வைகாசி விசாகத்தில் உதித்த சோமாஸ்கந்தர்



ஞான மயமாக விளங்கும் முருகப் பெருமான் வைகாசி விசாகத் திருநாளில் அவதாரம் செய்தார். தேவர்கள் வேண்டுகோளின்படி சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றி, சரவணப் பொய்கையில் விடப்பட்ட ஆறு தீப் பொறிகளிலிருந்து ஆறு குழந்தைகளாக பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி பாலூட்டி வளர்ந்தனர். உமையுடன் சென்ற சிவபெருமான் அவளுக்கு ஆறு குழந்தைகளையும் காட்டினார். அவள் அந்தக் குழந்தைகளையும் எடுத்து ஒருசேர அணைத்தாள். உடனே, முருகப் பெருமான் ஆறு திருமுகங்களும் பன்னிரண்டு திருக்கரங்களும் கொண்ட ஒரே வடிவு கொண்டார்.

வைகாசி விசாகத்தில் உருவானதால் அவருக்கு விசாகன் என்று பெயராயிற்று. அவர்கள் அவரைத் தழுவி மகிழ்ந்தனர். அங்கே சிவபெருமானுக்கும் உமைக்கும் நடுவே முருகப் பெருமான் அமர்ந்தார். இந்த அற்புதக் கோலமே சோமாஸ்கந்தர் என்றழைக்கப்படுகிறது. இந்தக் கோலத்தை ஞானிகள் ஞானம் அருளும் கோலமென்று தனிச்சிறப்புடன் கொண்டாடுகின்றனர்.

இவ்வடிவில் இறைவன் குருவாகவும், அம்பிகை ஞானத்தை அவனிடமிருந்து பெற்று அளிக்கும் மாணவியாகவும் அவர்களிடத்தில் பெற்று அளிக்கும் மாணவியாகவும்  அவர்களிடத்தில் தோன்றும் அறிவே ஆனந்த வடிவாகக் குமரனுமாக விளங்குகின்றனர். முருகன் பேரறிவின் மலர்ச்சியால் ஆனந்த வடிவுடன் விளங்குகிறான் என்பதை உணர்த்தவே தாமரை மலர்களை ஏந்திக் கொண்டு நடனமாடும் கோலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளான்.

வைகாசி விசாக நாளில் சோமாஸ்கந்தரை ஞான பரமேஸ்வராகப் போற்றி வழிபடுகின்றனர். முதன் முதலில் சிவன், உமை, கந்தன் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து சோமாஸ்கந்தராகக் காட்சியளித்த தினம் வைகாசி விசாகமாகும். சில சிவாலயங்களிலும் பெரும்பாலான முருகன் ஆலயங்களிலும் வைகாசி விசாகத்தைக் கடைநாளாகக் கொண்டு பெருந்திருவிழா நடத்தப்படுகிறது.

- ஆட்சிலிங்கம்