விஷ்ணு தலங்களில் விநாயகர்



திருவரங்கம் : ஸ்ரீரங்கத்தில் ப்ரணவாகர விமானத்தின் இடது புறத்தில் உள்ள ஒரு மாடத்தில் விக்னபதி என்ற திருநாமத்துடன் விநாயகர் அருள்கிறார். காஞ்சிபுரம் : சின்னக் காஞ்சியில் வரதராஜப் பெருமாள் கோயிலில் கீழ் பிராகாரத்தில் மேடை மீது உள்ள அறையில் விநாயகர் வீற்றிருக்கிறார். இங்கு முழுவதுமாக விபூதி நிறைந்திருக்கும். எனவே இவருக்கு விபூதி விநாயகர் என்று பெயர்.

திருவல்லிக்கேணி : திரு வல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சந்நதியில், கோபுர வாசலுக்கு மேல் இடது பக்கமாக வலம்புரி விநாயகர் எழுந்தருளியிருக்கின்றார். அவரது திருமேனியில் வெண்ணெய் சாத்தப்படுகிறது.

மோர்கான் - வைரக்கண் விநாயகர் : புனேயிலிருந்து 65 கி.மீ.யில் ‘மோர்கான்’ எனும் கிராமத்தில் மயூரேஸ்வர் எனும் பெயரில் ஒரு விநாயகர் இருக்கிறார். ஆதிசங்கரர் பூஜித்த இந்த விநாயகருக்கு வைரத்தில் கண்கள் பொருத்தப்பட்டுள்ளன. குங்குமத்தால் இவருக்கு இடைவிடாமல் அர்ச்சனை செய்யப்படுகிறது.

வடசேரி - கருத்து விநாயகர் : நாகர்கோவில் நகரின் ஒரு பகுதியான ‘வடசேரியில்’ ‘கருத்து விநாயகர்’ கோயில் உள்ளது. இக்கோயிலில் பக்தர்கள் எலுமிச்சப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்து தங்கள் செய்ய நினைக்கும் காரியங்களுக்கு விநாயகப் பெருமானிடம் கருத்து கேட்கின்றனர். குறிப்பால் கருத்தினை அறிந்து, அதை செயல்படுத்தி நன்மை பெறுகின்றனர். அதனால்தான் இவ்விநாயகரை ‘கருத்து விநாயகர்’ என அழைக்கின்றனர்.