாயகரிடம் முதுமையை வேண்டிப் பெற்றார். வாழ்வின் நிலையாமை குறித்து புத்தரைச் சிந்திக்க வைத்த நிகழ்ச்சியில் அவர் நேரில் கண்ட முதுமைக்கும் ஒரு பங்குண்டு.

அரண்மனையை விட்டு வராமல் வெளியுலகம் அறியாது வாழ்ந்த புத்தர் முதன்முறையாக நகர்வலம் வந்தார்.  அப்போது பிணி, மூப்பு, சாக்காடு மூன்றும் மனித வாழ்வில் தவிர்க்க இயலாதவை என்பதைக் கண்டுணர்ந்தார். அவர் கண்ட காட்சிகளில் ஒரு நோயாளி உண்டு. முகத்தில் சுருக்கம் விழுந்து நடுங்கும் ஒரு முதியவர் உண்டு. இறந்த மனிதனின் சடலம் ஒன்றையும் கண்டார். வாழ்க்கை நிலையற்றது என உணர்ந்து துன்பத்திற்கான காரணத்தை அறியத் தவம் செய்யும் பொருட்டு அன்றே அரண்மனையை விட்டு நீங்கிக் கானகம் சென்றார்.

பல்லாண்டு தவத்திற்குப் பிறகு போதி மரத்தடியில் ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்ற உண்மையை அவர் கண்டறிந்தார். வள்ளுவரும் `முதுமை காரணமாக நாக்கு பேசமுடியாமல் போகும். இறக்கும் தருவாயில் விக்கல் மேலே மேலே வரும். அதற்கு முன் நல்ல தர்மச் செயல்களை ஒருவன் செய்துவிட வேண்டும்.’ என முதுமையைக் கூறி நம்மை எச்சரிப்பதைக் காண்கிறோம்....  

ஒரு முதியவர் தம் இளமைக் காலத்தைப் பற்றி எண்ணி ஏங்கும் சித்திரத்தைச் சங்கப் பாடலொன்று காட்சிப் படுத்துகிறது.  `குளத்தில் துடும் எனப் பாய்ந்து தரைவரை சென்று மணல் எடுத்து வருவோமே, அப்படிப்பட்ட இளமைக் காலமொன்று முன்பு இருந்தது. இப்போதோ முதுமை வந்தது. பூண் செறிந்த பெரிய தடியை ஊன்றியவராயும் நடுக்கம் உடையவராயும் இருமல்களுக்கு இடையே சில சொற்களைப் பேசுபவராயும் நாங்கள் முதுமைப் பருவத்தை அடைந்தோம்.

அந்தப் பழைய இளமை எங்கிருக்கிறதோ?’ என ஏங்குகிறார் அந்த முதியவர். பாடலை எழுதியவர் பெயர் தெரியாததால், அதில் வரும் பூண்செறிந்த பெரிய தடியை ஊன்றியவர் எனப் பொருள்படும் `தொடித்தலை விழுத் தண்டினார்’ என்ற சொற்றொடரையே அந்தக் கவிஞருக்குச் சூட்டி விட்டார்கள்.

`நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
களித்து மணல் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்
குற்று இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே?’
 (புறநானூறு 243ஆம் பாடல்.)

நல்ல நெறிகளைக் காட்ட வல்லவர்கள் முதியவர்களே என்பதை நம் இலக்கியங்களும் புராணங்களும் உரத்துச் சொல்கின்றன. `மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முன்பு கசக்கும் பின்பு இனிக்கும்’ என ஒரு பழமொழியும் தமிழில் உண்டு. சிலப்பதிகாரத்தில் வாழ்வெலாம் இழந்து கோவலன் தன் மனைவி கண்ணகியுடன் பூம்புகாரிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டபோது அவர்களுக்கு வழிகாட்டி அவர்களை நடத்திச் செல்பவர் கவுந்தி அடிகள் என்ற மூதாட்டிதான். ராமபிரான் சீதையைத் தேடிச் செல்லும் போது, அவன் கிஷ்கிந்தைக்குச் செல்ல வேண்டும் எனச் சொல்லி வழி காட்டுபவள் சபரி என்ற மூதாட்டிதான்....

இளம் வயதிலேயே மன்னன் ஆனான் கரிகாலன். அவனிடம் நீதி கேட்டு வந்தார்கள் இரு முதியவர்கள். மன்னன் இளமையாக இருப்பதால் அனுபவ அறிவு இராது என்றும் தங்களுக்கு நீதி கிட்டாது என்றும் அவர்கள் கருதினார்கள்.

அவர்கள் கருத்தறிந்த அவன், உள்ளே சென்று நரைமுடி தரித்து முதுமைக் கோலத்துடன் வந்தான். இந்த முதியவர் சரியான நீதி தருவார் என அவர்கள் கருதவே அவர்களின் வழக்கை விசாரித்து இருவரும் மனம் ஒப்பும்படி நல்ல நீதி வழங்கினான். காரணமென்ன? குலவித்தை கல்லாமலே வரும் என்கிறது ஒரு வெண்பா. பழமொழி நானூறு என்ற பதினெண் கீழ்க்கணக்கு நூலில் வரும் அந்த வெண்பா:
 
`உரை முடிவு காணான் இளமையோன்
என்ற நரைமுது மக்கள் உவப்ப - நரை
முடித்துச் சொல்லால் முறை செய்தான்
சோழன் குலவிச்சை கல்லாமல் பாகம்படும்.’

முதியவர்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதை நம் கலாசாரம் வலியுறுத்துகிறது. வெளியூர் செல்லும்போது தாத்தா பாட்டி ஆகியோரை வணங்கி விடைபெற்றுச் செல்வது வழக்கத்தில் இருக்கிறது. வீட்டுக்கு வரும் விருந்தாளிகளும் முதலில் முதியவர்களை வணங்கி ஆசி பெறுவது நம் பண்பாட்டு நெறி. அலுவல்கள் இல்லாமலும் அலுவல்கள் செய்ய இயலாமலும் வீட்டிலிருக்கும் முதியவர்கள் தனிமை உணர்ச்சி கொள்ளக் கூடாது என்பதற்காக ஏற்பட்டுள்ள அழகிய சம்பிரதாயங்கள் தான் இவையெல்லாம். ஆதிசங்கரர் பஜகோவிந்தம் பாடலில் `இளமையைப் பற்றிக் கர்வப்படாதீர்கள், முதுமை காத்திருக்கிறது’ என்று எச்சரிக்கிறார்.

`மாகுரு ஜனதன யெளவன கர்வம்
ஹரதி னிமேஷாத் கால ஸர்வம்
மாயாமயமிதம் அகிலம் ஹித்வா
ப்ரஹ்மபதம் த்வம் ப்ரவிச விதித்வா!’

செல்வத்தைப் பற்றியும் நண்பர்களைப் பற்றியும் இளமையைப் பற்றியும் கர்வம் கொள்ளாதீர்கள். ஒரு கணத்தில் இவையெல்லாம் நம்மை விட்டுப் போய்விடும். மாயையிலிருந்து விடுபடுங்கள். என்றும் நிலைபேறுடைய சத்தியத்தை நோக்கி மனத்தைத் திருப்புங்கள்!’ என அறைகூவுகிறார் ஆதிசங்கரர்.
ராமாயணத்தில் தசரதர் தன் காதருகே ஒரு நரை மயிரைக் கண்டு முதுமை வந்ததை உணர்ந்து ராமனுக்குப் பட்டம் சூட்ட நினைக்கிறார்.

உடல் நலத்தை நன்கு பராமரித்துக்கொண்டு நல்ல சிந்தனைகளோடு வாழ்ந்து, தவறாமல் இன்சொல்லே பேசி, கடவுள் கொடுத்த முதுமை என்ற வரத்தை முதியவர்கள் மகிழ்ச்சியோடு ஏற்று கெளரவிக்க வேண்டும். முதியவர்கள் சந்தேகமில்லாமல் பாக்கியசாலிகள் தான். காரணம் முதுமை என்பது எல்லோருக்கும் கிட்டும் வரமல்லவே?

(குறள் உரைக்கும்)

திருப்பூர்

கிருஷ்ணன்