பிரசாதங்கள்



* தில்லி காட்டியா மிக்சர்

என்னென்ன தேவை?

கடலை மாவு - 1½ கப்,
கையில் கசக்கிய ஓமம், கரகரப்பாக பொடித்த மிளகு - தலா 1/4 டீஸ்பூன்,
சமையல் சோடா - 1 சிட்டிகை,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
கறிவேப்பிலை - சிறிது,
வேர்கடலை - 1/4 கப்.

எப்படிச் செய்வது?

கடலை மாவை நன்றாக சலித்து அதனுடன் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் கலந்து, பொரிக்க எண்ணெயை தவிர மற்ற பொருட்கள்  அனைத்தையும் கலந்து தேவையான அளவு சுடுதண்ணீர் ஊற்றி ரொட்டி மாவு பதத்திற்கு பிசைந்து 5 நிமிடம் வைக்கவும். மீண்டும்  பிசைந்து பெரிய கண் உள்ள அச்சில் போட்டு எண்ணெயை சூடாக்கி மிதமான தீயில் வைத்து மாவை பிழிந்து நன்றாக வேகவிட்டு எடுத்து  எண்ணெயை வடித்து பரிமாறவும்.

குறிப்பு: வேர்கடலை, கறிவேப்பிலை, ஜவ்வரிசியை பொரித்தும் சேர்க்கலாம்.

* கிரிஸ்பி மட்ரி

என்னென்ன தேவை?

மைதா - 2 கப்,
நெய் - 1/4 கப்,
பொடித்த ரவை - 1/2 கப்,
ஓமம் - 1/2 டீஸ்பூன்,
கருஞ்சீரகம், கரகரப்பாக உடைத்த மிளகு - 1/4 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மைதா, ரவை, உப்பு, கருஞ்சீரகம், மிளகு, ஓமம் கலந்து நெய்யை சூடு செய்து லேசாக உருக்கி சேர்த்து தேவையான அளவு தண்ணீர்  தெளித்து பூரி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து 20 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு மாவை எடுத்து மீண்டும் பிசைந்து 4 பாக  உருண்டைகளாக பிரித்து உருட்டி, அரை இன்ச் கனத்திற்கு ரொட்டிகளாக சமமாக தேய்த்து சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெயை சூடாக்கி  மிதமான தீயில் வைத்து மட்ரிகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து எண்ணெயை வடித்து பரிமாறவும்.

குறிப்பு: மைதாவிற்கு பதில் கோதுமை மாவு சேர்க்கலாம்.

* உருளைக் கிழங்கு சீஸ் சேவ்

என்னென்ன தேவை?

வேகவைத்து தோலுரித்து மசித்த உருளைக்கிழங்கு - 1,
சளித்த கடலை மாவு, அரிசி மாவு - தலா 1 கப்,
கையில் கசக்கிய ஓமம் - 2 டீஸ்பூன்,
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
 சதுர துண்டு சீஸ் - 1 (துருவவும்,)
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் பொரிக்க எண்ணெயை தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கட்டியில்லாமல் ஓமப்பொடி பதத்திற்கு கெட்டியாக  பிசையவும். தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து பிசையலாம். எண்ணெயை சூடாக்கி மிதமான தீயில் வைத்து பிசைந்த மாவை  ஓமப்பொடி அச்சில் போட்டு பிழியவும். சேவ் வெந்ததும் எடுத்து எண்ணெயை வடித்து பரிமாறவும்.

* பீட்ரூட் பாதாம் அல்வா


என்னென்ன தேவை?


பாகிற்கு... தண்ணீர் - 3/4 கப், சர்க்கரை - 1 கப், எலுமிச்சைச்சாறு - 1 டேபிள்ஸ்பூன், ரோஸ் எசென்ஸ் - 4 துளிகள். பீட்ரூட் - 1, சோள  மாவு - 1/2 கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், பாதாம் பொடித்தது அல்லது சீவியது - 1/2 கப், தண்ணீர் - 1 கப்.  அலங்கரிக்க பாதாம் - சிறிது,  பதப்படுத்தி காயவைத்த தேங்காய்ப்பொடி - 1/2 கப்.

எப்படிச் செய்வது?


பாகிற்கு கொடுத்த பொருட்களை போட்டு கொதிக்க வைத்து பிசுபிசு பாகு பதத்திற்கு தேன் போல் வழவழப்பாக வந்ததும் எலுமிச்சைச்சாறு  சேர்த்து இறக்கி மூடி வைக்கவும். பாத்திரத்தில் வேகவைத்து நைசாக அரைத்து வடித்த பீட்ரூட், சோள மாவு, தேவையான அளவு தண்ணீர்  சேர்த்து கட்டியில்லாமல் கலந்து வைக்கவும்.நான்ஸ்டிக் தவாவில் 1 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு லேசாக காய்ந்ததும் பீட்ரூட் கலவையை  சேர்த்து கைவிடாமல் கட்டிதட்டாமல் கிளறவும். இது வெந்து வரும்போது பாகு, மீதியுள்ள நெய் சேர்த்து கிளறி கண்ணாடி போன்ற  பதத்திற்கு அல்வா சுருண்டு வந்ததும் இறக்கி ரோஸ் எசென்ஸ், பாதாம் சீவல் கலந்து நெய் தடவிய தட்டில் கொட்டி மேலே  தேங்காய்ப்பொடி, பாதாம் சீவல் தூவி 4 மணி நேரம் ஆறவிட்டு பின்பு துண்டுகள் போட்டு பரிமாறவும்.

* ஸ்டஃப்டு மக்கன் பேடா

என்னென்ன தேவை?


பாகிற்கு...

சர்க்கரை - 3 கப்,
தண்ணீர் - 1¼ கப்,
குங்குமப்பூ - 1 சிட்டிகை,
ஏலக்காய் - 2.

பேடா செய்ய...

குலோப்ஜாமூன் மிக்ஸ் பவுடர் - 200 கிராம்,
மைதா - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, சோடா உப்பு - தலா 1 சிட்டிகை,
இனிப்பில்லாத கோவா - 50 கிராம்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
பொரிக்க எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு.

ஸ்டஃப்பிங் செய்ய...

பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி கலந்தது - 1/4 கப்.

எப்படிச் செய்வது?


பாகு செய்ய கொடுத்த பொருட்களை மிதமான தீயில் வைத்து கிளறி வழவழப்பான பாகு பதத்திற்கு வந்ததும் இறக்கி ஏலம், குங்குமப்பூ  கலந்து வைக்கவும்.பேடா செய்ய கொடுத்த பொருட்களை கலந்து அதிகம் அழுத்தம் இல்லாமல் மிதமாக பிசைந்து கடைசியில் நெய்  சேர்த்து கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும். தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து கலக்கலாம்.

மாவிலிருந்து சிறு எலுமிச்சை அளவு எடுத்து சொப்பு போல் செய்து நட்ஸ் கலவையை உள்ளே வைத்து மூடி தட்டிக் கொள்ளவும்.  எண்ணெயை சூடாக்கி மிதமான தீயில் வைத்து பேடாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து எண்ணெயை வடித்து பாகில்  அரைமணி ஊறவைக்கவும். பின்பு சிறு கிண்ணத்தில் போட்டு நட்ஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

-சந்திரலேகா ராமமூர்த்தி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்