மலைக்க வைத்த கலைமகள் சிறப்பிதழ்



* உள்ள(த்)தைச் சொல்கிறோம்

சரஸ்வதி பக்தி ஸ்பெஷல் சூப்பர். அட்டைப்படம் முதல் கடைசி பக்கம் வரை சரஸ்வதி அவதாரங்கள் கலைநயமிக்க கலைவாணி  கட்டுரைகள், படைப்புக்கள் தந்த ஆன்மிகத்திற்கு மெகா ஹிட் பாராட்டுக்கள்.

- வைரமுத்து பார்வதி, ராயபுரம், சென்னை-13.

கலைகளை அருளும் சரஸ்வதியும் வித்யா தேவியர்களும் என்ற தொகுப்பு வித்தியாசமாகவும் விவரமாகவும் தந்திருந்தது. எங்களுக்கான  வரமேதான். ரோஹிணி முதல் மகா மானசி வரை 16 விதமான தேவியரின் பலன் கூறிய விதம்  ‘ஆன்மிகம்’ பலம் நிறைந்தது என்பதை  புரிய வைத்தது.
- ஆர்.ஜே.கலியாணி, மணலிவிளை.

வாசக பக்தர்கள் செய்த தவம்தான் சரஸ்வதி பக்தியாக ஆன்மிகம் அருள் மழை பொழிந்துள்ளது. சரஸ்வதி பூஜையன்று முழுமையாக  வாசித்தாலே உன்னத பூஜை செய்த உபயோகம் கிட்டி விடுமளவிற்கு உருப்போட வைத்து எங்களை உருப்பட வைத்துள்ளீர்கள்.

- ஆர்.விநாயராமன், செல்வ மருதூர்.

பக்கங்கள் நூறுக்குள் பக்குவமாக ஆய கலைகள் அனைத்தையும் அடுத்தடுத்து அடுக்கடுக்காக ஆன்மிக மிடுக்கோடு தொகுத்தளித்து  ‘ஆன்மிகம்’ இதழ் என்பதைத் தாண்டி ஒரு தோப்பாகி அதுவும் ஆனந்தப் பூந்தோப்பாகி நெஞ்சமெல்லாம் களிப்பாக்கி விட்டது.
- ஆர்.ஆர்.உமா.திசையன்விளை.

அக்டோபர் 16-31, 2018 குபேர வாழ்வருளும் ராஜகோபால தந்தரி என்ற கட்டுரை ராஜ கோபால தந்தரியின் அருட்கடாட்சத்தின்  மகிமைகளை மெய்சிலிர்க்கும்படியாக
எடுத்துரைத்திருந்தது.  - இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

சரஸ்வதி என்ற சக்திக்கான விஷயத்தையும், பிரம்மாவின் மனைவியாக ஏன் சரஸ்வதி இருக்கிறாள் என்கிற  தத்துவத்தையும்  தலையங்கத்தில் அருமையாகக் கூறிய ‘கிருஷ்ணா’ அவர்களுக்கு பாராட்டுக்கள்.  - ஆர்.இ.மணிமாறன், இடையன்குடி.

சரஸ்வதியை, ஏன்? பிரம்மாவின் மனைவி என்கிறோம் என்ற கேள்விக்கு விளக்கம் அருமையாக இருந்தது.
- எஸ்.ஜெயந்தி, கீழ்கட்டளை.

தெளிவுபெறு ஓம் பகுதியில் திருக்கோவிலூர் K.B. ஹரிபிரசாத்தின் அர்த்த புஷ்டியான பதில்களைக் கண்டு தெளிவு பெற்றோம். மாங்கல்ய  தாரண காரணப் பெயர், கருத்தாழம் கோயில் கலசங்களில் நவதானியம் நிரப்பிடும் குணாதிசயம் கம்பு, தானியத்தின் மின் கடத்தல்  ரகசியம். இறந்தபின் செய்யப் படும் கர்மாக்கள் இறந்தபின் ஆத்ம மங்ருத்ர லோகம் அனுப்பி வைக்கும் கர்மா. அதன்பின் முன்னோர்களுடன்  பித்ரு லோகம் அனுப்பி வைப்பது போன்ற  எழுதிய கருத்துக்கள் மெய்ஞானத்தை மட்டுமல்ல. இவ்வுடல் பெற்ற மெய்ஞானத்தையும்  அல்லவா விளக்கியது. - செ.ராஜம் நாராயணசாமி, சிவகங்கை.

வீணை செய்வதற்கு பொறுமை மற்றும் பக்தி கண்டிப்பாக வேண்டும் என்பதையும், வீணை செய்வதற்குரிய மூலப்பொருள்கள் பண்ருட்டி,  சென்னை, பெங்களூரு போன்ற பகுதிகளில் இருந்து வருகிறது என்ற செய்தியும் அறிந்தோம். ஒட்டு வீணை, ஏகாந்த வீணை என்ற  வீணைகளின் வகைகளை அறிந்ததோடு, தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதை அறிந்தவுடன் மெய்சிலிர்த்தது. -  முனைவர்.இராம.கண்ணன், திருநெல்வேலி.

பக்கத்திற்கு பக்கம் சரஸ்வதி பற்றிய சிந்தனை சிந்தை குளிர்ந்தது. சரஸ்வதியும் வித்யாதேவியர்களும் கலைமகள் கைப்பொருள். கலை  அருள்வாள் கலைவாணி, தாராவும் நீல சரஸ்வதியும், அபாரம் அற்புதம் ஆனந்தம் மேலிட்டது. சரஸ்வதி எனும் ஞான நதியின் பிரவாகம்  கட்டுரை அற்புதம். சரஸ்வதி நதியின் இருப்பிடம் யமுனைக்கும் இன்றைய சட்லெஜ் நதிக்கும் இடைப்பட்ட பகுதி என்பதை  விஞ்ஞானப்பூர்வமாக விளக்கியிருந்தீர்கள்.  

- அரிமளம் நாராயணசாமி, R. தளவாய்.
பெங்களூரு-76.

மகாபாரதம் அடுத்த இதழில்...