சரஸ்வதி



* காபபியஙகள காடடும கதாபாததிரஙகள

ராம நாடகம்! ஒவ்வொருவரும் எப்போது வர வேண்டும்; என்ன செய்ய வேண்டும்; செய்ய வேண்டிய செயல்கள் முடிந்ததும், அவர்களின் நிலை என்ன; என்பவைகளைத் தெளிவாக விவரிக்கும் காவியம் ‘ராமாயணம்’. அக்காவியத்தில், பலர் வருவார்கள். ஒரே பரபரப்பாக இருக்கும். பரபரப்பு அடங்கியதும், அவர்களைப் பற்றிய பேச்சே பெரும்பாலும் இருக்காது.
அப்படிப்பட்ட பரபரப்பான ஒரு கதாபாத்திரம் தான் ‘சரஸ்வதி’.

நமக்கெல்லாம் நன்கு தெரிந்த கைகேயி தான், இந்த சரஸ்வதி. மிகுந்த அன்போடு ராமரை வளர்த்தவர் கைகேயி. பெற்ற பாசத்தைவிட வளர்த்த பாசம் அதிகம் என்பார்கள். பாசத்தோடு வளர்த்த கைகேயி, ராமரை ஏன் காட்டிற்கு அனுப்ப வேண்டும்? பரதனுக்கு ஏன் ராஜ்ஜியத்தைக் கேட்க வேண்டும்? - எனும் பலவிதமான கேள்விகளுக்குப் பதில்களைப் பார்க்கலாம் வாருங்கள்!

கேகய நாட்டு மன்னர் - அசுவபதி. இவர் சரஸ்வதியை ஆத்மார்த்தமாகப் பூஜை செய்து வந்தார். இவரால் வழிபடப்பட்ட சரஸ்வதி, காயத்ரீ-சாவித்திரி-சரஸ்வதி என, சூரியன் பத்தினிகளாக மூவரைச் சொல்கிறோ மல்லவா? அந்த மூவரில் மூன்றாமவரான சரஸ்வதியே, அசுவபதி மன்னரால் வழிபடப்பட்டவர். அந்த சரஸ்வதியின் அருளால், எதிர்கால விளைவுகள்; வரும் பாதகங்களில் இருந்து தப்புவது எப்படி? ஆகியவை களை, தன்னை நாடி வரும் மற்ற அரசர்களுக்குச் சொல்லி வழி காட்டுவார்.

அதற்காகப் பல அரசர்கள், அவ்வப்போது வந்து, அசுவபதியைப் பார்த்துத் தங்கள் குறை தீரும் வழியை அறிந்து செல்வார்கள். (அசுவபதியை இனி ‘அரசர்’ என்ற  பொதுப்பெயரிலேயே பார்க்கலாம்). ஒருநாள்... தன் வழக்கப்படி அரசர் ஆத்மார்த்தமாகப்  பூஜையை முடித்தபோது, சரஸ்வதி தேவீ நேருக்குநேராகத் தரிசனம் தந்தாள். பிள்ளைப்பேறு இல்லாத அரசர் வேண்டுகோள் விடுக்க, அன்னை அருள் புரிந்தார்.

அதன் படியே அரசருக்கு ஒரு பெண்குழந்தை பிறக்க, அருள்புரிந்த அன்னையின் திருநாமத்தையே பெயராக வைத்தார் அரசர். கேகய மன்னரின் மகளானதால் அந்த சரஸ்வதியே - கைகேயி என அழைக்கப்பட்டார். (நாமும் இனி கைகேயி என்றே பார்க்கலாம்). தந்தையைப்  பாேலவே, கைகேயியும் எதிர்கால நாட்டு நடப்பு நிகழ்வுகளைக் கணித்துச் சொல்வதில், திறமைசாலியாக விளங்கினாள். ( இதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்). இந்தக் கைகேயிதான் தசரதர் மனைவியர் மூவரில் ஒருவராக ஆனார்.

‘தாய் கையில் வளர்ந்திலன்; வளர்ந்தது கேகயர் கோன் மாமகள் தவத்தால்’ எனும் கம்பரின் வாக்குப்படி, ராமரைப் பெற்ற தாயாகக் கோசலை இருந்தாலும், ராமரை வளர்த்தது கைகேயி. உலக இயற்கைப்படி, அதாவது லெளகிகமாகப் பார்த்தாலும், ‘பெற்ற பாசத்தை விட, வளர்த்த பாசம் அதிகம் ‘ என்பதற்கு இணங்க, ராமரை வளர்த்த பாசம் கைகேயியிடம் இருந்திருக்க வேண்டும்.

வளர்த்த பாசம் இருந்தும், கைகேயி ராமரை எப்படிக் காட்டிற்கு அனுப்பினாள்? கைகேயியைப் பற்றிய சில முக்கியமான உண்மைகளை உணரலாம் வாருங்கள்!  பிறந்த வீட்டில் இருந்தபோதே, தந்தையைப் போலவே எதிர்காலப் பலாபலன்களை நல்ல முறையில் கணித்துச்  சொன்ன கைகேயி, தசரதரின் மனைவியான பிறகு ஒருநாள், அயோத்தியின் எதிர்காலநிலை என்ன என்பதை, ஆராய்ந்து - கணித்துப் பார்த்தாள்.  அதிர்ச்சிகரமான தகவல் வந்தது; “நாளை, யார் அயோத்தியின் அரசராக இருப்பாரோ அவர் அதிவிரைவில் மரணம் அடைவார்” எனத் தெரிவித்தது அத்தகவல்.

கைகேயி மன சஞ்சலத்தில் ஆழ்ந்தாள். அந்த நேரத்தில் தான், தசரதர் வந்து, “ நாளை ராமனுக்குப் பட்டாபிஷேகம்” எனும் தகவலைச் சொன்னார். ஏற்கனவே அயோத்தியின் எதிர்கால நிலையைக் கணித்து, உணர்ந்து வைத்திருந்த கைகேயி, “நாளை பட்டாபிஷேகம் கொள்ளும் ராமன் இறக்கக்கூடாது. பெற்ற பிள்ளையாக இருந்தாலும் சரி! வரும் ஆபத்து, பரதனுக்கு வரட்டும்” என்ற எண்ணத்திலேயே, பரதனுக்குத் தான் ராஜ்ஜியம் என ஒரு வரமும்; ராமரைக் காட்டிற்கு அனுப்ப ஒரு வரமுமாக, இரு வரங்களைப் பெற்றாள்.
தசரதரும் இரு வரங்களையும் தந்தார். ராமர், சீதை, லட்சுமணன் எனும் மூவரும் காட்டிற்குப் போய் விட்டார்கள்.

அவர்கள் காட்டிற்குப் போன நேரத்தில், பரதனும் சத்ருக்னனும் அயோத்தியில் இல்லை. அவர்கள் இருவரும் தாய் மாமனான யுதாஜித்துடன், கேகயத்தில் இருந்தார்கள். விதிப்படி அந்த நேரத்தில் அயோத்திக்கு அரசராக இருந்தது - தசரதர். கைகேயியின் எதிர்காலக் கணிப்பில் வந்த குறிப்பின் படி, அந்த நேரத்தில் அரசராக இருந்த தசரதர் மரணம் அடைந்தார்.

ராமருடன் சீதை - லட்சுமணன் ஆகிேயார் காட்டிற்குப்  ேபான போது, கைகேயி ஏன் அவர்களைத் தடுக்க வில்லை? - என்ற கேள்வி எழும். இதற்கு இன்னும் சூட்சுமமான காரணங்கள் உண்டு. காட்டிற்கு ராமரை அனுப்பிய கைகேயி, காட்டில் ராமர் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டுமெனும் தகவல்களையும் சொல்லி அனுப்புகிறாள்; “ராமா! பரதன் இங்கு ஆளட்டும். நீ போய்க்காட்டில், முனிவர்களைப் போல சடை முடி தரித்து இருக்க வேண்டும்; அருந்தவம் செய்ய வேண்டும்; புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும்; அனைத்தையும் முடித்துப் பதினான்கு ஆண்டுகள் ஆனதும், திரும்பி வந்துவிட வேண்டும்” என்று சொல்லி அனுப்புகிறாள்.

ஆழிசூழ் உலகெலாம் பரதனே
ஆள நீ  போய்த்
தாழிருஞ் சடைகள் தாங்கி
தாங்கரும் தவமேற்ெகாண்டு
பூழி வெங்கானம் நண்ணிப்
புண்ணியத் துறைகள் ஆடி
ஏழிரண்டாண்டில் திரும்பி வாவென்று
இயம்பினன் அரசன் என்றாள்
(கம்ப ராமாயணம்)

ராமரைக் காட்டிற்கு அனுப்புவதுதான், கைகேயியின் நோக்கமாக இருந்தால், இவ்வளவு விரிவாகச் சொல்லி அனுப்பியிருக்க வேண்டாமே! காரணம்?  எதிர்காலக் காலக்கணக்கு அறிந்திருந்த கைகேயிக்கு, ராமாவதார நோக்கம் நன்கு தெரியும். ராவண சங்காரத்தைப் பற்றியும் தெரியும். ஆகவே, ராவணனைப் பற்றிய தகவல்களை நன்கு அறிந்திருந்த கைகேயி, ராவண சங்காரத்திற்கான வழி வகைகளை, ராமருக்கு எடுத்துரைத்தாள்.

ராவணனைப் பற்றிய அபூர்வமான அந்தத் தகவல்கள்:


ராவணன்  சிவபெருமானிடமிருந்து வரங்களைப் பெற்று, வந்து  கொண்டிருந்தான். வழியில் நாரதர் சந்தித்தார். அவரிடம், “மனிதர்களாகவே அல்லது வானரங்களினாலேயோ எனக்கு முடிவு வரலாம். மற்றபடி வேறு யாராலும் எனக்கு மரணம் வரக்கூடாது என்பதை, வரமாக வாங்கி வந்திருக்கிறேன்” எனச் சொல்லி மகிழ்ந்தான். நாரதர் சிரித்து விட்டார் “ராவணா! உன்னை அறிவாளி என நினைத்தேன்.

இப்படியிருக்கிறாயே! யாராவது, தேவர்களில் ஒருவன், மனிதவடிவம் தாங்கி வந்து உன்னை வதம் செய்து விட்டால்... என்ன செய்வாய்? ஆகையால், மனிதனாக இருந்தாலும் பதினான்கு ஆண்டுகள் பொறி புலன்களை அடக்கித் தவம் செய்தவன் எவனோ, அவன் கையால் மரணம் வரவேண்டும் என, வரத்தை மாற்றி வாங்கிக்கொண்டு  வா!” எனக்கூறினார்.

அதன் படியே, ராவணன் போய், மாற்று வரம் வாங்கி வந்தான். இதை அறிந்த கைகேயி, இதன் காரணமாகவே ராமர் காட்டில் போய் முனிவரைப்போல வாழ வேண்டும். கடுந்தவம் செய்யவேண்டும் என்றெல்லாம் கூறியதோடு, பதினான்கு ஆண்டுகள் எனக் காலக்கணக்கையும் கூறி அனுப்பினாள். இவ்வளவு திட்டம் போட்டு, கைகேயி செயல்படக் காரணம்? கைகேயியின் சொந்த  விருப்பு - வெறுப்புகள் அல்ல! ராவணனின் செயல்பாடுகளே, கைகேயியை இவ்வாறு செயல்படத் தூண்டின.

  ஆம்! ராவணன் அதுவரை செய்த பாவங்கள் எல்லாம், ஒரு வடிவம்  கொண்டு வந்தால் எப்படி இருக்குமோ, அப்படிப்பட்ட வடிவம் கொண்டு கூனியாக வந்தது; கைகேயியிடம்  போய், ராமர் பட்டாபிஷேகத்திற்குத் தடை செய்து, ராமரைக் காட்டிற்கு அனுப்பியது.  இத்தகவல்களைச் சொல்லும் கம்பராமாயணப் பாடல்கள்:

இன்னல் செய்  ராவணன்  இழைத்த தீமை போல்
துன்னரும்  கொடுமனக் கூனி தோன்றினாள் (கம்ப ராமாயணம்)

  ராவணன் அதுவரை செய்த பாவங்களெல்லாம், ஒரு  பெண் உருக்கொண்டு-அதுவும் ஒரு கூனியாக வரக் காரணம்? ராவணன் பெண்களுக்கு இழைத்த தீமைகள் பல. சுவேதத்தீவு பெண்கள் தொடங்கி, சீதாதேவி வரை ராவணன் பெண்களுக்குச் செய்த தீமைகள் ஏராளம். அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல, குபேரனுடைய மருமகளிடம் ராவணன் முறைகேடாக நடந்தான்.  

குபேரன் என்பவன் ராவணனின் அண்ணன். அண்ணனுக்கு மருமகள் என்றால், தம்பியான ராவணனுக்கும் மருமகள் தானே! மருமகளிடமே இவ்வாறு முறைகேடாக நடந்ததால் தான், “ இனி எந்தப் பெண்ணையாவது நீ பலாத்காரம் செய்தால், தலை வெடித்து இறந்து  போவாய்” எனப் பிரம்ம தேவரிடம்  சாபம் பெற்றான் ராவணன்.   இவ்வாறு பெண்களிடம் முறைகேடாக நடந்த ராவணனின் பாவங்கள் அனைத்தும், கூனி எனும் பெண்ணாக வந்தது; கைகேயி என்ற பெண்ணிடம்  போய்ச் சொல்லி, ராமரை சீதையுடன் காட்டிற்கு அனுப்பியது; ராவணன் வாழ்வை முடித்தது. கூனி சொன்னாள்; அதைக்கேட்டுக் கைகேயி ராமரைக் காட்டிற்கு அனுப்பினாள் என்று எண்ணக்கூடாது. காரணத்தைக் கம்பர் சொல்கிறார்.

தீய மந்தரை இவ்வுரை செப்பலும் தேவி
தூய சிந்தையும் திரிந்தது சூழ்ச்சியின் அரக்கர்
மாய வானவர் பெற்ற நல்வரம் உண்மையாலும்
ஆய அந்தணர் இயற்றிய அருந்தவத்தாலும் (கம்ப ராமாயணம்)

கைகேயி ராமரைக் காட்டிற்கு அனுப்பியதற்கான காரணங்களைப் பட்டியலிடத் தொடங்குகிறார் கம்பர், “சூழ்ச்சித் திறன் மிகுந்த அரக்கர்கள் அழிய வேண்டும் என, வானவர் பெற்ற நல்வரத்தாலும், முனிவர்களின் அருந்தவத்தாலும் தான், கைகேயி ராமரைக் காட்டிற்கு அனுப்பினாள் என்பதே , இப்பாடலில் கம்பர் சொல்லும் தகவல்.

அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அருந்தவமும்
துரக்க நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான்

- என அடுத்த பாடலிலும் இக்கருத்தை வலியுறுத்துகிறார் கம்பர். ராவணன் செய்த தீய செயல்கள், கைகேயியைத் தூண்டி ராமரைக் காட்டிற்கு அனுப்பவைத்து, ராவணன் கதையை முடித்தது. கைகேயியைப் பற்றிய அபூர்வமான , ஆழமான இக்கருத்துக்களையெல்லாம், ‘தேதியூர் பெரியவர்’ எனும் ‘சாஸ்திர ரத்னாகரம் தேதியூர் சுப்ரமணிய சாஸ்திரிகள்’ எனும் மகா மேதை விரிவாகச் சொல்லியிருக்கிறார். ஆகவே எந்த விதத்தில் பார்த்தாலும், கைகேயி ஏசப்பட வேண்டியவள் அல்ல !

பி.என் பரசுராமன்