தீபாவளித் திருநாளில் திருமகளின் திவ்விய தரிசனம்காலட்சுமியால்தான் தீபாவளியே உருவானது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மூலம் ஸ்ரீமகாலட்சுமியின் அம்சமான சத்யபாமாவால் நரகாசுரன் வதம்  செய்யப்பட்டான். நரகாசுரனும், ‘‘நான் இறந்த இந்த நாளை எல்லோரும் தீபாவளி திருநாளாக கொண்டாட வேண்டுமென’’  வேண்டிக்கொண்டான். தீபாவளியன்று அதிகாலையில் நீராடி, புத்தாடைகள் அணிந்து தீபங்கள் ஏற்றி  மகாலட்சுமியை பிரார்த்திக்க  வேண்டும். தீபாவளியன்று நிறைய தீபங்களை ஏற்றி வைத்து பூஜிக்க செல்வ வளம் பெருகும் என்பதை, ‘‘நீராஜிதோ மஹாலக்ஷ்மீ  மர்ச்சயன் ச்ரியமச்சனுதே தீ பைர் நிராஜிதா யத்ர தீபாவளிரிதி ஸ்ம்ருதா’’ எனும் வரிகள் கூறுகின்றன. தீபாவளியன்று  தலைக்குத்தேய்க்கும் எண்ணெயில் மகாலட்சுமியும், குளிக்கும் வெந்நீரில் கங்கையும் வாசம் செய்கிறாள் என்பதை, ‘‘தைலே லக்ஷ்மீர் ஜலே  கங்கா

தீபாவளிதினே வஸேத்’’ எனும் வரிகள் உறுதிப்படுத்துகின்றன. எனவே, தீபாவளியன்று மகாலக்ஷ்மியை தியானித்து வணங்க சித்தத்தில்  தெளிவும், லௌகீக வாழ்வில் வளங்களும், ஞான மார்க்கத்தில் இச்சையும் நிச்சயம் உண்டாகும். வாருங்கள் தீபாவளியன்று தரிசிக்கவும்,  தியானிக்கவும் சில மகாலட்சுமி உறைந்த தலங்களை பார்ப்போம்.

நிதிசேர அருள்வாள்யதிராஜவல்லி  பாரிமுனை - சென்னை

சென்னை ஆச்சாரப்பன் தெருவில் (முந்தைய கொத்தவால் சாவடி) உள்ளது. ஆதிகேசவப்பெருமாள் கோயில். இத்தலத்தின் தாயார் பெயர் -  யதிராஜவல்லி. ராமானுஜருக்கு தன் பெயரிலேயே இடமளித்து அவருடைய புகழ் சிறக்க அருள்புரிந்த அன்னை. ஆமாம். ராமானுஜருக்கு  ‘யதிராஜர்’ என்னும் ஒரு பெயர் உண்டு. அன்னை யதிராஜவல்லி, ‘ஒரு குருவின் வழிகாட்டல் மூலம் என்னை தியானித்தால், நீ  எண்ணியதெல்லாம் ஈடேறும் என்று சொல்லும் வகையில்தான் நம் குருவின் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டிருக்கிறார்.

தொட்டதெல்லாம் வெற்றியாக்குவாள் தொட்ட கட்டவல்லி மகாலட்சுமி

மைசூருக்கு அருகேயுள்ள ஹாஸன் பகுதிக்கு 23 கி.மீ தொலைவில் உள்ள ஊர் தொட்ட கட்டவல்லி. இங்கு இருக்கும் மகாலட்சுமியின்  ஆலயத்தில் சரஸ்வதிக்கும் ஒரு சந்நதியுள்ளது. சிவனும், விஷ்ணுவும் எதிர் எதிராக கோயில் கொண்டுள்ளனர்.  மிகவும் அழகான உருவம்.  நான்கு கைகளில் சங்கு, சக்கரம், கதை, தாமரை வைத்திருக்கிறாள். இம்மாதிரி கோலத்தில் வேறு எங்கேயுமே மகாலட்சுமி கிடையாது.

நலமுடன் வாழ அருள்வாள் நடனமாடும் லட்சுமி நூக்கிஹல்லி - மைசூரு

ஹாஸன் மாவட்டத்தில் சென்னராயப்பட்டினத்திற்கு 12 மைல் தொலைவிலுள்ள நூக்கிஹல்லியின் ஹொய்சாள மன்னர்கள் கட்டிய  கோயிலில் லட்சுமி தேவி நடனமாடும் தோற்றம் அமைந்திருக்கிறது. இதை செய்தவர் மாலிம்பா என்கிற பிரபல சிற்பி. இவருக்கு எல்லா  கடவுளையும் ஆடிப்பார்க்க ஆசை போலிருக்கிறது. நடனமாடும் லட்சுமியை (எட்டு கைகளுடன்) காணவேண்டும் என்றால்  இக்கோயிலுக்குத்தான் வரவேண்டும்.

செழிப்பாய் வாழ வைப்பாள் மும்பை மகாலட்சுமி

கல்கத்தாவைக் காளி எப்படி தன் சொந்த இடமாக்கிக் கொண்டாளோ அதேபோல் மகாலட்சுமி பம்பாயைத் தன் சொந்த இடமாக்கிக்  கொண்டிருக்கிறாள். மகாராஷ்டிரத்தில் கோலாப்பூரிலுள்ள மகாலட்சுமி கோயில் மிகப்பிரசித்தி பெற்றது. இது ஒரு சக்தி பீடம் கோலாப்பூரில்  தனிக்கோயில் கொண்டிருந்தாலும் நிறைந்த புகழுடன் மிக்க அருளுடனும் அவள் வாழ்வது மும்பையில்தான். மகாலட்சுமி ஆலயம் ஒரு  பங்களா மாதிரி காட்சி அளிக்கிறது. மூன்று முகமுள்ள தேவியைக் காணலாம். நடுவிலுள்ள முகம் காலட்சுமியுடையது. ஒரு பக்கம்  காளியின் முகமும், மற்றொரு பக்கம் சரஸ்வதியின் முகமும் காணப்படுகிறது. முகத்தைத் தவிர மற்ற பாகங்களைத் துணியால்  மறைத்திருக்கிறார்கள்.

இந்த இடத்திற்கு அருகில் ‘வொலி காஸ்வே’ என்றொரு பாலம் கட்டியிருக்கின்றனர். இதைக் கட்டியபோதெல்லாம் இடிந்துபோய்க்கொண்டே  இருந்ததாம். பல தடவை முயன்றும் கட்டி முடிக்க முடியவில்லை. இச்சமயத்தில் பிரபு என்று பொறியாளர் ஒருவரது கனவில் மகாலட்சுமி  தோன்றி தானும் தன் துணைவியார்களும் கடலில் அமிழ்ந்து கிடப்பதாகவும், தங்களை வெளிக்கொணர்ந்து கோயில் அமைத்தால் பாலம்  கட்ட முடியும் என்று தெரிவித்தாளாம். அந்த பிரபுதான் இந்த அம்மனைக் கண்டெடுத்து ஆலயத்தை நிர்மாணித்து அப்பாலத்தையும்  கட்டியிருக்கிறார். இக்கோயில் கி.பி.1761-ல் கட்டப்பட்டது.

வரம் பல அருள்வாள் பிச்சையிட்ட லட்சுமி உத்தமர்கோயில் - திருச்சி

பார்வதி பிச்சையிட்டு அன்னபூரணியானாள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். திருச்சிக்கு வடக்கே 5 மைல் தூரத்திலுள்ள உத்தமர்கோயில்  என்று அழைக்கப்படுகின்ற பிக்ஷாண்டார் கோயிலுக்குச் சென்றாள் லட்சுமி தேவி, பிக்ஷையிட்ட பெருமையை உணர முடியும். தாயாருக்குப்  பூரணவல்லித்தாயார் என்ற திருநாமம், இங்கே மும்மூர்த்திகளுக்கும் சந்நதிகள் உண்டு. சிவன் கபாலம் ஏந்தி பிக்ஷைக்குச் சென்றபோது  முதன் முதலில் லட்சுமி தேவியிடம் வந்திருக்கிறார். பிக்ஷையிட்டதும் கபாலம் நிரம்பிவிட்டது. அதன் காரணமாகவே அவளுக்குப்  பூரணவல்லி என்று பெயர் ஏற்பட்டுள்ளது.

தம்பதியர் இடையே  இணக்கம் தருவாள் ஜனகவல்லி ஏரிகாத்த ராமர் கோயில் - மதுராந்தகம்

ராமர் கோயில்களில் சீதாதேவி ராம லட்சுமணருடன்தான் காட்சியளிப்பாள். ஆனால் மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயிலில் ஜனகவல்லி  என்ற பெயருள்ள சீதாதேவிக்கு தனி சந்நதியுள்ளது. பிளேஸ் என்ற வெள்ளைக்கார கலெக்டர் இங்கு கோயிலின் முன்  மண்டபத்தைக்கட்டியிருக்கிறார்.

பெருவாழ்வு தருவாள் திருக்கண்ணநாயகி - தஞ்சை


தஞ்சை மாவட்டத்தில் நன்னிலம் அருகிலுள்ள திருக்கண்ணபுரத்தில் பெருமாளுக்கு நான்கு தேவிகள். தேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி  எனப்படும். வலைய நாச்சியார் (மீனவப்பெண்) இத்தேவியாருக்கு தனி சந்நதி கிடையாது. மூலக்கிரகத்தில் செளரிராஜன் பக்கத்தில்  இந்நால்வரும் காணப்படுகின்றனர்.

வழக்குகளை முடிப்பாள் துலுக்க நாச்சியார் ஸ்ரீரங்கம் - திருச்சி

ஸ்ரீரங்கத்தில் சயனித்துள்ள ரங்கநாதருடன் தேவிகள் யாரும் கிடையாது. ரங்க நாயகிதான் பட்ட மகிரிஷி அவருக்குத் தனிச்சந்நதி.  இவரைத் தேடி தான் ரங்கநாதர் இங்கு வருகிறார். ரங்கநாதருக்கு இங்கு பல மனைவிகள், ரங்கனைக் காதலித்து மணந்த துலுக்க  நாச்சியாருக்கு ரங்கம் கோயிலிலேயே தனிச்சந்நதி உள்ளது. ஆகவே ரங்கநாதனுக்கு ரொட்டியும் வெண்ணெயும் கூட நைவேத்தியம்  செய்யப்படுகிறது. மேலக்கோட்டையிலும் ஒரு துலுக்க நாச்சியார் இருக்கிறார். இவள் டில்லி பாதுஷாவின் மகள். இறைவனைக் காதலித்து  மணந்தவள்.சுல்தான் மகளின் பெயர் வரநந்தினி. மூலவரின் கால்களுக்கிடையில் அவள் தலை தெரிகிறது.

பெரும்புகழ் அருள்வாள் பெருந்தேவி காலடிப்பேட்டை - சென்னை

கிழக்கிந்திய கம்பெனியில் துபாஷ் வேலை பார்த்த வீரராகவச்சாரியார். வரதராஜப்பெருமாளை தினசரி காஞ்சிக்குச் சென்று வழிபட்டு  வந்தார். அவருடைய பக்தி கண்டு வியந்த ஆங்கிலேய கலெக்டர் கெல்லட், அவருக்காக சென்னை திருவொற்றியூர் பகுதியில் வரதராஜப்  பெருமாள் கோயிலை நிர்மாணித்துக் கொடுத்தார். தலைவன் கல்யாண வரதராஜனுடன் துணையாய் கூடவே வந்துவிட்டாள் பெருந்தேவி.  (செல்லப்பேட்டை தான் இப்போது காலடிப் பேட்டையாகி விட்டது.) தாயார், பெயரில் மட்டும் பெருந்தேவி அல்ல; அருள்புரிந்து  அரவணைத்துக் காப்பதிலும் பெரிய தேவிதான்!

இனிதான வாழ்வருளும் அனிமா மலர் மங்கை திருநீர்மலை - சென்னை

சென்னை திருநீர் மலையில் திருவருள் புரிந்து வருகிறாள். திருமகளாம் அனிமா மலர்மங்கை. இத்தலத்தின் நாயகன் நீர்வண்ணப்பெருமாள்.  மலர் மங்கை, தன் குளிர்ப்பார்வையால் பக்தர்களின் துயரென்னும் வெக்கையை விரட்டுகிறாள். இத்தலத்தில், கோயில் பிராகாரத்தில்  நிறைய திருமண ஜோடிகளைப் பார்க்கலாம். ஆமாம், தாயாரின் திருவருளாலும், ஆசியாலும் இங்கே மணமுடிக்கும் இளம் ஜோடிகள்  ஏராளம்.

அழகான ரூபம் தருவாள் அரூபலட்சுமி காமாட்சி கோயில் - காஞ்சிபுரம்

காஞ்சி காமாக்ஷி கோயிலில் அரூப லட்சுமியை தரிசிக்கலாம். மகாலட்சுமிக்கு தான் மிகவும் அழகுடையவள் என்ற கர்வம் ஏற்பட்டதாம்.  ஒருநாள் தன் கணவர் மகாவிஷ்ணு அழகையே பரிகசிக்க, அவர் சாபமிடுகிறார். அந்தச் சாபம் நீங்க காமகோட்டத்தை அடைந்து தேவியை  நோக்கித் தவம் புரிகிறாள் காமாக்ஷியின் குங்குமம் நிர்மால்ய பிரசாத ஸ்பரிசத்தால்தான் சுயரூபம் பெற்றாள்.

திருமண யோகம் தரும் திருலோகி மகாலட்சுமி திருலோகி -  கும்பகோணம்

பாற்கடல் பரந்தாமனின் திருமார்பில் நிரந்தரமாக தான் உறையவேண்டும் எனும் பேரவா கொண்டாள் மகாலட்சுமி. முப்பத்து முக்கோடி  தேவர்களும் சர்வ சாதாரணமாக வந்து செல்லும் திருலோகி எனும் கிராமத்தை அடைந்தாள். அத்தலத்தில் உறையும் ஈசனான  த்ரைலோக்ய சுந்தரனாக, விளங்கும் கல்யாணசுந்தரேஸ்வரரை வேண்டி அத்தலத்திலேயே அமர்ந்தாள்.

ஒரு பட்ட மரம் ஒன்றிருந்தது. அதன் கீழ் சென்று அமர்ந்தாள். தன் பிராணனைக் கொண்டு ஈசனை வழிபட்டாள். அந்தப் பிராணன் இடகலை,  பிங்கலை, சுழிமுனை என்று மூன்றாகப் பிரிந்து ஈசனை அடைந்தது. அவள் அமர்ந்த அம்மரம் துளிர்க்கத் துவங்கியது. திருமகளிடமிருந்து  வெளிப்பட்ட பேராற்றல் மிகுந்த பிராண சக்தியானது, மூவிதழாகப் பிரிந்தது. சிறு சிறு இலை வடிவம் கொண்டது. விஸ்வம் எனும்  பிரபஞ்சத்தையே அசைக்கும் ஈசனுக்குரியதாக அந்த இலைகள் இருந்ததால் வில்வம் எனும் பெயர் பெற்றது.

 ஈசனுக்குச் செய்யும் பூஜையில் ரத்னம்போல தனித்தன்மை பெற்றது. மஹாலட்சுமியின் சொரூபமாக அந்த மூவிலைகளும் விளங்கின.  தொடர்ந்து தவம் புரிந்து வில்வ இலைகளால் அர்ச்சித்தாள். வைகுந்த வாசன் திருலோகி எனும் அந்த தலத்திலே சயனக்கோலத்திலே  திருக்கண் வளர்ந்தார். பாற்கடலிலே எவ்வாறு பள்ளிகொண்டிருக்கிறானோ அவ்வாறே இங்கும் ஒயிலாகக் கிடந்தார். திருமகளை தம்  திருமார்பில் சேர்த்துக் கொண்டார். இவ்வாறு திருமகள் எம்பெருமானோடு இணைந்த வைபவமும், வில்வம் எனும் புனித இலைகள்  உருவெடுத்ததே இத்தலத்தில்தான்.

வில்வப் பழத்திற்கு ஸ்ரீபலம் என்கிற பெயரே உண்டு. திருமகள் இத்தலத்தில் தவம் செய்தமையால் ஸ்ரீபுரம் என்றும் அழைக்கப்பட்டது.  எனவே, தீபாவளி தினத்தன்று காவிரிக்கரையோரமுள்ள அதிகம் பிரசித்தி அடையாத அரிதான இத்தலத்திற்கு இயன்றோர்கள் சென்று  வரலாம். கும்பகோணத்திற்கு அருகேயுள்ள ஆடுதுறையிலிருந்து சூரியனார்கோயில், கஞ்சனூர் வழியாக தனிவாகனம் வைத்துக்கொண்டு  செல்லலாம்.

மன நிம்மதி தருவாள் மயூரவல்லித் தாயார் மயிலாப்பூர் - சென்னை


சென்னை மயிலாப்பூரிலுள்ள ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் தனிச் சந்நதியில் மயூரவல்லித் தாயார் கோயில் கொண்டிருக்கிறார்.  மயூரபுரி என்றும் மயிலாப்பூருக்கு வேறொரு திருநாமம் உண்டு. எனவே, இங்கு எழுந்தருளியிருக்கும் மகாலட்சுமிக்கு வில்வ தளங்களைக்  கொண்டு அர்ச்சித்தால் மகாலட்சுமியின் பூரண அருள் கிட்டும். வெள்ளிக்கிழமை அன்று மயூரவல்லித்தாயார் சந்நதிக்கு வந்து சந்நதியின்  கதவில் மணிக்கட்டி பிரார்த்தனை செய்து கொண்டு, வில்வார்ச்சனை செய்து வழிபட, வேண்டும் வரம் தருகிறாள்.

யோக வாழ்வளிப்பார் மகாலட்சுமீஸ்வரர் திருநின்றியூர் - மயிலாடுதுறை

திருமாலின் திருமார்பினில் நீங்காதிருக்கும் வரம் வேண்டி அலைமகளாம் லட்சுமிதேவி இங்கு ஈசனைப் பூஜித்து பேறு பெற்றதாக தல  புராணம் கூறுகிறது. கருவறைக்குள் கருணையோடு மகாலட்சுமீஸ்வரர் என்கிற திருப்பெயரோடு, ருத்ராட்சப் பந்தலின் கீழ்  அருள்பாலிக்கிறார். அனுஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட உகந்த தலம் இது. ஏனெனில், அனுஷத்திற்கு அதிதேவதையே மகாலட்சுமிதான்.  செல்வச் செழிப்பு உண்டாக லட்சுமி ஹோமம் நடத்தப்படுகின்றது. தாமரை இதழில் தேனூற்றி ஹோம அக்னியில் இட்டு யாகங்கள்  செய்யப்படுகின்றன. மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

பட்ட கடனை தீர்த்தருள்வாள் பத்மாவதி தாயார் திருச்சானூர் - கீழ்த் திருப்பதி

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான ஸ்ரீ வெங்கடாஜலபதி திருமலையிலும், கீழ் திருப்பதியில் பத்மாவதி தாயாரும் பேரருள் பெருக்கி  அமர்ந்திருக்கின்றனர். வைகுண்டத்தில் நாராயணின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய்  அருள்கிறாள். தன் மார்பை எட்டி உதைத்த பிருகு முனிவரை மன்னித்த திருமால் மீது கோபம் கொண்ட திருமகள் அவரை விட்டு நீங்கி  பூவுலகம் வர, அவளை சமாதானப்படுத்தி அழைத்து வர நாராயணனும் புறப்பட்டு வந்தார்.

மகாலட்சுமி சந்திர வம்சத்தைச் சேர்ந்த ஆகாசராஜன் எனும் மன்னன் செய்த புத்திரகாமேஷ்டி யாகத்தில் பெண் மகவாகத் தோன்றி,  பத்மாவதி எனும் பெயருடன் வளர்ந்தாள். தக்க பருவத்தில் பத்மாவதி - னிவாசன் திருமணம் ஏற்பாடானது. பொருள் இல்லாததால்  திருமணச் செலவிற்கு குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளைக் கடனாகப் பெற்று கலியுகம் முடியும்  வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்தார் ஸ்ரீனிவாசன்.

திருமணம் சிறப்பாக நடந்தேறியது. மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடவனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி  கீழ்த்திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறும் வரம் பெற்றதாகவும் புராணம் தெரிவிக்கிறது. மகாலட்சுமியான பத்மாவதியைத்  தரிசிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் அளிக்குமாறு வேங்கடவன் ஆணையிட்டுள்ளார்.

அங்கம் குறைகளை களைவாள் செங்கமல நாச்சியார் திருத்தங்கல் - விருதுநகர்


தேவி எனும் மகாலட்சுமி வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு ‘தானே மற்ற தேவியரை காட்டிலும் சிறந்தவள்’ என்று நிரூபிக்க  தங்காலமலை எனும் திருத்தங்கலுக்கு வந்து தவமியற்றினாள். செங்கமல நாச்சியார் எனும் திருநாமத்தோடு இத்தலத்தில் திருமகள்  தங்கியதால் திருத்தங்கல் என்றாயிற்று. பெருமாளும் திருமகளின் தவத்திற்கு மெச்சி ஏற்றுக் கொண்டார். நின்ற கோலத்தில் நாராயணன்  அருளும் தலம் இது. திருத்தங்காலப்பன் எனும் திருப்பெயரும் பெருமாளுக்கு உண்டு. இத்தல தாயாருக்கோ செங்கமலத்தாயார், கமல  மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்த நாயகி, அமிர்த நாயகி என்று பல்வேறு திருப்பெயர்கள்! நூற்றியெட்டு திவ்யதேசங்களில் இத்தலமும்  ஒன்று. விருதுநகருக்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது.

அதிர்ஷ்டத்தை அள்ளி தருவாள் அரசர்கோயில் சுந்தரமகாலட்சுமி படாளம் - செங்கல்பட்டு


செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள அரசர்கோயில் எனும் இடத்தில் ஆலயம் கொண்டுள்ள சுந்தரமகாலட்சுமியின் வலது பாதத்தில் ஆறு  விரல்கள் இருப்பது குறிப்பிடத்தக்க அதிசயம். ஒரு முறை ஜனக மகாராஜாவும், பெருமாளும் இத்தலத்தில் சேர்ந்திருக்க நேரிட்டதால்  இத்தலம் அரசர்கோயில் என்றானதாம். கற்பூர ஆரத்தி காட்டி, தாயாரின் வலது பாதத்தை தரிசிக்கும் வாய்ப்பை வழங்குகிறார் பட்டர். இடது  கரத்துக்குக் கீழே பத்மாசனமாக மடித்து வைத்த நிலையில் இருக்கிறது வலது பாதம். அதில் சுண்டு விரலை அடுத்து அழகான ஆறாவது  விரல். இந்த ஆறுவிரல்கள் உள்ள பாதத்தை தரிசிப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளித் தருகிறாள் மகாலட்சுமி என்பது ஐதீகம்.  அன்னைக்குப் பலாச் சுளைகளால் அபிஷேகம் செய்து பின் அவற்றை பக்தர்களுக்குப் பிரசாதமாக தருகிறார்கள். செங்கல்பட்டு -  மதுராந்தகம் பாதையில் படாளம் கூட்டு ரோட்டிலிருந்து இடது பக்கம் செல்லும் சாலையில் 6 கி.மீ தொலைவில் உள்ளது அரசர்கோயில்.

மாசற்ற வாழ்வு தருவாள் மாமாகுடி ஸ்ரீமகாலட்சுமி திருக்கடையூர் - மயிலாடுதுறை


ஸ்ரீமகாலட்சுமி அவதரித்த தலமாக இதைத்தான் குறிப்பிடுகின்றனர். திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு வடக்கிலும்,  ஆக்கூருக்கு அருகேயும் இத்தலம் அமைந்துள்ளது. ஆதிகாலத்தில் இத்தலத்தை லட்சுமிபுரம், திருமால்மாகுடி என்றெல்லாம் அழைத்தனர்.  மிகவும் அரிய ஆலயமாக இருப்பதால் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது.

தலைமுறை தழைக்கச்செய்வாள் தலைச்சங்க நாச்சியார் தலைச்சங்காடு -  மயிலாடுதுறை


தலைச்சங்க நாண் மதியம் என்கிற தலைச்சங்காடு ஆகும். தலைச்சங்க நாச்சியார் என்றழைக்கப்படும் இத்தல தாயார் நின்ற நிலையில்  அருள்பாலிக்கிறார். ஏனெனில், பெரும்பாலும் அமர்ந்த கோலத்தில் தாயார் அருள்பாலிக்கும் தலங்கள்தான் அதிகம். எனவே, இத்தலமே  தாயாரை முதன்மை படுத்தும் முக்கிய தலமாகும்.

மங்களம் அருள்வாள் மங்களகிரி ஸ்ரீலட்சுமி விஜயவாடா - ஆந்திரா


பெருமாளின் திருமார்பில் உறையும் லட்சுமிக்கு யோக லட்சுமி என்று பெயர். இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி, வீரலட்சுமி  என்றும் பெயர். லட்சுமி என்று போற்றப்பட்டும் மகாலட்சுமி ஆந்திர மாநிலத்திலுள்ள மங்களகிரி எனும் தலத்தில் எளிமையான  தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

முக்தி தருவார் காசி மகாலட்சுமீஸ்வரர்

காசியில் உள்ள சித்தலட்சுமி ஆலயம் தாமரை வடிவில் இருந்ததாக காசி காண்டம் கூறுகிறது. அருகேயே லட்சுமி குண்டம்  அமைந்துள்ளது. வாரணாசியில் மகாலட்சுமியால் பூஜிக்கப்பட்ட லிங்கம் மகாலட்சுமீஸ்வரர் எனும் திருப்பெயரோடு இன்றும் விளங்குகிறது.  தீபாவளியன்று காசிக் கங்கையில் ஸ்நானம் என்பதே விசேஷமாகும். அதிலும், மகாலட்சுமீஸ்வரரை தரிசிப்பதென்பது இன்னும்  அதிவிசேஷமாகும்.

கஷ்டங்களை போக்குவாள் அஷ்ட லட்சுமி நரசிங்கபுரம் - சேலம்


மூலவராக லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து அருள்பாலிக்கிறார். தாயார்  மகாலட்சுமியை திருத்தொடையில் அமரவைத்தபடி தனது இடது கையால் அரவணைத்தபடி வலது கரத்தால் அபய ஹஸ்தம் காட்டி  அருள்கிறார். தாயார் நேரடியாக பக்தர்களை பார்க்கும்படியாக இருப்பது இத்தல சிறப்பாகும். இதுதவிர தனிச் சந்நதியில் மரகதவல்லி எனும்  திருப்பெயரோடு தாயார் அருள்கிறாள். பிராகாரச் சுற்றிலேயே ஆதி லட்சுமி, தான்ய லட்சுமி, வீர லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, சந்தான  லட்சுமி, விஜய லட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி, தன லட்சுமி என்று அஷ்ட லட்சுமிகளையும் தரிசிக்கலாம்.

பேறு, புகழ் பெற்றுத்தருவாள் பேளூர் மகாலட்சுமி  கரடிப்பட்டி - வாழப்பாடி


கரடிப்பட்டியில் லட்சுமி நாராயணப் பெருமாளின் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அஷ்ட லட்சுமிகளின் பளிங்குச் சிலைகள்  கண்களையும் மனதையும் கவர்கின்றன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்டவை இச்சிலைகள். ஒவ்வொரு  லட்சுமியும் அவரவர்க்குரிய திக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார்கள். மூலவர் லட்சுமி நாராயணர், தனது மடியில் மகாலட்சுமியை அமர  வைத்திருக்கும் கோலம் கொள்ளை அழகு! எந்த திக்கிலிருந்தும் துயரம் தீண்டிவிடாதபடி அஷ்ட லட்சுமிகள் பக்தர்களைக் காக்கிறார்கள்.  சேலம் மாவட்டம், வாழப்பாடியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

இல்லறம் சிறக்க அருள்வாள் ராம்பாக்கம் லட்சுமிதேவி வானூர் - விழுப்புரம்


கருவறையில் பிரதான நாயகர் லட்சுமி நாராயணப் பெருமாள் எனும் திருநாமத்தோடு கம்பீரமாக வீற்றிருக்கிறார்.  லட்சுமி நாராயணப்  பெருமாள் லட்சுமி தேவியை மடியில் அமர்த்தி, வலது கையில் சக்கரம், இடது கையில் திருச்சங்கும் இன்னொரு கரத்தால் வரத  ஹஸ்தத்தோடு, மற்றுமொறு புறமுள்ள திருக்கரத்தால் லட்சுமியை அணைத்தவாறு காட்சி தருகிறார். பெருமாளும், அவர் தம் திருவடியும்  தாமரைப்பீடத்திலேயே அமைந்துள்ளன. ராம்பாக்கம் எனும் இத்தலம் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ளது.

தம்பதியரிடையே ஒற்றுமை ஓங்கச்செய்வாள் இடையாற்று மங்கலம் லட்சுமி தாயார் லால்குடி - திருச்சி

இத்தலத்தின் கருவறையில் லட்சுமி நாராயணன் எனும் திருநாமத்தோடு கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். தாயாரை இடது  திருத்தொடையில் அமர்த்தி சேவை சாதிக்கும் அழகை இத்தலத்தில்தான் காண வேண்டும். மேலும், கணவன் மனைவிக்கிடையேயுள்ள  பிரச்னைகள் நீங்க இத்தல பெருமாளை சுற்றிலுமுள்ள ஊர்களிலிருந்து வந்து வணங்கிச் செல்கின்றனர். திருச்சி - லால்குடிக்கு அருகேயே  இத்தலமும் அமைந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றுக்கும் அய்யன் வாய்க்காலுக்கும் இடையே இவ்வூர் அமைந்ததால் இடையாற்று மங்கலம்  என்றழைக்கின்றனர்.

ரங்கநாயகி கீழையூர் - திருத்துறைப்பூண்டி

இத்தலம் கிழக்கு அரங்கமாகும். அதுவே கீழையூர் என்றாயிற்று. கோயிலை கீழரங்கம் என்கிறார்கள். தாயாரின் திருநாமம் ரங்கநாயகி.  இக்கோயிலின் வடக்கே உள்ள பத்மதடாகம் எனும் புஷ்கரணியில் எம்பெருமானை மணந்துகொள்ள தாயார் தவம் செய்தார். இவ்வூரிலிருந்து  1 கி.மீ. தூரமுள்ள திருமணங்குடி எனும் ஊரில் பெருமாளை திருமணம் செய்து கொண்டார். நாகப்பட்டினத்திலிருந்து, திருத்துறைப்பூண்டி  செல்லும் சாலையில் 30 கி.மீ. தொலைவில் கீழையூர் அமைந்துள்ளது.

-கிருஷ்ணா