உள்ள(த்)தைச் சொல்கிறோம்



பன்னிரெண்டு கருட சேவையை  கண் முன் நிறுத்திய பட்டயம்

ஆன்மிகத்தின் பெருமையை வெகு சிறப்பாக தலையங்கத்தில் ஆசிரியர் குறிப்பிட்ட விதம் மெய்சிலிர்க்க வைத்தது. ராமானுஜ ஜெயந்தியை விளக்கும் அழகிய அட்டைப்படம் கூடவே கட்டுரை வெகு அருமை. திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாளின் மும்மூர்த்தி தரிசனக் கட்டுரை சிற்ப்பாக இருந்தது. 12 கருட சேவை நேரில் பார்க்காத காட்சியை நிவர்த்தித்தது. - ஆயுள் வாசகன் இரா.கல்யாண சுந்தரம்,  கொளப்பாக்கம்.

சித்திரை மாத பௌர்ணமியை உயிர்ப்பு வரும் திருதியைக்கு அட்சய திருதியை என்பதுக்கு இசைவாக கண் கோடி வேண்டும் காண பன்னிரெண்டு கருட சேவையை  என்பது உபசார வார்த்தையல்ல உச்சிஷ்டமான வார்த்தை. இல்லத்தில் இருந்தபடியே கும்பகோணம் கடை வீதியில் நலம்பெறும் பன்னிரெண்டு கருட சேவையை 400  மைல்களுக்கு அப்பால் உள்ள எங்களை வெற்றி சேவிக்க வைத்த ஆன்மிகம் பலன் ஆயிரம் காலத்து பலன் எனலாம். நன்றி. பாராட்டு.
- அரிமளம். R.தளவாய் நாராயணசாமி, பெங்களூரு-76.

திரேதாயுகத்தில் அவதரித்த லட்சுமணனையும், கலியுகத்தில் அவதாரம் செய்த ராமானுஜரையும் மிகச்சிறப்பாக எட்டு விதமாக அழகிய ஒப்பிடுதலோடு வந்த கட்டுரை வெகு அற்புதம். படித்து பேரானந்தம் அடைந்தேன். - கே.ஆர்.எஸ்.சம்பத், புத்தூர் ஹைரோடு, திருச்சி -17

சபரர்கள் எனும் வேடர்களால் வளர்க்கப்பட்ட விமலாதான் சபரி என்றும், ‘சபரிக்கும் ராமருக்கும்’ நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் பி.என்.பரசுராமன் ‘குருசேவையால் ராம தரிசனம்’ என்ற கட்டுரை வாயிலாக இதுவரை அறியாத செய்திகளை நன்கு விளக்கியுள்ளார். - வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

தசரதனுக்கு நான்கு குமாரர்கள் என்ற விஷயம் எல்லோருக்கும் தெரிந்ததே! ஆனால் நான்கு வகையான தர்மங்களையும் ராமாவதாரத்தில் நான்கு புத்திரர்கள் மூலம் உலகுக்கு எடுத்துக்காட்டவே தசரதருக்கு நான்கு புத்திரர்கள் பிறந்தன என்பது இதுவரை கேள்விப்படாத புதிய தகவல். - D. ரவி, திருவான்மியூர், சென்னை-41

ராமானுஜதாசனின் ராமானுஜர் பற்றிய சிறப்புக்கட்டுரையும் அவரது திருவுருவம் பதித்த இந்த மாத இதழும் அற்புதம். அருமையாக படைக்கப்பட்டு இருப்பதற்கு பாராட்டுகிறேன்.
- ப.மூர்த்தி, பெங்களூரு-97.

நானிலமெங்கும் நாராயண நாமம் ஒளிரச் செய்த வைணவ குலத்தின் பெருமை மிகு மகான் மதங்களில் புரட்சி செய்த பெருமான் ‘ராமானுஜர் ஜெயந்தி’க்கு வைர மகுடம் சூட்டும் வகையில் அழகிய அட்டைப்படம்...  - அயன்புரம் த.சத்திய நாராயணன், சென்னை-72.