ஏடுக்கும் சக்தி தந்த ஏக தந்தன்பாரத தேசத்தில் ஓடும் அத்தனை ஆற்றங்கரைகளிலும் லட்சக்கணக்கான விநாயகர் கோயில்கள் அமைந்துள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அவை அனைத்தையும் நம்மால் அறிந்து போற்றுதல் இயலாது. எடுத்துக்காட்டாக வைகை ஆற்றின்கரையிலுள்ள வாது வென்ற விநாயகரைக் கண்டு மகிழலாம். மதுரையில் திருஞான சம்பந்தருக்கும், சமணர்களுக்கும் இடையே நடந்த சமயவாதத்தில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்க பாண்டிய மன்னன் அனல் வாதம், புனல்வாதம் ஆகியவற்றை ஏற்பாடு செய்தான்.

அனல் வாதத்தில் சமணர்கள் தோற்றனர். புனல் வாதம் தொடங்கியது. இருவரும் தத்தம் சமய மந்திரத்தை ஏட்டில் எழுதி வைகை ஆற்றில் இடுவதென்றும் எவருடைய ஏடுகள் ஆற்றை நீந்திச் செல்கிறதோ அவர்களே வென்றவர் என்றும் தீர்மானிக்கப்பட்டது. திருஞானசம்பந்தர் வாழ்க அந்தணர் என்ற வாழ்த்துப் பாடலைப் பாடி அதை ஓலையில் எழுதி ஆற்றில் இட்டார். சமணரும் தமது மந்திர ஓலையில் எழுதி ஆற்றில் இட்டார். சம்பந்தர் இட்ட ஓலை ஆற்றை எதிர்த்து நீந்தின. சமணர் இட்ட ஓலைகள் சுழிக்குள் அகப்பட்டது போல நீருள் மூழ்கின. எஞ்சியவை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.

திருஞானசம்பந்தர் விடுத்த ஏட்டைத் தொடர்ந்து குலச்சிறையாரும் வீரர்களும் கரையோரமாகவே பயணித்தனர். ஏறத்தாழ பதினைந்து மைல்களுக்கு அப்பால் அந்த ஏடு நிலை பெற்றது. அப்போது விநாயகர் அந்த ஏட்டை எடுத்து, குலச்சிறையாரிடம் கொடுத்தார். அதை எடுத்துக்கொண்டு அவர் மதுரையை அடைந்து வாதில் வெற்றி பெற்றதை அறிவித்தார் என்பது செவிவழிச் செய்தியாகும். அப்படி ஏடு அணைந்து இடம் இந்நாளில் திருஏடகம் என அழைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளி, பெருமானைப் பாடிப் பரவினார் என்பது வரலாறு.

திருஏடகம் வைகையாற்றின் கரையில் அமைந்துள்ளது. அதன் படித்துறையில் சம்பந்தர் இட்ட ஓலையானது நாற்புறத்திலும் மீன்கள் சூழ நீந்தி வருவது, விநாயகர் அதை எடுப்பது ஆகியவை புடைப்புச் சிற்பங்களாகச் செய்து பொருத்தப்பட்டுள்ளது. இங்கு பாண்டிய மன்னன் விநாயகருக்கு அமைத்த சிறிய ஆலயம் உள்ளது. அந்த விநாயகருக்கு வாது வென்ற பிள்ளையார் என்பது பெயராகும். வாதில் வென்றவர் திருஞான சம்பந்தர் என்றாலும் விநாயகர் அப்பெயரைத் தனதாக்கிக் கொண்டு வீற்றிருக்கின்றார்.

பூசை. ச. அருண வசந்தன்