நான்கு முழ ஆடையிருக்க எண்பது கோடி ஆசை ஏன்?



குரலின் குரல்  94

உணவு, உடை, உறையுள் ஆகிய மூன்றும் மனிதர்களின் அடிப்படைத் தேவைகள். உலகிலுள்ள அனைத்தைப் பற்றிய செய்திகளையும்  தாங்கியுள்ள திருக்குறளில் தமிழர்கள் அணிந்த உடைகள் பற்றிய செய்திகளும் இருப்பது இயல்புதானே?  நட்பைப் பற்றிப் பேசும்போது  உடையை உவமையாக்குகிறார் வள்ளுவர்.   ஒருவரின் இடுப்பில் இருக்கும் ஆடை சற்றே நழுவுமானால் உடனே அவரது கை பாய்ந்து  சென்று அந்த ஆடையை நழுவாமல் தடுக்கும். ஒரு கணநேரம் கூட அவ்விதம் செய்வதைக் கை தாமதப்படுத்துவதில்லை. அது இயல்பான  நிகழ்வு. அதுபோல நண்பன் ஓர் இடுக்கண்ணில் அகப்பட்டுத் துன்பப்படுவானேயானால் அந்தத் துன்பத்தைப் பாய்ந்து சென்று களைவதுதான்  நட்பு. நண்பனின் துன்பத்தைப் பார்த்துக் கொண்டு வாளாவிருப்பது நட்பல்ல.

`உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு’
(குறள் எண் - 788)

நட்பு என்று தலைப்பிட்ட அதிகாரத்தில் அமைந்துள்ள குறள் இது.   பொறாமையால் ஏற்படும் தீய விளைவுகளைப் பற்றிப் பேசுகிறது  `அழுக்காறாமை’ என்ற அதிகாரம். அதில் ஒரு குறள், உடையைப் பற்றிச் சொல்கிறது.

`கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.’
(குறள் எண்- 166)

ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதைப் பொறாமையால் இன்னொருவன் தடுப்பானாகில் அந்த இன்னொருவன் மட்டுமல்ல, இன்னொருவனின்  சுற்றத்தார் கூட உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடுவார்கள் என்கிறார் வள்ளுவர்.   சுற்றத்தார் கூட உணவும் உடையும் கிடைக்காமல்  திண்டாடுவார்கள் என்று வள்ளுவர் ஏன் கூறவேண்டும்? அவன் செயலைப் பார்த்துக் கொண்டு சுற்றத்தார் எவ்விதத்திலும் அவனைத்  தடுக்காமல் இருந்தார்கள் இல்லையா? அப்படித் தடுக்காத பாவம் அவர்களைத்தானே சேரும்? அதனால்தான் அப்படி!
உடையைப் பற்றிப் பேசும் இன்னொரு குறள் காமத்துப் பாலில் `தகையணங்குறுத்தல்’ என்ற அதிகாரத்தில் வருகிறது.

 `கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
 படாஅ முலைமேல் துகில்.` (குறள் எண் - 1087)

 மாதர்களின் சாயாத கொங்கைமேல் இருக்கும் துகிலானது, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகபடாம் போல் தோன்றுகிறதாம்.  அவளைப் பார்க்கும் காதலன் சொல்லும் கூற்றாக அமைந்த குறள் இது...    திருக்குறளில் மட்டுமல்ல, பழந்தமிழ் இலக்கியங்களிலும் நம்  புராணங்களிலும் உடை பல்வேறு வகைகளில் பேசப்படுகிறது.

  அவ்வையாரின் நல்வழி நூலில் உள்ள ஒரு வெண்பா, எல்லா மனிதர்களுக்கும் உண்பது நாழியளவு தான், உடுப்பது நான்கு முழம்தான்,  பிறகு அளவுக்கு மீறி ஆசைப்பட்டு வாழ்வில் சஞ்சலம் கொள்வது ஏன் என்று வினவுகிறது.

`உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்!’

நாழி உணவும் நான்கு முழ ஆடையும் போதுமானதாய் இருக்க, எண்பது கோடி விஷயங்களுக்கு ஆசை கொள்வது ஏன்? மண்கலம்போல்  உடையப்போகும் வாழ்வில் அளவுக்கு மீறிய ஆசை எப்போதும்  சஞ்சலத்தையே தரும் என்கிறார் அவ்வை. மானம் மறைக்க நான்கு முழம்  போதுமென்றாலும் மனிதர்கள் எத்தனை வகை ஆடைகளில் நாட்டம் கொள்கிறார்கள்!
மகாத்மாகாந்தி மிக எளிய ஆடைகளை அணிவதென்று, நம் தமிழகத்தைச் சார்ந்த மதுரையில்தான் முடிவெடுத்தார். பின்னர் தம்  வாழ்நாளின் கடைசி நாள்வரை, இடுப்பில் ஒரு வேட்டியும் மேலே ஒரு துண்டுமாக மட்டுமே காட்சி தந்தார்.

ஏழைகளின் பிரதிநிதியாகத் தன்னைக் கருதிய காந்திஜி, ஏழைகளின் உடையைத் தாம் அணிவதே பொருத்தம் என அத்தகைய  ஆடைகளைத் தேர்வு செய்துகொண்டார்.    
பாஞ்சாலிக்குக் கண்ணன் ஆடை கொடுத்து மானத்தைக் காத்த மகாபாரதக் கதையை நாம் அறிவோம். கண்ணனின் இளமைக் காலத்தில்  அவன் விரலில் ஒரு காயம் பட்டு ரத்தம் சொட்டியபோது பதறினாளாம் பாஞ்சாலி. தான் கட்டியிருந்தது விலையுயர்ந்த பட்டுத் துணி  என்பதைக் கூடப் பாராமல், அதைக் கிழித்து கண்ணனின் காயத்தின்மேல் அவசர அவசரமாகக் கட்டி மேலும் குருதி வடியாமல்  தடுத்தாளாம். அதற்குப் பிரதிபலனாகத்தான் கண்ணன் கெளரவர் சபையில் அவளது ஆடையை வளரச் செய்து அவள் மானத்தைக் காத்தான்  என்று ஒரு கதை இருக்கிறது.

 துச்சாதனன் துகிலுரியத் தொடங்கியபோது பாஞ்சாலி உள்ளம் உருகிக் கண்ணனைத் துதித்ததையும் துகில் வளர்ந்ததையும் பாரதியார்  பாஞ்சாலி சபதத்தில் உணர்ச்சி பொங்க எழுதுகிறார்:

`வையகம் காத்திடுவாய் - கண்ணா
   மணிவண்ணா என்றன் மனச்சுடரே!
ஐய நின் பதமலரே - சரண்
  ஹரி ஹரி ஹரி என்றாள்!
பொய்யர்தம் துயரினைப் போல் - நல்ல
  புண்ணிய வாணர்தம் புகழினைப் போல்
தையலர் கருணையைப் போல் - கடல்
  சலசலத்தெறிந்திடும் அலைகளைப் போல்
பெண்ணொளி வாழ்த்திடுவார் - அந்தப்
  பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல்போல்
கண்ணபிரான் அருளால் - தம்பி
  கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்
வண்ணப் பொற் சேலைகளாம் - அவை
  வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே!
எண்ணத்தி லடங்காவே - அவை
  எத்தனை எத்தனை நிறத்தனவோ!
பொன்னிழை பட்டிழையும் - பல
  புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய்
சென்னியிற் கைகுவித்தாள் - அவள்
  செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே
முன்னிய ஹரிநாமம் - தன்னில்
  மூளுநற் பயனுல கறிந்திடவே
துன்னிய துகில் கூட்டம் - கண்டு
  தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட்டான்!’

 பாரதி உள்ளம் ஈடுபட்டுப் பாடிய இந்த பக்தி மணம் கமழும் வரிகளைப் படிக்கும்போது நம் மனம் பரவசத்தில் ஆழ்கிறது. மலைமகள்,  அலைமகள், கலைமகள் என்ற முப்பெருந் தேவியரில், கலைமகள் வெள்ளை ஆடை உடுத்திக் காட்சி தருபவள்.

`வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியா சனத்தில் அரசரோ டென்னைச்
சரியாசனம் வைத்த தாய்.’

- என்று பாடுகிறார் கவிகாளமேகம். கலைமகளின் அருள் பெற்றுத் தாம் கவிபுனைவதால் அரசருக்கிணையாக சமமான ஆசனத்தில்  வீற்றிருக்கும் தகுதி பெற்றது பற்றிக் காளமேகத்திற்குப் பெருமிதம். அதற்குக் காரணமான அன்னை கலைவாணியைப் போற்றி எழுதப்பட்ட  வெண்பா இது. கலை என்பது உடைக்கான பழந்தமிழ்ச் சொல். சரஸ்வதி வெள்ளை ஆடை புனைபவள் என்பதையே `வெள்ளைக் கலை  உடுத்து’ என்ற சொற்களால் குறிக்கிறார், அவர்.  

 சிவபெருமான் புலித்தோலை ஆடையாக அணிபவர்.
 `பொன்னார் மேனியனே! புலித்தோலை அரைக்கசைத்து
  மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே!
  மன்னே மாமணியே மழபாடியுள்
மாணிக்கமே!
  அன்னே நின்னையல்லால் வேறு யாரை நினைக்கேனே!’

என்று புலித்தோல் அணிந்த சிவபெருமானைப் பாடிப் பரவுகிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.  தெய்வங்கள் மட்டுமல்ல, பக்தர்களும்  ஆடைகளால் தங்களை வேறுபடுத்திக் கொண்டு தாங்கள் யாருடைய பக்தர்கள் என்பதை அறிவிக்கிறார்கள். ஐயப்ப பக்தர்கள் கறுப்பு ஆடை  அணிகிறார்கள். முருகனது அடியவர்கள் பச்சை ஆடைஅணிந்து அறுபடை வீடு செல்கிறார்கள். மேல்மருவத்தூர் பராசக்தி அடியவர்களான  சகோதரிகள் சிவப்பு ஆடையில் காட்சி தருவதைப் பார்க்கிறோம்.

வள்ளலார் போன்ற மிகச் சில துறவிகள் வெள்ளை ஆடை தரித்தாலும் பொதுவாக இந்தியாவில் துறவுக்கான நிறம் என்று காவியே  கருதப்படுகிறது. சில வண்ண ஆடைகள் மனத்தில் சில உணர்வுகளைத் தூண்டுகின்றன என்றும் நாம் அணியும் ஆடைகளின் நிறத்தின்  மூலம் மற்றவர்கள் மனத்தில் நாம் விரும்பிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும் நம்புகிறவர்கள் உண்டு. அதனால் வாரத்தின் ஏழு  நாட்களுக்கும் இன்னின்ன ஆடை என வகுத்துக் கொண்டு அந்தந்த நாட்களில் அந்தந்த வண்ண ஆடைகளையே
அணிபவர்களும் உண்டு.   கடையெழு வள்ளல்களில் ஒருவனான பேகன் மயிலுக்குக் குளிருமே எனக் கருணை கொண்டு அதற்குப்  போர்வை போர்த்தினான் என்கிறது சங்ககால வரலாறு.

`கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகன்.’

- என்று இச்செய்தியை பத்துப்பாட்டில் ஒன்றான, நல்லூர் நத்தத்தனார் எழுதிய சிறுபாணாற்றுப் படை பேசுகிறது.  கிடைத்தற்கரிய ஆடை  நீல நாகத்தின் ஆடை. அது கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் என்பவனுக்குக் கிடைத்தது. ஆனால் ஆலமரத்தின் அடியில்  அமர்ந்திருக்கும் சிவபெருமானுக்கு அந்த ஆடையை வழங்கிவிட்டான் அவன். இந்தச் செய்தியையும் சிறுபாணாற்றுப் படையில் காணலாம்.

`நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும்.’

- புகழேந்திப் புலவர் நளவெண்பாவில் நளனுக்கு கார்க்கோடகன் என்ற ஒரு பாம்பு ஆடை கொடுத்ததைப் பற்றி எழுதுகிறார். நளன்  பகைவர்கள் அறியாதவாறு மறைந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டதால் கார்க்கோடகப் பாம்பு அவனைக் கடித்து விஷத்தால் அவன்  நிறத்தையும் வடிவத்தையும் மாற்றுகிறது. முற்றிலும் தன் உரு மாறிவிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நளனிடம் அது, தான் அவனுக்கு  உபகாரமே செய்திருப்பதாக விளக்குகிறது.

இனிப் பகைவர்கள் அவனை அடையாளம் காண இயலாது என்று சொல்லி தன் ஆடை ஒன்றையும் அது நளனுக்குக் கொடுக்கிறது.  தோலுரிக்கும் பழக்கமுள்ள பாம்பின் தோலாடையாகத்தான் அது இருக்க வேண்டும். பின்னாளில் நளனுக்கு அவனது பழைய உருவம்  தேவைப்படும்போது அந்த ஆடையை அணிந்தால் அவன் மீண்டும் பழையபடி மாறுவான் என அது தெரிவித்து ஊர்ந்து சென்று மறைகிறது.

`கூனிறால் பாயும் குவளை தவளைவாய்
தேனிறால் பாயும் திருநாடா!- கானில்
தணியாத வெங்கனலைத் தாங்கினாய் இன்று
அணியாடை கொள்கென்றான் ஆங்கு!’
`சாதி மணித்துகில் நீ சாத்தினால்
தண்கழுநீர்ப்
போதின்கீழ் மேயும் புதுவரால் - தாதின்
துளிக்குநா நீட்டும் துறைநாடர் கோவே
ஒளிக்குநாள் நீங்கும் உரு!’

பாரதிதாசன் நீல வானத்தை ஆடை என்றும் அதில் உடலை மறைத்துக் கொண்டு நிலவு தன் முகத்தை மட்டும் காட்டுவதாகவும்  அழகியலில் மேலோங்கிய ஒரு
கற்பனையைப் படைத்துள்ளார்.

`நீலவான் ஆடைக்குள் உடல்மறைத்து
 நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை!
கோலமுழுதும் காட்டிவிட்டால் காதல்
 கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்
 சொக்கவெள்ளிப் பாற்குடமோ அமுத ஊற்றோ?
காலைவந்த செம்பரிதிக் கடலில் மூழ்கிக்
 கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ!’

ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வேறு உடைகள் என்பது பொதுவாக உலகெங்கும் உள்ள பண்பாடு. தமிழகத்தில் மணலூர் மணியம்மை  என்று ஒரு பொதுவுடைமை வீராங்கனை இருந்தார். அவரின் சரிதத்தை `பாதையில் பதிந்த அடிகள்’ என்ற தலைப்பில் அமரர் ராஜம்  கிருஷ்ணன் ஒரு நாவலாக எழுதியுள்ளார். மணியம்மை தன்னை ஆணுக்கு நிகராகக் கருதி வேட்டி கட்டியே வாழ்ந்தார் என்பது  வியப்பிற்குரிய ஒரு வரலாற்று உண்மை.

சில ஆடைகள் காலப்போக்கில் மாறுகின்றன. மறைகின்றன. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வட இந்திய உடையாகக் கருதப்பட்ட  சுடிதார் இப்போது ஏறக்குறைய பெண்களின் தேசிய உடையாகிவிட்டது. இரு சக்கர வாகனங்களை ஓட்டும் பெண்களுக்குச் சேலையை விட  சுடிதார்தான் வசதியான உடையாக அமைகிறது. பெண்களின் உடைகளில் பாவாடை என்ற ஓர் உடை முன்னர் இருந்தது. `பாவாடை  தாவணியில் பார்த்த உருவமா?’ என்று திரைப்பாடல் கூட வந்தது. நிச்சய தாம்பூலம் திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதி விஸ்வநாதன்  ராமமூர்த்தி இசையமைத்து டி.எம்.செளந்தரராஜன் பாடிய புகழ்பெற்ற பாடல். ஆனால் இன்று பாவாடை தாவணி அணிந்த உருவங்களைப்  பார்ப்பதே அபூர்வம். அந்த உடைகள் ஏறக்குறைய வழக்கிழந்து விட்டன.

ஹைதராபாத் அருங்காட்சியகத்தில் ஓர் அபூர்வமான கற்சிலை இருக்கிறது. அது ஒரு பெண்ணின் சிலை. அவள் மெல்லிய சல்லாத்  துணியால் தன் முகத்தை மூடியிருப்பதைப் போல் சிற்பி செதுக்கியிருக்கிறான். அந்த மெல்லிய துணியின் ஊடாக உள்ளே அவளது  விழிகள் நாசி உதடு போன்றவையெல்லாம் நிழல்போல் தெரிவதாகவும் அந்தச் சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது. கல்லில் உள்  உறுப்புக்களைச் செதுக்கி விட்டுக் கல்லாலான மெல்லிய துணியை மேலே ஒட்டவைப்பதென்பது இயலாது. அப்படியிருக்க இத்தகைய   ஜாலத்தை அந்தச் சிற்பி எப்படித்தான் நிகழ்த்தினான் என்பது இன்றுவரை பார்ப்போரையெல்லாம் வியக்க வைக்கும் ஒரு சிற்ப அற்புதம்.

பிரபல எழுத்தாளர் அமரர் வல்லிக்கண்ணன், இலக்கியக் கூட்டங்களில் பொன்னாடை போர்த்துவதைப் பற்றி அலுத்துக் கொண்டார்.  பொன்னாடைக்கு பதிலாக ஒரு வேட்டியைப் பரிசாகத் தந்தால், உணவு உடை உறையுள் என்ற அடிப்படைத் தேவைகளில் ஒன்றையாவது  பூர்த்தி செய்துகொள்ள இயலுமல்லவா என அவர் வினவினார். உடுக்கை என்றும் துகில் என்றும் வள்ளுவர் சொல்லும் ஆடை உடலை  மறைக்கப் பயன்பட்ட பயனாடையே அன்றி பகட்டுக்காக அணிவிக்கப்பட்ட பொன்னாடை அல்ல. வாழ்க்கை பயனுள்ளதாக இருக்க  வேண்டும் என விரும்பியவர் வள்ளுவர். பகட்டானதாக இருப்பதை எதிர்த்தவர். குறைந்தபட்சம் வள்ளுவர் விழாக்களிலாவது  பொன்னாடையைத் தவிர்த்துப் பயனாடையைப் பயன்படுத்தலாமே?   

(குறள் உரைக்கும்)
-திருப்பூர் கிருஷ்ணன்