ஆசையெனும் அணையா தீ!



திருமூலர் திருமந்திர ரகசியம்

சிறுவன் ஒருவன் பிரகாசமான தெருவிளக்கின் அடியில் எதையோ தேடிக் கொண்டிருந்தான். பார்த்தவர்கள், ‘‘என்னப்பா தேடுகிறாய்?’’ எனக் கேட்டார்கள். ‘‘நூறு ரூவா நோட்டு ஒன்னை தொலைச்சிட்டேன். அதான் தேடறேன்’’ என்றான் சிறுவன். கேட்டவர்கள் பரபரப்பானார்கள். ஏன் என்று உங்களுக்கே தெரியுமே! ஒரு வேளை நம் கையில் கிடைத்தாலும் கிடைக்குமல்லவா? அனைவருமே தேடினார்கள். நீண்ட நேரம் தேடியும் பலன் இல்லை. ஒருவர் கேட்டார், ‘‘ஏம்பா தம்பி! எங்க தொலைச்ச? இங்கதான தொலைச்ச?’’ என்றார்.

‘‘இங்க தொலைக்கல. தோ! அங்கதான் தொலைச்சேன்’’ என்று, சற்று தொலையில், இருட்டாக இருந்த இடத்தைக் கை காட்டினான் சிறுவன். அனைவருமே சிரித்து விட்டார்கள்.‘‘என்னப்பா! அங்க தொலைச்சிட்டு, இங்க தேடறியே...’’ என்றதற்கு, சிறுவன் பதில் சொன்னான் பாருங்கள்! ‘‘அங்க ஒரே இருட்டாயிருக்கே! இங்கதான் வெளிச்சமாயிருக்கு. அதனாலதான் இங்க தேடறேன்’’ என்றான். முன்னோர்கள் பலமுறை சொல்லி, நமக்கு புத்தி புகட்டிய கதை இது. வியாச பாரதத்தில் வரும் யயாதியின் கதைச் சுருக்கமாகவும் இதை கொள்ளலாம்.

யயாதியின் கதையைப் பார்த்தால், திருமூலரின் பாடல் எளிமையாக விளங்கும். சுக்கிராச்சாரியாரின் மகளான தேவயானி என்பவளை, யயாதி என்ற மன்னர் திருமணம் செய்து கொண்டார். தேவயானிக்கு அடிமையாக, அரசரான விருஷபர்வா என்பவரின் மகளான சர்மிஷ்டை என்பவளையும் அளித்தார் சுக்கிராச்சாரியார்; கூடவே ‘‘இந்த சர்மிஷ்டையுடன் நீ தனியாகப் பேசவும் கூடாது; இவளைத் தொட்டுப் பேசவும் கூடாது’’ என்று எச்சரிக்கவும் செய்தார். செய்யக்கூடாது என்பதைச் செய்து பார்த்து விடுவது என்பது இயல்புதானே! யயாதியும் அதைத்தான் செய்தார். சர்மிஷ்டையையும் ஏற்றார்.

காலப்போக்கில் இத்தகவல் தேவயானிக்குத் தெரியவர, சுக்கிராச்சாரியாருக்கும் விவரம் தெரிந்தது. அவ்வளவுதான்! சுக்கிராச்சாரியார் சாபம் கொடுத்து விட்டார். ‘‘மன்னா! என் சொல்லை மீறி, முதல் மனைவி இருக்கும்போதே அவளுக்குத் தெரியாமல் நீ இன்னொருத்தியை ஏற்றது முறையல்ல. இது அதர்மம். வழிகாட்ட வேண்டிய நீயே வரைமுறை தவறி நடந்ததால், உடனடியாக நீ முதுமையை அடைவாயாக!’’ என்று சாபம் கொடுத்தார். மன்னர் நடுங்கினார்; ‘‘மன்னியுங்கள்! மன்னியுங்கள்! தயவு செய்து சாபவிமோசனம் தந்தருளுங்கள்!’’ என்று வேண்டினார்.

சுக்கிராச்சாரியார் மனம் இறங்கினார்; ‘‘உன் பிள்ளைகளில் யாருக்காவது, உன் முதுமையைக் கொடுத்து விட்டு, அவர்களிடம் இருந்து நீ இளமையைப் பெறலாம்’’ என, சாபத்தைத் தளர்த்தினார். அதன்படியே யயாதி தன் பிள்ளைகளான யது, துர்வசு, திருஹ்யு, அனு என்னும் நால்வரிடம் கேட்க, அவர்கள் மறுத்தார்கள். புரு என்னும் மகனிடம் போன யயாதி, ‘‘மகனே! நீயாவது இளமையை எனக்குத் தந்து, என் முதுமையைப் பெற்றுக் கொள்! ஆயிரம் வருடங்கள் ஆனதும் உன் இளமையை, உன்னிடமே தந்து முதுமையைப் பெறுகிறேன்’’ என்று வேண்டினார். புருவும் தந்தையின் மூப்பை ஏற்று, தன் இளமையைக் கொடுத்தான்.

மகனிடமிருந்து இளமையைப் பெற்ற யயாதி, ஆயிர வருட காலங்கள் வாழ்க்கையை நன்றாக அனுபவித்தார். அப்போதும், அவருக்குப் போதும் என்ற எண்ணம் தோன்றவில்லை. குறிப்பிட்ட காலம் முடிந்ததை உணர்ந்த யயாதி ஒருநாள், புருவை அழைத்து, ‘‘மகனே! விரும்பியதை எல்லாம் அனுபவித்து, ஆனந்தம் அடையலாம் என்பது, ஒருபோதும் நடப்பதில்லை. தீயில் நெய்யை ஊற்ற ஊற்ற அது மேலும் மேலும் எரிவதைப் போல, எவ்வளவு அனுபவித்தாலும் ஆசைத்தீ மேலும் மேலும் எரிகின்றதே தவிர ஒருபோதும் அடங்குவதில்லை. இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து விட்டேன்.

ஆகையால் இனி பிரம்மத் தியானத்தில் ஈடுபடப் போகிறேன். என்னிடம் நீ பெற்ற முதுமையை எனக்குத் தந்து, மறுபடியும் உன் இளமையைப் பெற்றுக் கொள்!’’ என்றார். அதன்படியே புரு செய்ய, முதுமையைப் பெற்ற யயாதி தவம் செய்யச் சென்றார். இதுவரை பார்த்த இரு கதைகளில், முதலில் பார்த்த சிறுவன் கதை, தொலைத்த இடத்தில் தேடாமல் வேறு இடத்தில் தேடியதைச் சொன்னது. இரண்டாவது கதையான வியாச பாரத யயாதி கதை, எவ்வளவு காலம் அனுபவித்தாலும் ஆசை அடங்காது; பரம்பொருளை உணர வேண்டும் என்பதைச் சொல்கிறது. முதல் கதையான சிறுவன் கதையில், விவரம் அறிந்த பெரியவர்கள் அவனுக்கு வழிகாட்டி உதவி செய்யலாம். இரண்டாவதான யயாதி கதையில் அவர் தானே உணர்ந்தார். இந்த இருவரில் நாம் யார்? சொல்லி வருந்துகிறார் திருமூலர்.

ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப்
பூண்டு கொண்டாரும் புகுந்து அறிவார் இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடர் அறியாரே. (திருமந்திரம் - 178)

கருத்து: பூமியில் பிறந்து ஆண்டுகள் பல பறந்தோடிப் போய்விட்டன. இருந்தும், அனைத்திற்கும் ஆதாரமான முதன்மையான இறைவனை உள்ளத்தில் இடம் பெறச் செய்து இறைவன் அருளை யாருமே அனுபவிக்கவில்லை. நீண்ட காலம் வாழ்ந்தாலும் இறைவனின் அருள் ஒளியை உணராமல் இருக்கிறார்களே. அரிதுஅரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்பதற்கிணங்க மானிடப் பிறவி கிடைத்தும் சிறுபிள்ளைபோல, உணராமல் இருக்கிறோம். சரி! பல ஆண்டுகள் வாழ்ந்தாலும், மேலும் மேலும் பார்த்ததையே பார்த்தும் செய்ததையே செய்தும், சுற்றிக் கொண்டே இருக்கிறோம்.

எதிலும் அலுப்பு இல்லை. சலிப்பு இல்லை. ஒன்று சலிப்பதைப்போல இருந்தால், உடனே அடுத்தது; அது சலித்தால் அதற்கு அடுத்தது என்று போய்க்கொண்டே இருக்கிறோமே தவிர, சற்றாவது நிதானித்துச் செயல்படுவதில்லை. யயாதியைப்போல செயல்படுகிறோம். காலம் நம் உடம்பில் முதுமைக் கோலம் இட்டாலும், யயாதி தன் மகனிடமிருந்து இளமையைப் பெற்றதைப்போல வெளி உலகத்திலிருந்து இளமையைப் பெற முயல்கிறோம். அப்பப்பா! எத்தனை விதமான மருந்து மாத்திரைகள்! இவ்வளவு செய்துகூட, எதிலிருந்தும் எந்தவிதமான அனுபவப் பாடத்தையும் கற்கவில்லை; ஏற்கவில்லை.

இவ்வளவும் அனுபவிக்கிறோமே; அனுபவிப்பது யார்? அனுபவிக்கச் செய்வது யார்? அனுபவிப்பது நாம்; அனுபவிக்கச் செய்வது பரம்பொருள். பெரும் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், தங்கள் முதலாளியை அல்லது உரிமையாளரைப் பார்த்திருக்க மாட்டார்கள். அதுபோல, உலகத்தை இயக்கும், உலகத்தின் உரிமையாளரான பரம்பொருளை, நம்மால் சுலபமாகத் தரிசிக்க இயலாது. வேலை பார்ப்பவர் தன் கடமையை ஒழுங்காகச் செய்து நல்ல முறையில் நடந்தால் அவரை அழைத்து உரிமையாளரே அல்லது முதலாளியே பாராட்டி பரிசும் அளிக்கிறார் அல்லவா? அதுபோல, இறைவனை உள்ளத்தில் கொண்டு, இறை உண்மையை உணர்ந்து செயல்பட்டால், இறையருள் தானே வந்துசேரும்.

‘‘இதை யாரும் உணரவில்லையே’’ என்று வருந்துகிறார் திருமூலர். கூடவே, ‘‘நீண்ட காலம் வாழ்ந்தாலும், தெய்வ ஒளியை உணராமல் இருக்கிறார்களே’’ என்று வருந்துகிறார். தூண்டு விளக்கின் சுடர் என்கிறார் திருமூலர். நம் ஒவ்வொருவர் உள்ளும் இருந்து தெய்வ ஒளி, சக்தி நம்மைச் செயல்படும்படியாகத் தூண்டுகிறது. விளக்கிலிருந்து வெளிப்படும் சுடரொளி எப்போதும் மேல் நோக்கித்தான் எரியும். ஒரு தீபத்தை ஏற்றித் தலைகீழாகப் பிடித்தாலும் அதன் சுடர் மேல் நோக்கித்தான் எரியும். அதுபோல, நம் உள்ளே இருந்து கொண்டு நல்லவற்றை நமக்குணர்த்தி வழிகாட்டுகிறது தெய்வம்.

‘‘கண்ணில் வரும் பாதையைக் காணச் சொன்னான்
நல்ல நல்ல பாதையில் போகச் சொன்னான்
கண்கள் அவனைக் காண,
உள்ளம் அவனை நினைக்க,
கைகள் அவனை வணங்க’’

என்று பாடிய கண்ணதாசன் தொடர்ந்து,

‘‘இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெறும் கருணை’’

- என்பார். தூண்டு விளக்கின் சுடர் அறியாரே - என்று திருமூலர் வாக்கின் விரிவே, கண்ணதாசனால் அவ்வாறு பாடப்பட்டது. ஆனால், மனமோ ஆசை வசப்பட்டு அல்லலில் அகப்பட்டுத் தவிக்கிறது. ‘தெய்வச் சுடரை அறியவில்லையே’ என, ஆதங்கப்படுகிறார் திருமூலர். இறையருளை உணர்ந்தவர்களிடம் இறைவன் வருவார்; யமன் வரமாட்டான் என்கிறார் திருமூலர். அவ்வாறு சொல்வதிலும், அவர் ஒரு தகவலை அழகாகப் பதிவு செய்கிறார்.

கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனின் காலன் மிக நல்லன்
கல்லா அரசன் அறம் ஓரான் கொல்என்பான்
நல்லாரைக் காலன் நணுக நில்லானே

கல்வி அறிவில்லாத அரசன், உயிர்களைக் கவரும் யமன், இருவரும் ஒன்றே. இருவருக்கும் இடையே வேறுபாடு இல்லை. ஆனால், இப்படிப்பட்ட அரசனைவிட, யமன் மிகவும் நல்லவன். கல்வியறிவில்லாத அரசன் அறநெறியைக் கடைபிடிக்க மாட்டான். நியாயம் அநியாயம் பார்க்க மாட்டான். தனக்குப் பிடிக்காதவர்களைக் ‘கொல்’ என்று கட்டளை இட்டாலும் இடுவான். யமன் அப்படியல்ல; நல்லவர்களை அவன் நெருங்கக்கூட மாட்டான். அதாவது அவர்களுக்கு துன்பம் கொடுக்க மாட்டான். கல்லாத அரசன் என்று இப்பாடலில் குறிப்பிடுவது படிப்பறிவு இல்லாத அரசனை அல்ல.

கல்வியறிவு பெற்றிருந்தும், நல்வழியில் நிர்வாகம் செய்யாத அரசனைப்பற்றிக் குறிப்பிடும் பாடல் இது. இப்படிப்பட்ட அரசனும், உயிர்களைப் பறிக்கும் யமனும் ஒன்று என்கிறார் திருமூலர். அதாவது இருவருமே உயிர்களைப் பறிப்பார்கள் என்பது கருத்து. ஆனால், இப்படிப்பட்ட அரசனைவிட, யமன் மிகமிக நல்லவன். ஏனென்றால், கல்வியறிவு இல்லாத அரசன் நல்வழியில் நடக்க மாட்டான். நல்லது கெட்டது பார்க்க மாட்டான். தனக்குப் பிடிக்காதவர்களை கொல்லக்கூடத்
தயங்க மாட்டான்.

ஆனால் யமனோ, நல்லவர்களை நெருங்கக்கூட மாட்டான், அதாவது நல்லவர்களுக்குத் துன்பம் கொடுக்க மாட்டான்; யம பயம் இருக்காது. உண்மை தானே! எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் முறையற்ற மன்னன் ஆண்டால், ‘‘இவனால் என்ன தொல்லை விளையுமோ? எந்த நேரத்தில் நம் உயிரை வாங்குவானோ?’’ என்ற அச்சத்திலேயே வாழ்வார்கள். ஆனால் அதே நல்லவர்கள், யமனை எண்ணி அச்சப்பட மாட்டார்கள். காரணம்? யமன் முறை தவற மாட்டான் என்பது அவர்களுக்குத் தெரியும். நல்வழியில் நடப்பவர்களுக்கு எந்தத் துன்பமும் இல்லை என்பது இப்பாடல் சொல்லும் கருத்து. இறையருளை அனுபவத்தில் உணர முயல்வோம்! இன்னல்கள் யாவும் நீங்கிப்போம்!

(மந்திரம் ஒலிக்கும்)

- பி.என்.பரசுராமன்