நினைவில் சுடும் குறட்பாக்கள்!*குறளின் குரல் 113

திருவள்ளுவர் தம் திருக்குறளில் பல குறட்பாக்களில் `சுடும்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். `சுட்ட, சுட` என்பன போன்ற சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுடச்சுட ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்கிறபோது வள்ளுவருக்கு `சுடும்` என்ற சொல் கைகொடுத்திருக்கிறது!

`தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.’ (குறள் எண் 129)

தீயினால் ஏற்பட்ட புண் நாள்பட நாள்பட முழுவதுமாக ஆறிவிடும்.ஆனால் கடுமையான சொற்களால் ஏற்பட்ட தழும்பானது ஆறவே ஆறாமல் உள்ளத்தில் நிலைத்துவிடும்.

`சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோக்கிற் பவர்க்கு.` (குறள் எண் 267)

சுடச்சுடப் பொன் ஒளிவீசும். அதுபோல் தவம் செய்பவர் அவர்களைத் துன்பம் வருத்த வருத்த அதிக மெய்யறிவு பெற்று ஞானமடைவர்.

`தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்!’ (குறள் எண் 293)

நம் மனச்சாட்சிக்கு உண்மையாக நாம் வாழவேண்டும். பொய்சொல்லிவிட்டால் பிறகு ஒவ்வொரு கணமும் நம்மை நம் மனச்சாட்சி குத்திக் காட்டிக் கொண்டே இருக்கும். மனச்சாட்சி நம்மைச் சுடும்.

`கொடுங்காலைக் கைவிடுவோர் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்!’ (குறள் எண் 799)

துன்பம் வரும்போது கைவிடுபவர்களின் நட்பு மிகக் கொடுமையானது. அது கூற்றுவன் வரும் நேரத்தில் நினைத்தாலும் உள்ளத்தைச் சுடக் கூடியது.

`நல்ல கணக்கை மாத்து! கள்ளக் கணக்கை ஏத்து!

- என இன்றைய நட்பின் அவலத்தை விரக்திக் குரலில் பேசுகிறது நடிகர் சந்திரபாபு பாடி நடித்த `சிரிப்பு வருது சிரிப்பு வருது’ என்று தொடங்கும் புகழ்பெற்ற பழைய திரைப்பாடல். (படம் ஆண்டவன் கட்டளை, இசை எம்.எஸ். விஸ்வநாதன், பாடலாசிரியர் கண்ணதாசன்.). வள்ளுவர் கருத்தைத்தான் கண்ணதாசன் வழிமொழிந்து பகடி செய்கிறார்.

`குலம்சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
நாணின்மை நின்றக் கடை.’  (குறள் எண் 1019)

இக்குறளில் சுடும் என்ற சொல் இருமுறை வருகிறது. ஒன்று குலத்தைச் சுடும். இன்னொன்று நலத்தைச் சுடும். இந்த இரு இடங்களிலும் `கெட்டுவிடும்` என்ற பொருளில் `சுடும்` என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. ஒருவன் தான் கொண்ட கொள்கையிலிருந்து தவறினால் அது அவன் குலப் பெருமையைக் கெடச் செய்துவிடும். அதைவிட மோசமான இன்னொன்று உண்டு. ஒருவன் நாணம் தவறினால் அது அவன் இதுவரை செய்த அனைத்து நன்மைகளையும் அழித்துவிடும். நாணம் என்பது மனித வர்க்கத்திற்கு மட்டுமே உரியது. பறவைகளும் விலங்குகளும் எதுகுறித்தும் நாணுவதில்லை. காம நுகர்ச்சி போன்றவற்றில் நாணத்தோடு தனியிடம் நாடுவது மனித இயல்பு.

`தொடின் சுடின் அல்லது காமநோய் போல
விடின் சுடல் ஆற்றுமோ தீ?’  (குறள் எண் 1159)

காமத்துப் பாலில் பிரிவாற்றாமை என்ற அதிகாரத்தில் வரும் குறள் இது. காமநோய் போல தன்னை விட்டு நீங்கிய பின்னும் சுடுகின்ற தன்மை அந்த நெருப்பிற்கு உண்டோ எனத் தலைவி பிரிவுத் துயரால் புலம்புகிறாள்.

`மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.’  (குறள் எண் 1207)

காமத்துப் பாலில் காதல் வேதனையைச் சொல்லித் தலைவி புலம்புவதாக இந்தக் குறள் அமைந்துள்ளது. அதிகாரத் தலைப்பே `நினைத்தவர் புலம்பல்’ என்பதுதான். `நான் என் காதலனை மறக்காமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே அவரைப் பிரிந்த பிரிவுத் துயர் என்னைச் சுடுகிறதே, ஒருவேளை அவரை நான் மறந்துவிட்டால் என்ன ஆவேனோ?’ என எண்ணிப் பெருமூச்செறிகிறாள் தலைவி. பிரிவுத் துயர் காதலர்களைச் சுடும் என்ற செய்தி பழந்தமிழ்ப் பாடல்கள் பலவற்றில் உண்டு. ராமனுக்கு நிகழவிருந்த பட்டாபிஷேகம் நின்றுவிடுகிறது.

 அவன்  `பூழிவெங்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகளாடி ஏழிரண்டாண்டில் வா!’ என்ற கைகேயியின் சொல்லை ஏற்று வனம்புக எத்தனிக்கிறான். சீதையிடம் விடை பெறச் செல்கிறான். `நான் கானகம் செல்கிறேன், நீ இங்கு இரு!’ என்ற அவன் சொற்கள் சீதையை வருத்துகின்றன. தன் கணவன் காட்டிற்குச் செல்கிறானே என சீதை வருந்தவில்லை. தன்னைப் பிரித்துப் பேசுகிறானே என்பதே அவள் வருத்தம். `உன்னைப் பிரிந்து அயோத்தியில் இருப்பதை விட நான் கானகம் வரவே விரும்புகிறேன்.

நீ இருக்குமிடம் எதுவோ அதுவே எனக்கு அயோத்தி. கானகம் சுடும் என்று நீ சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால் நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு?’ எனக் கேட்கிறாள் சீதை.

`பரிவு இகந்த மனத்தொடு பற்றிலாது
ஒருவு கின்றவனை ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டுடையது ஈண்டுநின்
பிரிவினும் சுடுமோ பெருங்காடென்றாள்!`

`நற்பண்பு இல்லாதவர்களிடம் நாம் நன்கு பழகினாலும் அவர்கள் ஒருபோதும் நண்பர்கள் ஆகமாட்டார்கள். நம் நிலையில் நாம் தாழ்ந்தாலும் நற்பண்புள்ளோர் சிறந்தவர்களாகவே நம்மிடம் பழகுவர். நல்லவர்களின் நட்பு எவ்வளவு காய்ச்சினாலும் சுவையில் குறையாத பாலைப் போன்றது. சங்கு வெண்மை நிறமுடையது. அதை நெருப்பில் சுட்டாலும் கூட அதன் வெண்மை மாறுவதில்லை. நல்லவர்கள் அந்த சங்கைப் போன்றவர்கள்!’ என நல்லவர்களின் நட்புக்கு சுடப்பட்ட சங்கை உவமை கூறுகிறார் தம் `மூதுரை’ என்ற நூலில் அவ்வையார்.

`அட்டாலும் பால்சுவையில் குன்றாது
அளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.’

இந்த மூதுரைப் பாடல் சுட்டாலும் சங்கு வெண்மையாகவே இருக்கும் என்கிறது. சங்கு அப்படி! ஆனால் தங்கம் எப்படி? `அது சுட்டால் சிவக்கும்’ என்கிறது ஒரு திரைப்பாடல். `படகோட்டி’திரைப்படத்தில், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், டி.எம். செளந்தரராஜன், பி.சுசீலா பாடிய வாலியின் பாடல் அது.

`தொட்டால் பூமலரும்! தொடாமல் நான் மலர்ந்தேன்!
சுட்டால் பொன் சிவக்கும்! சுடாமல் கண் சிவந்தேன்!’

வெயிலில் வாடிக் களைத்த அவ்வையார் நிழல்வேண்டி ஒரு நாவல் மரத்தடியில் நின்றார். வேலவன் இடைக்குலச் சிறுவனாக மரக்கிளையில் அமர்ந்திருந்தான். அவ்வைக்குத் தம் தமிழறிவு குறித்துச் சற்று கர்வம் ஏற்பட்டுள்ளதை அறிந்த முருகன், அந்த கர்வத்தை ஒடுக்க எண்ணினான். `பாட்டி! நாவல் பழம் வேண்டுமா? கனி பறித்துப் போடவா?’ எனக் கனிவோடு கேட்டான். கந்தன் கேள்விக்கு `பறித்துப் போடேன்!’ என பதில் சொன்னார் அவ்வை. `அதுசரி. சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?’ எனக் குறும்பு கொப்பளிக்கக் கேட்டான் குமரன். அவ்வையின் மனம் திகைத்தது.

பழத்தில் சுட்ட பழம் எது, சுடாத பழம் எது? ஒன்றும் புரியவில்லை. `சரி சரி. சுட்ட பழமே போடு!’ என்றார். முருகப் பெருமான் கிளைகளை அசைக்க கனிகள் கீழே பொலபொலவென உதிர்ந்தன. உதிர்ந்த கனிகளைப் பொறுக்கினார் அவ்வைப் பாட்டி. நன்கு கனிந்த பழங்களாதலால் தரையில் விழுந்ததும் சற்று மண் ஒட்டிக் கொண்டது. ஒட்டின மண்போக வாயால் ஊதினார். `பாட்டி! பழம் சுடுகிறதா?’ என்று நகைத்தவாறே கேட்டான் முருகன்.அவ்வையின் மனம் வியந்தது. `ஆகா. கதிரவனால் அதிகம் சுட்ட பழங்கள் அல்லவா இந்த நிரம்பப் பழுத்த கனிகள்! தமிழில் எல்லாம் தெரியும் என்று எண்ணினேனே! என் ஆணவம் அழிந்தது.’

முருகனைப் பார்த்து `என் கர்வத்தை ஒடுக்கிய சிறுவனே, உண்மையில் யார் நீ?’ என வினவினார் அவ்வை. இடைச் சிறுவன் தோகை விரித்த நீல மயில் மீது முருகப் பெருமானாகக் காட்சி தந்தான் என்பது அவ்வை மூதாட்டி பற்றி வழங்கப்படும் ஓர் அழகிய கதை. மயான பூமி இருவகைப் பட்டது. ஒன்று இடுகாடு. இன்னொன்று சுடுகாடு. சடலத்தை மண்ணில் இட்டுப் புதைப்பது இடுகாடு. நெருப்பில் சுட்டு எரிப்பது சுடுகாடு. வள்ளலார், உயிர் நீங்கிய உடலை மண்ணில் அடக்கம் செய்தலே நல்லது என்றும் சுடுவது சரியல்ல என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

சுடும் இடத்தில் வாசம் செய்வதால் சிவபெருமான் சுடலையாண்டி எனப் பெயர் பெறுகிறார். சுடுகாட்டுச் சாம்பலைத் தன் உடல் முழுதும் பூசியிருப்பவர் அவர் என்கிறது திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல்.

`தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதிசூடி
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான்முனை நாள் பணிந்தேத்த அருள்
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!’

நெடுநாள் கழித்து, பட்டாபிஷேகத்திற்குப் பிறகு சீதையைச் சந்திக்கிறாள் அவளின் பழைய தோழியான நீலமாலை. அக்னிப் பிரவேச சம்பவத்தை அறிந்து அவள் மனம் பதைபதைக்கிறாள். `ஒருவேளை நெருப்பு சீதையைச் சுட்டிருந்தால்?’ நீலமாலை கேட்ட இந்தக் கேள்விக்கு சீதாதேவி சொன்ன பதில் இது. `நெருப்பு என்னைச் சுடாது. அது என் கணவருக்கும் தெரியும். அனுமன் இலங்கையை வாலால் சுட்டபோது அந்த நெருப்பு நான் இருந்த இடத்தை நெருங்கவில்லையே? அதை அனுமன் மூலம் என் கணவர் அறியாமலா இருப்பார்? ஒருவேளை நீ சொல்வதுமாதிரி நெருப்பு என்னைச் சுட்டு நான் சாம்பலாகியிருந்தால், மறுகணம் என் கணவரும் அதே நெருப்பில் குதித்து அவரும் சாம்பலாகியிருப்பார். என் கணவர் என்மேல் வைத்திருக்கும் அன்பின்ஆழம் அத்தகையது என்பதை நான் அறிவேன்! அக்னிப் பிரவேச சம்பவம் பொதுமக்களுக்காக நடத்தப் பட்டதேயன்றி அவருக்கு என்மேல் எந்தச் சந்தேகமும் என்றும் இருந்ததில்லை!’ சீதைக்கு ராமபிரான்மேல் இருந்த நம்பிக்கையைப் பார்த்து நீலமாலை அதிசயத்தில் ஆழ்ந்தாள் என்கிறது ஓர் அபூர்வ ராமாயணக் கதை.

பலவகைப்பட்ட தவங்கள் உண்டு. ஒற்றைக் காலில் நின்று செய்யும் தவம். தண்ணீரில் நின்று செய்யும் தவம் என்றிப்படி. அவற்றில் நெருப்பில் தன்னைத் தானே வாட்டிக் கொண்டு செய்யும் தவமும் ஒன்று. சுடும் நெருப்பின் வெப்பத்தைத் தாங்கியவாறு இறைச் சிந்தனையில் தோய்ந்திருக்க வேண்டும். பஞ்ச தவம் என்பது அத்தகைய நெருப்புத் தவத்தில் ஒரு வகை. ஐந்து நெருப்புக்களின் இடையே அமர்ந்து நிகழ்த்தும் தவம் அது. நான்கு திசைகளிலும் ஆறடி இடைவெளிகளுக்கு இடையில் நான்கு இடங்களில் மிகப்பெரிய நெருப்பு மூட்டப்படும். நண்பகலில் அந்த நெருப்புக்களின் நடுவே உள்ள பகுதியில் அமர்ந்து தியானத்தில் ஆழ வேண்டும். தலைக்கு மேலே சுட்டெரிக்கும் சூரியனும் ஒரு நெருப்பாகக் கருதப்படும். ஆக ஐந்து அக்னிகளின் இடையே நிகழ்த்தும் மிகக்கடுமையான தவம் அது. உடல் வெந்துவிடும் வாய்ப்புண்டு.

ஏழு நாட்கள் இப்படித் தவத்தில் ஈடுபடுவது மரபு. பெரும் ஸித்திகள் இத்தகைய தவத்தால் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பஞ்ச தவத்தை இடையே நிறுத்தாமல் வெற்றிகரமாக நிறைவேற்றியவர்கள் மிகக் குறைவுதான். அக்னியின் உஷ்ணம் தாங்காமல் பாதியிலேயே கைவிட்டவர்கள்தான் பலர்.  ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவியான அன்னை சாரதாதேவி இந்தத் தவத்தை முழுமையாக நிகழ்த்திப் பல ஸித்திகளை அடைந்தார் என்கிறது அவரது புனித வரலாறு. இன்றைய பேச்சு வழக்கில் சுடுதல் என்ற சொல்லுக்கு விந்தையான வேறொரு பொருள் கொள்ளப்படுகிறது. `அவன் என் பேனாவைச் சுட்டுவிட்டான்’ என்றால் `என் பேனாவை அவன் திருடிவிட்டான்’ என்று பொருள்! பொருளைப் பறிகொடுத்தவரின் மனம் ஆற்றாமையால் சுடும் என்பதால் அந்தச் சொல்லுக்கு இந்தப் பொருள் வந்ததோ?

பிறமொழிப் படங்களைச் சுட்டுத் தமிழில் படமெடுப்பவர்கள், பிறரது கதைகளைச் சுட்டுத் தங்கள் கதையாக்கிக் கொள்பவர்கள் எனப் பலர் பெருகியுள்ள காலமல்லவா இது? ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதை விடவும் மோசமானது ஒருவரது கருத்தைச் சுட்டுப் பிழைப்பு நடத்துவது. சற்றேனும் சுயமரியாதை உள்ளவர்கள் இத்தகைய நீசமான செயலைச் செய்ய மாட்டார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்