கரங்களில் குழைந்தெழும் தெய்வங்கள்தெய்வங்களின் அவதாரங்கள், அவதரித்த தலங்கள் குறித்து நமக்குப் பலவிதமான புராணக் கதைகள் கூறப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றையும் கேட்டாலும் கடவுளரின் பிறந்த இடம் பற்றி போதிய தகவல்கள் சரிவர கிடைப்பதில்லை. ஆனால், நாம் கொஞ்சம் மெனக்கெட்டால் அனைத்து தெய்வங்களும் பிறக்கும் இடத்தை ஒரே இடத்தில் தரிசிக்கலாம். இதற்கெல்லாம் வெண்மேகம் சூழ்ந்த கைலாயத்திற்கோ, பவளப்பாறைகளிடையே மீன்கள் நீந்தும் ஆழ்கடலுக்கோ, மான்களும் முயல்களும் உலவும் அடர்ந்த வனங்களுக்கோ செல்ல வேண்டியதில்லை. நமக்கு அருகில் உள்ள புதுச்சேரி அல்லது கடலூர் மாவட்டத்திற்கு சென்றாலே போதும்.

பல தெய்வங்கள் இங்குதான் பிறக்கிறார்கள். அதுவும் சிறுசிறு ஓலைக் குடிசைகளில், மழையின் ஈரத்தை உள்வாங்கியும், வெயிலின் உக்கிரத்தை உணர்ந்தபடியும் விதம்விதமான தெய்வ உருவங்கள் நாள்தோறும் உருவாகியபடி இருக்கிறார்கள். அவ்வாறு பிறப்பவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும், சில இடங்களில் வெளிநாடுகளுக்கும் பயணமாகிறார்கள். நவராத்திரி நெருங்குவதால் பல கடவுள்கள் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில், பலவித வடிவங்களில் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது யூகித்து விட்டீர்களா? ஆம். நவராத்திரி கொலுவில் இடம் பெறப்போகும் விதம்விதமான கடவுள்கள்தான் இங்கே பிறக்கிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் ஒரு மாதிரி பிறக்கிறார்கள். அவர்கள் மண்ணிலிருந்து கரங்களில் குழைந்து உருவமாகி, கடவுளாக முழுமையுறும் தருணங்கள் ஓர் அற்புத உணர்வாகும். இந்த உருவாக்கத்திற்காக உழைக்கும் மக்களின் அனுபவம் வேறொரு உணர்வையும் தருகிறது. தெய்வங்களின் உருவாக்கத்தில் அவர்களின் பிரயத்தனங்கள் குறித்து அறிய பல்வேறு  ஊர்களில் சுற்றித் திரிந்தோம். தெய்வீக உருவங்கள், மனிதர்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட கொலு பொம்மைகளை தயாரிப்பதில் புதுச்சேரி ஒரு முக்கிய கேந்திரமாகத் திகழ்கிறது.

இங்கே பல குடும்பங்கள் கொலு பொம்மை மற்றும் தெய்வ உருவங்கள் செய்வதையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். குயவர்கள் அதிகளவில் வசித்ததால் இங்குள்ள ஒரு பகுதிக்கு கொசப்பாளையம் என்றே பெயர் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் மண் பொம்மைகள் கொசப்பாளையம் டாய்ஸ் என்ற சிறப்புடன் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 1965ம் ஆண்டில் இந்தியாவில் முதன்முதலில் தேசிய விருது கொடுக்கப்பட்டதில், கொசப்பாளையத்தை சேர்ந்த வைத்திலிங்க பத்தர் என்ற மண் பொம்மை தயாரிப்பாளருக்கு அந்த முதல் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் தேசிய விருது மண்பொம்மை தயாரிப்புக்கு கிடைத்திருப்பது, இந்தத் தொழிலுக்குக் கிடைத்த மிகப்பெரும் கௌரவம் என்கிறார்கள், இப்போதுள்ள மண் பொம்மை தொழிலாளர்கள். வைத்திலிங்க பத்தரின் பேரனான முனுசாமி தற்போது புதுவை வில்லியனூர் பகுதியில் அதே தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவரது மனைவி கவிதாவும் அத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர்கள் தயாரித்து வரும் சுடுமண் சிற்பங்களான டெரகோட்டா மண்பொம்மைகள் மும்பை, டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்காக செல்கின்றன.

மேலும் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் இவர்கள் தயாரிக்கும் பொம்மைகள் ஏற்றுமதியாகின்றன. தற்போது கிருஷ்ணனின் பல்வேறு அவதாரங்களை குறிப்பிடும் உருவங்கள், கும்பகர்ணன், பீமன், கடோத்கஜன், மீனாட்சி கல்யாணம், ராவணன் தர்பார், ஸ்ரீரங்கம் செட், தாயுமானவர் செட், சூரிய ரதம், சங்கீத மும்மூர்த்திகள் என விதம் விதமான கொலு பொம்மைகளை தயாரிப்பதில் பிசியாகி இருக்கிறார்கள். வேலையின் இடையே இத்தொழில் குறித்து நம்மிடம் பேச ஆரம்பிக்கிறார்கள் கவிதா- முனுசாமி தம்பதியினர்...

மன்னன் விக்கிரமாதித்தன் வேதாளத்திடம் கதை கேட்பது, மாந்திரீகத்தில் நாட்டம் கொள்வது என ஒரு போக்கில் போய்க்கொண்டிருந்ததால் மக்களை சரியாக கவனிக்க முடியவில்லை. இதனால் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வந்தனர். அப்போது மக்கள் ஒரு ரிஷியிடம் சென்று முறையிடுகிறார்கள். ரிஷியோ, மண்பொம்மை தயாரிக்கும் சிறுவனான சாலிவாகனன் மட்டுமே விக்கிரமாதித்தனை எதிர்கொள்ள சரியான ஆள் என்று சொல்லி அனுப்புகிறார். உடனே மக்கள் சாலிவாகனன் வீட்டுக்குச் செல்கிறார்கள். மன்னனை எதிர்க்குமாறு கேட்டதால், சாலிவாகனனின் பெற்றோர் பதறியடித்து கோபப்படுகின்றனர்.

மன்னனை எதிர்த்து என் மகனை மோதவைத்து சாகடிக்கப் பார்க்கிறீர்களா? என்று கேட்டு கொதிப்படைகிறார்கள். அப்போது சாலிவாகனன் அங்கு வருகிறான். மக்களின் குமுறல்களை கேட்ட அவன், விக்கிரமாதித்தனுடன் மோதத் தயாராகிறான். சிறுவனான சாலிவாகனன் எப்படி மன்னனின் படையுடன் மோதுவான்? என அனைவரும் வாய் பிளந்து பார்க்கிறார்கள். அப்போது அவன் விதம் விதமாக மண்ணால் செய்து வைத்த குதிரை, யானை, போர்வீரர்கள் உள்ளிட்ட பொம்மைகளை சூளைகளில் இருந்து எடுக்கிறான். அவற்றின் மீது கமண்டலத்தில் வைத்திருந்த தண்ணீரை தெளித்து, பிரம்பால் தட்டுகிறான்.

உடனே அந்த பொம்மைகள் எல்லாம் உயிர்பெற்று விக்கிரமாதித்தன் படைகளுடன் மோதி வெற்றி கொள்கின்றன. மக்களின் ஆதரவுடன் சாலிவாகனன் மன்னன் ஆகிறான். மைசூர் மகாராஜா தர்பார் என குறிப்பிடப்படும் இந்த நிகழ்வுதான் மைசூரில் புகழ்பெற்ற தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வை வைத்து மண்பொம்மை உயிர்பெறும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்து வருகிறது. இதன் வழியாகத்தான் நவராத்திரியின்போது பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து, வழிபாடு நடத்துகிறார்கள். ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட புராணக் கதைகளை பொம்மைகள் வழியாக குழந்தைகளுக்கு விளக்குவோம் என்ற ரீதியிலும் கொலு வைக்கிறார்கள்.

அடிப்படையில் ஓரறிவு ஜீவன் முதல் அன்பை மையமாக கொண்ட தெய்வங்களை குறிப்பிடும் ஒன்பதாம் நிலை வரை பொம்மைகளாக அடுக்கி வைத்து வழிபாடு நடத்துவதால் பல பொம்மைகளை மக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கிறார்கள். இதனால் நாங்கள் விதம்விதமான பொம்மைகளை தயாரித்து வருகிறோம். களிமண்ணைப் பிசைந்து சிறுசிறு உருவங்களில் முகம், கை, கால்கள் வைப்பது சவாலான விஷயம். ஆனால் அது எங்களுக்கு ஒரு கலையை நேர்த்தியாக செய்கிறோம் என்ற நிறைவை தருகிறது. காளி போன்ற தெய்வங்கள் ஆக்ரோஷமாக பார்ப்பது, லட்சுமி போன்ற தெய்வங்கள் சாந்தமான முகத்துடன் பார்ப்பது என விதம் விதமான முக பாவனைகளுடன் இதை தயார் செய்ய வேண்டியிருக்கிறது.

இதற்கு கண்ணின் அமைப்பை லாவகமாக உருவாக்க வேண்டும். கொஞ்சம் மாறினால் கூட சிலைக்கு உயிரோட்டம் இருக்காது. இதனால் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டியிருக்கிறது என்கிறார்கள். தமிழகத்தின் கடலூர் நகரத்தையொட்டி கேப்பர் மலைக்கு அருகில் அமைந்துள்ள பழைய வண்டிப்பாளையம் பகுதி கொலு பொம்மைக்கென்றே பேர் பெற்ற பகுதியாக விளங்குகிறது. அவித்த நெல், மணிலாபோல ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கொலு பொம்மைகள் வெயிலில் காய வைக்கப்படுகின்றன. இங்குள்ள சுமார் 100 குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக கொலு பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சில விற்பனை நிறுவனங்களும், மக்களும் நேரடியாக இங்கு பொம்மைகளை வாங்கிச் செல்கிறார்கள். அவர்களுக்காக கிருஷ்ண லீலைகள், மகாபாரதம் என பல கதைகள் சொல்லும் பொம்மைகள் தத்ரூபமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு வருபவர்களில் ஒருவரான கார்த்திகேயன் என்பவரிடம் பேசினோம். ‘‘இப்பகுதியில் நெசவுத் தொழிலும், மண்பாண்டத் தொழிலும் சிறப்பாக இருந்துள்ளது. காலப்போக்கில் நெசவுத் தொழில் நொடிந்து விட்டது. மண்பாண்டத் தொழிலும் அவ்வாறே கொஞ்சம் கொஞ்சமாக நொடிந்து வருகிறது.

ஆனால், கோயில்களுக்கு மண் குதிரை தயாரிப்பது, கொலு பொம்மைகள் தயாரிப்பது என இந்த தொழில் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. இங்கு சில பழங்கால கலைஞர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட கதைகளில் வரும் காட்சிகளை வைத்து மாடல் தயாரித்து கொடுப்பார்கள். அந்த மாடல்களை வைத்து மோல்டிங் (அச்சு) தயாரித்து, அதில் களிமண்ணை நிரப்பி பல பொம்மைகளை தயாரித்து வருகிறோம். இங்கு வருடத்தின் 365 நாட்களுமே வேலை இருக்கும். ஆறுமாதம் மண் வேலைகளில் ஈடுபடுவோம். அப்போது களிமண்ணைக் கொண்டு வந்து ஊற வைத்து பொம்மைகள் தயாரிப்பது,

அவற்றை காயவைப்பது, சூளையில் சுடுவது போன்ற வேலைகளில் ஈடுபடுவோம். மண் எடுத்து ஊறவைக்கும் பணியை மழைக் காலத்தில் செய்வோம். சூளையில் சுட்டெடுக்கும் பணியை வெயில் காலமான சித்திரை, வைகாசி மாதங்களில் செய்வோம். இதுதவிர மற்ற ஆறு மாதங்களுக்கு பொம்மைகளை பினிஷிங் செய்வது, பெயிண்ட் அடிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவோம். இங்கு 6 இஞ்ச் முதல் 3 அடி வரையிலான பொம்மைகளை தயாரித்து வருகிறோம். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் நடத்தப்படும் நவராத்திரி மற்றும் பல்வேறு விழாக்களுக்கு தேவையான பொம்மைகளை வாங்கவும் இங்கு வந்து செல்கிறார்கள்.

அதற்காக சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு சென்று, தல வரலாறுகளை கேட்டு, அதன்படி பொம்மைகளை தயார் செய்வோம். ரங்கம் கோயிலின் சொர்க்கவாசல், திருப்பதியின் பிரம்மோற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை படமெடுத்து அதன்படியும் சிலைகளை தயார் செய்வோம். எப்போதும் இங்கு வேலை இருப்பதால் பல நூறு பேருக்கு வேலையும் வழங்கப்படுகிறது. எங்களுக்கு மட்டுமல்லாமல் இப்பகுதியை சேர்ந்த பலருக்கு இந்த மண் பொம்மைகள்தான் சோறிடுகின்றன என நெகிழ்கிறார் கார்த்திகேயன். பண்ருட்டியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் அங்குசெட்டிப்பாளையம் அருகில் அமைந்திருக்கிறது வையாபுரி பட்டினம்.

சுமார் 50 குடும்பங்கள் இங்கு கொலு பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. சாலையின் இருபுறங்களிலும் தகர கொட்டகைகள் அமைத்து அதில் பொம்மைகள் தயார் செய்யப்படுகின்றன. பல வண்ணங்களில் பலவித கடவுள்களும், மனித உருவங்களும், இன்ன பிற உயிரினங்களின் உருவ பொம்மைகளும் இங்கு உருவாக்கப்படுகின்றன. நவராத்திரி நெருங்குவதால் பொம்மைகள், சாலையோரம் வைத்து விற்பனையும் செய்யப்படுகின்றன. இங்கு பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஷண்முகம் என்பவர் பேசுகையில்...‘‘நாங்கள் இங்கு பாரம்பரியமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். வெளியூரில் இருந்து சிலரும் இந்த தொழிலுக்காக இங்கு வந்து செட்டில் ஆகியிருக்கிறார்கள்.

அருகில் உள்ள சிறுவத்தூர் ஏரியில் இருந்து மண் எடுத்து வந்து, ஊறவைத்து பொம்மை தயாரிக்கிறோம். இங்கேயே ஒரு சிலர் பொம்மைகளுக்கான மாடலை (மாஸ்டர் பீஸ்) உருவாக்கி, மோல்டிங் தயாரிக்கிறார்கள். அவர்களிடம் இருந்தும், கடலூர், புதுச்சேரியில் இருந்தும் மோல்டிங் வாங்கி வந்து பொம்மை தயாரிப்போம். மண்சேற்றுடன், காய்ந்த சருகை போட்டு சூளை அமைத்து அதில் பொம்மைகளை சுடுவோம். பின்பு அவற்றை எடுத்து பெயிண்ட் அடிப்போம். இந்த வேலை எங்களுக்கு ஆண்டு முழுவதும் இருக்கும். இதுதவிர மண்குதிரை தயாரிப்பது, விநாயகர் சதுர்த்தியின்போது விநாயகர் சிலைகள் தயாரிப்பது போன்ற பணிகளிலும் ஈடுபடுவோம்’’ என்கிறார்.

கடலூர் மாவட்டத்தில் பழைய வண்டிப்பாளையம், பண்ருட்டி, வையாபுரி பட்டினம் போல விருத்தாசலம் பகுதியும் கொலுபொம்மை தயாரிப்பில் படுபிசியாக இருக்கிறது. செராமிக், பீங்கான் பொருட்களை தயாரிப்பதில் புகழ்பெற்ற இவ்வூர் கொலுபொம்மை தயாரிப்பிலும் தற்போது பிரபலமடைந்து வருகிறது. ஆனால் இங்கு பெரும்பாலும் செராமிக் மூலமே பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. சுமார் 200க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். உற்பத்தியாளர்களிடம் வாங்கி பொம்மைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களும் இங்கு நிறைந்திருக்கின்றன.

கொலு பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்து வரும் அந்தோணி என்பவர் கூறுகையில்... ‘‘விருத்தாசலத்தில் தயாரிக்கப்படும் கொலு பொம்மைகளை வாங்க பெங்களூரு, மும்பை போன்ற இடங்களில் இருந்தெல்லாம் வருகிறார்கள். இதுபோன்ற பொம்மைகளை குஜராத்திலும் தயாரிக்கிறார்கள். ஆனால் அங்கெல்லாம் இங்கிருப்பது போன்ற பினிஷிங் இருக்காது. இந்தளவுக்கு ரியாலிட்டியும் இருக்காது. பொம்மைகளை உருவாக்க முதலில் களிமண்ணைக்கொண்டு மாடல் உருவங்களை செய்துகொள்வோம்.

அதை கை, கால், முகம் என பல பகுதிகளாக அளவெடுத்து அதற்கு தகுந்தாற்போல் அச்சு உருவாக்குவோம். அந்த அச்சில் துளையிட்டு, பழைய சிலைகளின் கழிவு, தான் கிளே, பயர் கிளே பவுடர், சோடா சிலிகேட் ஆகியவற்றை கலந்து ஊறவைத்து ஊற்றுவோம். பின்பு அச்சை பிரித்தால் அழகிய சிலை உருவாகிவிடும். அதை பினிஷிங் செய்து, பெயிண்ட் அடித்து விற்பனைக்கு அனுப்புவோம். இத்தொழில் எப்போதும் இருப்பதால், பலர் இதை நம்பியே வாழ்க்கை நடத்துகிறார்கள்’’ எனும்போது அருகிலுள்ள முருகனும் பிள்ளையாரும் மென்மையாக புன்னகைக்கின்றனர்.

- அ.உ.வீரமணி

படங்கள்: முபாரக் ஜான், ரெங்கப்பிள்ளை, ஸ்டீபன் எட்பர்க்.