நாடே திரும்பிப் பார்த்த 48 நாட்கள்



* காஞ்சி அத்தி வரதர் வைபவம் 2019

வியத்தகு வழிபாடுகளும், விந்தைமிகு விழாக்களும், மனித வாழ்வை நெறிப்படுத்தும் வைபவங்களும் நிறைந்தது இந்து மத ஆலயங்கள். கோயில்களில் தஞ்சையை மிஞ்சியது காஞ்சி எனில் மிகையில்லை. வைணவமும், சைவமும் சமமாக செழித்தோங்கிய புண்ணிய பூமி. அத்தகைய காஞ்சியில் நிகழ்ந்த அத்தி வரதர் வைபவத்தை அகிலமே வியந்து பார்த்தது. நாற்பது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அனந்த சரஸிலிருந்து எழுந்தருளி எழில் கோலம் காட்டி, மீண்டும் அனந்தசரஸில் சயனித்தபோது நாடே தேம்பி அழுதது.

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மூலவராக இருந்த ஆதி அத்தி வரதர், கோயில் வளாகத்தில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் சயனிக்கிறார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்குளத்திலிருந்து எழுந்தருளும் விசேஷம். கடந்த 1939, 1979 ஆண்டுகளில் நடந்த அற்புதம். மீண்டும் 2019, ஜூலை 1ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 16ம் தேதியுடன் வைபவமாக முடிவடைந்துள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் 31 வரை சயனக் கோலத்திலும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நின்ற கோலத்திலும் காட்சி தந்தார்.

அத்தி வரதர் சிலை அத்தி மரத்தால் ஆனது. பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரம்மனின் யாகத் தீயினின்று தோன்றியதால் அத்தி வரதர் திருமேனி சிறிது பின்னப்பட்டுவிட்டதால், அசரீரி மூலம் தன்னை ஆனந்தத் தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்திலிருந்து சிலையை காஞ்சியில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறியதால் அத்திவரதரை அப்படியே  பாதுகாப்பாக சயனக் கோலத்தில் வைத்து  அனந்த சரஸ் குளத்தில் உள்ள ஆனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே வைத்து விட்டனர். பின்னர் பழைய சீவர பெருமாளை வரதராஜப் பெருமாள் என பிரதிஷ்டை செய்தனர்.

அத்திவரதர் தரிசன வைபவத்தை முன்னிட்டு ஜூன் 28ஆம் தேதி அனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் இருந்த அத்தி வரதர் வெளியில் எடுத்து ஆதி அத்திவரதர் சிலை சுத்தம் செய்யப்பட்டு, லகு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஹோமம் வளர்த்து திருமஞ்சனம், விஸ்வரூபம், அலங்காரம் ஹோமம் வளர்த்து, பூஜைகள் செய்யப்பட்டு ஜூலை 1ம் தேதி காலை 5 மணிமுதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.  

இதனைத் தொடர்ந்து பச்சை, நீலம், மெஜந்தா, இளம்மஞ்சள் என தினம் ஒரு வண்ணத்தில் பட்டாடை உடுத்தி அத்தி வரதர் அருள்பாலித்தார். அத்தி வரதரை தரிசிக்க பாமரன் முதல் பிரபலங்கள் வரை காஞ்சிக்கு வருகை தந்தனர்.
48 நாட்கள் நிகழ்ந்த பெரும் வைபவத்தைத் தொடர்ந்து ஆகஸ்ட்.17ம் தேதி, சனிக்கிழமை இரவு ஆகம விதிகளின்படி மூத்த அர்ச்சகர்கள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், விக்ரஹம் தூக்கும் ஊழியர்கள் உள்ளிட்டோரைக் கொண்டு நாட்டையே அதிரச் செய்த ஆதி அத்திவரதர் மீண்டும் அனந்த சரஸ் குளத்திற்கு சென்றார். நீராழி மண்டபத்தின் கீழே அத்தி வரதருக்கென்று உள்ள ரகசிய அறையில் நாக கன்னிகள் சிலை மேல் அத்தி வரதர் பாதுகாப்பாக பெட்டியில் சயன நிலையில் வைத்துள்ளனர்.

அத்திவரதரை கூட்டம் மிகுதியால் பல லட்சம் பேர் தரிசிக்க இயலவில்லை. கடைசி நாளிலாவது பார்த்து விடமாட்டோமா என ஏங்கினர். அண்டை வீட்டுக்காரரெல்லாம் அத்தி வரதரை பார்த்தார்கள். நான் காண இயலவில்லையே என்னும் ஏக்கம் நெஞ்சை அழுத்தியது. சயன நிலையில் தரிசித்தேன், நின்ற நிலையில் பார்க்க முடியவில்லையே என ஆசை கொண்டவர்கள் அநேகர். இவ்வாறு தனக்குள்ளே புலம்பியவாறு சென்ற வண்ணம் இருந்தோர் பலர். மனைவி மக்களோடு தரிசித்தேன், மருமக்களோடும் தரிசிக்கும் பாக்யம் கிட்ட வேண்டுமே பெருமாளே, ஆயுள் கொடுத்து அருள்வாய் அத்தி வரதா என வேண்டாதோர் அங்கு எவருமிலர்.

நாற்பத்து எட்டாம் நாள் நீ ஆனந்தமாய் அனந்தசரஸில் சயனித்து விட்டாய், ஆனால் என்னை ஏனோ பிரிவுத்துயரத்தில் தள்ளிவிட்டாய். இனி, எப்போது உனை காண்பேன் வரதா... திருக்குளம் தாண்டும்போது என் கண்கள்
குளமாகியது தான் மிச்சம்.

காஞ்சி எம்.பாஸ்கரன்
படங்கள் : இரத்தின.கேசவன்