விநாயகர்: இலக்கிய நோக்கும் வழிபாட்டுப் போக்கும்...லகோர் வியக்க உயர்ந்து நிற்கும் நமது சமய மரபில், தனக்கு மேல் ஒரு தலைவனே இல்லாத் தலைவனாய்ப் போற்றப்பெறும் சிறப்பினை உடைய கடவுள் விநாயகர் ஆவார். இவ்விநாயகர் வழிபாடு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தினை ஒட்டியே தமிழ்நிலத்தில் தோன்றியது என்பாரும் உண்டு. பல்லவ மன்னர்களுள் மிகப் புகழ்பெற்றவனும் மாமல்லபுரக் கடற்கரைக் கோயில்களை நிருமானித்தவனுமாகிய முதலாம் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தளபதியாகச் சிறந்திருந்த பரஞ்சோதி (சிறுத்தொண்டர்) சாளுக்கிய நாட்டில் படையெடுத்து வாதாபியைத் தீக்கிரையாக்கிய பொழுது, அங்கிருந்து கொண்டு வரப்பெற்றவரே விநாயகர் என்றொரு கருத்து நிலவுகிறது.

ஆனால் தமிழில் சங்க காலத்துத் தோற்றம் பெற்ற இலக்கியங்களுள் ஒரு பிரிவாகிய பத்துப்பாட்டினுள் முதலாய் வைத்துப் போற்றப்பெறும் திருமுருகாற்றுப்படையின் பின் அமைந்துள்ள வெண்பாக்கள் ஒன்றனுள் விநாயகர் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இந்நூல் 2000 ஆண்டுகளுக்கு முந்தையது.இதன் இறுதியில் அமைந்துள்ள பத்து வெண்பாக்களில் ஏழாம் வெண்பா,
 
முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன்மகனே - ஒருகை முகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்

என்பதாகும். இதில் “ஒரு கை முகன் தம்பியே” என்றொரு தொடர் காணப்படுகிறது. இத்தொடர் விநாயகரையே குறித்து நிற்கிறது. எனினும் இவ் வெண்பாக்கள் பிற்காலத்துப் பாடிச் சேர்க்கப்பெற்றவை என்பாரும் உளர். ஆயினும் யானை தமிழர்களால் போற்றி வளர்க்கப்பெற்ற சிறப்பினை உடையதே ஆகும். தமிழ் இலக்கியங்களில் யானை பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது. யானை, வேழம், களிறு, பிளிறு, பிடி, கலபம், மாதங்கம், கைமா, உம்பல், வாரணம், அத்தி, அத்தினி, அல்லியன், அரசுவா, ஆம்பல், இபம், இரதி, குஞ்சரம், இருள், தும்பு, வல் விலங்கு, கரி, அஞ்சனம், நாகம், கதநாகம், கறையடி, பெருமா, ஓங்கல்,பொங்கடி, நால்வாய், புகர் முகம், கைம்மலை, வழுவை, மதோற்கடம், கடகம், எறும்பி, கயம், சிந்துரம், வயமா, மதகயம், மதாவளம், கும்பி, மருண்மா, தூங்கல், அதவை, வடவை, கரிணி என்பன போன்றன அவற்றுள் குறிப்பிடத்தக்கவையாகும்.

தமிழரின் சிறந்த வாழ்வியல் கூறான காதல் வாழ்வில் யானை இன்றியமையாத இடத்தினைப் பெறுகிறது. தலைவி தலைவன்பால் காதல் கொண்டமைக்கு களிறுதரு புணர்ச்சி என்பதும் ஒரு காரணமாய்ச் சுட்டப்படுகிறது. (தன்னை துரத்தி வந்த யானையிடம் போராடித் தலைவன் தன் உயிரைக் காத்தான். எனவே உயிரைக் காத்த தலைவன்பால் காதல் கொண்டேன் என்று தலைவி உரைப்பதாய் வருவது களிறுதரு புணர்ச்சி எனப்படும்) முருகன் வள்ளியைத் திருமணம் செய்த நிகழ்வு போன்றவற்றோடு யானை தொடர்புபடுத்தப்படுவதனை இங்கு நினைவு கூர்தல் சிறப்பாகும். மேலும் யானை தமிழர்களால் வழிபடப்பெற்றமையை பரிபாடல் உணர்த்தி நிற்கும். அதனுள் முருகன் எனப்பெறும் செவ்வேள் ஊர்ந்து வரும் வாகனங்களுள் ஒன்றாய்ப் ‘பிணிமுகம்’ என்னும் யானை சுட்டப்படுகிறது. (வீட்டின் மூத்த பிள்ளை முதுகின்மேல் இளைய பிள்ளை ஏறி அமர்ந்து விளையாடுவது இன்றளவும் காணக்கிடைக்கும் காட்சியே ஆகும்) பரிபாடல் யானை முருகனுக்கு வாகனமாய் அமைந்த தன்மையை,
 
‘பிணிமுகம் ஊர்ந்த வெல்போர் இறைவ!’
‘சேய்உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி’
‘நின்யானைச் சென்னிநிறம் குங்குமத்தால்’
 
- என வரும் அடிகள் விளக்கி நிற்கும். இறைவனை வழிபடும் பொழுது இறைவன் ஊர்ந்து வரும் வாகனங்களும் வழிபாட்டுக்குரியதாய் அமைதல் என்பது இன்றளவும் உள்ள நடைமுறையே ஆகும். எனவே இவ்வாறு வழிபடப்பட்ட மரபு பின்நாளில் விநாயகர் வழிபாட்டிற்கு தோற்றுவாயாக அமைந்திருக்கலாம். மேலும் தொல்லியல் மற்றும் வரலாற்று அறிஞர்கள் ஆய்வின்படி சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயிலில் அமைந்துள்ள கற்பக விநாயகர் சிலை, ஆறாம் நூற்றாண்டுக்கு உட்பட்டதாகும். இக்குடைவரைக் கோயிலையும், விநாயகர் சிலையையும் உருவாக்கிய தச்சனின் பெயர் எக்காட்டூருக்கோன் பெருந்தச்சன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் எழுத்து வடிவம் ஆறாம் நூற்றாண்டில் காணப்பட்ட தமிழ் எழுத்து வடிவை ஒத்திருக்கிறது.

தமிழி எழுத்துகளின் கால அடிப்படையில் நோக்கும் பொழுது இவ் எழுத்துகளின் காலம் கி.பி; மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பார் கம்பன் அடிப்பொடி. தமிழி எழுத்தின் முதிர்ந்த நிலையில் இவ்வெழுத்துகள் காணப்படுவதால் இக்குடைவரைக் கோயிலின் காலம் ஆறாம் நூற்றாண்டாய் இருக்கும் என்பார் தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் இரா. நாகசாமி. குடைவரைக் கோயிலின் தூண் அமைப்பு முறையினை நோக்கும் பொழுது ஆறாம் நூற்றாண்டின் இறுதியினைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனத் தொல்பொருள் ஆய்வுத்துறைக் காப்பாளர் திரு. இ வெ. வேதாசலம் கூறுகிறார்.

மேலும், இதே காலத்தைச் சேர்ந்த இரண்டு சிற்பங்கள் உத்திரமேரூ இருப்பதாக ஆய்வாளர்களால் தெரிவிக்கப்படுகிறது. திண்டிவனம் அருகேயுள்ள ஆலகிராமத்தில் அமைந்துள்ள எமதண்டீஸ்வரர் கோயிலில் வட்டெழுத்து பொறிக்கப்பட்ட கல்லில் பிள்ளையார், லகுவேசுவரர் மற்றும் முருகன் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இத் திருக்கோயிலின் தெற்கு வெளிப்புற அதிட்டானத்தில் விநாயகர் சிற்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, அதன் பீடத்தில் மூன்று வரிகளில் கல்லெழுத்துப் பொறிக்கப் பட்டுள்ளது.

இவ்வெழுத்தின் வடிவம் பூலாங்குறிச்சி எழுத்து வடிவத்துக்கு பின்னும் , பிள்ளையார்பட்டி குடைவரைக்கோயில் கல்லெழுத்து வடிவத்துக்கு முந்தையதும் ஆகும் என்பர் தொல்லியலாளர். அதாவது கி.பி நான்காம் நூற்றாண்டுக்கும், ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாகும். உலகின் முதல் விநாயகர் சிற்பம் ஆப்கானிஸ்தானில் காபூல் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள செகர்தார் என்னும் ஊரில்தான் கண்டறியப்பெற்றுள்ளது. அச்சிற்பத்தின் அணிகலன்களைக் கொண்டு அது ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது எனக் குறிப்பிடுகின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.

ஆனால் தமிழகத்தில் அதற்கு முன்னமே விநாயகர் சிற்பமும் கோயிலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படும் திருமந்திரத்தின் காலத்தினை, ‘இமயமுதல் குமரிவரை ஒரு மொழி வைத்துலகாண்ட சோழன் மணக்கிள்ளி நற்சோணையின் மகன் சேரன் செங்குட்டுவன் எனச் சிலப்பதிகாரம் குறிப்பதனைக் கொண்டும் இவ் இமயமலையையே திருமூலர் காலத்து தமிழ்நாட்டின் எல்லை எனக் குறிக்கப்படுவதனைக் கருத்தில் கொண்டும் திருமூலர் காலமும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு எனத் துணிவர் சான்றோர். இத்திருமந்திரத்தில் ஆறுவகைச் சமயங்களைப் பற்றிக் குறிப்பு காணப்படுகிறது, இம்மந்திரப் பாடல்,
 
அண்ணலை நாடிய ஆறு சமயரும்
விண்ணவ ராக மிகவும் விரும்பிய
முண்ணின் றிழியும் முயற்றில ராதலின்
மண்ணின் றொழியும் வகை அறியார்களே
 
என்பதாகும். இப்பாடலில் குறிக்கப்பெறும் ஆறு சமயங்களாவன பாசுபதம், மாவிரதம், வைரவம், சாக்தம், காணாபத்யம்,கௌமாரம் என்பனஆகும்.இது பிற்காலத்து சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், சௌரம், காணாபத்யம் என்றும் குறிப்பிடப்படுகிறது.மேற்கூறப்பட்டவற்றுள் காணாபத்யம் என்பது விநாயகரை முழுமுதல் கடவுளாகக் கொண்டு வழிபடும் முறையாகும்.திருமந்திரக் காலத்து இவ் அறுவகைச்சமயங்கள் குறிக்கப்படுவதால் அக்காலத்தே விநாயகர் வழிபாடு தமிழ்நிலத்தில் நிலவி வந்தது என்பதனை அறிய முடிகிறது. எனவே விநாயகர் வழிபாடு சங்ககாலப் பழைமை கொண்டது எனத் துணிவு கொள்ளலாம். எவ்வாறேனும் விநாயகர் வழிபாட்டு  முறைமை பல்லவர் காலத்திற்கும் முன்பே தமிழ் நிலத்தில் இருந்தது என்பதில் ஐயமில்லை.

தமிழ் மூதாட்டி ஔவையும் சங்கத் தமிழைத் தனக்குத் தந்து அருளுமாறு விநாயகரையே வேண்டி நின்றார்.
 
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!
 
என்ற ஔவையின் பாடல் சங்கத்தமிழையும் விநாயகரையும் தொடர்புபடுத்தி நிற்கும். பிற்காலத்து அப்பரும் சம்பந்தரும் விநாயகர் பற்றிய குறிப்புகளைத் திருமுறைகளில் தருகின்றனர்.
 
பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
 
கொடையே தமக்கு அழகைத் தரும் என நினைக்கும் வள்ளற் பெருமக்கள் வாழ்கின்ற வலிவலத்தில் உறைந்த இறைவன், உமையம்மை பெண் யானை வடிவு கொள்ள, தான் ஆண் யானையின் வடிவு கொண்டுத் தன் திருவடியை வணங்கும் அடியவர்களின் இடர்களைக் களைவதற்காகத் கணபதியைத் தோற்றுவித்தருளினான் என்கிறார் ஞானசம்பந்தர். திருநாவுக்கரசர்,
 
பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளே
கலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறும்
வலமேந் திரண்டு சுடரும் வான்கயி லாய மலையும்
நலமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
 
என வரும் பாடலில் பற்பல விருப்பங்களை உடையவராய் அவற்றைச் செயற்படுத்தத் துடித்து விரையும் மக்களின் உள்ளத்தில் கலந்து பிறழச் செய்யும் கணபதியாகிய ஆண்யானையையும். இருளைப்போக்கும் வலிமை மிக்க சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு ஒளிகளையும், மேம்பட்ட கயிலை மலையையும், நன்மைகள் நிறைந்த கெடில நதித் தீர்த்தத்தையும் உடைய அதிகை வீரட்டரின் அடியார்கள் நாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்ச வருவதும் இல்லை என்று குறிப்பிட்டுரைக்கின்றார்.

விநாயகரின் வடிவத்தினைச் சிவஞான சித்தியார் தெளிவாக விரித்துரைக்கும். தன் சடைமுடியில் கங்கையினைத் தாங்கிய சிவபெருமான் அருளிய மூத்த பிள்ளையார் ஒற்றைக் கொம்பினை உடையவர். இரண்டு செவிகளையும் மூன்று மதங்களையும் தொங்குகின்ற திருவாயினையும் ஐந்து கரங்களையும் உடைய ஒப்பற்ற யானைமுகப் பெருமான் ஆவார். அன்புள்ளத்தோடு தன்னை வழிபடுவோரின் சிந்தைத் திருக்கினை நீக்குவார். திருமால், பிரம்மன் ஆகியோரின் பதங்களும் பொருட்டாகாத வண்ணம் எல்லாவற்றிற்கும் மேலான வீட்டின்பத்தினை வழங்குவார் எனக் குறிக்கும். இதனை,
 
ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன்
நால்வாய் ஐங்கரத்தன் ஆறு
 
தருகோட்டம் பிறைஇதழித் தாழ்சடையான் தரும்
ஒரு வாரணத்தின் தாள்கள்
உருகோட்டு அன்பொடும் வணங்கி ஓவாதே
இரவுபகல் உணர்வோர் சிந்தைத்
திருகுஓட்டும் அயன்திருமால் செல்வமும்
ஒன்றோ என்னச் செய்யும் தேவே
 
என்ற பாடலால் அறியலாம். விநாயகர் ஐந்து கரங்களைக் கொண்ட நாயகராய்ப் புவியில் அருட் பாலிப்பவர். அக்கரங்களில் ஒன்றினைத் தமக்காகவும் பிறிதொன்றினைத் தேவர்களுக்காகவும் மற்றொன்றினை தாய் தந்தையர்க்காகவும் மேலும் இரண்டு கரங்களை நம்போல் மானுடர்க்கு அருள் புரிவதற்காகவும் கொண்டு விளங்குகிறார். இதனை,
 
பண்ணிய மேந்தும் கரந்தனக் காக்கிப்
பானிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க் காக்கி யாதெமனக் கலச
வியன்கரந் தந்தை தாய்க் காக்கிக்
கண்ணிலா ணவவெங் கரிபணித் தடக்கிக்
கரிசி னேற்கிருபையு மாக்கு
மண்ணலைத் தணிகை வரைவளராபக்
காயனை யகந்தரீஇக் களிப்பாம்
 
எனத் தணிகைபுராணம் குறித்து நிற்கும்.விநாயகரின் நாபிக் கமலமானது பிரம்மனையும் முகம் திருமாலையும் முக்கண்கள் சிவபெருமானையும் இடப்பாகம் சக்தியையும் வலப்பாகம் சூரிய சந்திரர்களையும் உணர்த்தி நிற்கின்றன. விநாயகரின் ஐந்து கரங்களில் உள்ள பொருட்களை திருநரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை பின்வருமாறு குறிப்பிடும். விநாயகரின் இடதுபுறக் கீழ்க்கையில் மாங்கனி, வலதுபுறக் கீழ்க்கையில் தந்தம், தும்பிக்கை அண்டம், அதாவது ஆகாயத்தைத் தழுவுகின்றது என்பது பொருள். இடப்புற மேல்கை பாசம், வலப்புற மேற்கை அங்குசம். இதனை உணர்த்தும் பாடல்,
 
வையகத்தோர் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்து
பொய்யகத்தார் உள்ளம் புகலொழிந்து - கையகத்தோர்
மாங்கனிதன் கொம்பண்டம் பாமழு மல்குவித்தான்
ஆங்கனிநம் சிந்தையமர் வான்
 
என்பதாம். விநாயகரின் கரங்களில் உள்ள பாசம் படைத்தலையும் அங்குசம் அழித்தலையும் ஒடிந்த தந்தம் காத்தலையும் துதிக்கை மறைத்தலையும் மோதகம் அருள்வதையும் உணர்த்தி நிற்கின்றன.  மாங்கனிக்காக முருகன் உலகினை மயில்மீது வலம் செய்த காலத்தில் விநாயகர் தாய், தந்தையரை வணங்கித் தன் கூர்ந்த அறிவால் மாங்கனியைப் பெற்று வென்று நின்ற நிகழ்வினை நம்பியாண்டார் நம்பி தனது திருநரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலையில் குறிப்பிடுகிறார். அப்பாடல்,
 
மலஞ்செய்த வல்வினை நோக்கி உலகை வலம்வருமப்
புலஞ்செய்த காட்சிக் குமரற்கு முன்னே புரிசடைமேற்
சலஞ்செய்த நாரைப் பதியரன் தன்னைக் கனிதரவே
வலஞ்செய்து கொண்ட மதக்களி றேயுன்னை
வாழ்த்துவனே.

என்பதாகும். வினைப்பயனால் விளைகின்ற நன்மை தீமை யாவையும் அவன் அருளாலே விளைகின்றன. எனவே மலைபோல் முந்தைய பிறவியில் நாம் சேர்த்து வைத்திருக்கும் வினைகள் யாவும் இப்பிறப்பில் விநாயகனை நினைந்துருகும் அடியவர்க்கு வந்து நலிவு செய்யா. ஞாலம் அனைத்தையும் தன்னுள் அடக்கியிருக்கும் நாயகனைத் தொழுதால் சிறப்புடைய வாழ்வு அமையும் என்பதனை,
 
மலையென முற்படு வினைகள் அறச்செய்யும்
எமதுயிரே
அலையும் மனத்தை நிலையில் நிறுத்திடும்
அருளுருவே
என ஆன்றோர் போற்றி மகிழ்ந்துரைப்பர்.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞனாய் விளங்கிய பாரதியும் விநாயகரைப் போற்றி விநாயகர் நான்மணிமாலை பாடியருளினார், அதனுள் பிற கடவுளர் மீது பாடல்களை இயற்றுபவர்கள் விநாயகனாகிய நின்னைக் காப்புரைப்பர், ஆனால் விநாயகனே! நின் மீதே நான்மணிமாலை பாடுகின்றேன். அதற்கும் நீயே காப்பு! என்று உரைக்கின்றார்,
 
‘நின்றனுக்குக் காப்புரைப்பார் நின்மீது செய்யுநூல்
இன்றிதற்கு காப்பு நீயே’
என்று தொடங்குகிறார்.
 
விநாயகனைத் தொழுவதால் பெரும் பேறுகளையும் பாரதி விளக்கியுரைப்பார், நாயகனைத்தொழுதால் அச்சமில்லை, அமுங்குதலில்லை, எதற்கும் நடுங்குதலில்லை, நாணுதலில்லை, பாவமில்லை, பதுங்குதலில்லை. ஏது நேரினும் இடர்ப்பட மாட்டோம். அண்டம் சிதறினாலும் அஞ்ச மாட்டோம். கடல்பொங்கி வந்திடினும் கலங்க மாட்டோம். யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம். எங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம். வானமுண்டு, மழையும் உண்டு, ஞாயிறும் காற்றும் நல்ல நீரும் தீயும் மண்ணும் திங்களும் மீன்களும் உடலும் அறிவும் உயிரும் உண்டு, தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்ணும் கேட்கப் பாட்டும் காண நல்உலகும் உண்டு, இவை எல்லாவற்றினையும் தந்தருளும் ஆற்றல் பெற்ற நாயகனை மகிழ்ந்து உரை செய்ய ‘கணபதி’ என்னும் நாமமும் உண்டு. எனவே நெஞ்சே வாழி! நேர்மையுடன் வாழி! எனத் தன் நெஞ்சினை ஆற்றுப்படுத்துவதாய் நமக்கும் விநாயகரின் அருளாற்றலை விளக்குகிறார் பாரதி.
 
கற்பக விநாயகக் கடவுளே, போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்புக் கிறையவன் பண்ணவர் நாயகன்
இந்திர குரு எனது இதயத் தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
 கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்.
 
என்பதும் அவர்தம் கூற்றாம். கணபதி திருத்தாள்களைக் கருத்தினில் வைத்திடில் விளையும் பயன்கள் எண்ணற்றவையாகும். மாந்தரின் உட்செவி திறக்கும்.மானுடர் அகக் கண் ஒளிதரும்; அக்கினி தோன்றும்; ஆண்மை வலிமையுறும். திக்கெலாம் வென்று வெற்றிக்;கொடி நாட்டலாம் கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்; விடத்தையும் நோயையும் வெம்பகை அதனையும் துச்சமென்று எண்ணித் துயரிலாது இங்கு நித்தமும் வாழ்ந்து நிலைபெற்றுச் சிறக்கலாம். அச்சந் தீரும்; அமுதம் விளையும்; வித்தை வளரும்; வேள்வி ஓங்கும்; அமரத் தன்மையும்எய்தி
இன்புறலாம்.
 
காத்தருள் புரிக, கற்பக விநாயகா,
காத்தருள் புரிக, கடவுளே, உலகெலாம்
கோத்தருள் புரிக, குறிப்பரும் பொருளே,
அங்குச பாசமும் கொம்பும் தரித்தாய்
எங்குல தேவா, போற்றி!
சங்கரன் மகனே தாளிணை போற்றி!
 
 - எனத் தாயாய் நமக்கு வந்திருந்து அருளி மாயப்பிறவியின் மயக்கம் கெடுத்து, சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதமாய் நின்ற கற்பகக் களிற்றை, போற்றி வணங்கிப் புகழுடன் செல்வமும், நல் அறிவும். ஆண்மையும் இத்தரணி மீதினில் இனிதே பெற்று உயர்வு பெறுவோமாக!

தமிழ் இலக்கியங்களில் யானை பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது. யானை, வேழம், களிறு, பிளிறு, பிடி, கலபம், மாதங்கம், கைமா, உம்பல், வாரணம், அத்தி, அத்தினி, அல்லியன், அரசுவா, ஆம்பல், இபம், இரதி, குஞ்சரம், இருள், தும்பு, வல் விலங்கு, கரி, அஞ்சனம், நாகம், கதநாகம், கறையடி, பெருமா, ஓங்கல், பொங்கடி, நால்வாய், புகர் முகம், கைம்மலை, வழுவை, மதோற்கடம், கடகம், எறும்பி, கயம், சிந்துரம், வயமா, மதகயம், மதாவளம், கும்பி, மருண்மா, தூங்கல், அதவை, வடவை, கரிணி என்பன போன்றன அவற்றுள் குறிப்பிடத்தக்கவையாகும்.

முனைவர் மா. சிதம்பரம்