தீட்சை எனும் தீ*அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் 49

தற்கால கல்வி முறையில் உள்ள படிநிலை வளர்ச்சியைப் போலவே ஆன்மிகத்திலும் சமயப் பயிற்று முறையில் படிநிலை வளர்ச்சி உள்ளது. அதை தீட்சை என்பர். குருவினால் அளிக்கப்படும் தீட்சையானது இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைப் போன்றது என்றாலும் உபாசகனின் உண்மையான அன்பினால், கடுமையான ஜபத்தினால், பக்தியினால் மகிழ்வுற்ற தேவதை நேரடியாக காட்சியளித்து உபாசகனின் தலைமீது தன் திருவடியை வைத்து தீட்சையளிப்பது என்பது சமயக்கல்வியில் உயர்வர உயர்ந்த நிலையை கொடுக்கும். இது தற்கால கல்வியில் முனைவர் பட்டத்தை போன்றது. இந்த தீட்சை முறையில் படிநிலை வளர்ச்சியை பட்டரின் வழியில் ஒவ்வொன்றாய் இனி காண்போம்.
தீட்சை என்பது ஐந்து வகை என்கிறது சைவம். இந்த ஐந்தும் ஒவ்வொன்றும் நான்கு துணைப் பிரிவுகளை உடையது. ஆக மொத்தம் இருபத்தி ஐந்து கலைச் சொற்களையும் தனித்தனியாய் இப்பாடல் விளக்கத்திற்கு மட்டும் தேவையான அளவில் ஓரிரு வரிகளில் காண்போம்.

தரிசனம் : உமையம்மையின் அருட் சக்தியை பெற்ற குருவை முதலில் தேடி அடைவதை குறிக்கும். அப்படி அடைந்த பிறகு அந்த குருவிற்கும் சீடனுக்கும் உள்ள உறவு சார்ந்து நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது .

‘‘பின்னே திரிந்து நின் அடியாரை பேணி’’ - 25

அவை ஒவ்வொன்றாய் இனி காண்போம். நயன - குருவானவர் சீடன் வேண்டிய வழி அவனை அருள் வழி நடந்த ஒப்புக்கொள்வதாகும்.‘‘ஞானற் தழைத்துன் சொரூபத்தை அறிகின்ற நல்லோர் இடத்தினிற் போய், உபதேச முட்கொண்டு’’- பதிகம். ஸ்பரிச - சீடனின் பக்குவமறிந்து அவன் உடன் நின்று செய்முறை பயிற்சி அளிப்பதாகும்.

‘‘பத்ம பதயுகம் சூடும் பணி’’- 27 என்பதனால் அறியலாம்.

வாச்யம் - பயிற்சி அளிக்கும் போது சீடன் கேட்கும் சந்தேகங்களுக்கு தெளிவுறப் புரியும் வண்ணம் காரண காரிய அடிப்படையில் விளக்கம் அளித்தலே வாச்யம்

‘‘ சுருதிகளின் பனையும் கொழுந்தும் ’’- 2.

மாசை - ஒவ்வொரு முறையும் பயிற்சியை மாணவர் செய்யும் போது குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் மனநிலை மாற்றத்தை பரிசோதித்து அறிவது மாசை என்பதாகும்.

‘‘அறிந்தேன் எவரும் அறியா மறையை ’’- 3

வாசிகம் - என்பது குருவிடமிருந்து கல்வியை கொள்வதை குறிக்கும் சொல்லாகும். இந்த பெற்றுக் கொள்வதென்பது நான்கு வகையாகும்.

‘‘தெளிகின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ ’’- 19

யாசன - என்பது இறைவனை நீர் மற்றும் நெருப்பில் வழிபாடு செய்து அந்த நீரை சீடனுக்கு அபிஷேகம் செய்வதனாலும், ரக்‌ஷை என்ற வேள்வி தீயினின்று தோற்று விக்கும் தர்பையை எரித்த சாம்பலை சீடன் தரித்துக் கொள்வதனாலும். லேகன - தாமிரம், தங்கம், வெள்ளி போன்ற உலோகத்தால் தகடு செய்து அதில் வட்டம், கட்டம் , மலர் போன்ற குறிப்பிட்ட வடிவங்களில் கோடு அமைத்து மந்திர எழுத்துக்களை அமைத்து, அதை ஒரு மண்டலம் நாற்பத்தி ஐந்து நாட்கள் சந்தனம் இளநீர், மலர், பால் தேன் கொண்டு நீராட்டி உமையம்மையை மந்திர வடிவில் தியானித்து பூசித்து அதை வணங்குவதன் மூலமாக சீடனுக்கு அருட் சக்தியை தரச்செய்வதாகும்.


‘‘ஓளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே’’ - 19

அர்ச்சனா - என்பது உமையம்மையின் வடிவம். மேரு, சிவலிங்கம், இது போன்ற திருமேனிகளை வணங்கி உமையம்மையின் அருள் பெற்று அதை சீடனுக்கு அளித்து அவனை வழிபாடு செய்ய சொல்வதன் மூலம் அருட் சக்தியை பெறச் செய்வதாகும் தொழுது - 67, அர்ச்சனை செய்ய - 19 பதிகம். அபிமந்ரன - குருவானவர் பரிந்துரைக்கும் ஒரு ரகசியப் பொருளாகும். அந்த பொருளின் வழி இறையருட் சக்தியை பெறுவதாகும்.

‘‘ஒளிரும் மணிபுனைந்த’’ - 24 ‘‘ஒல்கு செம்பட்டுடையாளை’’- 84 அணியே - 26. (இதுவரை குருவானவர் சீடனுக்கு இறையருட் சக்தியை பெற்று தந்தார். இனி குருவினிடத்து பெற்ற இறையருட் சக்தியை சீடன் தான் உணர்ந்து. அதை வௌிப்படுத்த முயல்வதாகும்.)

மானசம் - என்பது குருவினால் உபதேசிக்கப்பட்ட மந்திரத்தை இடைவிடாது மீண்டும், மீண்டும், உள் உணர்வோடு உச்சரிப்பதாகும். இது பக்தி, ஜெபம், பூசை, தியானம் என மந்திர பயிற்சி (அப்யாசம்) நான்காகும்.பக்தி - இறைவியின் மந்திரத்தை உச்சரிக்கும் போது அவளை தாய், மகள், உடன் பிறந்தவள் என உறவு முறையாக கருதி அழைப்பதாகும்.

 ‘‘உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே ’’-33
 ‘‘துணையும் தொழும் தெய்வமும்’’ - 2

ஜெபம் - குருவினால் உபதேசிக்கப்பட்ட மந்திரத்தை மாறுதலின்றி, சந்தேகமின்றி நம்பிக்கையோடு லட்சக்கணக்கான முறை மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டேயிருப்பதாகும். இதை ஆவர்த்தி என்பர். இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் போது பலன் அதிகரிக்கும். ‘‘மணியே’’ - 24 (ருத்ராக்‌ஷம்) சாபயம்சாக்‌ஷ மாலா என்ற வடமொழி தியானத்திலும், அக்ஷமாலை எண்ணிக்கையை (ஆவர்த்தி) குறிப்பிடுகிறது.

பூசை - குருவினால் அளிக்கப்பட்ட இறைத் திருமேனியை முறையான மந்திரங்களைக் கூறி வழிபாடு செய்வதன் மூலம் இறையருளைப் பெறுவதாகும். இது மூலமந்திரம் என்ற மந்திரத்தைத் தவிர்த்து பிறதேவதைகளை வழிபாடு ெசய்வதாகும். இது ஆவர்ணபூசை, ஆசனபூசை, மாலா மந்திரம், துவார பூசை என்று பல பிரிவுகளைக் கொண்டதாகும். இது ப்ரதான தேவதை எனப்படும் கடவுளை தவிர்த்து அதனோடு தொடர்புடைய அனைத்து தேவதைகளையும் , வழிபாடு செய்வதாகும்.

கண்ணியது உன்புகழ் கற்பது உன் நாமம் - 12. (மாலா மந்திரம்) தியானம் - குருவினால் சொல்லப்பட்ட இறைவனுடைய திரு உருவை இறைகுணங்களை மனதில் பதித்து அதை மந்திரத்தின் மூலமாக தொடர்ந்து நிலை நிறுத்துவதற்கான முயற்சியாகும். இதை சிற்பசாத்திரங்கள் ரூபத்தியானம் என்பர் .

‘‘கொள்ளேன் மனதில் நின் கோலம் அல்லாது’’- 23

ப்ராப்தம் - குரு உபதேசித்ததை பின் பற்றுகின்ற சீடன் அதன் மூலமாக அடையும் பயனாகும். இது சொப்ன, சகுன, ஆவேச, அத்யந்த என நான்காகும். ஸ்வப்ன - இறைவியானவர் கனவில் தோன்றி அருள் புரிவதன் மூலமாக. நினைவில் அது அனுபவமாக வருவது.

‘‘துயில் கூரும் விழுப்பொருளே’’ - 35

உறங்கும் போது உள்ளத்தில் தோன்றுவாள் இதை ஞானியர் யோக நித்ரா என்பர். சகுன - இறைவியின் வருகையை. இருந்தல் இயல்பை தொடர்ந்து பூசிக்கும் போது ஏற்படும் நிகழ்வுகளாலும், குறியீடுகளாலும் இறைவி அறிவிப்பதாகும்.

‘‘பார்க்கும் திசைதொறும் பாசங்குசமும் பனிச்சிறை வண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும் வளர்க்கும் குங்கும முலையும் முலைமேல் முத்துமாலையுமே ’’- 85.

ஆவேச - ஒரு மானுடன் மீது உமையம்மை ஆவேசித்து அவரின் வழி வாக்கினால் அருள்வதாகும்.

‘‘பண்ணளிக்கும் சொல் பரிமள’’- 15

அத்யந்த - தியானம் முதலிய பயிற்சிகளின்  வழியே வழிபடுபவரின் உள் உணர்வாய் உமையம்மை வௌிப்பட்டருள்வாள்.

’’ எண்ணில் ஒன்று மில்லா வெளியே’’ - 16

விலக்‌ஷண - ( தொடர்பற்று போதல்) என்பது இறையருளில் சீடன் ஒன்றிப் போதலையும் , விலகிப் போவதையும், முறண்பட்டுத் தருமாறு தலையும், குறிக்கும் அதன் நுட்பம் சார்ந்து அபவாத, நிஷ்பலம், அநப்யாச மோட்ஷ என நான்காகும். அபவாத - என்பது வழிபாட்டு பயனாய் வழிபடுவோணுக்கு எதிர் விளைவு தோன்றும்.  

‘‘தீதே விளைகினும் ’’- 95.

நிஷ்பலம் - பல வருடம் வழிபாடு செய்தாலும், எந்த விதமான பயனும் ஏற்படாது. அநப்யாசம் - வழிபாடு செய்வதில் ஆர்வமற்று பயிற்சியை விட்டுவிடத் தோன்றும், ‘‘வருந்தாமலே அனைத்து கோடாமல்’’- பதிகம்.

‘‘தளர்வரியா மனம் ‘‘- 69

(எதிர் மறையாக கேட்பதிலிருந்து உணரலாம். மோட்க்ஷ - கேட்டல், கொடுத்தல், அருளல் என்ற தன்மையெல்லாம் நீங்கி வழிபாட்டு இறைவனோடு வழிபடுபவர் இரண்டறக் கலந்து நிற்பதனால் ஒன்றாகிப் போவதாகும். இந்த இருபத்தி ஐந்து கலைச் சொற்களில் அபிராமி பட்டர் குறிப்பிடுவது சகுனம் என்ற கலைச் சொல்லின் விளக்கமாகும். இறைவியானவள் தன் இருப்பை உணர்த்துவதற்கு தன்னுடைய திருவடியை அபிராமி பட்டர் மீது (வழிபடுபவர் மீது) சூட்டி அருளினால். அப்படி தலையில் திருவடி, சூட்டி அருள்தல் என்பது பாதஸ்பரிசனம் என்பதாகும். இப்படி உமையம்மையானவல் திருவடி சூட்டி விட்டால். அன்று முதல் அந்த வழிபடுபவனை உமையம்மை தன் அடியவராக ஏற்றுக் கொண்டாள் என்று பொருள்.

மேலும் அன்று முதல் வழிபடுவோருக்கு தேவையான பொழுதெல்லாம் உமையம்மை தானே வெளிப்பட்டருள்வாள். மெய்வாய், கண்,மூக்கு, செவி, மனம், புத்தி, ஆன்மாவிற்கு புலப்படும் படி திகழ்வார். இறை அருள் அனுபவம் ஏற்படும். அது துன்பம் நீக்கி இன்பம் பெருக்கு முக்தியளிக்கும். அந்த நிகழ்வையே தீட்சை என்கின்றனர். அது தனக்கு கிடைத்ததை. ‘‘சென்னி வைத்த’’ என்ற வார்த்தையால் இப்பாடலில் குறிப்பிடுகின்றார்.’’ சென்னி வைத்தல்’’ என்கின்றவார்த்தை திருவடி பேறு என்பதை குறிக்கும். இதையே ஆகமம் ஸ்பரிச தீட்சை என்கிறது.

‘‘சென்னியது உன் பொற் திருவடி தாமரை’’- 6 என்பதனாலும் உறுதி செய்து கொள்ளலாம். (தொடரும்)

முனைவர் பா.ராஜசேகர சிவாச்சியார்