குலம் தழைக்க வைக்கும் நாச்சியார்கோவில் குத்துவிளக்கு



உலகம் பஞ்சபூத சக்தியான நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பால் இயங்கி வருகிறது. இதேபோல் நமது உடலும் பஞ்ச சக்தியான  எலும்பு, தோல், முடி, நரம்பு, தசையால் இயங்கி வருகிறது. இதேபோல் இந்த உலகம் பஞ்ச உலோகம், பஞ்சபூத சக்தி, பஞ்ச சக்தி,  பஞ்சகிரியா சக்தி, பஞ்சமுகம் ஆகிய பஞ்ச சக்தியாலும், ஆதிசக்தி, பராசக்தி, இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி ஆகிய ஐந்து  சக்திகளாகவும் இயங்கி வருகிறது. உலகம் முழுவதும் பஞ்ச பூதங்கள் இயங்கி வருவதால் நமது முன்னோர்கள் அதை முறைப்படி வணங்க  வேண்டும் என்பதை வலியுறுத்தி விளக்கு வடிவமாக அமைத்துள்ளனர்.

இதையொட்டி கோயில்கள், வீடுகள், சுபகாரியங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிக்கும் முதலாவது குத்து விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டு  துவங்குவது காலம் காலமாக நடந்து வரும் வழக்கம். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவிலில் பரம்பரை  பரம்பரையாக குத்துவிளக்கு தயார் ெசய்யும் பணி நடந்து வருகிறது. ஐநூறுக்கும் மேற்பட்ட குத்துவிளக்கு பட்டறைகளில்  பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழக அளவில் ஐம்பொன் சிலைக்கு சுவாமிமலை,  பாத்திரங்களுக்கு கும்பகோணம், வெற்றிலைக்கு ஆவூர் சிறப்பு பெற்றதுபோல் நாச்சியார்கோவில் பித்தளை குத்துவிளக்கு சிறப்பு  பெற்றதாகும்.

இங்கு தயார் செய்யப்படும் பித்தளை குத்து விளக்குகள் அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகள்,  வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. கும்பகோணம் பகுதியிலுள்ள கோயிலுக்கு வரும் பக்தர்கள்,  நாச்சியார்கோவில் குத்துவிளக்கை வாங்காமல் செல்ல மாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை. இதுகுறித்து நாச்சியார்கோவில்  கம்மாளர் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் கூறுகையில், ‘‘காவிரி ஆற்றின் படுகை மண்ணால் மட்டும் ஐம்பொன் சிலை வார்ப்பு எடுக்க  உகந்த இடம் என்பதால் சுவாமிமலையில் ஐம்பொன் சிலை செய்யும் ஸ்தபதிகளை மாமன்னன் ராஜராஜசோழன் குடியமர்த்தினார்.

இதேபோல் பித்தளை குத்து விளக்கு தயார் செய்வதற்கு நாச்சியார்கோவில் சேப்பங்குளம் மற்றும் அரசலாற்றின் படுகை மண் உகந்தது  என குத்துவிளக்கு செய்யும் பத்தர்களை குடியமர்த்தினார். 250 கிலோ பித்தளை, 50 கிலோ செம்பு காய்ச்சினால் ஒரு அடி குத்துவிளக்கு  90 எண்ணிக்கையில் தயாரிக்கலாம். 6 அடி விளக்கு 6 எண்ணிக்கையில்தான் செய்ய முடியும். சாதாரணமாக ஒரு குத்துவிளக்கு செய்ய  குறைந்தது 3 நாட்கள் முதல் 6 நாட்களாகும். பித்தளை குத்துவிளக்கு கிலோ ரூ.550க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

நாச்சியார்கோவில் வண்டிப்பேட்டையை சேர்ந்த தட்சிணாமூர்த்தி கூறுகையில், ‘‘நிலையான விளக்கு என்ற பெயரே குத்துவிளக்காக  மருவிவிட்டது. குடும்பத்தில் உள்ளவர்கள் எக்காலத்திலும் நிலையாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் நிலை விளக்கு என்றனர்.  பின்னர், ஒரே இடத்தில் வைப்பதால் குத்துவிளக்கு என்று ெபயர் மருவிவிட்டது. லட்சுமி அம்சமாக குத்துவிளக்கை கூறுவதால் பெண்  பார்க்கப் போனவர்களிடம், பெண் எப்படி இருக்கிறாள் என்று கேட்டால் குத்துவிளக்கு போன்று இருக்கிறாள் என இன்றளவும் வழக்கு சொல்  இருக்கிறது. இதனால் குத்துவிளக்கை லட்சுமி விளக்கு’’ என்றும் கூறுவர்.

நாச்சியார்கோவிலில் காமாட்சி விளக்கு, அன்னபட்சி விளக்கு, தாமரை விளக்கு, பன்னீர் சொம்பு விளக்கு, கிளி விளக்கு, நவமுக  அலங்கார விளக்கு, ஏகதீப விளக்கு, பஞ்சமுக தீப விளக்கு, பட்டை விளக்கு, குபேர விளக்கு, சங்குசக்கர விளக்கு உள்ளிட்ட 15க்கும்  மேற்பட்ட விளக்குகள் தயாரிக்கப்படுகிறது. உலகத்தை உருவாக்கிய விஸ்வகர்மாக்கள் 5 பிரிவுகளை கொண்டவர்களாகும். கொல்லர்  மற்றும் கருமார் வேலை செய்பவர்களை சத்தியஜாதம் என்றும், மரவேலை, ஆச்சாரி வேலை செய்பவர்களை வாமதேவம் என்றும், தகட்டு  வேலை செய்பவர்களை அகோரம் என்றும், தங்கநகை வேலை செய்பவர்களை தத்புருஷம் என்றும், சிற்ப வேலை செய்பவர்களை ஈசானம்  என்றும் கூறுவர்.

உலகத்தை காத்துவரும் பஞ்ச பூதங்கள் குத்து விளக்குகளில் இருக்கிறது. நீர் எண்ணெயாகவும், நிலம் மண்ணாகவும், நெருப்பு தீபமாகவும்,  காற்று புகையாகவும், ஆகாயம் ஒளியாகவும் இருக்கிறது. இதற்காகக்கூட பஞ்சமுக தீபத்தை வடிவமைத்திருக்கலாம். குத்துவிளக்குக்கு  அன்னபட்சி, தகழி, கும்பாசம், மேத்துண்டு, வாழைப்பூ, காய், தட்டு ஆகிய ஏழு பாகங்கள் உண்டு.

இதில் மேத்துண்டு, வாழைப்பூ, காய் பகுதிகளுக்கு கரு வைக்காமல் வடிவமைத்தால் எடை அதிகமாகி தூக்குவதற்கு சிரமம் என்பதால் கரு  வைத்து வடிவமைப்பர். பிறை, தகழி, தட்டு, கும்பாசம் ஆகிய மூன்று பாகங்களுக்கு கரு வைக்காமல் நேரடியாக பித்தளை செம்பு ஊற்றி  வடிவமைப்பர். நூறு ஆண்டுகளுக்கு மேல் இங்கு குத்து விளக்கு செய்து வருகின்றோம்.  எங்கள் குடும்பத்தில், எனது மகன்  அபுவெங்கடேஷ், கோவையில் பி.ஈ. படித்து விட்டு, குலத்தொழிலை விடக்கூடாது என்பதற்காக , குத்து விளக்கு தயாரிக்கும் தொழில்  ஈடுபட்டுள்ளார் என்றார்.

துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகும்

குத்துவிளக்கில் கிழக்கு முகமாக விளக்கேற்றினால் துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகும். மேற்கு முகமாக விளக்கேற்றினால் கிரக  தோஷம், பங்காளி பகை உண்டாகும். வடக்கு முகமாக விளக்கேற்றினால் கல்வி மற்றும் சுப காரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும்,  திரண்ட செல்வம் உண்டு. தெற்கு முகமாக விளக்கேற்றினால் அபசகுனம், பெரும் பாவம் உண்டாகும். குத்து விளக்கில் ஒரு முகம்  ஏற்றினால் மத்திம பலனாக இருக்கும், இருமுகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமையுடன் இருக்கும், மும்முகம் ஏற்றினால் புத்திர சுகம், கல்வி  கேள்விகளில் விருத்தியாகும், நான்கு முகம் ஏற்றினால் சர்வ பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும் என்பது  ஐதீகமாகும்.

இதேபோல் தாமரை தண்டில் திரியால் தீபமேற்றினால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும். வாழைத்தண்டு நூல் திரியால் தீபமேற்றினால்  குலதெய்வக் குற்றம், சாபம் நீங்கும். புது மஞ்சள் சேலை துண்டு திரியால் தீபமேற்றினால் தாம்பத்ய தகராறு நீங்கும். புதுவெள்ளை  வஸ்திரத்தில் பன்னீரை விட்டு உலர விட்டு திரியால் தீபமேற்றினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறையும். நெய்விளக்கு ஏற்றினால்  லட்சுமி வாசம் செய்வாள். இலுப்பை எண்ணெயால் விளக்கேற்றினால் பூஜிப்பவருக்கும், பூஜிக்கப்படும் இடத்துக்கும் விருத்தியுண்டாகும்.  விளக்கெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் துன்பங்கள் விலகும்.

கட்டுரை படங்கள்:  சி.எஸ்.ஆறுமுகம்