அரும்பித் ததும்பும் ஆனந்தம்!அபிராமி அந்தாதி : சக்தி தத்துவம் -  29

கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாதன்பர் கூட்டம் தன்னை
 விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைத்த
   கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே (பாடல் - 23)

சமையல் என்ற செயலானது உண்ண முடியாது இருக்கின்ற பச்சைக் காய்கறிகளை, கச்சா பொருட்களான அரிசி, துவரை முதலானவற்றை உண்ணுவதற்குத் தக்கவாறு வேக வைத்தோ, எண்ணெயிலிட்டு பொரித்தோ காயவைத்தோ வெட்டியோ சில பொருட்களைக் கூட்டியோ உண்ணத் தகுந்த வகையில் சுவையாக மாற்றுவதாகும். அதிலிருந்து வந்த சொல்லே சமயம். சமையல் எப்படி காய்கறிகளை உண்ணும்படியாக மாற்றுகிறதோ அதுபோல் சமயம் மனதை மாற்றுகிறது. மனது இயல்பாகவே கோணலாக இருக்கிறது. அதை சரி செய்வதே ஆன்மிகப் பணி. இதையே ‘திருகலாகிய சிந்தை திருத்தலாம்’ என்கிறது திருமுறை. எப்படி அந்தச் சிந்தையை திருத்தலாம் என்று சொல்லியிருக்கிறார் பட்டர்.

கோணல் என்ன என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். மனம் தோல்வியை விரும்புவதில்லை, தோல்வி தருவதை ஒதுக்கி வெற்றி தருவதை நாடுகின்றது. ஒருநேரம் இருப்பதைப் போல் மனம் மறு நேரம் இருப்பதில்லை, மாறிக் கொண்டேயிருக்கிறது. எந்தவொரு பொருளிலும் மனம் நிலைப்படுவதில்லை. புலன்களின் வழியே அலைக்கழிக்கப்படுகின்றது. இதையே மணிவாசகர் ‘கள்ளப் புலனைந்தும் வஞ்சனையே செய்ய’ என்பதனால் அறியலாம். இப்படிப்பட்ட மனதை, உலகை, உயிரை, இறையை குறித்த நிலைக்கு பக்குவப்படுத்துவது சமயம். அந்தப் பக்குவப்படுத்துகின்ற வழியைத்தான் சாதனம் என்று சமயம் குறிப்பிடுகின்றது.

சாதனமானது எண்ண மாற்றம், செயலாக்கம், அறிவு விளக்கம் என்று மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. அதையே இப்பாடலில் அபிராமி பட்டர் ‘கொள்ளேன் மனதில்’ என்று துவங்கி ‘கண்மணியே’ என்று மறைமுகமாக ஜபத்தையும், தியானத்தையும், சமய வழிபாட்டையும், பக்தியையும், அனுபவமாக்க நமக்கு விளக்குகிறார். அதை தெரிந்து ‘கொள்’வோமா? கொள்ளேன் மனதில் நின் கோலம் - இவ்வரியைப் புரிந்து கொள்வதற்கு முன் மனதைப் புரிந்து கொள்வது இப்பாடலுக்கு விளக்கம் அறிந்து கொள்ள மிகுந்த உதவியாய் அமையும். மனம் என்பது ஆகமத்தின் நோக்கில் அழியாத் தன்மையுடையது.

அணுத்தன்மையுடையது (மிகச் சிறியது) நினைவு என்னும் செயலைச் செய்வது. நினைவுகளை சேமிப்பது. தேவைப்படும்போது பதிவு செய்த நினைவுகளை பரிசீலிப்பது. உடலைப் பொறுத்தவரை மனம் என்பது ஒரு போக்குவரத்து சாதனத்திற்கு எரிபொருள் எப்படிப் பயன்படுமோ, உடலின் உள் இயக்கத்திற்கும் உடலின் புற இயக்கத்திற்கும், அடிப்படைக் காரணமாக இருந்து சுக, துக்க, அனுபவத்தை உடலின் வழி அனுபவிக்கச் செய்வது. மனம் என்பது ஐம்புலன்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு கருவி. மனம் என்பது எட்டு விதமான அடிப்படை உணர்வுகளாக வெளிப்படுவது.

எப்போதும் மாறிக் கொண்டே இருப்பது, நிலையில்லாதது இனி அதன் செயல்பாட்டை சற்றுப் பார்ப்போம். முன் அனுபவமின்றி முதன் முதலாக ஒரு பொருளைப் பார்க்கும்போது தோன்றுவது நினைவு (ஸ்மரணம்) அந்தப் பொருளோடு நமக்குள்ள தொடர்பு சுக, துக்க, சமம் எனும் பொது அனுபவம். ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே பொருளைப் பற்றிய தகவல் பதிவுகளால் நம் உள்ளத்தில் தோன்றுவது கருத்து (ஞானம்) உதாரணமாக முதன் முதலாக மாங்கனியைப் பார்க்கின்றான். இது நினைவுப் பதிவு (ஸ்மரணம்) அந்த மாங்கனியைப் புசிப்பதனால் வாய்க்கு ஏற்படுகின்ற சுகம் தரும் சுக உணர்வு (அனுபவம்)

வெவ்வேறு சூழ்நிலையில் மாங்கனியின் நிலைகளை உணர்வது சில மாங்கனி புளிக்கும் என்பதை அறிவுறுத்துவது இவை போன்றவை கருத்து (ஞானம்), இந்த ஸ்மரணம் என்கிற நினைத்தல், அனுபவித்தல், ஞானம் இந்த அறிதலின் பின்வரும் அனுபவம்தான் (தன் அனுபவம்) ஸ்வாதீனம்  Individuality  (தனித்தன்மை) இது பிறருக்கு ஏற்படாது. இதை இவ்வாறு ஆகமத்தின் வழி புரிந்துகொண்டு பாடலுக்குள் நுழைவோம்.‘கொள்ளேன் மனதில்’ - ‘கொள்ளேன்’ என்ற சொல் கொள்ளுதல் என்ற சொல்லின் எதிர்பதம்.‘கொள்ளேன் மனதில்’ என்பதனால் நினைவுகளை புலன்களின் வழி இனி ஏற்க மாட்டான் என்பதாகக் கூறுகின்றார்.

தியானம் செய்கிறபோது புலன்கள் அனைத்தையும் புறம் நோக்கி செயல்படுத்தாமல், மெய், வாய், கண், மூக்கு, செவி இவற்றில் கண்களை புருவ நடுவில் நிறுத்தியும் (பிற பொருட்களைப் பாராமல்) மூக்கைப் பிராணாயாமம், மூச்சுப் பயிற்சி செய்தும் (வாசனைகளை நுகராமல்) காது ஒலிகளிலிருந்து விலகி, அமைதியாக இருக்கின்ற மெய்யை (உடலை) அசையாமல் நிறுத்தியும், வாயை பேசாமல் மௌனமாக்கியும், மனதை ஜபத்தின் மூலமாக பிற நினைவுகளை சிந்திக்காமல் நிறுத்தியும், யோகம் அல்லது தியானம் செய்வர். இதையே ‘கொள்ளேன் மனதில்’ என்ற வார்த்தையால் புலன்களின் வெளி நோக்கால் புற எண்ணத்தையும்,

அக நோக்கால் ஏற்கனவே பதிந்துள்ள எண்ணங்களை யோசிக்கவே நிலை நிறுத்துவதைக் கொள்ளேன் மனதில் என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார்.‘நின் கோலம்’ என்ற வார்த்தையால் ஆகம சாஸ்திரமானது ‘மொழிக்கும் நினைவிற்கும் எட்டாத’, உமையம்மையின் வடிவத்தை பயிற்சியால், உமையம்மையின் அருளால், தொடர்ந்த முயற்சியால், உலகியல் சார்ந்த பிற எண்ணங்களிலிருந்து மனதை விலக்கி உபாசகன் உமையம்மையின் ஒரு குறிப்பிட்ட உருவத்தை மட்டும் மனதில் நிலை நிறுத்தப் பழகுவது புத்திர யோகம் எனப்படும். இந்த மந்திர யோகமான, மந்திரம் சார்ந்தும், மந்திரத்திற்குரிய தேவதை சார்ந்தும்,

உபாசகன் வேண்டிய பலனைச் சார்ந்தும், வெவ்வேறு விதமான உருவத்தை, ரூபத் தியானம் என்ற பெயரில் ஆகமங்களில் உமையம்மையின் திருவுருவங்கள் தியானிக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்தத் தியானமானது மாறுபாடுடையதாக ஒரு தேவதையின் குணம், வடிவ அழகு, அதற்குரிய தனிச்சிறப்பு, ஆயுதங்கள், நின்ற, இருந்த, கிடந்த போன்ற நிலைகள் சில கருத்துக்களை வலியுறுத்தத் தேவையான துணை தேவதைகள் சூழ வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த வரையரையையே ‘நின் கோலம்’ என்ற வார்த்தையால் அபிராமி பட்டர் குறிப்பிடுகின்றார். ‘அல்லாது’ என்ற வார்த்தையால் தியானத்தில் உமையம்மையின் குறிப்பிட்ட மந்திரம்,

குறிப்பிட்ட திருஉருவ அமைப்பை மனதில் பதித்தலே ‘அல்லாது’ பிறவற்றை முழுமையுமாக நீக்குவதற்காக ‘அல்லாது’ என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றார். உமையம்மையைக் குறித்த தியானம் செய்தாலும் ஒரு சில தியானங்கள் ஒரே தெய்வத்தைக் குறித்ததாக அமைந்தாலும், ஸ்ரீவித்யா உபாசனை முறையில் பலன் பெறும் வரை எந்த பலனுக்காக எந்த திருவுருவ தியானம் சொல்லப்பட்டுள்ளதோ அந்தத் திருஉருவ தியானத்தை ஒரு சிறிதும் மாறாமல் தியானிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்) (உ.தா.) காமாட்சி என்ற தேவதையை விளக்கு ஒளி போலும்,

ஒற்றைக்காலில் ஐந்து தீயின் நடுவில் தவம் செய்வது போலவும் பாசாங்குசம், கரும்புவில் தரித்து அமர்ந்திருப்பது போலவும், ஒரே தேவதைக்கே மேற்கண்டதுபோல் பத்துக்கும் மேற்பட்ட திருஉருவங்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றது, இதோடு மட்டுமல்லாமல் ஒரு தேவதையின் அருளைப் பெறுவதற்கு உதவுகிறபடி நிலை திருஉருவ தியானங்களும் பரிந்துரைக்கப்படுகின்றது. அந்த நிலையில் ஒவ்வொரு தியானத்தையும், எத்தனை நாள், எதுவரை எப்படி, ஏன் என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் பல தேவதைகளின் திருவுருவ தியானம் சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணமாய்

நாயகி - பார்வதி - வீரத்திற்காக.
நான்முகி  - சரஸ்வதி, கல்விக்காக.
நாராயணி - இலக்குமி - செல்வத்திற்காக.
கை நளின பஞ்சசாயகி - பாலாம்பிகை, புலன் இன்பத்துக்காக.
சாம்பவி - சிவசக்தி - கணவன் - மனைவி ஒற்றுமைக்காக.
சங்கரி - இடுகாட்டில் இருப்பவள். பித்ரு தோஷ நிவர்த்தி.
சாமளை - இரவு நேரத்தில் வழிபடப்
படுபவள் - விருப்பத்தை அளிப்பவள்.
சாதி நச்சுவாயகி - காளி - விஷத்தன்மை நீங்க.
மாலினி - துர்க்கை- விரும்பியதையடைய.
வாராகி -  நிலவளம் சிறக்க.
சூலினி - எட்டுகை துர்க்கை - திருஷ்டி தீர.
மாதங்கி- மதங்கர் குலத்தில் நோன்றியவர் - இசை பயில.

பன்னிரெண்டு தேவதைகள் வெவ்வேறு பலனுக்காய் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தியானம் செய்யக் கூறப்பட்டுள்ளது. இப்படி பிற தேவதையை நீக்கி குறிப்பிட்ட தேவதையை மட்டும் தியானம் செய்வதை ‘நின்கோலம் அல்லாது’ என்று குறிப்பிடுகிறார்.

‘அன்பர் கூட்டம் தன்னை விள்ளேன்’:
விரும்பித் தொழும் அடியார் விழி நீர் மல்கி - மெய்ப்புளகம்
   அரும்பித் ததும்பிய ஆனந்தமாகி அறிவிழந்து
சுரும்பிற் களித்து, மொழிதரு மாறி முன் சொன்னதெல்லாம்
   தரும் வித்தர் ஆவதென்றால் அபிராமி சமயம் நன்றே  (பாடல் - 94)

என்ற பாடலிலிருந்து அன்பர் என்பதற்கு அவர் இலக்கணம் வகுத்திருக்கின்றார். இத்தகைய அன்பை உடையவர்கள் இரண்டு வகையாக உபாசனை நெறியில் குறிப்பிடப்படுகிறார்கள். சத்சங்கம், கூட்டு வழிபாடு, தனித்த வழிபாடு (பிரத்தியேகம்) வழிபாட்டையே வலியுறுத்துகின்றார்.‘‘தன்னந்தனி இருப்பார்க்கு இதுபோலும் தவம் இல்லையே (பாடல் - 53) என்ற பாடல் வரிகளால் தனி வழிபாட்டைக் குறிப்பிட்டிருந்தாலும், இப்பாடல் வரியை மட்டும் மனதில் கொண்டு பொதுவழிபாடான ‘அன்பர் கூட்டம்’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார்.

அப்படி கூட்டு வழிபாடு செய்கின்றபோது அடியார் கூட்டத்தைவிட்டு விலகிச் செல்ல மாட்டேன் என்கிறார். பயனைப் பெறுகின்ற வகையில் கூட்டு வழிபாடானது போகத்தையும் (விரும்பிய பலனை அடைவது) தனி வழிபாடானது மோட்சத்தையும் தரவல்லது. இந்த பாடலைப் பொறுத்தவரை கூட்டு வழிபாட்டைப் பற்றியே விளக்கி கூறுகின்றார்.‘அன்பர் கூட்டம்’ என்ற வார்த்தையால் ‘அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்’ (பாடல்-3) உமையம்மையின் மீது அன்பு செலுத்துகிறவர்கள். கீழ்க்கண்ட பயனை அடைகிறார்கள் என்று அவர்களின் அடையாளத்தை தெளிவாக சூட்ட முற்படுகின்றார்.

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே (பாடல் - 52)

இந்த அடையாளம் உடைய அன்பர்கள் அனைவரும் இணைந்திருப்பதையே அன்பர் கூட்டம் என்கிறார். உமையம்மை அருள்வதாலே மாத்திரம்தான் அன்பர்களோடு கூடி வாழ முடியும் என்கிறார். தன் முயற்சியால் பக்தனானவன் அடியவர் கூட்டத்துடன் இணைய முடியாது. அதனால்தான் ‘கூட்டியவா என்னை தன் அடியாருள்’ (பாடல் - 80) என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றார். அப்படி அன்பு செய்வதற்கு ‘‘அடியாரை பேணிப் பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்’’ (பாடல் - 25) ‘அன்பர் கூட்டத்’துடன் இணைந்து வாழ பலகோடி தவங்கள் செய்ய வேண்டும் என்று

வழுவாமையை வலியுறுத்தி தவம் ஒன்றே அன்பர் கூட்டத்துடன் உபாசனை இணைத்து வைக்கும் என்பதை கூறுகின்றார். அன்பர் கூட்டத்துடன் உபாசகனை ஒன்ற விடாமல் தடுப்பது அவரவர் வினையே என்கிறார். அதையே இந்த பாடல் வரிகள் வலியுறுத்துகின்றது. ‘கொடிய வினை ஓட்டியவா’ (பாடல் - 80) என்பதிலிருந்து அறியலாம்.‘எனக்குள்ளவெல்லாம் அன்றே உனதென்று அளித்து விட்டேன்’ (பாடல் - 95) என்பதனால் அன்பர்கள் என்பவர்கள் உமையம்மையை நம்பி அவள் திருவடியிலேயே மனம் பற்றி தனக்குள்ள எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டார்கள். அப்படி சரணாகதி அடைந்தவர்களையே ‘அன்பர் கூட்டம்’ என்கிறார்.

(தொடரும்)

- முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்