வரலாற்று தென்றலில் வலஞ்சுழி*திருவலஞ்சுழி, கும்பகோணம்

கும்பகோணத்திற்கு அருகேயே திருவலஞ்சுழி எனும் அற்புதமான தலம் அமைந்துள்ளது. இத்தலத்தில் அமைந்துள்ள ஸ்வேத விநாயகர் ஆலய (வெள்ளை வாரணர்) சந்நதி ஆச்சரியம் மிகுந்த ஒன்றாகும். வரலாற்றில் இந்தக் கோயிலின் பலகணி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. அது குறித்த வரலாற்றையும் கட்டுமானக் கணக்குகளையும் கொஞ்சம் ஆராய்வோம் வாருங்கள். இந்தக் கோயிலின் வளாகத்திலுள்ள வெள்ளைப் பிள்ளையார் திருமுன் மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப் பெற்றது எனக் கொள்ளுமாறு கல்வெட்டுகள் கண்காட்டுகின்றன.

தொடங்கப்பெற்ற சில ஆண்டுகளிலேயே வலஞ்சுழியின் முதன்மைக் கோயிலாய் அது உருமாறியதை மூன்றாம் ராஜராஜனின் ஐம்பதிற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. வெள்ளைப் பிள்ளையார் திருமுன்னிலுள்ள இருமொழிக் கல்வெட்டு கொண்டு இக்கோயில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் கருத்துச் சரியானதன்று. கோயிலின் கட்டுமானமும், தூண்களின் அமைப்பும், பஞ்சரப் பெண்களின் தோற்ற அமைதியும் மிகத் தெளிவாக அவை பிற்சோழர் காலத்தன என்பதை உறுதிப்படுத்துகின்றன. இரண்டாம் ராஜராஜனின் ராஜராஜேஸ்வரமும் மூன்றாம் குலோத்துங்கரின் திரிபுவன வீரேசுவரரும் கண்ட கண்கள் இந்தக் கட்டுமானத்தை ஓய்சாளருக்கோ விஜயநகர வேந்தர்களுக்கோ விட்டுக்கொடுக்க ஒருபோதும் ஒருப்படா.” என்று கல்வெட்டு அறிஞர்களான டாக்டர் இரா. கலைக்கோவன் மற்றும் மு.நளினி அவர்களின் கருத்தாகும்.

‘‘வலஞ்சுழிக் கோயில் வளாகம் மிகப்பெரிய வளாகம். சோழர் கால கட்டடக்கலை, சிற்பக்கலை, கல்வெட்டெழுத்துக்களின் வளர்ச்சியை அறிய விரும்புவோருக்கு இக்கோயில் உகந்த களமாக அமையும். எத்தனை விதமான போதிகைகள். (போதிகை என்பது தூண்களின் மேற்பகுதியாக அமைந்து மேலுள்ள வளைவைத் தாங்கும் தூணின் ஒரு கூறு ஆகும்) வெவ்வேறு அளவுகளில் எத்தனை சிற்பங்கள்! சோழ மன்னர்களின் பெரும்பாலோரின் கல்வெட்டுகள் இங்கிருப்பதால், உத்தமசோழர் காலத்திலிருந்து மூன்றாம் ராஜேந்திரர் காலம் வரையிலான தமிழ் எழுத்து வளர்ச்சி நிலையை இங்கு வந்து அறியலாம்.  

இந்த வளாகத்தில் அளவான ஆரவாரமும், அளவற்ற அமைதியும் இருக்கிறது! அதனால், ‘எங்கே நிம்மதி என்று தேடுவோரும் இங்கு வரலாம். பத்திமைக்காலத்து நினைவுகளில், ‘ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே’ என்று களித்துத் துள்ளுவாரும் இவ்வளாகத்தில் வாழ்க்கை வளர்க்கலாம். வரலாற்று காற்று வருடிக் கொண்டு போகும் வலஞ்சுழிக்குத் தவறாமல் வாருங்கள் என்று சரித்திரத் தேர்ச்சி கொள்ள விரும்பும் ஒவ்வொருவரையும் இக்கோயில் அழைக்கின்றது.
ஸ்வேத விநாயகரை வணங்கி வலஞ்சுற்றாக வரும்போது மண்டபத்தின் பின்புறம் பஞ்சரக் கருவறையாக அமைந்த ஸ்வேத விநாயகரின் விமானம் கவனத்தை ஈர்த்தது. காரணம் பஞ்சரங்கள் கொஞ்சும் எழில்மிகு அழகுடன் அமைக்கப்பட்ட ஸ்வேத விநாயகர் மண்டபக் கோயிலின் கருவறை அதனை அடுத்திருந்த பலிபீடத்துடன் ஒட்டிக் கொண்டிருந்தது தான்.

வலஞ்சுழி வளாகத்தில் என்ன இடத்திற்கா பஞ்சம்?

கிட்டத்தட்ட கிழக்கு மேற்காக வடபுறம் 926 அடியும், 6 அங்குலமும், தென்புறம் 926 அடியும் 9 அங்குலமும், தெற்கு வடக்காக  கீழ்ப்புறம் 373 அடியும் 11 அங்குலமும், மேற்புறம் 361 அடியும் கொண்ட சுமார் 3,40, 517 சதுர அடி பரப்பளவில் நீண்ட வலஞ்சுழி வளாகத்தில் ஆறுக்கு ஆறு அடி சிறிய அளவே உள்ள இந்த மண்டபக் கருவறைக்கு இடம் கிடைப்பதில் என்ன சிக்கல் என்று மனம் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்து விட்டது. பலி பீடமும் நந்தி மண்டபமும் ஏற்கனவே இவ்வளாகத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும்! எது எப்படியோ எது முன்னதாக இருப்பினும் புதியதாக அமையவுள்ள கட்டுமானம் இருக்கும் இன்னொரு கட்டுமானத்துக்கு இடைஞ்சல் இல்லாமலும் இடம் விட்டும் கட்டமைக்க போதுமான சாத்தியக் கூறுகளும் இட வசதியும் இருந்தும் இந்த மண்டபக் கருவறையும் பலி பீடமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்போல அமைந்திருக்க ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று மனம் தொடர்ந்து இச்செய்தியை அவதானிக்கத் தொடங்கியது. உடனே நம் கவனம் ஒட்டு மொத்த வளாகத்திற்கும் சென்றது.

நந்தி மண்டபத்திலிருந்து மேற்கே கபர்தீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லும் முன் மேலும் இரண்டு  கோபுர வாயில்களைக் கடக்க வேண்டும். நந்தி மண்டபத்திலிருந்து மேற்கே முதலாவது கோபுர வாயில் ஏறக்குறைய 50 அடி தொலைவில் உள்ளது. அதேபோல் ஸ்வேத விநாயகர் ஆலய அலங்கார மண்டபத்தை அடுத்த உற்சவ மண்டபத்திலிருந்து கிழக்கே வீதியை அடைய இரண்டு கோபுர வாயில்களைக் கடக்க வேண்டும். உற்சவ மண்டபத்திலிருந்து கிழக்கே முதலாவது கோபுர வாயில் ஏறக்குறைய 60 அடி தொலைவில் உள்ளது. இப்படியாக ஸ்வேத விநாயகர் கோயிலுக்கும் நந்தி மண்டபத்திற்கும் முன்னும் பின்னும் குறைந்த பட்சம் 50 அடி தொலைவிற்கு இட வசதி இருந்தும் ஒரு அரை சதுர இடைவெளி கூட இல்லாமல் பலி பீடமும் கருவறையும் அமைக்கப்பட்ட பாங்கு வெகு நிச்சயமாக ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் என்ற சிந்தனையை உறுதி செய்தது.

சட்டென்று மனதில்  பொறி தட்ட திரும்பி வடக்கு நோக்க ஸ்வேத விநாயகர் சந்நதி பளிச்சென்று தெரிந்தது!. ஆஹா, இந்த வாயிலுக்கும் ஆலய அமைப்பிற்கும் ஏதோ தொடர்பிருக்க வேண்டும் அது நம் கேள்விக்கான விடையாகவும் அமையலாம் என்று எண்ணி அந்த நோக்கில் சிந்தனையை விரிக்க விடையும் கிடைத்தது! ஆம்! கபர்தீஸ்வரர் சந்நதியிலிருந்து வளாகத்தின் கிழக்கு கோபுர வாயிலின் மையத்திற்கு ஒரு நேர்கோடும், தெற்கு கோபுர வாயிலின் மையத்திலிருந்து வடக்கு மதில் நோக்கி ஒரு நேர்கோடும் வரைந்தால் அவை சந்திக்கும் புள்ளி விநாயகர் மண்டபத்தின் மையப் புள்ளியாக அமைவது குறிப்பிடத்தக்கதாகும். இந்த  மையப்புள்ளியை அடிப்படையாகக்  கொண்டு எழுப்பப்பட்ட கருவறையே ஸ்வேத விநாயகர் ஆலயத்தின் மண்டபக் கருவறையாகும்!

ஒருவேளை இக்கருத்துரு காரணமாகவே இக்கோயில் மண்டபக் கருவறையாக அமைக்கப்பட்டிருக்கலாமோ என்றும் தோன்றியது. கருவறையின் நீள அகலங்கள் கூட்டப்பட்டிருந்தால் மேலும், பலிபீடத்தின் மீது அமையவோ அல்லது அதனை அகற்றி இடம் பெயரச் செய்யவோ வேண்டியிருக்கும் என்பதாலேயே இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கலாமோ என்ற எண்ணத்தையும் தவிர்க்க இயலவில்லை! சரி, இத்திருக்கோயிலை எழுப்பும்போது ஏன் இந்த நந்தி மண்டபத்தையும் பலிபீடத்தையும் சற்று மேற்கு நோக்கி நகர்த்தியிருக்கக்கூடாது என்ற கேள்வி இன்னும் எஞ்சி நின்றது! அதற்கான விடையைத்தேடவும் வளாகம் முழுக்க ஒரு கழுகுப் பார்வையிட இதற்கும் ஏதேனும் காரணம் இருக்கும் என்று யோசிக்க மீண்டும் அளவுகளின் துணைகொண்டு இதனை அணுக இதற்கும் விடை கிடைத்தது மேலே படத்தில் உள்ள வட்டத்தைப் பாருங்கள். நந்தி மண்டபத்தை மையமாக வைத்து வரைந்த வட்டமே அது! மேற்கில் அமைந்த மதிலையும் கிழக்கில் அமைந்த கோபுரத்தையும் தொட்டுச் செல்வதை தெளிவாகக் காணலாம்!

ஆம், வலஞ்சுழி வளாகத்தின் மையப் புள்ளியில்தான் இந்த நந்தி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. நந்தி மண்டப மையக் கோட்டை தெற்கு வடக்காக நீட்டினால் அது தெற்கு மதில் சுவரை சந்திக்கும் புள்ளியிலிருந்து 26 அடி 9 அங்குலம் கிழக்கே தள்ளியே தெற்கு கோபுரத்தின் மையப் புள்ளி அமைகிறது. ஏன், நந்தி மண்டப மையத்தை நோக்கி இவ்வாயில் எழுப்பப்படவில்லை என இன்னொரு கேள்வி எழ மீண்டும் வளாகத்தை வெளிப்புறமாக சுற்றி வந்ததில் இதற்கான விடையும் கிடைத்தது! தெற்கு கோபுரத்திற்கு நேராக தெற்கு நோக்கி செல்லும் வீதியை மையப்படுத்தியே தெற்கு கோபுரம் அமைக்கப்பெற்றிருக்கிறது என்பதும் விளங்கியது.

இந்த இரண்டு கூறுகளின் தனித்தன்மையை விட்டுக் கொடுக்காதிருக்கும் பொருட்டே பலிபீடத்தை ஒட்டியிருந்தாலும் பரவாயில்லை என்று இந்த ஸ்வேத விநாயகரின் மண்டபக் கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது போலும்!  இக்கேள்விகளுக்கு விடை கிடைத்த மகிழ்ச்சியில் மீண்டும் மண்டபக்கருவறையை நோக்க மீண்டும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. பொதுவாக கருவறை விமானங்களில் உறையும் இறைவனின் வாகனம் விமானத்தின் கிரீவத்தில் இடம் பெறும். அவ்வகையிலே இங்கே மண்டபத்தின் மேற்குப் பஞ்சரத்தில் இடம் பெற்ற இந்த மண்டபக் கருவறை உபானம், ஜகதி, குமுதம், கண்டம் மற்றும் கபோதத்துடன் கூடிய கபோத பந்த தாங்கு தளம் பெற்று, தாங்கு தளத்தின் மீது சுவர், கூரை, அதன் மேல் கிரீவம், சிகரம், ஸ்தூபி என ஆறங்கங்கள் பெற்று விமானமாகவே எழுவதைப் பார்க்க முடிகிறது இந்த விமானத்தின் கிரீவத்தில் விநாயகரின் வாகனமான “மூஞ்சூறு” தெற்கிலும் வடக்கிலும் காண்பிக்கப்பட்டமையே நமது ஆச்சரியத்திற்குக் காரணம்!

இந்த ஆய்வு மூன்று முக்கிய முடிவுகளை வழங்குகின்றது.

1. நந்தி மண்டபம் வளாகத்தின் கிழக்கு மேற்கு எல்லைகளின் மையத்தில் அமைந்துள்ளது. தெற்கு வடக்காக பார்க்கும்போது தெற்குப் பகுதியில் வளாகம் அதிக இடம் பெற்றமையால் நான்கு எல்லைகளின் மையமாக  நந்தி மண்டபம் அமையாமல் கிழக்கு மேற்கு எல்லைகளில் மட்டுமே மையம் பெறுகிறது. (ஒருவேளை தெற்குப்புறம் பிற்காலங்களில் விரிவு செய்யப்பட்டிருக்கலாம் )

2. ஸ்வேத விநாயகர் ஆலய தெற்கு நோக்கிய நுழைவாயிலின் மையமும் தெற்கு கோபுரத்தின் மையமும் ஒரே நேர்கோட்டில் அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த உண்மையை கருத்தில் கொண்டால் இந்தக் கோபுரமும் விநாயகர் ஆலயமும் கிட்டதட்ட ஒரே காலகட்டத்தில் எழுப்பப்பட்டிருக்கலாம் என்பதும் புலனாகிறது. மேலும், விநாயகர் ஆலய மண்டபப் பல கணியிலிருந்து கிழக்கு கோபுர மையம் நேர்க் கோட்டில் அமைவதும் கூர்ந்து நோக்கத்தக்கது. ஆகவே, ஸ்வேத விநாயகர் ஆலயம் கிழக்கு மற்றும் தெற்கு கோபுர மையங்களிலிருந்து கிழக்கே பலகணி வாயிலாகவும் தெற்கே நுழைவாயில் வாயிலாகவும் பார்வை பெறுகிறது.

3) மண்டபக் கருவறையாக அமைக்கப்பட்ட போதிலும் கிரீவத்தில் தெற்கிலும், வடக்கிலும் விநாயகரின் வாகனமான “மூஞ்சூறு” பெற்று, கபோத பந்த அதிஷ்டானம், சுவர், கூரை, கிரீவம், சிகரம் மற்றும் ஸ்தூபி ஆகிய ஆறு அங்கங்களையும்  பெற்று இந்த விமானம் சிறப்பு பெறுகிறது.

குடந்தை சு. சீதாராமன்