ஞானசம்பந்தரின் செயற்கரிய சிவ லீலை!



*அருணகிரி உலா 84

அருணகிரி உலாவில் நாம் அடுத்ததாகச் செல்லவிருக்கும் திருத்தலம் திருவோத்தூர். காஞ்சிபுரத்திற்கு மேற்கே 30 கி.மீ தொலைவில் இருக்கும் இத்தலம் சேயாற்றின் வடகரையிலுள்ளதால் மக்களால் செய்யாறு என்று குறிப்பிடப்படுகிறது. ஆண் பனைகளைப் பெண் பனைகளாக்கிக் காய்க்க வைத்த அற்புத நிகழ்ச்சியை சம்பந்தப் பெருமான் நடத்திக் காட்டிய திருத்தலம். சற்று தள்ளி ஊருக்கு வெளியே கோயில் இருக்குமிடம் திருவத்திபுரம் என்றழைக்கப்படுகிறது. இறைவன் வேதபுரீஸ்வரர், வேதநாதர், இறைவி பாலகுஜாம்பிகை, இளமுலை நாயகி.

வேதம் ஓதும் அந்தணர்கள் மிகுதியாக இருந்ததாலும், இறைவனே முனிவர்களுக்கு வேதம் ஓதுவித்த காரணத்தினாலும் ‘திரு ஓத்தூர்’ என்ற பெயர் உண்டாயிற்று என்பர். கோயிலின் வெளியேயுள்ள குளம் கல்யாணகோடி தீர்த்தம் எனப்படுகிறது. ராஜகோபுரம் கீழ் அடுக்கின்மேல் ஆறு நிலைகளைக் கொண்டு விளங்குகிறது. பலி பீடம், கொடி மரம் அருகிலுள்ள நந்தி சிவனைப் பார்க்காமல், கோபுரவாசலை நோக்கித் திரும்பி உள்ளது. [ஒருவேளை, வேதம் ஓதத் தகுதியுள்ளவரை மட்டும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று எண்ணித் திரும்பி நிற்கிறது போலும் என்று எண்ணத் தோன்றுகிறது!] இதற்கான புராணக் குறிப்பு 1888ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பெற்ற கருணாகரக் கவிராயரின் தல புராணத்தில், தொண்டைமானுக்குப் படைத்துணை போன சருக்கத்தில் உள்ளது. தொண்டை நாட்டை ஆண்டு வந்த தொண்டைமானை எதிர்த்து விசுவாவசு எனும் அசுரன் போரிட்டான்.

அனைத்தையும் இழுந்து காட்டில் திரிந்த தொண்டைமான் ஓத்தூர் இறைவனை வணங்கினான். இறைவன் காட்சி தந்து, நாற்படைகளையும் அளித்த பின்னும் அரசன் அஞ்சினான். நந்தியம் பெருமானைத் துணைக்கு அனுப்புவதாக இறைவன் வாக்களித்ததும் அது போருக்குப் புறப்படத் தயாராகத் திரும்பி நின்றது. தொண்டைமானும் இறைவன் கருணையினால் விசுவாவசுவை அடக்கி நாட்டைக் கைப்பற்றினான். இறைவனை ரிஷபம் ஏறி வீதியுலா வர வேண்டினான். தை மாதம் ஐந்தாம் நாள் ரிஷப வாகன சேவை நடைபெற்று வருகிறது.

வடப்புறம் திருமலை நாயக்கரால் நிறுவப்பட்ட நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இதன் கருவறையில் முருகப் பெருமானைத் தரிசிக்கலாம். இரண்டாம் கோபுரத்தைக் கடந்து வருகையில் நடுமண்டபத்தில் நின்று விநாயகர், ஆறுமுகன், வேதநாதர், இளமுலையம்மை ஆகியோரை ஒருசேரக் காணலாம். அம்பிகை கோயிலுக்கு தனிக்கொடி மரம், பலி பீடம், சிம்மம் ஆகியவை உள்ளன. அருகில், இத்தலத்தில் ஞானசம்பந்தப் பெருமான் இங்கு நடத்திக் காட்டிய அதிசயத்தை விளக்கும் வகையில் சிவலிங்கம், ஞானசம்பந்தர், பனை மரம் ஆகிய உருவங்கள் கல்லால் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. சம்பந்தர் இத்தலத்தில் நிகழ்த்திய அற்புதத்தை இங்கு நினைவு கூறுகிறோம்.

சம்பந்தப் பெருமான் திருவோத்தூர். இறைவனைத் தரிசித்திருந்த காலத்தில், அடியார் ஒருவர் அவரிடம் வந்து ‘இறைவனுக்கு நிவேதிப்பதற்காக அடியேன் வளர்த்து வருகின்ற பனைகள் யாவும் ஆண் பனைகளாகவே வளர்கின்றன. அது கண்டு சமணர்கள் ‘நீர் வைத்த பனைகள் காய்க்குமோ?’ என்று எள்ளி நகையாடுகின்றனர்!’ என்று வருத்தத்துடன் கூறினார். உடனே சம்பந்தர் கோயிலுள் சென்று ‘‘பூத்தேர்ந்தாயன்’’ என்று துவங்கும் திருப்பதிகத்தைப் பாட, கடைக்காப்பாகிய பதினோராம் பாடலில்...

குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்
அரும்பு கொன்றை அடிகளை,
பெரும்பு கலியுள் ஞானசம்பந் தன்சொல்
விரும்பு வார்வினை வீடே.

 - என்று கூறிய போது பனைகள் யாவும் குலைகளைத் தள்ளின. சூழ்ந்து நின்ற அடியார்களனைவரும் கண்டு களித்து வியந்தனர். சமணர்கள் பலர் சைவராயினர், சிலர் நாட்டை விட்டு ஓடினர். பனைகளும் தம் காலம் வரை குலை தந்து வாழ்ந்து சிவத்தை சார்ந்தன.
        
‘‘பிள்ளையார்தம் திருவாக்கிற் பிறந்தலால் அத்தாலமும்
முன்புள்ள பாசம் விட்டகல ஒழியாப்பிறவிதனை ஒழித்து சிவமே கூடினவால்….’’

- என்று போற்றுகிறது பெரிய புராணம்.  [தாலம் - பனை] கூத்த விநாயகரை வழிபட்டு கோயிலை வலம் வரலாம். பராந்தக சோழன் கட்டிய பஞ்சபூதக் கோயில்களில் இறைவனைப் பல ரூபங்களில் தரிசிக்கிறோம். ஓர் ஓரத்தில் பனை மரங்களைக் காண்கிறோம். இங்கு சிவபெருமான், ஞானசம்பந்தர், நந்தி ஆகியோர் திருவுருவுங்களைக் கண்டு வணங்குகிறோம். உள்ளே நாகலிங்கம் உள்ளது. சம்பந்தப் பெருமான் இங்கு இருந்தபோது சமணர்கள் பெருவேள்வி செய்து அதிலிருந்து புறப்பட்ட ஐந்தலை நாகத்தை அடியார்கள் மீது ஏவினர். சம்பந்தர் இறைவனை வேண்டியபோது அவர் பாம்பாட்டியாக வந்து அதனை அடக்கினார்.

உற்சவ மூர்த்திகள் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. முன் மண்டபத்தில் சோமாஸ்கந்தர், அறுபத்து மூவர், மாணிக்கவாசகர் ஆகியோர் உள்ளனர். உட்பிராகாரத்தில் வலம் வரும்போது கோட்ட விநாயகர், தட்சிணாமூர்த்தி, சப்தமாதர், வலம்புரி விநாயகர், சக்தி விநாயகர் ஆகியோர் உள்ளனர். வழக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் திருமால் காட்சி அளிக்கிறார். வள்ளி தெய்வானையுடன் தரிசனம் தரும் முருகனின் அழகில் மயங்கி, தலத் திருப்புகழைச் சமர்ப்பிக்கிறோம்.

‘‘தவர் வாள் தோமர சூலம் தரியாக் காதிய சூரும்
தணியாச் சாசுரம் ஏழும்... கிரியேழும்
சருகாக் காய் கதிர் வேலும் பொருகாற் சேவலு, நீலந்
தரி கூத்தாடிய மாவுந்... தினைகாவல்
துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட்டாள் ஒரு தேனும்
துணையாத் தாழ்வற வாழும்... பெரியோனே
துணையாய்க் காவல் செய்வாய் என்றுணராப் பாவிகள் பால் உன்
தொலையாப் பாடலை யானும்... புகல்வேனோ
        
பவமாய்த் தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும்    
பழமாய்ப் பார்மிசை வீழும்படி, வேதம்... படிவேதம்
படியாப் பாதகர், பாயன்றியுடாப் பேதைகள், கேசம்
பறி கோப்பாளிகள் யாருங்... கழுவேறச்
சிவமாய்த் தேனமுதூறும் திருவாக்காள் ஔி சேர் வெண்
திரு நீற்றால் அமராடும்... சிறியோனே
செழுநீர்ச் சேய்நதி ஆரம் கொழியாக் கோமளம் வீசும்
திருவோத்தூர் தனில் மேவும்... பெருமாளே!

இப்பாடலில் ஞானசம்பந்தர் ஆண் பனைகளை பெண் பனைகளாக்கிய குறிப்பும், கூன் பாண்டியனின் வெப்பு நோயைத் திருநீற்றால் தீர்த்த வரலாறும் வருகின்றன.பொருள்: வில், வாள், தண்டாயுதம், சூலாயுதம் இவற்றைத் தரித்துக் கொண்டு கொலைத் தொழிலைச் செய்து வந்த சூரபத்மனும், என்றும் வற்றாத ஏழ் கடல்களும், சூரனைச் சுற்றி அரணாகச் சுழன்று வந்த ஏழு மாயா மலைகளும் உலர்ந்த இலைகளைப் போல் எரிந்து போகும்படிச் செய்த பேரொளி வீசும் வேலாயுதம்; நீல நிற உடல் கொண்ட, நடனம் புரிகின்ற மயிலாகிய பரி: தினைக் கொல்லையைக் காவல் காத்து வந்த பவளம் போன்ற வாயை உடைய குறமகள் வள்ளி; தேவலோகத்தை அரசாட்சி செய்ய உரிமை உள்ள ஒப்பற்ற தேன் போன்ற இனியவளான தேவசேனை ஆகிய எல்லாவரையும் துணையாகக் கொண்டு தெய்வீக வாழ்வு வாழும் பெருமையனே!

நீ எப்போதும் மெய்த் துணையாக இருந்து ரட்சிப்பாய் என்று உணராத பாவிகளிடம் சென்று, அழிவற்ற உன் திருப்புகழ்ப் பாக்களைப் பாடுவது முறையோ? [பாக்களை ஆண்டவனுக்கு மட்டுமே சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது உட்குறிப்பு.] தன் பிறவியை ஒழித்து, மரமாக வளர்ந்த பனைகளனைத்தும் பெண்பனைகளாகிக் காய்த்து நல்ல வாசனை வீசும் பழங்கள் நிலத்தில் விழவும், வேதம் படிக்காத பாதகர்கள், பாயைத் தவிர வேறு உடையை அணியாத அறிவிலிகள், தலை முடியைப் பிடுங்கிக் கொள்ளும் கூத்தாடிகள் ஆதி சமணர்கள் கழுவில் ஏறித் தம்மையே மாய்த்துக் கொள்ளும்படி, சிவமாய்த் திகழ்வதும், தேன் ஊறுவது போன்றதுமான உமது திருவாக்காலும், ஒளிவீசும் வெண் விபூதியாலும் அச்சமணருடன் ஞானப்போர் செய்த இளையோனே! செழுமையான நீர் பாய்கின்ற சேயாறு, முத்துக்களை உந்தித் தள்ளிக்கொண்டு வரும் அழகு விளங்கும் திருவோத்தூர் பதியில் விளங்கும் பெருமையனே!

நான்முகன், ஆதிகேசவப் பெருமாள் கொற்றவை, வயிரவர், சூரியன், திருமால், சந்திரன் ஆகியோரைத் தரிசித்து மூலவரைத் தொழுகிறோம் கருவறை, அரைநாழி மண்டபம் இவை ஐந்தாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது என்றறிந்து வியப்பு ஏற்படுகிறது. வெவ்வேறு அரசர்கள் காலத்தில் அடுத்தடுத்த பிராகாரங்களும் மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன. மூலவரையும், சண்டிகேஸ்வரரையும் வணங்கி வலம் வருகிறோம். இளமுலை நாயகி சந்நதி தெற்கு நோக்கியது. இவ்விடத்தில் அற்புதங்கள் நடத்திய சம்பந்தப் பெருமானுக்கு ஞானப்பால் ஊட்டிய அம்பிகையை மனமாற வணங்கி வெளியே வருகிறோம். செய்யாறு கரையில் ‘ஆற்றங்கரைத் தெரு’ எனுமிடத்தில் செங்குந்தர் சமுதாயத்தினரால் பராமரிக்கப்பட்டு வரும் தேவ சேனாபதி சுப்ரமணியர் கோயில் உள்ளது.

சேயாற்றின் மறுகரையிலுள்ள திருத்தலம் இளையனார் வேலூர் ஆகும். வாலாஜாபாத் ரயில் நிலையத்திற்கருகிலுள்ளது. சிறிய ஆனால், மிகப் பழைமையான முருகன் கோயில் இங்கு உள்ளது. கோயிலின் நுழைவாயிலில் கொடி மரம், யானை, மற்றொன்று நிறுவப்பட்டுள்ளது. மூலவர் பால சுப்ரமணியர் ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்டு விளங்குகின்றார். முருகன் பூமியில் ஊன்றிய வேலுடன் காட்சி அளிப்பது தனிச் சிறப்பு. விநாயகரையும், கஜவள்ளியையும் (கஜவல்லி என்றிருக்கலாம்) தெய்வானையுடன் விளங்கும் அழகிய உற்சவ மூர்த்தியையும் வணங்குகிறோம். வலம் வரும்போது, சூரிய சந்திரர்கள், வரசித்தி விநாயகர், லிங்க வடிவில் ஈசன், உடன் தேவி மற்றும் நவக்கிரகங்கள் காட்சி தருகின்றனர். அருணகிரியார் இங்கு இரண்டு பாடல்கள் அருளிச் செய்துள்ளார். ‘அதிகராய்’ எனத் துவங்கும் பாடலில் சம்பந்தப் பெருமானைப் பற்றியும், ‘சேலால’ எனத் துவங்கும் பாடலில் காமன் சிவபெருமான் மீது மலர்கணை எய்தமை பற்றியும் பாடியுள்ளார்.  (உலா தொடரும்)

சித்ரா மூர்த்தி