கண்ணன் வரும் தீபாவளி



கண்ணனை எண்ணாத நாளில்லையே!
கண்களில் அவனன்றி வேறில்லையே!
மீரா மனம் இங்கே!
கண்ணன் முகம் எங்கே!
மனம் கவர்ந்த கள்வன் எங்கே!
நினைவுகள் பறப்பதெங்கே!

ஆடையை ஒளித்து வைத்து
அழவைப்பான்-ஆபத்தில்
புடவை வளர்த்து மானம் காத்திடுவான்!
குறும்பில் குழந்தை!
குணத்தில் சீலன்!
பண்பில் பசுஞ்சோலை நிழலாவான்!
மீரா மனம் இங்கே! கண்ணன் முகம் எங்கே!

வெள்ளலை கால்
நனைத்து செல்லும்-அது
கண்ணனை சந்தித்து
சேதி சொல்லும்!
தவமொன்று கரையில்
தவம் செய்கிறது - அதன் வலிமை
வரமதை அழைத்து வருகிறது!
வரங்கள் இனிதாகும்!
வாழ்க்கை சுகமாகும்!

மனக்கூட்டில் கண்ணன் பெயரை
அடைகாத்தேன்!
நூறு பட்டாம்பூச்சு மனதில் சிறகடிக்க
ஆத்மராகத்தில் ஆயிரம்
கேள்விகள்  கேட்டேன்!
கோதை மேதை என்பார்!
பேதை என்பார் -சிலர்
‘அந்தோ’ பரிதாபம் என்பார்!
முரண்தொடர் என்காதில்
முராரி என்றே ஒலிக்கிறது!

வாணவேடிக்கை அலங்காரம்!
வண்ணபூக்கோல வரவேற்பு!
ஊரெங்கும் புதுக்காலை உற்சாகம்!
இனிப்புடன் வாழ்த்து பரிமாற்றம்
தீபாவளி திருநாளென தீபவிழி
தோழியர் சொன்னார்!
காதருகே பொன்வண்டு ரீங்கரித்தது!
மனவானில் கருடன் வட்டமிட்டது!
கண்ணன் வரும் நாளென
கார்மேகம்  தூது சொன்னது!

மீரா மனம் இங்கே! பிருந்தாவனம் இங்கே!
நினைவுகள் பறப்பதெங்கே!  
துளசியிலை இங்கே! தூய மனம் இங்கே!
கண்ணன் இனி பிரிவதெங்கே!  

-விஷ்ணுதாசன்