வாரணனின் வியத்தகு தரிசனம்* விநாயகர் சதுர்த்தி 2-9-2019

அனுமனோடு ஆனைமுகன்

திருச்சி - உறையூர் நவாப் தோட்டம் என்ற பகுதியில் வயல் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள கோயிலில் ஒரே சந்நதியில் ஆஞ்சநேயர் எழுந்தருளியிருக்க, அவரது வலது பக்கத்தில் விநாயகப் பெருமான் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.  இவர்களை ஒரே சந்நதியில் வழிபட கிரகங்களின் தாக்கம் குறையும் என்பது ஐதீகம்.

ஏகதந்தனும் தட்சிணாமூர்த்தியும்

புதுக்கோட்டை மாநகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது திருக்கோகர்ணேஸ்வரர் திருக்கோயில். தெற்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலில் உள்ள சந்நதி ஒன்றில் விநாயகரும், தட்சிணாமூர்த்தியும் அருகருகே அமர்ந்து காட்சி தருவது விசேஷ அம்சம் எனப்படுகிறது. இதுபோல் வேறு எந்தக் கோயிலிலும் காண இயலாது என்று கூறப்படுகிறது.

மாமன் கோயிலில் மருமகன்


சென்னை-வேடந்தாங்கல் அருகேயுள்ள அம்ருதபுரி என்ற தலத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில். இங்கு அருள்புரியும் விநாயகரை நவகிரக விநாயகர் என்று போற்றுவர். எட்டு அடி உயரம் கொண்ட இந்த விநாயகரின் நெற்றியில் சூரியனும், வயிற்றுப்பகுதியில் சந்திரனும், வலதுகாலில் செவ்வாயும், கீழ்கையில் புதனும், தலைப்பகுதியில் குருவும்-இடதுமேல் கையில் ராகுவும், இடதுகாலில் கேதுவும் காட்சி தருகிறார்கள். மேலும் இவரது பின்புறம் யோக நரசிம்மர் திருஉருவமும் உள்ளது. இவரை வழிபட அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.

திருப்பாச்சூரில் பதினோரு சுமுகர்கள்

விநாயகரை சுமுகர் என்றும் அழைப்பர். அதனாலேயே சுமுகாய நமஹ... என்றும் அர்ச்சிப்பார்கள். ஒருசமயம் மகாவிஷ்ணு அசுரர்களை அழித்த தோஷத்தால் தன்னிடமிருந்த பதினாறு செல்வங்களில் பதினொன்றை இழந்தார். இதனை மீண்டும் பெறுவதற்கு சிவபெருமானை வேண்டினார். அவரது ஆலோசனைப்படி திருபாச்சூர் வாசீஸ்வரர் ஆலயத்தில் பதினொரு விநாயகர்களை பிரதிஷ்டை செய்து மீண்டும் இழந்த செல்வங்களைப் பெற்றார். இதனை உணர்த்தும் விதமாக இக்கோயிலில் பதினொரு விநாயகர்கள் ஒரே இடத்தில் காட்சி தருகிறார்கள். இதில் மூன்று விநாயகர்கள் கிழக்கு பார்த்தும், இவர்களுக்கு பின்புறத்தில் இருபுறமும் இரண்டு சிறிய விநாயகர்களுடன் நடுவில் ஒரு பெரிய விநாயகரும், இடப் புறத்தில் ஐந்து விநாயகர்களும் உள்ளனர். சென்னைக்கு அருகேயுள்ள திருவள்ளூரிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் திருப்பாச்சூர் அமைந்துள்ளது.

முத்தாலங்குறிச்சி முக்குறுணி விநாயகர்

திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி நதிக்கரையில் தட்சிணவாகினியாக வடக்கிலிருந்து தெற்கு முகமாகப் பாயும் கரையோரங்களில் பல கோயில்கள் உள்ளன. அந்த வகையில் ‘முத்தாலங்குறிச்சி முக்குறுணி விநாயகர்’ புகழ் பெற்று விளங்குகிறார். பிரமாண்டமான தோற்றத்தில் காட்சி தரும் இந்த விநாயகருக்கு முக்குறுணி (18 படி) அளவு அரிசியை மாவாக்கி ஒரே ஒரு பெரிய அளவில் மோதகம் செய்து படைப்பார்கள். கூரையில்லாமல் வேப்பமரத்தடியில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் இந்த விநாயகருக்கு கூரை போட முயற்சிக்கையில் பல தடங்கல்கள் ஏற்பட்டன.

அதனால் கூரை போடுவதற்கு அமைக்கப்பட்ட நான்கு கல் தூண்கள் அப்படியே இன்றளவும் உள்ளன.சுமார் இரண்டரை அடி உயரத்துடன் கம்பீரமாக வேப்ப மரத்தடியில் அமர்ந்திருக்கும் இந்தப் பிள்ளையாருக்கு எண்ணெய்க் காப்பு செய்ய வேண்டும் என்றால் பத்து லிட்டர் எண்ணெய் தேவைப்படும். வஸ்திரம் அணிவிக்க எட்டுமுழ வேஷ்டி வேண்டும். இரண்டு பேர் சேர்ந்துதான் வஸ்திரம் சாத்துவார்கள். முப்புரி நூலும், பேழை வயிறுமாக அமர்ந்திருக்கும் கோலத்திலிருக்கும் விநாயகரை பக்தர்கள் அருகில் ஓடும் தாமிரபரணி நதியிலிருந்து நீர் சேகரித்து அபிஷேகித்து வழிபடுவது வழக்கம்.

ஓங்கார வடிவில் லம்போதரர்

வடாற்காடு மாவட்டம், வேலூருக்கு அருகே சேண்பாக்கம் என்ற தலத்தில் செல்வ விநாயகர் திருக்கோயில். இங்கு பதினோரு பொல்லாப்பிள்ளையார்கள் ஓங்கார வடிவில் காட்சி தருகிறார்கள். அதனால் இத்திருக்கோயிலை ‘பிள்ளையார் சபை’ என்று போற்றுகிறார்கள்.

வலம்புரி விநாயகர் ஆலயங்கள்

விநாயகருக்கு 32 மூர்த்தி பேதங்கள் உண்டு. இவற்றுள் வீரகணபதி, உச்சிஷ்டகணபதி, மஹாகணபதி மூன்றும் வலம்புரி கணபதியாகும். ஒருமுறை விநாயக மூர்த்தி பாற்கடலில் நீர்விளையாட்டு காரணமாகச் சென்று அங்கு துயின்ற திருமாலின் மீது துதிக்கையால் நீரை உறிஞ்சி உமிழ்கையில் திருமாலின் கையில் உள்ள சங்கு ஒரு புறம் போய் விழுந்தது, பூத கணத்திலுள் ஒன்று அச்சங்கினை எடுத்து ஊதியது. அச்சங்கினை திருமாலிடம் விநாயகர் வாங்கி அளித்ததால் கணபதிக்கு வலம்புரி கணபதி எனப் பெயர் ஏற்பட்டது. வலம்புரிக்காய் என்ற காய்வகை யாகசாலை திரவியங்களில் ஒன்றாகும். இதே காய் வகையில் இடம்புரிக் காயும் உண்டு. வீரகணபதி, விக்ன கணபதி, வல்லவ கணபதி ஆகியோர் இடக்கையில் சங்கு ஏந்தி இருப்பார்கள்.

சுவாமிமலை அருகில் உள்ள திருவலஞ்சுழி விநாயகர், காரைக்குடிக்கு அருகில் உள்ள பிள்ளையார்பட்டி, சேவல்பட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலினுள் அஷ்டசக்தி மண்டபத்தில் உள்ள ஸ்ரீவல்லபாசமேத மகாகணபதி,
அழகர் மலைக் கோயிலில் உள்ள கணபதி ஆகியோர் வலஞ்சுழி விநாயகர்களே. தமிழ்நாட்டில் உள்ள குடவரைக்கோயில்களில் உள்ள விநாயகர்கள் அனைவரும் வலம்புரி விநாயகர்களே.

சங்கு பாணி விநாயகர்

காஞ்சிபுரம் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன போதிலும் விநாயகரை வணங்கிய பிறகே எந்த காரியத்தையும் தொடங்க வேண்டும் என்ற ஐதீகம் உள்ளது. காஞ்சிபுரத்தில் 25- க்கும் மேற்பட்ட விநாயகர் கோயில்கள் இருக்கின்றன. அவற்றுள் மக்கள் மனதில் இடத்தை பிடித்த தலமாக சங்குபாணி விநாயகர் ஆலயம் உள்ளது. காஞ்சிபுரம் நகர மக்கள் புதிய செயல்களை தொடங்குமுன் முன்பு இந்த தலத்துக்கு வந்து வழிபாடு செய்யத் தவறுவது இல்லை. இத்தல விநாயகர் சங்கில் இருந்து தோன்றியதால் அவருக்கு சங்கு விநாயகர் என்று பெயர் வந்ததாம்.

உலகளந்த பெருமாள். அபிராமேஸ்வரர்  கோயில்களுக்கு மிக அருகில் இந்த விநாயகர் வீற்றிருக்கிறார். காஞ்சியில் புதிதாக வாகனம் வாங்குபவர்கள் சங்குபாணி விநாயகர் முன்பு அதை நிறுத்தி பூஜிப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். மிக, மிக சிறிய அறைக்குள் சங்குபாணி விநாயகர் வீற்றிருக்கிறார். இந்த ஆலயம் ஒரே ஒரு பிராகாரத்துடன் மட்டுமே உள்ளது. பிராகார இடது பக்க மூலையில் சனீஸ்வரன் தனி சந்நதியில் உள்ளார். சனிக்கிழமைகளில் இவரை தரிசனம் செய்து அருள் பெற தொலை தூரங்களில் இருந்தெல்லாம் மக்கள் வருகிறார்கள். காஞ்சிபுரத்தில் ஆன்மிக சுற்றுலா மேற்கொள்ள விரும்பும் அன்பர்கள் இவரை வணங்கி தங்கள் யாத்திரையைத் தொடங்கலாம்.

அருள்மிகு வரதராஜா  பெருமாள் கோயிலிலும் சக்தி வாய்ந்த வலம்புரி விநாயகர் வீற்றிருந்து அருள் செய்கிறார். தனி சந்நதியில் உள்ள இவரையும் வழிபட்டால் உங்கள் தொடக்கங்கள் எல்லாம் வெற்றி கலந்த சுபமாகவே முடியும்.

வைஷ்ணவ விநாயகர்

மதுரை தெற்கு மாசிவீதி, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெருவில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் வீற்றிருக்கும் விநாயகரை ‘வைஷ்ணவ விநாயகர்’ என அழைக்கின்றனர். கருடனைத் தாங்கி இருக்கும் பீடத்தில் கைகளில் சங்கு, சக்கரத்துடன் இவர் காணப்படுகிறார்.

தீங்கு நீக்கு விநாயகர் (விக்ன கணபதி)

ஒரு முகமும் பத்துக் கைகளைக் கொண்டவர். வலது தன்கை முதல், தந்தம், மலரம்பு, தோரட்டி, கோடரி, ஆழி, இடது மேற்கரம் சங்கு, அம்பு, கயிறு, கரும்புவில், பூங்கொத்து, தாங்கிப் பொன்மேனியராக விளங்குபவர்.

சங்கு சக்கர விநாயகர்


தஞ்சாவூர் சக்கரபாணி கோயிலில் விநாயகர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார்.

‘ஓம்’ விநாயகர்

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி-ஒட்டன் சத்திரம் நடுவே அமைந்துள்ளது ‘கன்னிவாடி’ என்னும் கிராமம். இங்குள்ள சோமலிங்க சுவாமி கோயில் வளாகத்தில் வேம்பு மற்றும் வில்வ மரத்தடியில் எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமானை ‘ஓம்’ ‘விநாயகர்’ என்று போற்றுகிறார்கள். காரணம் இவர் ‘ஓம்’ வடிவில் காட்சி தருகிறார். மேலும் இங்கு விநாயகருக்கு எதிரில் அவரது வாகனமான மூஞ்சுருக்குப் பதில் அவரது தந்தையின் வாகனமான நந்தி உள்ளது. இது ஓர் அற்புதமான தரிசனம் என்று போற்றப்படுகிறது.

கணபதி புலே...

கோவாவிலிருந்து மும்பை செல்லும் வழியில் உள்ளது ரத்னகிரி ரயில் நிலையம். இங்கிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் உள்ளது ‘கணபதி புலே’ என்னும் கோயில். இங்கு எழுந்தருளியிருக்கும் விநாயகர், பூமியிலிருந்து வெளிப்பட்ட சுயம்பு விநாயகர் எனப்படுகிறது. இவரது சந்நதியின் நடைபாதையின் மேற்கூரை கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் கதகதப்பாகவும் இருக்குமாம். எல்லாம் இந்த கணபதியின் அருள்பார்வை என்று போற்றப்படுகிறது.

T.R.பரிமளரங்கன், முனைவர் மு. இலக்குமணப் பெருமாள்
படங்கள்: மது ஜெகதீஷ்