அழகிய சிங்கனின் இனிய இருபத்தைந்து தலங்கள்



ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி  17-05-2019

1. ஸ்ரீநவநரசிம்மர், தாழம்பூர் - சென்னை.

மூலவர் நரசிம்மர் நடுவில் ஸ்ரீதேவி பூதேவி சகிதமாகவும், அவரைச்சுற்றி பிராகாரத்தில் எட்டு நரசிம்மர்கள் உள்ளனர். மூலவர் உள்பட ஒன்பது நரசிம்மர்கள் இவ்வாலயத்தில் அருட்பாலிப்பதால் ஸ்ரீநவநரசிம்மர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. புதிதாகக் கட்டப்பட்டுள்ள இக்கோயில். அஹோபிலத்தில் நவ நரசிம்மரைச் சேவிக்க முடியாதவர்களுக்கு இத்தலம் ஓர் வரப்பிரசாதம். ஸ்ரீநவநரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்குத் திருமுகமாக அருட்பாலிக்கிறார். சென்னை பழைய மகாபலிபுரம் சாலையிலுள்ள (ஓ.எம்.ஆர்.) நாவலூர் அடுத்த தாழம்பூரில் இத்தலம் அமைந்துள்ளது.

2. ஸ்ரீவேணுகோபாலசுவாமி, படவேடு - திருவண்ணாமலை.

மூலவர் ஸ்ரீலட்சுமி நரசிம்மருடன், மகாலட்சுமி வலப்புறம்  அமர்ந்த நிலையில் இத்தலத்தில் அருட் பாலிக்கிறார். ஸ்ரீவேணுகோபாலசுவாமி என்றழைக்கப்படும் இத்திருக்கோயில் சென்னை காட்பாடியிலிருந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள சந்தவாசலிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது படவேடு.

3. லட்சுமி நரசிம்மர், நரசிங்கபுரம் - சென்னை.

இத்தலம் லட்சுமி நாராயணர் தலம் என்றழைக்கப்படுகிறது. இங்கு வைகுண்ட ஏகாதசி பிரமாதமாக கொண்டாடப்படுகிறது. அன்று லட்சுமி நரசிம்மருக்கு புஷ்ப அலங்காரம் மிக விமரிசையாக நடைபெறும். அர்த்த மண்டபம் முழுவதும் பூவால் அலங்கரிக்கப்படுகிறது. இந்தக்கோயில் கெம்பராஜபுரத்தில் உள்ளது. லட்சுமி நரசிம்மர் அமர்ந்த நிலையில் கிழக்குத் திருமுகமாக அருட்பாலிக்கின்றார்.சென்னை - மும்பை டிரங்க் சாலையில் வாலாஜாப்பேட் பகுதியில் வரும் முகுந்தராயபுரத்திலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள கெம்பராஜபுரத்தில் இக்கோயில் உள்ளது.

4. அழகிய நரசிம்மப் பெருமாள், எண்ணாயிரம் - விழுப்புரம்

அஷ்டஸஹஸ்ரர் என்கிற பிராமணர் வாழ்ந்தபகுதி என்கிற பொருளில் எண் ஆயிரம் என்கிற பெயர்க்காரணம் அமைந்துள்ளது. முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டின்படி இந்த நரசிம்மரை ராஜராஜ விண்ணகர ஆழ்வார் என்றும் இந்த இடம் ராஜ ராஜ சதுர்வேதிமங்கலம் என்றும் போற்றப்பட்டுள்ளது. பிரம்ம லட்சுமியுடன் நரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்தில் அருட்பாலிக்கிறார். விழுப்புரத்திலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் 25 கி.மீ. தொலைவில் உள்ளது எண்ணாயிரம்.

5. ஸ்ரீஉக்ர நரசிம்மசுவாமி, உம்மடிவரம், பிரகாசம் மாவட்டம், ஆந்திரா.

பரத்வாஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நரசிம்மர் நாற்கரங்கள். இம்மலையில் பெருமாள் இருப்பதைக் கண்டு முதியவர் தினமும் அபிஷேகம் ஆராதனை செய்து வந்தார். சுவாமியின் கருணையால் அவரே பூமிக்கு வந்து தங்கிவிட்டதாக வரலாறு. உக்ர நரசிம்ம சுவாமி சங்கு, சக்கர அபய வரத ஹஸ்தத்துடன் அமர்ந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். அருகில் ஸ்ரீதேவி பூதேவி உள்ளனர். ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் புல்லலசெருவு வட்டத்திலுள்ள உம்மடிவரம் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.
.
6. தியாகேசர், திருவாரூர்

ருண என்றால் கடன் என்று சமஸ்கிருதத்தில் பொருள். கடன் தீர்க்கும் இவர் விசேஷமானவர். பெரும் சக்தி மிக்க இவரை வேண்டிக்கொண்டு ருண விமோசன ஸ்லோகத்தைப் படிக்க கடன் தொல்லையிலிருந்து விடுபடுவர். ருண விமோசன நரசிம்மர் அமர்ந்த திருக்கோலம், பாடல் பெற்ற தலமான கமலாலயத்தில் இந்த நரசிம்மர் உள்ளார்.

7. நரசிம்ம பக்த ஸமாஜம், சாலியமங்கலம் - தஞ்சாவூர்

இந்தத் தலத்தில் கி.பி.1645 முதல் 371 ஆண்டுகளாக ஓராண்டுகூட தவறாமல் பாகவத ேமளா நடைபெறுகிறது. இந்த இடத்திற்கு அச்சுதபுரம் என்கிற பெயரும் உள்ளது. இந்த பாகவத மேளாவில் பிரகலாதன் சரித்திரம் நிகழ்கிறது.  தஞ்சாவூரிலிருந்து நாகை செல்லும் சாலையில் 15 கி.மீ. கிழக்கே உள்ள சாலியமங்கலத்தில் அமைந்துள்ளது.

8. வனஜாக்ஷி லட்சுமி உடனுறை நரசிம்மர், கெஞ்சனூர் - ஈரோடு

இத்தல நரசிம்மர் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவர். இவ்வாலயத்தில் உள்ள ஆஞ்சநேயர் 800 ஆண்டுகளுக்கு முன் வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இவ்வாலயத்தில் மேகலேஸ்வரி உடனுறை மேகலேஸ்வரரும் உள்ளார். சைவமும் வைணவமும் இணைந்துள்ள இத்தலத்தில் நரசிம்மர் சாந்த மூர்த்தியாக உள்ளார். காரிய சித்தி கிட்டும் இத்தலத்தில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் திருப்பணி நடைபெற்றுள்ளது.

ராமானுஜர் கூரத்தாழ்வாருடன் மேல்கோட்டை அடைந்தபோது இத்தலத்துப் பெருமாளை மங்களாசாசனம் செய்திருக்க வேண்டும். இந்தப் பாதையில்தான் அவர் கர்நாடக எல்லையினை அடைந்துள்ளார். நரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்குத் திருமுக வீற்றிருக்க, மகாலட்சுமி அவரது மடியில் அமர்ந்த வண்ணம் உள்ளார். நாற்கரங்களுடன் வனஜாக்ஷி லட்சுமி உள்ளார்.சத்தியமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியிலுள்ள கெஞ்சனூரில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில் வனப்பகுதிக்குள் அமைந்திருக்கிறது.

9. கதிர் நரசிங்கப்பெருமாள், கொத்தப்புள்ளி - திண்டுக்கல்

இக்கோயில் திண்டுக்கல் நவ நரசிம்ம க்ஷேத்திரங்களில் ஒன்று. கர்ப்பக்கிரகத்தில் சுயம்பு மூர்த்தியான சிவன் விஷ்ணுவுடன் சேவை சாதிக்கும் தலம். இத்தலத்துப் பெருமாள் ஜன்மாஷ்டமி அன்று இங்கு எழுந்தருள்கிறார். கதிர் நரசிம்மர் என்பது சூரியக் கதிர்களைக் குறிக்கிறது. சூரியனின் உபாதைகளில் இருந்து நிவர்த்தி தரும் தலம் என்பது ஐதீகம். இத்தலத்து சக்கரத்தாழ்வார் தனி சந்நதியில் தீ ஜுவாலைகள் போன்ற கிரீட அமைப்புக்கொண்டவர்.

16 கரங்களில் காயத்திரி மந்திரம் பொறிக்கப்பெற்றுள்ளார். பின்புறம் வழக்கம்போல் யோக நரசிம்மரும் உள்ளார். திண்டுக்கல்லிலிருந்து 15 கி.மீ. தொலைவில் ரெட்டியார் சத்திரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. கதிர் நரசிங்கப் பெருமாள் சாந்த மூர்த்தியாக சிம்ம முகம் இல்லாமல் கமலவல்லித் தாயாருடன் உள்ளார்.

10. நாராயணப் பெருமாள், வத்தலகுண்டு - திண்டுக்கல்

இக்கோயில் மிகத் தொன்மை வாய்ந்த நரசிம்மர் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. இருப்பினும் நாராயணரே அருட்பாலிக்கிறார். இது புராதன கல்யாண நரசிம்ம க்ஷேத்திரம் எ்ன்று போற்றப்படுகிறது. முற்காலத்தில் எவ்வாறு தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற பகுதிகளில் விற்பன்னர்கள் வாழ்ந்தனரோ அதுபோன்றோர் அனைத்துக் கலைகளிலும் பாண்டித்யம் மிக்கவர்கள் வாழ்ந்த பகுதியாக வத்தலகுண்டு கூறப்படுகிறது. திண்டுக்கல்லிலிருந்து 32 கி.மீ. தொலைவிலுள்ள கொடைக்கானல் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வத்தலகுண்டு ஊரில் அருட் பாலிக்கிறார் நாராயணப்பெருமாள்.

11. கல்யாண நரசிம்மர், அரியக்குடி, காரைக்குடி.

ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் தலம். தென் திருவேங்கடமுடையான் தலம். நகரத்தார் கோயில்களான 9 கோயில்களில் உள்ள வைணவத்தலம். சிறந்த பிரார்த்தனைத்தலம். இந்தத் தலத்திற்கு நேர் எதிரே இந்த லட்சுமி நரசிம்மப்பெருமாள் மகாலட்சுமியுடன் சேவை சாதிக்கிறார். பெருமாள் கோயிலுக்கு நிகரான தொன்மை சிறப்பு மிக்கது இந்த நரசிம்மர் கோயில். பிரசித்திபெற்ற அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் அவதாரத் தலம்.

காரைக்குடியிலிருந்து கிழக்கே 4 கி.மீ. தூரத்தில் உள்ள அரியக்குடியில் இக்கோயில் அமைந்துள்ளது. மகாலட்சுமியினை ஆலிங்கனம் செய்த வண்ணம் தென் திருவேங்கடமுடையான் நின்ற திருக்கோலத்தில் அருட் பாலிக்கிறார். கிழக்கு திருமுகமாக தேவி பூமி தேவி நாச்சியார் உள்ளனர்.

12.லட்சுமி நரசிம்மர், திருநெல்வேலி

நெல்லையப்பர் உயரமும் இத்ததலத்து நரசிம்மரின் உயரமும் கர்ப்பக் கிரகத்தில் ஒரே மட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 2 ஆலயங்களுக்கிடையே சுரங்கப்பாதை இருந்துள்ளது. கூரத்தாழ்வாரின் கனவில் தோன்றி தான் மண்ணுக்குள் புதைந்துள்ளதாகக் கூறினார். பெரிய ஆக்ரோஷத்துடன் தனது பக்தனைப் பார்த்ததும் ஆனந்தத்தில் வெளியில் வந்துள்ளார். பேரருளாளன் மற்றும் திருமங்கை மன்னனால் இக்கோயில் பிற்காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.லட்சுமி நரசிம்மர் இடது தொடை மீது கை வைத்துள்ளார். தாயாரின் கண்கள் பெருமானைப் பார்த்த வண்ணம் உள்ளன. நெல்லையப்பர் கோயில் மேல மாட வீதியில் இக்கோயில் அமைந்துள்ளது.

13.  ஸ்ரீஎடையூரப்பன், மலப்புரம், கேரளா.

எடையூர் நரசிம்மம் எனப் பொதுவழக்கில் கூறினாலும் வெண்காடி என்ற இடத்தில் தான் மகாவிஷ்ணு கோயில் உள்ளது. இத்தலத்து பெருமாளே எடையூரப்பன் என்று அழைக்கப்படுகிறார். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் வலஞ்சேரியிலிருந்து நிலம்பூர் செல்லும் சாலையில் வெண்காடு என்கிற தலத்தில் இக்கோயில் உள்ளது. இது பெரிந்தால் மன்னவலஞ்சேரி பாதையாகும். குட்டிப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பெரிந்தால் மன்ன வலஞ்சேரி பாதையில் 18 கி.மீ. வந்தால் வலப்புறம் சாலையோரத்தில் இக்கோயில் உள்ளது.

14)ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி, ரிஷி நாரத மங்கலம், பாலக்காடு, கேரளா

நரசிம்மாவதாரம் நிகழ்ந்தபோது சாந்த மூர்த்தியாக நின்ற திருக்கோலத்தில் நாரதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரே கோயில். இந்தக்கோயில். இத்தலத்து தீர்த்தக் கிணறில் நீராடினால் விசேஷம். சில ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இத்தலம் உள்ள ஊர்தான் ரிஷி நாரத மங்கலம். பாலக்காடு - திருச்சூர் இரண்டு பகுதியினையும் இணைக்கும் ஊர் இது. இத்தலத்தில் பலா மற்றும் மாங்காய் அறுவடையினைக் குறிக்கும் மிகப்பெரிய விழா நடக்கிறது. அப்போது வாளும் சிலம்பும் ஏழு நல்லாத்து என்னும் சிறப்பம்சமும் வாண வேடிக்கையும் பிரமாதமாக இருக்கும்.

இந்த விழா,  திருச்சூர் பூரம் விழாவிற்கு இணையாக யானைகளோடு நடத்துகிறது. நரசிம்மரின் இடக்கரத்தில் கதை இல்லை. சங்கு, சக்கரம் உண்டு. நின்ற கோலத்தில் கிழக்குத் திருமுகமாக அருட்பாலிக்கிறார். இக்கோயில் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திலுள்ள ரிஷி நாரத மங்கலத்தில் அமைந்துள்ளது.

15) ஸ்ரீபால நரசிம்மர், ராம மங்கலம், எர்ணாகுளம், கேரளா

இக்கோயில் பஞ்ச மகா க்ஷேத்திரத்தில் ஒன்று 800 - 1124 கி.பி. வரை பிரசித்திமாகத் திகழ்ந்த தலம். நரசிம்மர் மற்றும் உன்னிபூதம் சந்நதிகள் உள்ளன. விஷு விளக்கு உற்சவம் என்று சித்திரை மாதத்தில் முக்கியமான வைபவம் நடைபெறுகிறது. அனுஷ்டானப் பிரதானம் அமைந்த கோயில். அதாவது சாஸ்த்ரோர்த்தமாக பூஜைகள் மற்றும் யாகங்கள் நிர்வகிக்கப்படுகின்றன.

பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில் இது. அவர் நிர்மாணித்த 64 கிராமங்களில் வேத மகா கிராமத்தின்கீழ் அமைந்த தலம். ஸ்ரீபால நரசிம்மர் அபூர்வ சாந்த சீலராய் அனுக்கிரக மூர்த்தி நாயகனாய் உருவம் கொண்டிருக்கிறார். கோயில் தூணில் உள்ள இரணியன் உருவம் விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோளஞ்சேரி பிறவோம் பகுதியிலிருந்து மூவாட்டுப்புழாவிற்கு இடையே உள்ள ஊர் ராமமங்கலம். காளியாறும், தொடுபுழா ஆறும், கோதையாறும் சங்கமிப்பதால் அப்பகுதி மூவாட்டுப்புழா என அழைக்கப்படுகிறது. பெருமான் சேரப் பேரரசுவின் இரண்டாம் சேரமான் பெருமானால் திருப்பணி செய்யப்பட்ட கோயில்.

16. ஸ்ரீஅய்மனம் நரசிம்மசுவாமி, கோட்டயம், கேரளா

கேரள நரசிம்மர் ஆலயங்களில் இத்தலத்து நரசிம்மர் நாற்கரங்களுடன் திகழ்ந்தாலும், உக்ர மூர்த்தியாக அவதாரம் ஏற்றபோது எவ்வாறு இருந்தாரோ அதேபோன்று இத்தலத்தில் உள்ளார். இங்கு நரசிம்ம ஜெயந்தி, ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவம் முதலானவை மிக விமர்சையாக நடைபெறுகிறது. பிரம்மோற்சவம் ஆராட்டுடன் திருவோணம் அல்லது உத்திராடம் அன்று நிறைவு பெறுகிறது. இக்கோயில் கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள எட்டுமனூர் வட்டத்திற்குட்பட்ட அய்மனத்தில் அமைந்துள்ளது. அய்மனம் பஞ்சாயத்து அலுவலகம் அருகேயே கோயில் உள்ளது.

17. மகா நரசிம்மர், ஏரூர் நரசிம்மம், கொல்லம், கேரளா.

வட்ட வடிவில் அமைந்துள்ள கோயில். மூலவர் நரசிம்மர் 5 அடி உயர சைல மூர்த்தி, ஐயப்பன், கணபதி, யக்ஷர்கள் மற்றும் நாகராஜர் உள்ளனர். 10 நாள் உற்சவம் ஆராட்டு என்னும் புனித தீர்த்த நீராடல். சித்திரை மாத திருவோணத்தன்று தொடங்கி நடைபெறும்.

மகா நரசிம்மர் நாற்கரங்களுடன் அமர்ந்த நிலையில் அருட்பாலிக்கிறார். இடப்புறம் மகாலட்சுமி தனியாக அமர்ந்த நிலையில் அருட்பாலிக்கிறார். இக்கோயில் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் பனயம் சாலையில் உள்ள ஏரூரில் அமைந்துள்ளது.

18.ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ரிஷ்ய சிருங்கபுரம், கர்நாடகா.

இக்கோயில் சிருங்கேரி நரசிம்மபுரம் அக்ரஹாரத்தில் உள்ளது.  ருஷ்ய என்றால் மான், ஸ்ருங்கம் என்றால் கொம்புகள். சிருங்கேரியில் துங்கா மற்றும் பத்ரா நதிக்கரை சங்கமிக்கும் பகுதியில் சிருங்கேரி மடத்தின் ஆசிரமம் உள்ளது. சிருங்கேரி நரசிம்மபுரம் அக்ரஹாரத்தில் அருட்பாலிக்கிறார் ஸ்ரீலட்சுமி நரசிம்மர். இவருக்கு மகா மங்கள ஹாரத்தியும் அஷ்டாவதான சேவையும் ஆசார்யரால் நிகழ்த்தப்படுகிறது.  நரசிம்ம மலை மேல் பிரகலாத நரசிம்மர் உள்ளார். லட்சுமி நரசிம்மர், கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் சித்ரதுர்க்கா வட்டத்தில் உள்ள ரிஷ்ய சிருங்கபுரத்தில் கோயில் கொண்டுள்ளார்.

19.லட்சுமி நரசிம்மசுவாமி, மல்லேஸ்வரம். பெங்களூரு.

மாதேரநிங்கஹள்ளி என்கிற பழைய பெயர் கொண்ட ஊர். சத்ரபதி சிவாஜியின் அண்ணன் ஏகோஜி ராவின் கனவில் தோன்றி சிவன் தனக்கென ஓர் ஆலயம் எழுப்பப் பணித்தார். அதன்படி இத்தலத்தில் சிவனின் அம்சமாக உத்பவ மூர்த்தி கண்டெடுக்கப்பட்டு ஆலயம் கட்டப்பட்டது. அவ்வாலயம் காடு மல்லேஸ்வரர் தேவஸ்தானம் என்றழைக்கப்படுகிறது. இதன் காரணமாகவே மல்லேஸ்வரம் எனப்படுகிறது.

அதன்பின்னர் 1982-ல் நரசிம்மரின் மூர்த்தியும் கண்டெடுக்கப்பட்டு கோயில் கட்டப்பட்டுள்ளது. லட்சுமி நரசிம்மர் சங்கு, சக்கர அபய லட்சுமி ஆலிங்கன ஹஸ்தத்துடன் அமர்ந்த நிலையில் கிழக்குத் திருமுகமாக அருட்பாலிக்கிறார். கர்நாடகா மாநிலம் பெங்களூரு மல்லேஸ்வரத்தில் இக்கோயில் உள்ளது.

20. ஸ்ரீகுரு நரசிம்மர், சாளக்கிராமம், உடுப்பி, கர்நாடகா.

சாளக்கிராமத்தில் வடிக்கப்பட்ட மூலவர், நரசிம்மர் இரண்டு திருக்கரங்கள் வலக்கையில் சுதர்ஸனமும் இடக்கையில் சங்கும் கொண்டுள்ளார். சீதா நதிக்கும் கும்பாஷிக்கும் இடைப்பட்ட தூரத்தில் உள்ள இடத்தில் தீர்த்த நீராடி நாரதர் வந்தபோது அப்பகுதியில் கூடி முனிபுங்கவ முனிவர்கள் தவமேற்று வந்தனர். திடீரென பூகம்பம் ஏற்பட்டு பறவைகள் மற்றும் விலங்கினங்கள் தாறுமாறாக ஓட பெரும் நிலஅதிர்ச்சியினால் அனைவரும் அச்சமுற்றனர். இடி மின்னல் தாக்கியது.

அப்போது ஓர் அசரீரி கேட்டது. அதன்படி சங்கு, சக்கரம் தீர்த்தத்திற்கு இடையே உள்ள அரச மரத்தின்கீழ் உள்ள நரசிம்மர் சிலையைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்து ஆராதிக்கும் படியும் அந்த நரசிம்மர் பிரம்மன் மற்றும் சிவனால் வணங்கப்பட்டது என்றும், அதன்பின்னர் முன்பிருந்த நிலை உருவாகி நிதானத்திற்கு வரும் என்றும் அசரீரி பணித்தது. அதன்படி இக்கோயில் உருவானது. இந்த மூலவர் நாரதரால் உருவாக்கப்பட்டது.

லோகாதித்தியன் மன்னன் கட்டளைப்படி பட்டாச்சார்யர் என்பவரின் தலைமையில் இங்கு பூஜைகள் பிற்காலத்தில் நடைபெற்றன. சிங்கமும், யானையும் சண்டையிடாத நிர்வைரீ க்ஷேத்திரம் (எதிரியற்ற நிலை) என்றுகூட இந்த க்ஷேத்திரம் பெயர் பெற்றது. அதனாலேயே நரசிம்மர் சிங்க முகத்துடன் குருவாகவும் யானை வடிவிலான கணபதியின் துணையுடன் இறைவனாகவும் திகழும் தலம்.இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் நீராடினால் எதிரிகளிடமிருந்து விடுதலையும், வியாதி நிவர்த்தியும், சக்கிர தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் போகும் என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீகுருநரசிம்மர் மேற்குத் திருமுகமாக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கின்றார். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபூர் சாலையில் உள்ள சாளக்கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

21.ஸ்ரீபோக நரசிம்மர், பெலகுளா, மாண்டியா, கர்நாடகா.

இக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. கோயில் அருகே குருகுலம் உள்ளது. காவேரி நதியும் ஒரு வாய்க்காலும் கோயிலின் இருபுறங்களிலும் ஓடுகிறது.  12-ம்
நூற்றாண்டைச் சேர்ந்த 16 கால் மண்டபம் உள்ளது. சோழர் கல்வெட்டுகள் அவர்கள் பெலகுளாவில் ஆட்சி புரிந்ததை விளக்குகிறது. கி.பி.1117 கல்வெட்டின்படி ஹொய்சலா சாம்ராஜ்ய மன்னன் விஷ்ணுவர்த்தன் சோழர்களை வென்ற செய்தியும் அவன் அடைந்த பட்டங்களும் விவரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஹொய்சலா மன்னர்கள் இவ்வாலய பராமரிப்பில் தொடர்ந்து திருப்பணிகள் செய்துள்ளனர்.

ஸ்ரீபோக நரசிம்மர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் நாற்கரங்களுடன் சங்கு சக்கர அபய வரத ஹஸ்தத்துடன் அமர்ந்த கோலத்தில் கிழக்குத் திருமுகமாக அருட்பாலிக்கிறார்.
இக்கோயில் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணம் வட்டம் பெலகுளா கிராமத்தில் அமைந்துள்ளது.

22.ஸ்ரீலட்சுமி நரசிம்மஸ்வாமி, நரசிம்மபள்ளி, கரீம்நகர், தெலுங்கானா.

இத்தலத்து பெருமாள் மூலஸ்தானத்தில் லட்சுமி நரசிம்மராக சங்கு, சக்கர தாரியாக அபய ஹஸ்தத்துடன் மகாலட்சுமியுடன் உள்ளார். சுவாமி சுயம்பு. மலையில் உள்ள உருண்டை வடிவ பாறாங்கல் மீது விசேஷமாக உக்ர ரூபமாக 16 கரங்களோடு காட்சி தருகிறார். அர்த்த மண்டபத்தின் மேல் எண் கோணங்கள் மற்றும் ஆறு கோணங்களுடன், பாறாங்கல்லில் கூரை நிற்பதற்கு ஏதுவாக வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றி தெய்வங்களும், பிரகலாதன் போன்ற சிலைகள் பல மலைக்கற்களில் தூர்ந்து போய்விட்டன. மலையினை அனுசரித்தே பெரும்பாலான நரசிம்மர் கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மிகப்பழமையான 8 கால் மண்டபம் பூமியிலிருந்து ஆளுயர மேடையில் அழகுற உள்ளது. அதற்கு வெளிப்புறம் உள்ள மண்டபத்தின் கூரை யாவும் சிதலமடைந்து காணப்படுகிறது. ஸ்ரீலட்சுமி நரசிம்ம கோயில், தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டம், கங்காதர் மண்டலத்திற்குட்பட்ட நரசிம்மபள்ளியில் அமைந்துள்ளது.

23. ஸ்ரீலட்சுமி நரசிம்மர், சிங்கோடம், மஹ்பூப் நகர், தெலுங்கானா.


பதினோரு தலைமுறைக்குமுன் சுரபி தேசத்து சிங்கமலையன் என்கிறவன் காலத்தில் உழவன் உழுதபோது சிவலிங்கம் தட்டுப்பட்டுள்ளது. அதனை இடம் பெயர்த்தும் அது மீண்டும் மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேர்ந்தது. ஸ்ரீமந் நாராயணனை இந்த உழவன் வேண்ட மன்னன் கனவில் தோன்றி தான் சிவனே என்றும் கல்லல்ல என்று கூறி ஆலயம் எழுப்பச் சொன்னார்.

இத்தலத்திலிருந்து அரை கி.மீ. தள்ளி ரத்னகிரி குன்றில் ரத்னலட்சுமி அம்மையாரும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கி.பி.1857-ல் ராணி ரத்னமாம்பாவினால் சென்னையிலிருந்து செய்யப்பட்டு இந்தத் தாயார் சிலை கொண்டுவரப்பட்டுள்ளது. சிவலிங்க ரூபத்தில் நரசிம்மர் உள்ளதால் இது சிவா- விஷ்ணு க்ஷேத்திரமாகவே உள்ளது. சுவாமி விக்ரஹம் நித்தமும் வளர்ந்து வருகிறது.  லட்சுமி நரசிம்மர் லிங்க வடிவில் உள்ளார். தெலுங்கானா மாநிலம் மஹ்பூப் மாவட்டம், கொல்லாபூர் வட்டம் சிங்கோடம் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சிலர் சிங்கப்பட்டணம் என்றும் இத்தலத்தை அழைக்கின்றனர்.

24.ஸ்ரீவேதகிரி நரசிம்மர், நரசிம்ம கொண்டா நரசிம்மபுரம் நெல்லூர், ஆந்திரா.

9-ம் நூற்றாண்டில் நரசிம்ம பல்லவன் திருப்பணி செய்துள்ளான். 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில். 13-ம் நூற்றாண்டு வரை விக்ரமசிங்கபுரம் என்று அழைக்கப்பட்டது. வடபெண்ணையில் நெல்லூர் தலப்பகிரி ரங்கநாதர் சேவை சாதிக்க தென் பெண்ணையாற்றின் கரையில் இப்பெருமாள் அருட்பாலிக்கிறார்.

புராணத்தின்படி மலையகிரி என்கிற ரெக்கைகள் கொண்ட மலை கன்னியாகுமரியிலிருந்து ஹிமாலயம் நோக்கி பறக்கும்போது நான்கு பாகங்கள் விழுந்து நரசிம்மர் தலங்களாக உருவாகியுள்ளன. அவை மங்களகிரி, யாதகிரி, நந்தகிரி மற்றும் வேதகிரியாகும். இரண்டு மூலவர் உள்ளனர். மேலே ஆஜானுபாகவாக எட்டடி உயர வேதகிரி நரசிம்மரும் கீழே லட்சுமி நரசிம்மரும் சேவை சாதிக்கின்றனர். பிரார்த்தனைத்தலம்.

இதய நோய், புற்று நோய் போன்ற நோய்களுக்கு நிவர்த்தி அளிக்கும் தலம். விஷக்கடியால் ஏற்பட்ட தொல்லைகளையும் போக்கும் தலம். வெங்கடாஜலபதி இம்மலையில் கால் பதித்து யாகங்கள் செய்துள்ளார். ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் ராமர் விஜயம் செய்துள்ளார். ஸ்ரீவேதகிரி நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் இருவரும் அமர்ந்த திருக்கோலத்தில் அருட்பாலிக்கின்றனர். ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் நரசிம்ம கொண்டா நரசிம்மபுரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

25.ஸ்ரீஉக்ர நரசிம்மர், பெண்ணா அஹோபிலம், அனந்தபூர், ஆந்திரா.


உரவகொண்டா அருகே உள்ள பெண்ணா நதியின் நீர்வீழ்ச்சி அருகே உள்ள 2800 அடி உயர மலை உச்சியில் உக்ர ஸ்தம்பத்திலிருந்து நரசிம்மர் வெளிப்பட்டதாகவும், இத்தலத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ரக்த குண்டம் என்கிற குளத்தில் நரசிம்மர் இரண்ய கசிபு வதத்திற்குப்பின் கைகளைக் கழுவியதாகவும் ஸ்தல புராணம் கூறுகிறது. நரசிம்மரின் பாதம் மேல் இவ்வாலயம் கட்டப்பட்டுள்ளது. (அதுபோன்ற சிலையும் ஆலயத்தில் உள்ளது.) அவரது பாதத்தின் அளவு 5 அடி 3 அங்குலம்.

அவரது மற்றோர் பாதம் கர்னூல் மாவட்ட அஹோபில திவ்ய தேசத்தில் உள்ளது. கி.பி 1472-ல் சதாசிவ ராயர் என்கிற விஜயநகர மன்னன் திருப்பணி செய்துள்ளான். கீழே உள்ள ஓர் சுரங்கம் வழியாக ஆலய அபிஷேக தீர்த்தம் பெண்ணையாற்றில் கலக்கிறது. எனவே உள்ளே தீர்த்தம் கிடையாது. உதாலக மகரிஷிக்கு நரசிம்மர் காட்சி கொடுத்த தலம். தாயார் பெயர் உத்பவ மகாலட்சுமி. கல்லிலிருந்து உற்பத்தியாகி வெளிப்படுவது போன்ற தோற்றம். சாளுக்கிய மன்னன் இரண்டாம் கீர்த்திவர்மன் போன்ற பலரின் கல்வெட்டுகள் 8-ம் நூற்றாண்டு முதல் 16-ம் நூற்றாண்டு வரை உள்ளன. நரசிம்ம புக்க என்கிற இடத்தில் மரத்தின் வேர்களிலிருந்து இன்றும் நீர் ஊற்று உள்ளது. இவ்விடத்தில் இரணிய வதம் நடந்தது என்பது ஐதீகம்.

ஏப்ரல் மாதம் பிரம்மோற்சவம். உக்ர நரசிம்மர் மகாலட்சுமியுடன் நாக்கை வெளியில் நீட்டிய வண்ணம் அமர்ந்த திருக்கோலத்தில் உள்ளார். அருகில் ஆதிலட்சுமி, செஞ்சுலட்சுமி உள்ளனர். எகுவ அஹோபிலம், திகுவ அஹோபிலம் மற்றும் இந்த ஆலயம் என 3 வகைகளாகக் கூறுவர். ஏறுவது, இறங்குவது (எகுவ, திகுவ) என்று பொருள். பிரகலாத வரத நரசிம்மர் திகுவ அஹோபிலத்தில் உள்ளார். இவர் உக்ர நரசிம்மர். இக்கோயில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் ரயில் நிலையம் அடுத்த உரவக் கொண்டாவிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள பெண்ணா அஹோபிலம் என்ற பகுதியில் அமைந்துள்ளது.

கே.சாய்குமார்