தெளிவு பெறுதீபாவளி அமாவாசை நாளில் கேதார கௌரி விரதம் அனுஷ்டிப்பதன் ஐதீகம் என்ன?

- அயன்புரம் த.சத்தியநாராயணன்
.

ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதாரகௌரி விரதம் கொண்டாடப்படுகிறது. ஜோதிடவியலைப் பொறுத்த வரை ஐப்பசி மாதத்தில்  சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் துலாம் ராசியில் சூரியன் நீசம் பெற்ற  நிலையில் அமர்ந்திருப்பார். அதாவது தனது வலிமை முழுவதையும் இழந்த நிலையில் வாசம் செய்யும் காலம் இது. சூரியனை  தந்தைக்குரிய கிரகமாக பிதுர்காரகன் என்றும், சந்திரனை தாயாருக்கு உரிய கிரகமாக மாதுர்காரகன் என்றும் அழைப்பார்கள். சூரியனுக்குரிய  பிரத்யதி தேவதை பரமேஸ்வரன். சந்திரனுக்குரிய பிரத்யதி தேவதை கௌரி.

நீசம் பெற்ற தந்தையாகிய சூரியனோடு தாயான சந்திரன் இணையும் காலம் ஐப்பசி அமாவாசை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற  கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக பலம் இழந்து நீசம் பெற்ற நிலையில் சஞ்சரிக்கும் பிதுர்காரகன் சூரியனோடு சக்தியாகிய அன்னையின்  அம்சமான சந்திரன் வந்து இணையும்போது சிவம் சக்தியைப் பெறுகிறது. சிவசக்தி ஐக்கியமானது நடைபெறுகிறது. அன்றைய தினத்தில்  கேதார கௌரி விரதத்தினைப் பூர்த்தி செய்து அன்னை பார்வதியானவள் சிவபெருமானின் உடம்பினில் சரிபாதியைப் பெற்று தனது  உரிமையை நிலைநாட்டியதை புராணங்களின் வாயிலாக அறிகிறோம். சிவசக்தி இணைந்திருந்தால் மட்டுமே உலகம் இயங்கும்.

அவ்வாறே குடும்பத்தில் கணவனின் வலிமை குறையும்போது மனைவியானவள் அவருக்குத் துணை நிற்க வேண்டும், அவ்வாறே  கணவனும் தனது துணைவிக்கு சரிபாதி உரிமையைத் தரவேண்டும் என்பதை சூசகமாகச் சொல்வதே இந்த கேதார கௌரி விரதம். இதே  கருத்தினையே தீபாவளிப் பண்டிகையும் அறிவுறுத்துகிறது. நாம் தீபாவளி கொண்டாடுவதன் அடிப்படை காரணமான நரகாசுர வதத்தினை  எண்ணிப் பாருங்கள். கிருஷ்ண பகவான் நரகாசுர யுத்தத்தின்போது மூர்ச்சையாகிவிட்ட நிலையில், தேரை ஓட்டும் சாரதியாக உடனிருந்த  பாமா (பூமாதேவியின் மறு அவதாரம் - நரகாசுரனின் தாய்) வில்லெடுத்து போரிட்டு நரகாசுரனை வதம் செய்கிறாள் அல்லவா... அதாவது  தந்தையின் வலிமை குறையும்போது தாய் அப்பொறுப்பினை சுமந்து வெற்றி காண்கிறாள்.

குடும்பத்தில் கணவனும், மனைவியும் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றியைக் காண இயலும் என்பதை புராணங்கள் தெளிவாக  எடுத்துரைக்கின்றன. கேதார கௌரி விரதம் என்பதே கணவன்-மனைவி ஒற்றுமைக்காகவும், என்றென்றும் தம்பதியர் இணைபிரியாமல்  இருக்க வேண்டும் என்பதற்காகவும் கடைபிடிக்கப்படுவதாகும். அதனை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நரகாசுர  வதம் முந்த தீபாவளியைத் தொடர்ந்து வரும் அமாவாசை நாளில் கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

 * கந்த சஷ்டியின் மகிமை என்ன?

 - குமாரசுப்ரமணியம், திருவதிகை
.

ஐப்பசி அமாவாசைக்கு மறுநாளில் இருந்து ஆறுநாட்கள் தொடர்ந்து நடைபெறுவது கந்தசஷ்டி விழா. சூரபத்மனின் பெரும் படையோடு  முருகப்பெருமான் போர்புரிந்த ஆறு நாட்களும் கந்தசஷ்டி விழாவாகக் முருகப்பெருமானின் திருத்தலங்களில் கொண்டாடப்படுகிறது.  ஆறாவது நாள் ஆன சஷ்டி அன்று சூரபத்மனின் வதம் நிகழ்கிறது. கந்த சஷ்டிக்கு வேறொரு மகத்துவமும் உண்டு.

ஜோதிடவியல் ரீதியாக அந்த நாளில் தாயாகிய சந்திரன் புத்திர காரகன் ஆகிய குருவின் வீட்டில் அதாவது தனுசு ராசியிலோ அல்லது  அவரது வீட்டினைக் கடந்து மகர ராசியின் முதல் பாகத்திலோ அமர்ந்திருப்பார். புத்திரகாரகன் குருவின் பலத்தினைப் பெறுவதோடு தந்தை  ஆகிய சூரியனுக்குரிய நட்சத்திரமான உத்ராடத்தில் தாயாகிய சந்திரன் சஞ்சரிக்கும் காலம் அது. தாய், தந்தை, குழந்தை ஆகிய  மூன்றையும் ஒரே பாகையில் இணைக்கும் நாளே கந்த சஷ்டி திருநாள். “சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்” என்ற  பழமொழியை எண்ணிப் பாருங்கள்.

 சஷ்டியில் விரதம் இருந்தால் அகத்தில் உள்ள பையான கர்ப்பப்பையில் குழந்தை வரும்., அதாவது சஷ்டி விரதம் புத்திர தோஷத்தை  நீக்கி குழந்தை பாக்கியத்தைத் தரும் என்று பெரியவர்கள் விளக்கமளிப்பார்கள். அதனால்தான் கந்த சஷ்டியிலிருந்து விரதத்தினை  ஆரம்பித்து தொடர்ச்சியாக ஒரு வருட காலம் பிரதி மாதம் வரும் வளர்பிறை சஷ்டியில் விரதம் இருந்தால் அடுத்த கந்த சஷ்டிக்குள்ளாக  கடுமையான புத்திர தோஷம்கூட நீங்கி குழந்தை பாக்கியம் கிட்டிவிடும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். இதனாலேயே திருச்செந்தூர்  புத்திர பாக்கியத்தினைத் தரும் குருவின் தலமாகவும் விளங்குகிறது.

* நீண்ட காலமாக பேச்சுவார்த்தை இல்லாத நிலையில் உடன்பிறந்த சகோதரன் இறந்தால் தீட்டு வந்து சேருமா? எத்தனை நாட்களுக்கு?  குடும்பத்தில் நற்காரியங்களை தொடர்ந்து செய்ய என்ன செய்ய வேண்டும்? திருத்தலங்களில் நேர்ந்துகொண்டுள்ள வேண்டுதல்களை  செய்யலாமா?

- ஒரு வாசகர், சிதம்பரம்.


பேச்சுவார்த்தை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, உடன்பிறந்த சகோதரன் இறந்தால் நிச்சயம் தீட்டு என்பது உண்டு. இறந்த நாளில்  இருந்து பத்து நாட்கள் அல்லது 16 நாட்கள் என அவரவர் சம்பிரதாயத்தின்படி கரும காரியம் செய்து முடிக்கும் வரை தீட்டு என்பது  பங்காளிகள் அனைவருக்கும் நிச்சயம் உண்டு. அவர்கள் குடும்பத்தில் இருந்து அழைப்பு வந்தாலும், வராவிட்டாலும் அங்கு நடக்கும் கரும  காரியத்திற்குச் சென்று அதில் கலந்துகொண்டு செய்ய வேண்டிய கர்மாக்களை செய்து முடிக்க வேண்டும்.

அங்கு செல்ல இயலாத சூழ்நிலை என்றால் புரோஹிதரை அழைத்து உடன்பிறந்தவருக்குச் செய்ய வேண்டிய அந்திமக் கடன்களைச் செய்து  முடிக்க வேண்டும். அப்பொழுதுதான் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை செய்ய முடியும். அதே நேரத்தில் பங்காளி ஒருவர் இறந்திருக்கும்  பட்சத்தில் ஒரு வருடம் வரை தீபாவளி, பொங்கல் முதலான பண்டிகைகளைக் கொண்டாட இயலாது. ஆனால், திருமணம் முதலான  சுபநிகழ்ச்சிகளை கருமகாரியம் முடிந்துவிட்ட நிலையில் தாராளமாக செய்யலாம். இறந்தவருக்கு அந்திமக் கிரியைகளைச் செய்த அவரது  நேரடி வாரிசு ஒருவரைத் தவிர மற்றவர்கள் இந்த ஒரு வருட காலத்திற்குள் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வணங்குவதில்  தவறில்லை.

அதேநேரத்தில் பொங்கல் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது, காவடி எடுப்பது போன்ற நேர்த்திக்கடன்களை ஒரு வருட காலத்திற்குச்  செய்ய முடியாது. அதே போன்று தலை திவசம் ஆகும் வரை சபரிமலைக்கு மாலை அணிந்து இருமுடி கட்டிச் செல்வதும் கூடாது.  உடன்பிறந்தவர் இறக்கும் பட்சத்தில் நிச்சயமாக தீட்டு என்பது உண்டு. உரிய சடங்குகளைச் செய்து முடித்த பின்பே தீட்டு விலகும்  என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

* சமீபத்தில் பெரியவர் ஒருவர் “ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தினமும் ஆறு பேரை நமஸ்கரிக்கிறார் தெரியுமோ..” என்று சொல்லக் கேட்டேன்.  இது உண்மையா? அவர் சொன்னது எனக்கு சரியாக விளங்கவில்லை. புரியும்படி விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 - எஸ்.ராமமூர்த்தி, மேற்கு மாம்பலம்.


அவர் கூறியது உண்மைதான். பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ருக்மணி தேவியோடு உரையாடும்போது இந்த வாசகத்தைச் சொல்வதாக பின்வரும்  ஸ்லோகம் அமைந்துள்ளது. “நித்யான்னதாதா தருணாக்னிஹோத்ரி வேதாந்தவித் சந்த்ரசஹஸ்ரதர்ஷீ மாஸோபவாஸி ச பதிவ்ரதா ச  ஷ்ஷட் ஜீவலோகே மம வந்தநீயா:” என்று தினமும் ஆறுபேரை நமஸ்கரித்து வருவதாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்வதாக அந்த ஸ்லோகம்  உரைக்கிறது.

அதாவது தினமும் அன்னதானம் செய்து வருபவர், சரியான வயது முதல் அக்னிஹோத்ரம் முதலிய ஸ்ரௌத கர்மாக்களை எந்தச்  சூழலிலும் விடாமல் தொடர்ந்து செய்பவர், வேதாந்தங்களைக் கற்றுணர்ந்து அதன்படி நடப்பவர், ஆயிரம் பிறைகளைக் கண்டவர்,  மாஸத்தில் சரியான நியமப்படி உபவாஸம் இருப்பவர், சதா சர்வ காலமும் கணவனுக்குப் பணிவிடை செய்து வரும் பதிவிரதை ஆகிய  இந்த ஆறுபேரையும் தான் தினமும் தவறாமல் நமஸ்கரிப்பதாக ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார். பெரும்பாலும் ஸதாபிஷேகம் எனும் 80ம்  கல்யாணம் நடக்கும் இடங்களில் அந்த வைபவத்தை நடத்தி வைக்கும் சாஸ்திரிகள் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி 1000 பிறை கண்ட  அந்த தம்பதியரின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துவார்.

* ஜாதகம் பார்த்து, பத்துப் பொருத்தம் பார்த்துத்தானே திருமணம் செய்கிறார்கள். அப்படியிருந்தும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை  அதிகரித்து வருவதன் காரணம் என்ன?

- பத்மா வெங்கடேசன், மதுரை.


“மாப்பிள்ளைப் பையன் என்ன சம்பாதிக்கிறார், எங்கே வேலை பார்க்கிறார், யு.எஸ் - யு.கேவா?” இதுதான் இன்றைய காலக் கட்டத்தில்  பெண் வீட்டாரின் பிரதானமான கேள்வியாக இருக்கிறது. பையன் நல்லவனா, பொறுப்பான பையனா, குடும்பத்தில் மிகவும்  அன்யோன்யமாக இருப்பானா இதெல்லாம் இரண்டாம் பட்சமாகப் போய்விட்டது. பிள்ளை வீட்டார் மட்டும் சளைத்தவர்களா என்ன?  மணப்பெண் எவ்வளவு சம்பாதிக்கிறாள்? திருமணம் ஆனவுடன் டிரான்ஸ்பர் கிடைத்துவிடுமா? பார்ப்பதற்கு அழகாக இருக்கிறாளா?  ஆகியவை இவர்கள் தரப்பிலிருந்து எழுப்பப்படும் பிரதானமான கேள்விகள்.

அவளது குணாதிசயம் என்ன, சமைக்கத் தெரியுமா, குடும்பத்தை பொறுப்புடன் கவனித்துக் கொள்வாளா, இதெல்லாம் அப்புறம்  பார்த்துக்கலாம் என்பதே இன்றைய பெற்றோர்களின் நிலை. இதன் விளைவுதான் குடும்ப நல நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகளின்  எண்ணிக்கை அதிகரித்து வருவது. சட்டபூர்வமாக விவாகரத்து என்றில்லாமல் நீதிமன்றங்களுக்கு வெளியேயும் ஒருவருக்கொருவர் எழுதிக்  கொடுத்துக்கொண்டு பிரிந்து செல்லும் தம்பதியரும் இருக்கிறார்கள்.

பிள்ளைகளின் ஜாதகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தனது மகனுக்கு அல்லது மகளுக்கு இரண்டாம் திருமணம் நடக்குமா என்று பேரன்  பேத்தியைக் காணவேண்டிய வயதில் பேயாய் அலைந்து கொண்டிருக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே  போகிறது. விவாகரத்தாகி மறுமணம் செய்யக் காத்திருப்போருக்காகத் தனியே மேட்ரிமோனியல் நிறுவனங்களும், வெப்சைட்டுகளும்  உருவாகிவிட்டது. இந்த நிலைக்கு என்ன காரணம் என்பதே உங்களின் கேள்வி.

கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி ஜாதகப் பொருத்தம் பார்க்கலையா என்ன, ஜோசியர் பத்துக்கு ஒன்பது பொருத்தம் இருக்குன்னு  சொன்னதை நம்பித்தான் கல்யாணம் பண்ணோம், அந்த ஜோசியர் ஏமாத்திட்டார் என்று ஜோதிடரை குறை சொல்லும் பெற்றோர்களே  அதிகம், இவர்களில் பாதிபேர் பிள்ளை அல்லது பெண்ணின் பயோடேட்டாவை மட்டும் பார்த்து, பிடித்திருந்தால் அதற்கேற்றவாறு  ஜோதிடரிடம் பதிலை எதிர்பார்த்தவர்கள். இவர்கள் எதிர்பார்க்கும் சம்பளமோ, வேலையோ இல்லை என்றால் ஜோசியர் பொருத்தம்  இல்லைனு சொல்லிட்டார் என்று பழியை ஜோசியரின் மேல் சுமத்தி விடுவார்கள்.

ஒருவருக்கு நான்கு ஜோதிடர்களிடம் ஜாதகத்தைக் காட்ட வேண்டியது, இரண்டு பேர் பொருத்தம் இருக்குன்னு சொல்றாங்க, இரண்டு பேர்  இல்லைன்னு சொல்றாங்க என்று சொல்லிப் புலம்பும் நிலையில் பயோடேட்டா என்னும் 5வது ஜோதிடரே திருமணத்தை நிர்ணயிக்கும்  அவலமான சூழல் இன்று நிலவுகிறது. சரி, இவற்றையெல்லாம் விட்டுத் தள்ளுவோம், உண்மையில் தனது மகனுக்கோ அல்லது  மகளுக்கோ திருமணம் செய்வதற்கு முன்னால் பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன? ஜோதிடர்கள் பொருத்தம் பார்க்கும்போது  கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்தான் என்ன என்பதையும் காண்போம்.

இன்றைய தேதியில் தினம், கணம் என்று வரிசைப் படுத்தப்படுகின்ற பத்து பொருத்தங்களை மட்டும் பார்க்கின்ற ஜோதிடர்களே அதிகம்.  ஜோதிடர்கள் மட்டுமில்லை, பெற்றோர்களும் கூட பத்துக்கு எத்தனை பொருத்தம் இருக்கு என்ற கேள்வியையே ஜோதிடரிடம் பிரதானமாக  எழுப்புகிறார்கள். உண்மையில் இவ்வகையான பொருத்தங்கள் அடிப்படையில் வெறும் நட்சத்திரங்களை வைத்துப் பார்ப்பது மட்டுமே. சமீப  காலமாகத்தான் குறிப்பிட்டுச் சொன்னால் 1970களின் இறுதியில் இருந்துதான் இந்த பழக்கம் அதிகரித்திருக்கிறது, அதற்கு முன்னால்  இருந்த ஜோதிடர்கள் ஜாதகங்களின் வலுவை வைத்து மட்டுமே பொருத்தத்தை நிர்ணயம் செய்தார்கள்.

சரி, ஜாதக ரீதியான பொருத்தம் என்றால் என்ன? ஜாதகத்தில் வலுவான நிலை என்று எதனைக் குறிப்பிடுகிறார்கள் தெரியுமா?  முக்கியமாக திருமணத்திற்கு பொருத்தம் என்று பார்க்கும்போது இருவரின் ஜாதகத்திலும் 2, 4, 7, 8, 12 ஆகிய பாவகங்கள் மற்றும்  லக்னாதிபதியின் நிலை ஆகியவற்றை பிரதானமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். 2ம் இடம் - குடும்ப ஸ்தானம், 4ம் இடம் - குண  நலன்கள், 7ம் இடம் - களத்ர ஸ்தானம் (அ) வாழ்க்கைத்துணைவரைப் பற்றி அறிய, 8ம் இடம் - மாங்கல்ய பலம் (அ) ஆயுள் ஸ்தானம்,  12ம் இடம் - சயன சுக ஸ்தானம் (அ) தாம்பத்யத்தைக் குறிப்பிடுவன.

அந்தக் காலத்தில் 3ம் இடமாகிய காம ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஆனால் இன்றைய உலகில் காமம் என்ற  மாயையும் பிரதான இடத்தினைப் பிடிப்பதால் 3ம் இடமும் பொருந்தி வருகிறதா, இருவருக்குள்ளும் பரஸ்பரம் ஒத்துப்போகுமா என்பதையும்  அறிந்தே பொருத்தத்தினை கணிக்க வேண்டும். பொருத்தம் பார்க்கச் செல்லும் பெற்றோர்களும், பொருத்தத்தினை பார்க்கும் ஜோதிடர்களும்  ஏழாம் இடமும், மூன்றாம் இடமும் இருவர் ஜாதகத்திலும் ஒத்துப்போகிறதா என்பதை அறிந்து அதன் பின்னர் திருமணத்தை முடிவு  செய்தால் இவ்வகைப் பிரச்னைகளுக்கு இடமளிக்க வேண்டியதில்லை. அக்காலத்தில் பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தார்கள். தங்களது  உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்ள இயலாத நிலை.

ஆனால், இன்றைய சூழலில் தடம் மாறுவதற்கான வாய்ப்புகளும், அதற்கான சூழலும் அதிகமாக இருப்பதால் வெறும் பணத்திற்கு மட்டும்  முக்கியத்துவம் அளிக்காமல் மனதிற்கும், அதன் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து மேற்சொன்ன வகையில் பொருத்தம் பார்த்து  திருமணம் செய்தோமேயாயின் ஜோதிடர்களையும், ஜாதகத்தையும் குறை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதோடு  பிள்ளைகளின் வாழ்க்கையும் நல்லபடியாக அமையும்.