பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் கும்பாபிஷேகம் செய்யாத கோயில்களின் சாந்நித்திய பலம் குறைய வாய்ப்பு உண்டா?* தெளிவு பெறுஓம்

* கும்பாபிஷேகத்தில் பல வகைகள் உண்டு. அஷ்டபந்தனம், ரஜதபந்தனம், ஸ்வர்ணபந்தனம் என்று ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு விதமாக தேவதைகளை பிரதிஷ்டை செய்திருப்பார்கள். பந்தனம் என்றால் கட்டிவைத்தல் அல்லது கட்டுக்குள் வைத்திருத்தல் என்று பொருள் கொள்ளலாம். கும்பாபிஷேகத்தின்போது அஷ்டபந்தனம் என்று சொல்லப்படும் எட்டு வகையான மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மருந்தினைக் கொண்டு சிலைகளை பிரதிஷ்டை செய்வார்கள். இதற்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் என்று பெயர்.

12 ஆண்டுகளில் இந்த அஷ்டபந்தன மருந்தானது தனது சக்தியை இழந்துவிடும். இந்த காரணத்தால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற விதியினை வகுத்திருக்கிறார்கள். 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் பழைய மருந்தினை எடுத்துவிட்டு, புதிதாக அஷ்டபந்தன மருந்தினை சாத்தி கும்பாபிஷேகம் செய்வார்கள். இதனை ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் என்று பத்திரிகையில் குறிப்பிட்டிருப்பார்கள். ஒரு சில ஆலயங்களில் ரஜதம் என்று அழைக்கப்படுகின்ற வெள்ளியினை உருக்கி சிலையின் அடிப்பாகத்தில் பந்தனம் செய்திருப்பார்கள். இதற்கு ரஜதபந்தனம் என்று பெயர். இவ்வகை ஆலயங்களில் 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வது வழக்கம்.

பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஸ்வர்ணம் என்று அழைக்கப்படும் தங்கத்தினை உருக்கி அதனைக் கொண்டு பந்தனத்தை அமைத்திருப்பார்கள். இவ்வாறு ஸ்வர்ணத்தைக் கொண்டு பந்தனம் செய்யப்பட்ட ஆலயங்களில் 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வார்கள். இவ்வாறு அந்தந்த ஆலயத்தில் செய்யப்பட்டிருக்கும் பிரதிஷ்டையின் அடிப்படையில் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற விதிமுறை மாறுபடும். பொதுவாக பெரும்பாலும் சிறிய ஆலயங்களில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அஷ்டபந்தனம் சாற்றப்பட்ட ஆலயங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவசியம் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பழைய அஷ்டபந்தனத்தை அகற்றிவிட்டு புதிதாக அஷ்டபந்தனம் சாற்றுவதால் ஆலயத்தின் சாந்நித்யம் அதிகரிக்கும் என்ற கூற்று உண்மையே. ?இரவில் முகச்சவரம் செய்து கொள்ளக் கூடாது என்று சொல்வது ஏன்? முகத்தை மழித்தல் குறித்து சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன?  - அயன்புரம் த. சத்தியநாராயணன்.

முதலில் ‘முகக்ஷவரம்’ என்பதே அனாசாரம் என்கிறது சாஸ்திரம். அதாவது முகத்தை மட்டும் மழித்தல் கூடாது என்பதை வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்கள். ‘வபன சாஸ்திரம்’ என்ற பெயரில் தர்மசாஸ்திரம் இது குறித்து பல விதிமுறைகளைத் தந்துள்ளது. தலையில் உள்ள முடியைக் கூட இரண்டாக வெட்டக்கூடாது, மழித்தல் வேண்டும் என்பது அதில் உள்ள முக்கியமான விதிமுறை. சிகை என்று சொல்லப்படுகின்ற குடுமி என்பது அந்தணர்க்கு மட்டும் உரித்தானது அல்ல, எல்லா பிரிவினருக்கும் சிகை என்பது உண்டு.

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான சிகை உண்டு. உதாரணத்திற்கு க்ஷத்திரியர்களுக்கு ‘ஊர்த்வ சிகை’ இருக்க வேண்டும் என்பது விதி. அதாவது அரசர்கள், படை தளபதி, போர் வீரர்கள், காவலர்கள் முதலானோர் தலையில் குடுமியை மேல்நோக்கிக் கட்டியிருக்க வேண்டும். இன்னும் ஒரு சில அரசர்கள் ஒவ்வொரு நாட்டை வீழ்த்தி வெற்றிவாகை சூடும்போதும் ஒவ்வொரு கொண்டையாக தலைமீது ஏற்றிக் கொண்டே செல்வார்கள்.

ராஜராஜசோழன் தனது தலையில் மேல்நோக்கியவாறு மூன்று கொண்டைகளை சிகையாக அமைத்திருப்பார்.  சேர நாடு, பாண்டிய நாடு, பல்லவநாடு என்ற மூன்றையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் அவருக்கு மும்முடிச்சோழன் என்ற பெயர் உண்டானது என்று வரலாற்றில் படித்திருப்போம். ஆக முடி என்பது அரசாட்சியையும் குறிக்கிறது. முடிசூடுதல் என்ற வார்த்தைக்கு ஆட்சிபீடத்தில் ஏறுதல் என்று பொருள் காண்கிறோம்.

ஆக தலைமுடிக்கும், ஆட்சிக்கும் சம்பந்தம் உள்ளது என்பதை இதன் மூலம் அறிய இயலும். சுயமாக அதாவது தனக்குத்தானே சவரம் செய்து கொள்ளக்கூடாது. நாவிதரைக் கொண்டே செய்து கொள்ள வேண்டும். முகத்தில் மட்டும் சவரம் செய்து கொள்ளக் கூடாது. முடியை இரண்டாக வெட்டுதல் கூடாது, மழித்தல் வேண்டும். செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் கட்டாயம் வபனம் செய்து கொள்ளக்கூடாது. திங்களும், புதனும் சவரத்திற்கு உகந்த நாட்கள். மாதப் பிறப்பு, சதுர்த்தி, ஷஷ்டி, அஷ்டமி, த்வாதசி, சதுர்த்தசி, அமாவாசை, பௌர்ணமி, சிராத்த நாட்கள் ஆகியவற்றில் சவரம் கூடாது.

சூரிய உதயத்திற்கு முன்னும், பகல் ஒரு மணிக்கு மேலும் சவரம் செய்துகொள்ளக் கூடாது. ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் சவரம் என்பதே கூடாது. சவரம் செய்து கொள்வதற்கு முன் தண்ணீர் தவிர மற்ற எதையும் சாப்பிடக்கூடாது. சவரம் செய்துகொண்டு எண்ணெய் ஸ்நானம் செய்யக் கூடாது. சவரம் செய்யப்படும்போது மௌனம் அவசியம். ஒரே நாளில் தந்தையும் மகனும், அண்ணனும் தம்பியும் சவரம் செய்து கொள்ளக் கூடாது. பிறந்தநாளில் சவரம் செய்துகொள்ளக் கூடாது. இந்த அத்தனை விதிகளையும் நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தார்கள். அன்னியர் ஆட்சிக் காலத்தில் இருந்து ஆங்கிலேய கலாசாரத்திற்கு நாமும் மாறிவிட்டதால் இந்த விதிகளை முற்றிலுமாக மறந்துவிட்டோம். இரவில் முகச்சவரம் ஏன் செய்து கொள்ளக்கூடாது என்று கேட்டிருக்கிறீர்கள்.

மேற்சொன்ன விதிகளைப் படித்துப் பாருங்கள். சூரிய உதயத்திற்கு முன்னரும், பகல் ஒரு மணிக்குப் பின்னரும் முகச்சவரம் கூடாது என்பதும், முகச்சவரத்திற்கு முன்னால் தண்ணீர் தவிர வேறு எதையும் உண்ணக்கூடாது என்றும் வகுத்திருக்கிறார்கள். உங்களுடைய வினாவிற்கான பதில் இந்த விதிகளில் கிடைத்துவிடுகிறது. இந்த விதிகள் மட்டுமல்லாது அனைத்து விதிகளையும் மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். மேற்சொன்ன அனைத்து விதிகளுமே நம் உடல் ஆரோக்கியம் சார்ந்தவை என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள இயலும்.

 முடியை இரண்டாக வெட்டுதல் கூடாது என்கிறார்கள். அந்தணர்கள் தலையின் முன் பகுதியிலும், க்ஷத்திரியர்கள் கழுத்திற்கு சற்று மேலே வட்ட வடிவிலும் மழிக்க வேண்டும் என்ற விதிகள் அவரவர் செய்கின்ற தொழிலில் விருத்தியையும் வெற்றியையும் பெற்றுத் தரும் என்பதையே வலியுறுத்துகிறது. நம்முடைய தலைப்பகுதி, அதாவது கபாலம் என்பது பூமியில் வாழுகின்ற நம்மையும், வானில் இருந்து வருகின்ற தெய்வீக சக்தியையும் இணைக்கின்ற பகுதி என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். அறிவியல் ரீதியாக புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நம்முடைய தலைப்பகுதியானது செல்போன் டவரின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள ரிசீவரைப் போல என்று எடுத்துக் கொள்ளலாம்.

கிரஹங்கள் மற்றும் விண்மீன்களில் இருந்து வெளிப்படுகின்ற கதிர்வீச்சினை மனிதன் மீது இழுத்துக் கொடுக்கின்ற பணியை தலைப்பகுதியானது செய்கிறது. இந்த காரணத்தினால்தான் ஒரு வயது பூர்த்தியாகின்ற சமயத்தில் குழந்தைக்கு குலதெய்வத்தின் சந்நதியில் மொட்டை அடித்து காது குத்துகிறார்கள். ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் சவரமே கூடாது என்று சொல்லப்பட்டதன் காரணத்தை யோசித்துப் பாருங்கள்.

இந்த மாதங்களில் தட்பவெப்ப நிலை என்பது ஒரே சீராக இருக்காது, இந்த மாதங்களில் முடியை மழிப்பதால் உடல் ஆரோக்யம் கெடும் என்பதே அதற்கான காரணம். இவ்வாறு வபன சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விதிகள் அனைத்தும் மனித உடலின் ஆரோக்யம் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தினைக் கொண்டதே ஆகும். பியூட்டி பார்லர்கள் நிறைந்திருக்கும் தற்கால வாழ்வியல் சூழலில் இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று சொல்வதை விட முடிந்தவரை இந்த விதிமுறைகளை கடைப்பிடித்துப் பாருங்கள். குடும்பத்தில் ஆரோக்யமும், செல்வச் செழிப்பும் நிரந்தரமாக நிலைத்திருக்கும்.

* என் பையனுக்கு திருமணம் ஆகிவிட்டது. பெண்ணிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நாங்கள் எல்லோரும் காசிக்கு செல்லலாமா? - ராஜேந்திரன், லால்குடி.

பிள்ளைகளின் திருமணத்திற்கும், காசிக்குப் போவதற்கும் என்ன சம்பந்தம்? காசி என்பது இந்துக்களின் புண்ய க்ஷேத்ரம். இந்து மதத்தில் பிறந்த ஒருவன் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது காசிக்குச் சென்று கங்கையில் குளித்து புண்ணியம் தேட வேண்டும் என்று சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள் சொல்வார்கள். அந்நாட்களில் போக்குவரத்து வசதி என்பது கிடையாது.

போக்குவரத்து வசதியோ அல்லது தொலைதொடர்பு வசதியோ இல்லாத அந்த காலத்தில் காசிக்குச் செல்ல வேண்டும் என்றால் பாதயாத்திரையாக நடந்தோ அல்லது ஆங்காங்கே ஒரு ஊரின் எல்லையில் இருந்து மற்றொரு ஊரின் எல்லை வரை வண்டி கட்டிக் கொண்டோ அந்தந்த பகுதியில் கிடைக்கும் போக்குவரத்து வசதியினைப் பயன்படுத்திக்கொண்டு செல்வார்கள். அவ்வாறு தீர்த்த யாத்திரை செல்பவர்கள் திரும்பி வருவது என்பது அபூர்வம்.

அப்படியே அவர்கள் திரும்பி வருவது என்றால் அதற்கு நீண்ட காலம் பிடிக்கும். அதனால் தாங்கள் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் செய்து முடித்த பின்னர் காசிக்குச் செல்வதை வழக்கத்தில் கொண்டிருந்தார்கள். உயிரோடு திரும்பி வந்தாலும் சரி, காசியிலோ அல்லது திரும்பி வரும் வழியிலோ இறந்து விட்டால் கூட தனது கடமைகளைச் சரிவர செய்து முடித்துவிட்டோம் என்ற உணர்வு அந்த ஆத்மாவிற்கு திருப்தியைத் தந்துவிடும்.

ஆனால், போக்குவரத்து வசதியும், தொலைதொடர்பு வசதியும் மிகவும் எளிமையாகிவிட்ட இந்த காலத்தில் எல்லோராலும் எளிதாக காசிக்குச் செல்ல முடிகிறது. இளம் தம்பதியர் கூட காசிக்குச் சென்று விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் தரிசித்து வருகிறார்கள். காசி என்றால் வயதானவர்கள் மட்டும்தான் செல்ல வேண்டும் என்ற விதிமுறை ஏதும் கிடையாது. சிறு பிள்ளைகள் கூட செல்லலாம். ஒருமுறைதான் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடும் கிடையாது.

அவரவர் வசதிவாய்ப்பு மற்றும் கால அவகாசத்திற்கு ஏற்ப எத்தனை முறை வேண்டுமானாலும் காசிக்குச் சென்று வரலாம். உங்கள் பெண்ணிற்கு இன்னும் திருமணமாகவில்லை என்றாலும் நீங்கள் அனைவரும் குடும்பத்துடன் காசிக்குச் சென்று வரலாம். அதில் எந்தவிதமான தவறும் இல்லை. விஸ்வநாதர்-விசாலாக்ஷியின் அருளால் உங்கள் மகளுக்கு விரைவில் நல்ல வரன் கிடைத்து திருமணத்தை விமரிசையாக நடத்துவீர்கள்.

* மோட்சம் அடைந்தவர்கள் சென்றிருப்பது சொர்க்கத்திற்கா, நரகத்திற்கா என்பதை அறிந்து கொள்ள இயலுமா?  - மீனாவாசன், சென்னாவரம்.


மோட்சம் என்ற வார்த்தைக்கு இறைவனின் திருவடியைச் சென்றடைவது என்று பொருள். மோட்சம் அடைந்தவர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாது. முற்றும் துறந்த சந்யாசிகள், மகாத்மாக்கள், ஞானிகள் என்று இந்த மோக்ஷப்ராப்தி என்பது லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும். உங்களுடைய கேள்வி இறந்தவர்கள் செல்வது சொர்க்கத்திற்கா, அல்லது நரகத்திற்கா என்பதை அறிய இயலுமா என்று எடுத்துக் கொள்ளலாம். அவரவர் செய்கின்ற பாவமும், புண்ணியமும்தான் சொர்க்கத்தையும், நரகத்தையும் தீர்மானிக்கிறது.

பாவம் செய்யாத மனிதன் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது. மனிதனாகப் பிறந்த எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் ஏதேனும் ஒரு பாவத்தினை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும் அதற்குப் பிராயச்சித்தமாக பல்வேறு புண்ணிய காரியங்களையும் செய்கிறார்கள். பாவத்தின் அளவு குறைவாகவும், புண்ணியத்தின் அளவு கூடுதலாகவும் இருப்பவன் முதலில் சிறிது காலம் நரகத்தினையும், அதன் பின்பு நிரந்தரமாக சொர்க்கத்தையும் அடைகிறான். மாறாக புண்ணியத்தைக் குறைவாகவும், அதிகளவில் பாவத்தையும் செய்பவன் முதலில் சிறிது காலத்திற்கு சொர்க்கத்தையும் பின்னர் நிரந்தரமாக நரகத்தையும் அடைகிறான்.

இதனை நாம் எப்படி அறிந்து கொள்வது என்பதே உங்கள் கேள்வி. இறந்து போனவன் சொர்க்கத்தில் வாசம் செய்யும் காலத்தில் அவனது குடும்பம் இந்த பூவுலகில் இன்பத்தை அனுபவிக்கிறது. அவன் நரகத்திற்குச் செல்லும் காலத்தில் அவனது குடும்பமும் வேதனையில் உழல்கிறது. இந்த விதியினை நாம் வாழ்நாளில் நம்மைச் சுற்றியுள்ள குடும்பங்களில் நடக்கின்ற நிகழ்வுகளை வைத்தே தெளிவாகப் புரிந்து கொள்ள இயலும். மேலுலகிற்கும், பூவுலகிற்கும் நிச்சயமாகத் தொடர்பு உண்டு. இதில் இருந்து நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் பாவங்களைச் செய்பவன் நரகத்திற்குச் செல்கிறான் என்பதை நம்மால் பார்க்க முடியுமா என்பதைவிட அவனது குடும்பம் நிச்சயமாக இந்த உலகில் நரக வேதனையை அனுபவிப்பதை பார்க்க இயலும்.

அதே நேரத்தில் புண்ணியம் அதிகமாக செய்தவனின் குடும்பம் அவன் இறந்தவுடன் துவக்கத்தில் அவன் நரகத்தில் வாழும் சிறிது காலத்திற்கு மட்டும் நரக வேதனையை அனுபவித்தாலும் அதன் பின்னர் அவன் நிரந்தரமாக சொர்க்கத்தில் வாழ்வான் என்ற விதிக்கு ஏற்ப சிறிது காலம் கழித்து அவனது குடும்பமும் இந்த உலகத்தில் இன்பமயமான வாழ்வினை அனுபவிப்பார்கள் என்பதையும் அன்றாட வாழ்வில் காண்கிறோம், ஆக அவரவர் செய்கின்ற பாவ புண்ணியத்திற்கு ஏற்ப அவரவர் குடும்பம் அதற்கான பலனை அனுபவிக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.

* தற்கொலை எண்ணம் வரக் காரணம் விதியா, மனப் பக்குவம் இல்லாததாலா? - ஆர்.ஜே. கல்யாணி, திசையன்விளை.

நிச்சயமாக மனப் பக்குவம் இல்லாததே இதற்குக் காரணம். விதி என்பது தற்கொலை எண்ணத்தைத் தராது. விதியை மீறி நடக்கின்ற மதியே இதற்குக் காரணம். விதியை மதியால் வெல்ல முடியும் என்று எண்ணி செயல்படுபவர்கள் தாங்கள் எண்ணிய காரியம் நடைபெறாத போது இந்த எண்ணத்திற்கு ஆளாகிறார்கள். நமக்கும் மேலே ஒருவன் இருக்கிறான், அந்த ஒருவனையே இறைசக்தி என்கிறோம், அந்த இறைசக்தி நம்மை என்றென்றும் காக்கும் என்ற மனப்பக்குவத்தினை உடையவர்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றுவதில்லை.

மாறாக அந்த இறைச்சக்தியின் மீதான நம்பிக்கையை இழந்து தனது மதியை மட்டும் நம்புவர்களுக்கே இந்த எண்ணம் உண்டாகிறது. தற்கொலை எண்ணம் வருவதற்கான காரணம் மனப்பக்குவம் இல்லாததே என்பது மறுக்க முடியாத உண்மை.

திருக்கோவிலூர் K .B ஹரிபிரசாத் ஷர்மா