பரமுத்தி அடையுமாறு உன் திருவடியைத் தந்தருள்வாய்அருணகிரி உலா

சித்ரா மூர்த்தி


நடராஜர் கோயிலை உள்வலம் வந்த பின்னர் பரந்து விரிந்து கிடக்கும் வெளிப்பிராகாரத்தை நோக்கிச் செல்கிறோம். சுமார் 45 ஏக்கர்  பரப்பிலான சபாநாயகர் ஆலயத்தின் நான்கு திசைகளிலும் மிகப்பெரிய கோபுரங்கள் நுழைவாயிலுடன் காணப்படுகின்றன. இந்த அனைத்து  வாயில்களிலுமே முருகப் பெருமான் குடிகொண்டிருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது. ‘நீலமாமுகில் எனத் துவங்கும்’ சிதம்பரப் பாடலை  ‘‘நாலு கோபுர வாசல் மேவிய பெருமாளே’’ என்று நிறைவு செய்கிறார், அருணகிரிநாதர்.

  ‘‘கோல மாமயிலேறி வார் குழை
  யாட, வேல் கொடு வீரவார்கழல்
  கோடி கோடிடியோசை போல் மிக மெருதூளாய்க்
கோடு கோவென ஆழி பாடுகள்
  தீவு தாடசுரார் குழாமொடு
  கூளமாக விணோர்கள் வாழ்வற விடும் வேலா
நாலு வேதமுடாடு வேதனை
  யீண கேசவனார் சகோதரி
  நாதர் பாகம் விடாள் சிகாமணி உமைபாலா
ஞான பூமியதான பேர் புலி
  யூரில் வாழ் தெய்வயானை மானொடு
  நாலு கோபுர வாசல் மேவிய பெருமாளே’’

அழகும், பெருமையும் மிகுந்த மயில் மீது ஏறி, செவிகளில் நீண்ட குழைகள் அசைய, திருவடியிலுள்ள வீரக்கழல்கள் இடிபோல் முழங்க,  மேரு பொடியாக, மலைச் சிகரங்கள் கோ என்று கதறி விழ, கடல்கள், தீவுகள், வலிய அசுரர் கோட்டங்கள் குப்பையாக அழிந்தொழிய,  தேவர்குழாம் வாழ்வு பெறும்படி வேலைச் செலுத்தியவனே! நான்கு வேதங்களும் ஓதுகின்ற பிரம்மனை (நாபியிலிருந்து) உண்டாக்கிய  திருமாலின் சகோதரியும் சிவனாரது இடப்பாகத்தில் எப்போதும் குடியிருப்பவளும் ஆகிய பார்வதியின் மைந்தனே!ஞான பூமியும், புலியூர்  என்று பெயர் பெற்றதுமான சிதம்பரத்துக் கோயிலில் தெய்வயானையுடனும் வள்ளியினுடனும் நான்கு கோபுர வாயில்களிலும்  எழுந்தருளியுள்ள பெருமாளே!’’ [சிதம்பரம் ஞானபூமி; அதிலுள்ளது நடராஜரின் ஞானசபை; அங்கு ஞான நடம் புரிகின்றவன் ஆடல்  வல்லான்]

இப்பாடலில் ‘‘காலில் சிலம்பணிந்து அவை ‘கோ’ என்று ஒலிக்க, நடஞ்செயும் விலை மாதர் மயக்கில் மூழ்கி ஏழுநரகில் ஆழ்பவனைக்  காத்தருளும் ஐயா! திருக்கண்கள் பார்த்தருளும் ஐயா! சிவபதம் தந்தருள்வாய்’’ என்று சிவமைந்தனை உருக்கமுடன் பிரார்த்திக்கிறார்.   ‘வாத பித்த மொடு’ எனத் துவங்கும் பாடலிலும் அருமையான வேண்டுகோளை முன்வைக்கிறார் வேத வித்தாகிய இறைவன். இறைவன்  அவரவர் தம் வினைக்கு ஏற்ப துன்பமாகிய கடலில் ஓடவிட்ட ஓடம்போல இந்த உடலை ஆட்டுவிக்கிறான். பலவிதமான வேஷங்களைப்  பூண்டு வருகின்ற நான், பணத்தாசை கொண்டு வீட்டைக் கட்டி, காம விரகில் வீழ்ந்து, உள்ளோசையாகிய நாதம் போய், வீணே இறந்து  விடாமல் முக்தி அளிக்க ஓங்காரமான ஒளி மயிலில் நீ நடனம் புரிகின்ற  பரமானந்த வெளியைப் பெற நான் தியானிக்க அருள்புரிய  மாட்டாயோ என்று வினவுகிறார்.

‘‘வேதவித்து பரிகோலமுற்று விளை
  யாடுவித்த கடலோட மொய்த்த பல
  வேடமிட்டு பொருளாசை பற்றியுழல் சிங்கியாலே
வீடு கட்டி மயிலாசை படடு விழ
ஓசை கெட்டு மடியாமல் முத்திபெற
வீடளித்து மயிலாடு சுத்த வெளி சிந்தியாேதா’’
என்கிற பாடலில் முருகனைப் பற்றிக் குறிப்பிடும்போது
‘‘ஓ நமச்சிவாய சாமி சுத்த வடி
யார்களுக்கும் உபகாரி பச்சைஉமை
ஓர்புறத்தருள் சிகாமணிக் கடவுள் தந்தயேச’’
- என்று பாடுகிறார்.
பாடலின் இறுதியில்...
‘‘ஆசை பெறற குறமாதை நித்தவன
மேவி சுத்த மணமாடி நற்புலியூர்
ஆடகப்படிக ேகாபுரத்தின்மகிழ் தம்பிரானே’’

‘‘உனது அன்பிற்குரிய வள்ளியை, தினம் தினைவனம் சென்று அன்பு செய்து திருமணம் செய்துகொண்டு, நல்ல புலியூர் எனும்  சிதம்பரத்தில் பொன்னும் பளிங்கும்போல் அழகு நிறைந்த கோபுரத்தில் மகிழ்ந்து விளங்கும் தம்பிரானே! என்று நிறைவு செய்கிறார்.

‘முல்லை மலர்’ எனத் துவங்கும் பாடலில்
‘‘தெள்ளு தமிழ் பாடியிட்டாசை கொண்டாட சசி
வலியொடு கூடி திக்கோர்கள் கொண்டாட இயல்
தில்லை நகர் கோபுரத்தே மகிழ்ந்தே குலவு தம்பிரானே’’
- என்றும் கூறுகிறார். [சசிவல்லி= இந்திராணியின் மகள் தேவசேனை]

கிழக்கு கோபுரம் தவிர மற்ற மூன்று கோபுரங்களிலும் சிவன் - பார்வதி திருமணம், முருகன்-வள்ளி திருமணம், முருகன் தெய்வயானை  திருமணம் போன்ற பல திருமணக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. நான்கு கோபுரங்களிலுமே உள்பக்கம் நோக்கியுள்ள பெரிய மாடத்தில்  ஷண்முகர் மயில்மீது அமர்ந்த கோலத்தில் அமைக்கப்பட்டிருந்தார் என்றும், கிழக்கு கோபுரத்திலிருந்த ஷண்முகர் மாடம் கலகக்காரர்களால்  சிதைக்கப்பட்டு விட்டது என்றும் கேள்விப்படும் பொழுது மனம் நொந்து போகிறது.

கீழைச் சந்நதித் தெரு வழியாக வரும்போது கிழக்குக் காவல் மண்டப வாயில் முன்புறத் திண்ணையில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி,  விநாயகர் ஆகியோரைக் காணலாம். விக்கிரம சோழகோபுரம் எனப்படும் கீழைக் கோபுர வாயிலின் தென்புறம் கோபுரத் துவார விநாயகர்  சந்நதிகள் இரண்டும், வடபுறம் கோபுரத்துவார வள்ளி -தெய்வயானை உடனாய முருகன் சந்நதியும் உள்ளன. [இதுவே நாம் கோயிலில்  நுழையும்போது பார்த்த முதல் முருகன் சந்நதி] கிழக்கு கோபுரத்தின் உட்புறத்தில் மேற்கு முகமாக மகிஷாசுரமர்த்தனி வீற்றிருக்கிறாள்.  விநாயகர் சந்நதியின் மேல் தளத்தில் அழகிய சோமாஸ்கந்தர் உருவம் உள்ளது.

கிழக்கிலிருந்து புறப்பட்டு கோயிலின் மிகப் பெரிதான வெளிப்பிராகாரத்தில் நடந்து தெற்கு கோபுர வாயிலை அடைகிறோம். இது  சொக்கசீயன் (முதல் கோப்பெருஞ்சிங்கன்) கோபுரம் எனப்படுகிறது. இங்கு வடக்கு நோக்கிய மாடத்தில் மிகப்பெரிய ஆறுமுக சுவாமியைக்  காணலாம். (இது நடராஜர் கோயிலில் நாம் காணும் ஆறாவது முருகன் சந்நதியாகும்) இவர் குடியிருக்கும் பகுதியின் முன்புறத்தைச் சற்றுப்  பெரிதாக்கிக் கட்டியுள்ளார்கள். கருவறையில் முருகன் ஆனந்த சபாநாயகர் இருக்கும் திசையை நோக்கிய வண்ணம் இருக்கிறார்.  தட்சிணாமூர்த்தி மற்றும் சுதைச் சிற்பமான பெரிய நந்தியை வணங்குகிறோம். தெற்குக் கோபுர வாசலில் அருணகிரியார் ஒரு திருப்புகழ்  பாடியுள்ளார். (இப்பாடலிலும் தாளங்கள் பற்றிய குறிப்பு அழகாக உள்ளது)

‘‘தக்கத் தோகிட தாகிட தீகிட
  செக்கச் சேகண தாகண தோகண
  தத்தத் தானை  டீகுட டாடுடு எனதாளந்
தத்திச் சூரர் குழாமொடு தேர்பலி
  கெட்டுக் கேவலமாய் கடல் மூழ்கிட
  சத்திக்கே இரையாமெனவே விடு கதிர்வேலா
திக்கத் தோகண தவெனவே பொரு
  சொச்சத் தாதையர் தாமெனவே திரு
  செக்கர்ப் பாதமதே பதியா சுதியவை பாடச்
செப்பொற் பீலியுலாமயில் மாமிசை
  பக்கத்தே குற மாதொடு சீர்பெறு
  தெற்குக் கோபுர வாசலில் மேவிய பெருமாளே.’’

பொருள்: தக்கத் தோகிட... டாடுடு எனும் தாளங்களின் ஒலியைப் பரப்பி சூரர்கள் கூட்டத்துடன் அவர்களது தேர்களும் குதிரைகளும் அழிந்து  இழிநிலை அடைந்து கடலில் மூழ்கும்படியும், சத்திவேலுக்கே அனைத்தும் உணவாயின எனும்படியும் ஒளி மிகுந்த வேலாயுதத்தைச்  செலுத்தியவனே! திக்கத் தோகணதா என்று நடனம் செயும் உனது தந்தையாகிய நடராஜ மூர்த்தியே நீ என்று சொல்லும்படியாக அழகுமிகு  சிவந்த பாதங்களை பூமியில் பதித்து அவை இசை ஒலிகள் எழுப்ப, செம்பொன் மயில் மீது வள்ளியுடன் நடனமாடிச் சிறப்புற்று  தில்லையில் தெற்குக் கோபுர வாயிலில் வீற்றிருக்கும் பெருமையனே!’’ என்று பாடுகிறார்.

‘‘துக்கத்தே பரவாமல் சதாசிவ
  முத்திக்கே சுகமாக பராபர
  சொர்க்கப் பூமியில் ஏறிடவே பதம் அருள்வாயே.’’
‘‘வேதனைப்படாமல், எப்போதும் மங்கலமான முத்தி நிலையுடன் இன்பமான மிக மேலான பரமுத்தி அடையுமாறு உன் திருவடியைத்  தந்தருள்வாய்’’ என்பது அவரது பிரார்த்தனை.தெற்குக் கோபுர வாயிலின் மேல் முகப்புப் பகுதியில் மிக அழகான த்ரிபுராந்தகர் கோலம்  விளங்குகிறது. தேரின் மீது போர்க்கோலத்தில் விளங்கும் சிவபெருமான் அருகில் உமையும் அமர்ந்திருக்கிறாள்.

(அட்ட வீரட்டச் செயல்களுள் இதில் மட்டும்தான் உமை இறைவனருகில் வீற்றிருந்தாள் என்பர்) அருகாமையில் மிகப்பெரிய உருவமுடைய  விநாயகர் கோயிலொன்று தனியாக விளங்குவதைக் காணலாம். தெற்குக் கோபுர முகப்பிலுள்ள விநாயகர் என்பதால் முகக்கட்டண  விநாயகர்’ என்றழைக்கப்பட்ட இவரது பெயர், நாளடைவில் ‘முக்குறுணி விநாயகர்’ எனச் சுருங்கி விட்டது. அதற்கேற்றாற்போல் மூன்று  மரக்கால் அரிசியால் (12 கிலோ) ஒரு பெரிய மோதகம் செய்யப்பட்டு அவருக்குப் படைக்கப்படுகிறது.இனி மேற்கு கோபுரத்தை நோக்கிச்  செல்கிறோம். இது சுந்தர பாண்டியன் திருக்கோபுரம் எனப்படுகிறது. இதன் வாயிலில் வீற்றிருக்கும் கணபதியை‘கைத்தருண ஜோதி  அத்திமுக வேத கற்பக சகோத்ரப் பெருமாள் காண்’ - என்று பாடி முருகனையும் சேர்த்துப் போற்றுகிறார்.

கோபுர மாடத்தில் ஷண்முகர் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். (இவர் கோயிலில் நாம் காணும் ஏழாவது முருகன் திருவுருவம்)  முன் மண்டபத்தில் பஞ்சமுக கணபதி, நவவீரர்கள், அகத்தியர், அருணகிரிநாதர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். தில்லைத் திருப்புகழ்ப்  பாக்கள் கல்வெட்டுகளாக அமைக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு நேரே இரண்டு மயில்கள் உள்ளன. ஒன்று போர் செயும்போது மயிலாக வந்து  முருகனைத் தாங்கிய இந்திர மயில்; மற்றொன்று போர் முடிவில் முருகன் சூரபத்மனை சேவல், மயில் என இரு கூறாக்கியபோது  தோன்றிய சூரமயில். சுமுகர்-சுதாகர் எனும் பெயருடைய துவார பாலகர்களையும் பார்க்கிறோம். முகப்பில் ஆறுமுகனின் சுதைச் சிற்பம்  உள்ளது.

‘‘சூரர்க்கே ஒரு கோளரியாமென
  நீலத்தோகை மயூரம தேறிய
  தூளிக்கே கடல் தூர நிசாசரர் களமீதே
சோரிக்கே வெகு ரூபமதா அடு
  தானத் தானன தானன தானன
  சூழிட்டே பல சோகுகளாடவெ பொரும் வேலா
வீரத்தால் வல ராவணனார் முடி
  போகத்தான் ஒரு வாளியை ஏவிய
  மேகத்தே நிகராகிய மேனியன் மருகோனே
வேதத்தோன் முதலாகிய தேவர்கள்
  பூசித்தே தொழ வாழ் புலியூரினில்
  மேலைக் கோபுர வாசலில் மேவிய பெருமாளே.’’

நீலநிறத் தோகை மயில் ஏறி, புழுதியால் நிரம்பிக் கடல் தூர்ந்து போக, இரவில் உலவுகின்ற அசுரர்களின் போர்க் களத்தில் குருதி ஓடப்  போர்புரிந்து ‘தானத் தானன தானன தானன’ என்று பாடிச் சூழ்ந்துகொண்டு பல பேய்கள் கூத்தாட, சூரர்களை அழிப்பதற்கே தோன்றிய  ஒப்பற்ற சிங்கம்போலப் போர் செய்த வேலாயுதனே! (சூரனைக் கொன்ற போர்க்களத்தில் பேய்கள் ஆடும் விதங்களைச் ‘செருக்களத்தலகை  வகுப்பு’, மற்றும் போர்க்களத்தலகை வகுப்பு’ எனும் திருவகுப்புகளில் பாடியுள்ளார்)ராவணனின் பத்துத் தலைகளும் அற்று விழும்படி ஒரே  ஒரு கணையைச் செலுத்திய மால் மருகனே!

பிரம்மன் முதலான தேவர்கள் வழிபடும் பொருட்டு சிதம்பரத்தில் மேற்கு கோபுர வாசலில் எழுந்தருளியுள்ள பெருமாளே! ஒருமுறை நாரத  முனிவர், பிரம்மன் கங்கைக் கரையில் செல்லும் யாகத்திற்கு வரும்படித் தில்லை வாழ் அந்தணர்களை அழைத்தார். ‘‘இங்கே எங்கள்  நடராஜரின் ஆனந்த தாண்டவத்தைத் தரிசித்துக் கொண்டிருக்கும் நாங்கள் அங்கே வர இயலாது’’ என்று கூறிவிட்டனர் அந்தணர்கள்.  பிரம்மனுக்குத் தானும் அந்தத் திருநடனத்தைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட தில்லைக்கு வந்து தேவர்களுடன் அதைத்  தரிசித்தார் என்கிறது கோயில் புராணம்.)

மற்றொரு பாடலில்,
‘வீடு சேர்வரை அரசாய் மேவிய
மேரு மால்வரையென நீள் கோபுர
மேலை வாயிலின் மயில் மீதேறிய பெருமாளே’’

- என்கிறார்.  பெருமை பொருந்திய மலையரசாய் விளங்கும் பெரிய மேரு மலை போல் உயர்ந்துள்ள கோபுரத்தின் மேலை வாயிலில்  மயில் மீது ஏறிய வண்ணம் விளங்கு பெருமாளே! இதேபாடலில், ‘மூவாயிர் மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே’  என்றதிலிருந்து நடராஜ மூர்த்தியே அருணகிரியாருக்கு முருகனாகக் காட்சியளித்தார் என்று எண்ணத் தோன்றுகிறது.

- (உலா தொடரும்)