என்ன சொல்கிறது, என் ஜாதகம்?வாழ்க்கைக்கான வாசல் திறக்கும்!

* 36 வயதாகியும் என் மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. என் கணவரும் இறந்துவிட்டார். எனக்குப் பிறகு எனது மகனின்  நிலையை நினைத்து கடும் மன உளைச்சலில் உள்ளேன். தனி ஆளாக எப்படி வாழ்வான்? அவனை யார் கவனித்துக் கொள்வார்கள்?  அவனது திருமணம் தடைபட்டு வருவதற்கான காரணம் என்ன? வழிகாட்டுங்கள்.  - சக்தி, ஈரோடு.

பெயரில் இருக்கும் சக்தி மனதில் இல்லையே. முதலில் உங்கள் மனதில் நிலவும் அநாவசியமான கவலையையும், வீணான பயத்தினையும்  விட்டொழியுங்கள். மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான் என்பதைப்போல இந்த உலகில் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் இறைவனின்  பாதுகாப்பில்தான் வாழ்ந்து வருகின்றன என்ற கருத்தினை மனதில் நிலைநிறுத்துங்கள். தற்போதைய சூழலில் நீங்கள் உங்கள் பிள்ளையை  கவனித்துக் கொள்கிறீர்கள் என்ற எண்ணமே தவறானது. இறைவன் பயன்படுத்தும் ஒரு கருவி நீங்கள்.

அவ்வளவுதான். உங்கள் மகனுக்கு இதுவரை திருமணம் நடக்காததற்கான காரணம் அவரது ஜாதக பலம் அல்ல. அவருடைய சோம்பல்தான்  அதற்கு காரணம். 36வது வயதில் வேலை ஏதும் இல்லாமல் இருக்கும் பிள்ளைக்கு யார் பெண் தருவார்கள்? அவருக்குத் திருமணம் செய்து  வைப்பதில்தான் நியாயம் இருக்கிறதா? பாதகாதிபதியின் திசை பலன் தருமா, சூரியன் பகை வீட்டில் இருப்பதால் திருமணம் தடைபடுமா  என்று ஜோதிடரீதியான வார்த்தைகள் பலவற்றையும் உங்கள் கடிதத்தில் பயன்படுத்தியிருக்கும் நீங்கள் முதலில் உங்கள் மகனின்  ஜாதகத்தை சரியாக கணித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகம் தவறாகக் கணிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிறந்ததேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் அவரது ஜாதகத்தை கணக்கீடு செய்ததில் ஹஸ்தம் நட்சத்திரம்,  கன்னி ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தில் கும்ப லக்னம் என்று  குறிப்பிடப்பட்டுள்ளது. கும்ப லக்னத்தில் பிறந்திருந்தால் அவர் வேலையின்றி சும்மா உட்கார்ந்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை. மகர  லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் லக்னாதிபதி சனி வக்ர கதியில் அமர்ந்திருப்பதால் அதிகமான சோம்பல் தன்மையுடன்  உள்ளார். அவரது வாழ்வினைப் பற்றிய கவலை அவருக்கே இல்லை. திருமணம் நடப்பதைப்பற்றி பிறகு யோசிக்கலாம்.

முதலில் அவருக்கான உணவினை அவரையே தேடச் சொல்லி வலியுறுத்துங்கள். ஏதேனும் ஒரு வேலைக்குச் செல்ல  கட்டாயப்படுத்துங்கள். தற்போது நிலவும் கிரகச் சூழலும், குருதசையில் சுக்கிர புக்தியின் காலமும் சாதகமாக உள்ளது. சனி பகவான் தரும்  சோம்பல்தன்மையைத் தாண்டி வெளியே வந்தால் அதே சனி பகவானே கடுமையான உழைப்பினையும் தந்து உங்கள் மகனை  உச்சத்திற்கும் கொண்டு செல்வார். இந்த உண்மையை உணர்ந்து அவரை வேலைக்கு அனுப்புங்கள்.

ஜீவன ஸ்தானத்தில் உச்ச பலம் பெற்றிருக்கும் சனி பகவான், வக்ர கதியில் இருந்தாலும் உழைப்பதற்கான பலனை நிச்சயம் அருளுவார்.  உழைத்தால் மட்டுமே உங்கள் மகனின் வாழ்கைக்கான வாசல் திறக்கும். தமிழ்மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமை நாளில் அருகிலுள்ள  ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று 108முறை ராமநாமம் சொல்லி வழிபடுங்கள். உங்களால் இயன்ற அளவில் தயிர்சாதம் நிவேதனம்  செய்து அன்னதானம் செய்யுங்கள். பெயருக்கு ஏற்றார்போல் உங்கள் உள்ளத்தில் சக்தி பெருகுவதோடு உங்கள் மகனின் வாழ்விலும்  மாற்றத்தைக் காண்பீர்கள்.

* என் மகன் கடந்த 9 வருடங்களாக மனைவியைப் பிரிந்து வாழ்கிறான். குடும்பநல கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.  விவாகரத்து கிடைக்குமா? மனைவி திரும்பி வந்து குடும்பம் நடத்துவாளா? மன உளைச்சலினால் வேலையை விட்டுவிட்டான். திரும்பவும்  வேலை கிடைக்குமா? - சி.எஸ்., சென்னை - 50.

நிச்சயமாக உங்கள் மகனுக்கு திரும்பவும் வேலை கிடைக்கும். உத்யோகம் என்பதே அவருடைய வாழ்வினில் நிம்மதியைத் தரவல்லது.  மிருகசீரிஷம் நட்சத்திரம் இரண்டாம் பாதம், ரிஷப ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் திருமண பந்தத்தைக்  குறிக்கும் ஏழாம் வீட்டில் களத்ரகாரகன் சுக்கிரனோடு அஷ்டமாதிபதி சூரியனும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். மேலும், களத்ர ஸ்தான  அதிபதி சந்திரன் உச்சம் பெற்ற போதிலும் உடன் இணைந்திருக்கும் கேது அவரது வாழ்வினில் குழப்பத்தை உண்டாக்கியிருக்கிறார்.

25.02.2019 வரை நடைபெற்று வரும் சனிதசையில் கேது புக்தியின் காலம் கடுமையான மன உளைச்சலுக்கு அவரை ஆளாக்கி உள்ளது.  பிரச்னைக்கு உரிய இந்த காலத்தில் தனது வழக்கின் மீது முழு கவனத்தையும் கொண்டு சென்று அதனை விரைவில் முடிவிற்குக் கொண்டு  வர முயற்சிக்கச் சொல்லுங்கள். 25.02.2019 முதல் துவங்க உள்ள சுக்கிர புக்தியின் காலத்தில் இவரது உத்யோகத்தின் மீது முழு  கவனத்தையும் செலுத்த வேண்டியிருக்கும். பிரச்னைக்குரிய நேரத்தில் சங்கடங்களை முழுமையாக எதிர்கொண்டால்தான் சாதகமான  நேரத்தில் நற்பலன்களை முழுமையாக அனுபவிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

உங்கள் மருமகளின் ஜாதகம் அசுப கிரகங்களின் ஆதிக்கத்திற்குள் சிக்கிக்கொண்டு உள்ளது. புனர்பூசம் நட்சத்திரம் நான்காம் பாதம், கடக  ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் உண்டாகியுள்ள சனி-ராகுவின் இணைவும், திருமண  பந்தத்தைக் குறிக்கும் ஏழாம் வீட்டில் களத்ரகாரகன் சுக்கிரனுடன் கேதுவின் இணைவும் அவரை ஸ்திரமற்ற மனம் கொண்டவராக  மாற்றியுள்ளது. லக்னாதிபதி சூரியனுடன் குடும்ப ஸ்தானாதிபதி புதன் வக்கிரம் பெற்று எட்டில் அமர்ந்திருப்பதும், உடன் செவ்வாய்  இணைந்திருப்பதும், 12ம் வீட்டில் குரு - சந்திரனின் இணைவும் பலவீனமான நிலையை உணர்த்துகிறது. அவரது ஜாதகத்தினைக் கொண்டு  பார்க்கும்போது அவருடன் மனஸ்தாபம் கொள்வதைவிட அவர் மீது பரிதாபப்படுவதே நல்லது எனத் தோன்றுகிறது.

கிரகங்களின் சஞ்சார நிலையும், பூர்வஜென்ம கர்மாவும் அவரை இவ்வாறு நடந்து கொள்ள வைக்கிறது. இவர்கள் இருவரின்  ஜாதகத்தினையும் ஆராயும்பொழுது விவாகரத்து வழக்கினை இழுத்துக்கொண்டு செல்லாமல், முடிந்தவரை சமாதானமாகச் செல்வதே இரு  தரப்பினருக்கும் நல்லது. இந்த நவம்பர் மாதம் முதல் வருகின்ற பிப்ரவரி மாதத்திற்குள்ளாக நடைபெறவுள்ள நான்கு மாத காலத்திற்குள்  உங்கள் மகனின் குடும்ப வாழ்விற்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும். உங்கள் மகனின் ஜாதகத்தைப் பொறுத்தவரை அவரது மகன் அவரோடு  இணைந்துவிடுவான். அதே நேரத்தில் மறுமணத்திற்கான வாய்ப்பு இல்லை.

உத்யோகரீதியாக பெரிய முன்னேற்றத்தினைக் காண உள்ள உங்களது மகன், தனது பிள்ளையை நல்லபடியாக வளர்த்து ஆளாக்குவதையே  தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு அதில் வெற்றியும் காண்பார். ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை நாளில் திருவள்ளூர்  வீரராகவப் பெருமாளை சேவித்து உங்கள் மகனின் பெயரில் அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். குடும்பப் பிரச்னை  முடிவிற்கு வந்தவுடன் பேரனையும் அழைத்துக் கொண்டு பெருமாள் சந்நதிக்குச் சென்று சேவிப்பதுடன் ஆலய வாசலில் அமர்ந்திருக்கும்  ஆதரவற்றோருக்கு உங்களால் இயன்ற அன்னதானம் செய்வதாக பிரார்த்தனை அமையட்டும். மகனின் வாழ்வினில் 2019ம் வருடம் மார்ச்  மாதம் முதல் மகிழ்ச்சியைக் காண்பீர்கள்.

* எனது ஒரே மகன் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறான். இந்த வேலையில் முன்னேற்றம்  ஏற்பட்டு வெளிநாடு செல்லும் யோகம் உண்டா? அவனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? இல்லற வாழ்வு நல்லபடியாக அமையுமா?  அவன் ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருந்தால் அதற்குரிய பரிகாரத்தைக் கூறவும்.  - ஜெயா , மதுரை.

பரிகாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாத தோஷம் என்பது ஒன்று உண்டு. அதுவே சந்‘தோஷம்’. சந்தோஷம் என்பது அவரது  வாழ்வினில் என்றென்றும் நிலைத்திருக்கும். பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தை  கணிதம் செய்ததில் தற்போது சனி தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. பணியில் தற்போது சிறிது சிரமத்தினைக் கண்டு  வந்தாலும், இவரது உண்மையான உழைப்பு உத்யோகத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெற்றுத் தரும். 29.06.2019 முதல் உத்யோகத்தில்  பெருத்த திருப்புமுனையைக் காண்பார்.

வெளிநாடு சென்று பணியாற்றும் வாய்ப்பு சிறப்பாக உள்ளது. தற்போது அவருடைய திருமணத்திற்கு அவசரப்பட வேண்டாம். 30வது  வயதில் திருமண வாய்ப்பு என்பது தானாகத் தேடி வரும். திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி குரு பகவான்  11ல் உச்சம் பெற்று லக்னாதிபதி புதனுடன் இணைந்து அமர்ந்திருப்பதால் இல்லற வாழ்வு என்பது திருப்திகரமாகவே அமையும். தன்  மனதிற்குப் பிடித்த மனைவியை அடைவார். வருகின்ற மனைவியானவர் குருவின் அம்சத்துடன், அதாவது தனது கணவனை சரியான  பாதையில் வழிநடத்திச் செல்பவராகவும், நல்ல குணங்கள் பொருந்தியவராகவும் இருப்பார்.

உங்கள் மகனின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உட்பட எந்தவிதமான தோஷமும் கிடையாது. மன நிம்மதியுடன் உங்கள்  குலதெய்வத்தை பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். மகனின் எதிர்காலம் சிறப்பாக இருக்கிறது என்பதையே அவரது ஜாதகம் தெளிவாக  உணர்த்துகிறது.

* எனக்கு கடந்த சில காலமாக அடிவயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கிறது. மிகவும் அவஸ்தைப்படுகிறேன். ஏன் எனக்கு இந்த  நிலை? என் ஜாதக ரீதியாக பயப்படும் நிலை உள்ளதா? பரிகாரம் கூற வேண்டுகிறேன்.  - ஒர் வாசகர், சிதம்பரம்.

உங்களுக்கு எந்தக் குறையும் உண்டாகாது. ரோகிணி நட்சத்திரம் (நீங்கள் அனுப்பியிருக்கும் கம்ப்யூட்டர் ஜாதகத்தில் மிருகசீரிஷம் என்று  குறிப்பிடப்பட்டுள்ளது), ரிஷப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தை பஞ்சாங்கத்தின் துணைகொண்டு கணக்கீடு  செய்ததில் தற்போது புதன் தசையில் கேது புக்தி நடப்பது தெளிவாகத் தெரிகிறது. மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் மனதில்  தைரியக் குறைவினை உண்டாக்கி சஞ்சலத்தைத் தோற்றுவித்திருக்கிறார்.

ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிரன் உங்களை என்றென்றும் சுகமாக வாழ வைப்பார். உங்களுடைய ஜாதக பலத்தின்படி நோயைப்  பற்றிச் சொல்லும் ஆறாம் வீடு சுத்தமாக உள்ளது. என்றாலும் ஆறாம் வீட்டின் அதிபதி ஆகிய புதனின் தசை நடந்து கொண்டிருப்பதால்  உடல்நிலையில் லேசான தடுமாற்றத்தைக் கண்டு வருகிறீர்கள். இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. தினமும்  இரவினில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்னர் ஊற வைத்த இரண்டு பாதாம் பருப்பினை அரைத்து பசும்பாலில் கரைத்துச் சாப்பிட்டு  வாருங்கள். வயிற்று வலி காணாமல் போகும். உங்களுடைய ஜாதக பலத்தின்படி மனக்கவலைதான் உடல்நிலையை பாதித்திருக்கிறது.

மனதினை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முயற்சியுங்கள். உடல்நிலை நல்ல ஆரோக்யத்துடன் இருக்கும். மனதில் பயம்  தோன்றும்போது பெருமாளை மனதில் தியானித்துக் கொள்ளுங்கள். பிரதி புதன்கிழமை தோறும் சிதம்பரம் நடராஜப் பெருமானையும்,  திருச்சித்திரகூடம் தில்லை கோவிந்தராஜப் பெருமாளையும் ஒரு சேர தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மனோபயம் காணாமல்  போவதோடு உடல்நிலையும் முன்னேற்றம் காணும். அதோடு குடும்பத்தின் பொருளாதார நிலையிலும் சிறப்பான வளர்ச்சியைக் கண்டு  வருவீர்கள்.

* ஐ.டி.துறையில் பணியாற்றி வரும் எனக்கு கடந்த நான்கு ஆண்டு காலமாக எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. ஒரே இடத்தில்  தேங்கி நிற்பது போல் தோன்றுகிறது. தற்போது புதிய ப்ராஜக்டுகள் ஏதுமில்லாததால் வேறு வேலை தேட வேண்டியிருக்குமோ என்ற  பயமும் உள்ளது. என் எதிர்காலம் எப்படி இருக்கும்? பொருளாதார சிக்கல்களை  சமாளிக்க இயலுமா?  - சரவணக்குமார், பெங்களூர்.

உங்கள் ஜாதகத்தை பஞ்சாங்க அடிப்படையில் கணித்துப் பார்த்தபோது திருவோண நட்சத்திரம், மகர ராசி, மகர லக்னத்தில்  பிறந்திருக்கிறீர்கள் என்பது தெரிய வருகிறது. உங்களுடைய ஜாதக கணிதத்தின்படி தற்போது சனி தசையில் புதன் புக்தியின் காலம்  நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் உத்யோக ஸ்தான அதிபதி சுக்கிரன் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருப்பதும், உத்யோக ஸ்தானத்தில்  சுபகிரகமான குரு பகவான் அமர்ந்திருப்பதும் நல்ல நிலையே ஆகும். என்றாலும் கடந்த 24.12.2014 முதல் துவங்கியுள்ள சனி தசை  உங்கள் வளர்ச்சியில் தேக்கநிலையை உருவாக்கி இருக்கிறது.

இந்த தேக்க நிலையானது இன்னும் இரண்டு வருடங்களுக்குத் தொடரும். தற்போது நடந்து வரும் தசாபுக்தி மற்றும் அந்தரத்தின்படி  24.11.2018 முதல் உங்கள் பணியில் துறை ரீதியான மாற்றத்தைக் காண்பீர்கள். இடமாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்பும் உண்டு. வடஇந்திய  பகுதியில் உங்கள் பணி அமையலாம். பணி இடமாற்றத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வருவதை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த  இடமாற்றத்தினால் குடும்பத்தில் எந்தவிதமான பிரச்சினையும் உண்டாகாது. குடும்பத்தினை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.  மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ நீங்கள் வீட்டிற்கு வந்து செல்லலாம்.

16.10.2020 முதல் உங்கள் உத்யோகத்தில் சிறப்பான வளர்ச்சியைக் காண இயலும். உங்களுடைய கனவுகள், கற்பனைகள் அத்தனையும்  அதன் பிறகே நிறைவேறும். வருகின்ற இடமாற்றத்தினையும், துறை ரீதியான மாற்றத்தினையும் ஏற்றுக்கொண்டால் பொருளாதார ரீதியாக  எந்தவிதமான சிக்கலும் உண்டாகாது. கடன் பிரச்சினைகளை எளிதாக சமாளிக்க இயலும். சனி தசை நடந்தாலும் சுக்கிர புக்தியின்  காலத்திலிருந்து சிறப்பான வளர்ச்சியைக் காண உள்ளீர்கள். எதிர்காலம் என்பது சிறப்பாகவே உள்ளது. 62 வயது வரை கட்டாயம் பணி  செய்வீர்கள். அதன்பிறகே ஓய்வாக காலத்தை கழிக்க இயலும். வியாழன் தோறும் சாயிபாபா ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வருவதை  வழக்கத்தில் கொள்ளுங்கள். எந்தவிதமான கவலையுமின்றி வாழ்வீர்கள்.

- சுபஸ்ரீ சங்கரன்

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி  அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு  வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004