உடலும் உள்ளமும் உறுதி பெறும்!என்ன சொல்கிறது என் ஜாதகம்

* என் மகனுக்கு நிரந்தர வேலையில்லை. என் மருமகளுடன் ஏற்பட்ட பிரச்னையில் பேரனை அழைத்துக்கொண்டு கடந்த இரண்டு வருடத்திற்கு முன் தான் ஏற்கெனவே பழகிய பையனை திருமணம் செய்து கொண்டாள். இதனால் நீதிமன்றம் மூலம் என் மகனுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. என் மகனுக்கு நிரந்தர வேலை அமையவும், நல்ல மனைவி அமைந்திடவும் நல்லதொரு வழி சொல்லுங்கள்.
 - முனிராஜா, உடுமலைபேட்டை.

மகனின் மறுவாழ்வு குறித்த கவலை உங்கள் கடிதத்தில் வெளிப்படுகிறது. முப்பத்து நான்கு வயது வரை நிலையான வருமானமின்றி இருப்பதற்கான காரணத்தை ஆராய்ந்து பாருங்கள். நினைத்த வேலை கிடைக்கவில்லை என்றால் கிடைக்கும் வேலையைச் செய்ய வேண்டுமல்லவா? உங்கள் மகனின் ஜாதகம் நன்றாகவே உள்ளது. பெற்றோர் ஆகிய உங்களின் பராமரிப்பில் உள்ளதால் அவர் வேலைக்குச் செல்வதில் அதிக அக்கறை காட்டவில்லைபோல் தோன்றுகிறது. பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தை கணக்கீடு செய்து பார்த்ததில் தற்போது செவ்வாய் தசையில் சனிபுக்தி நடந்து
வருகிறது.

குரு - மங்கள யோகத்தினைப் பெற்றிருக்கும் அவரது ஜாதக பலத்தின்படி தற்போது நல்ல நேரம் துவங்கியுள்ளது. தசாநாதன் செவ்வாய் நான்கிலும், புக்திநாதன் சனி தன ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருப்பதும் சாதகமான நிலையே. உங்கள் மகனை பழனி முதலான முருகப் பெருமானின் ஆலயமிருக்கும் ஊரில் வேலை தேடச் சொல்லுங்கள். அல்லது சொந்தமாக வேலையை அமைத்துக் கொள்ளச் சொல்லுங்கள். தகப்பனாராகிய நீங்கள் செய்து வந்த உத்யோகம் சார்ந்த துறையும் அவருக்குக் கைகொடுக்கும். உத்யோகம் புருஷ லட்சணம் என்பதை உங்கள் மகனுக்கு புரிய வையுங்கள்.

சிம்ம ராசியில் பிறந்திருக்கும் அவர் மிகவும் பலம் பொருந்தியவர் என்பதையும், யாரிடமும் அவர் கைகட்டி நிற்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் சொல்லி அவருடைய திறமையை அவருக்கு உணர்த்துங்கள். தற்போது 15.09.2018 முதல் நல்ல நேரம் துவங்கியுள்ளதால் அவருடைய சுயசம்பாத்தியம் உயர்வதற்கான காலமாக அமைந்துள்ளது. காலநேரத்தினை பயன்படுத்திக்கொண்டு ஓயாமல் உழைப்பது நல்லது. திருமண வாழ்வினைக் குறிக்கும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி குரு பகவான் நான்காம் வீட்டில் அமர்ந்துள்ளதால் உறவுமுறையில் இருந்து பெண் அமைவார். 24.10.2019க்கு மேல் குடும்ப வாழ்வு ஸ்திரமானதாக அமையும். செவ்வாய்க்கிழமை தோறும் கந்தசஷ்டி கவசம் படித்து வருவதால் அவரது தன்னம்பிக்கை உயர்வதோடு முருகப் பெருமானின் திருவருளால் வளமான எதிர்காலமும் அமையும்.

* எனது மகனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? பெண் ஜாதகம் எந்த ரூபத்தில் யார் மூலம் வந்து சேரும்? அவருடைய மணவாழ்வு குறித்துச் சொல்லவும்.
 - ஜெயபிரகாஷ், திருச்சி.

இருபத்தியெட்டு வயதாகும் உங்கள் மகனின் ஜாதகம் நற்பலனைத் தரக்கூடியதாகவே உள்ளது. அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் அவருடைய ஜாதகத்தை கணித்ததில் லக்னாதிபதியும், ராசியாதிபதியுமாகிய செவ்வாய் வக்ர கதியில் சஞ்சரிப்பது தெரிய வருகிறது. என்றாலும் செவ்வாய் தன ஸ்தானத்தில் உள்ளது பலமே. அதே போன்று சுகஸ்தானமாகிய நான்கில் குரு உச்சம் பெற்றாலும், அவரும் வக்ர கதியில் கேதுவுடன் இணைந்துள்ளார். இந்த நிலை வாழ்க்கைக்குத் தேவையான அளவிற்கு பொருளாதார வளர்ச்சியைத் தரும். பெருத்த தனலாபத்தினை எதிர்பார்க்க இயலாது.

உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைத்தால் போதுமென்ற மனதோடு வியாபாரத்தில் ஈடுபடச் சொல்லுங்கள். கடன் சுமையின்றி நிம்மதியாக வாழ்க்கையைக் கழிக்க இயலும். அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு அதிக முதலீடு செய்தால் கடன்சுமைதான் அதிகமாகும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். திருமண வாழ்வினைப் பொறுத்த வரை களத்ர ஸ்தானமாகிய ஏழாம் வீடு சுத்தமாக உள்ளது. ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் ஒன்பதாம் வீடாகிய பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது நல்ல நிலையே.

சுக்கிர பகவான் தன் சுயசாரத்தில் சஞ்சரிப்பதால் மஹாலட்சுமியின் அம்சத்துடன் மணமகள் அமைவார். ஒன்பதாம் வீட்டில் ஐந்தாம் பாவக அதிபதி சூரியனும் இணைந்திருக்கிறார். சூரியன் பித்ருகாரகன் என்பதாலும், ஒன்பதாம் வீடு பிதுர் ஸ்தானத்தைக் குறிப்பதாலும் தகப்பனார் வழி உறவு முறையைச் சார்ந்த பெண்ணாக அமைவார். வெளியில் பெண்ணைத் தேடாமல் உறவுமுறையில் பெண் தேடுங்கள். அவருடைய ஜாதகக் கணிப்பின்படி தற்போது சந்திர தசையில் செவ்வாய் புக்தி நடைபெறுகிறது. தற்போது நடக்கும் தசாபுக்தியும், அதனைத் தொடர்ந்து வரும் ராகு புக்தியும் தொழில்ரீதியான முன்னேற்றத்தையே தரும்.

19.08.2020 முதல் துவங்கவுள்ள குருபுக்தியின் காலத்தில்தான் இவரது திருமணம் நடைபெறும். திருமண யோகம் வருவதற்கு இன்னும் இரண்டு வருட காலம் இருப்பதால் அவருடைய திருமணத்திற்கு நீங்கள் அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. தற்போதைய கிரகசூழலைப் பயன்படுத்திக் கொண்டு தொழில்முறையில் நிலைப்படுத்திக் கொள்ளச் சொல்லுங்கள். நல்ல குணவதியான மனைவியும், சுகமான வாழ்வும் முன்னோர்களின் ஆசியால் அவருக்கு நிச்சயம் கிடைக்கும்.

* எனது மகனுக்கு திருமணமாகி ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது. என் மகனுக்கு ஃபிட்ஸ் வந்து 10 நிமிடம் சுயநினைவின்றி பின் தெளிவாகிவிடுகிறது. இதனால் செய்த வேலையும் போய்விட்டது. வியாதியை காரணம் கூறி அவனது மனைவியும் குழந்தையை அழைத்துக்கொண்டு சென்று விட்டாள். அவன் வியாதி குணமடையுமா, நல்ல வேலை கிடைக்குமா, மீண்டும் குடும்ப ஒற்றுமை வருமா?
- ஸ்ரீநிவாசன், ஸ்ரீரங்கம்.

உங்களுக்கு வயதாகிவிட்ட காரணத்தால் உங்களை விட்டு உங்கள் மகன் வேறு ஊருக்குச் செல்லத் தயங்குவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். நற்குணம் கொண்ட உங்கள் பிள்ளைக்கு ஒரு குறையும் நேராது. திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகக் கணக்கின்படி தற்போது குரு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. குரு பகவான் அவரது ஜாதகத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதோடு எட்டாம் வீட்டில் அமர்ந்துள்ளார். அதே போல ஜீவன ஸ்தானாதிபதி சனியும் வக்ர கதியில் அமர்ந்துள்ளார். என்றாலும் சனியின் உச்சபலம் உங்கள் மகனின் தொழிலை உறுதி செய்யும்.

ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சந்திரனும், ஸ்தானாதிபதி சனியும் உணவு அல்லது சமையல் சார்ந்த தொழிலை இவருக்கு ஏற்படுத்தித் தருவார்கள். அதுவே அவரது வாழ்வினில் நிரந்தர தொழிலாக அமையும். நண்பர் ஒருவருடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பிலும் அவரால்  தொழிலைச் செய்ய இயலும். அவரது ஆயுள்பலம் வலிமையாக உள்ளது. நரம்பியல் சார்ந்த சிறுபிரச்னை அவருடைய உடல்நிலையில் பாதிப்பினைத் தோற்றுவித்திருக்கிறது. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இந்தப் பிரச்னையை சரிசெய்துவிட முடியும்.

இந்த காரணத்தினால் உங்கள் மருமகள் அவரை விட்டுப் பிரிந்து சென்றாகத் தெரியவில்லை. மனைவியைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்திருப்பதால் விரைவில் அவரது மனைவி மனம்மாறி வந்து இணைவார். குடும்ப ஸ்தானாதிபதியும் சுக்கிரனே என்பதால் பிரிந்த குடும்பம் நிச்சயம் ஒன்றிணையும். வெளியில் சென்று வேலை தேடாமல் அவருக்கான தொழிலை சுயமாக அமைத்துக் கொள்ளச் சொல்லுங்கள். உங்களை விட்டு அவர் பிரிந்து செல்ல வேண்டிய அவசியமில்லை.

தற்போது வசிக்கும் இடத்திலிருந்தே அவரால் சுயதொழிலைச் செய்ய முடியும். பணியில் முழு கவனமும் செல்லும்போது உடலும் ஆரோக்யம் பெறும். சம்பாத்யம் திருப்திகரமாக அமையும்போது பிரிந்த உறவும் வந்திணையும். சனிக்கிழமை தோறும் சக்கரத்தாழ்வாரை வணங்கி வருவதன் மூலம் இவரது வாழ்வு வளம் பெறும். 23.08.2019ல் இருந்து தனது வாழ்வினில் புதிய திருப்பு முனையைக் காண்பார். அவர் நலமுடன் வாழ்வதை கண் குளிரக் காண்பீர்கள்.

* மகளின் காதல் திருமணத்தால் உறவினர்கள் மத்தியில் அவமானம், அளவுக்கு மீறிய கடனால் தம்பியின் தலைமறைவு, மனைவியின் ஆரோக்யத்தில் குறைபாடு, கடும் போட்டிக்கு மத்தியில் முதலீட்டுக் குறைவால் சரியில்லாத வியாபாரம், இதனால் அதிகரிக்கும் கடன் சுமை என்று எங்கள் குடும்பம் நிலைகுலைந்துபோய் உள்ளது. நம்பிக்கை துரோகங்களும், ஏமாற்றங்களும் தோல்விகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எங்கள் குடும்பம் நல்ல நிலைக்கு வருமா?
 - ஆனந்தன், பாண்டிச்சேரி.

தோல்விகளும், வேதனைகளும் நிரந்தரமாக நிலைத்திருப்பதில்லை. இதுநாள்வரை நீங்கள் கண்டு வரும் கஷ்டங்கள் இறைவன் தரும் சோதனை என எண்ணிக் கொள்ளுங்கள். கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்ற கூற்றில் முழு நம்பிக்கை கொண்டு செயல்படுங்கள். ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் தற்போது செவ்வாய் தசையில் ராகு புக்தி நடப்பதாகத் தெரிகிறது. உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி செவ்வாயும், ஜீவன ஸ்தானாதிபதி சூரியனும், தனகாரகன் சுக்கிரனும் ஒன்றிணைந்து சிரமத்தைத் தரக்கூடிய எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள்.

நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று சொல்லப்படுவதற்கேற்ப தினம் தினம் ஒரு பிரச்னையை சந்தித்து வருகிறீர்கள். ஒரு பிரச்னை முடிவதற்கு முன்னாலேயே அடுத்தது துவங்கி விடுகிறது. பிரச்னைகள் ஆயிரம் இருந்தாலும் தர்மநெறி மாறாத உங்கள் சிந்தனையும், ஆன்மிக ஈடுபாடும், கடவுள் நம்பிக்கையும் உங்களைக் காப்பாற்றி வருகிறது. 15.04.2019 முதல் நீங்கள் தொழிலை மாற்றிக்கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாவீர்கள். உங்கள் துறைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத வகையில் முற்றிலும் புதிய தொழிலாக, ஆன்மிகம் சார்ந்த தொழிலாக அமையும். யார் யாரால் உங்களுக்கு அவமானம் நேர்ந்ததாகக் கருதுகிறீர்களோ அவர்களாலேயே உங்கள் குடும்பம் உயர்வு பெறும்.

உங்கள் மகள் வழி உறவினர்களாலும், திரு(ந்தி)ம்பி வரும் தம்பியினாலும் ஆன்மிகத்தொண்டு சார்ந்த தொழில் உங்கள் குடும்பத்திற்கு அமையும். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே தொழிலை பெரியதாக விரிவாக்கம் செய்வீர்கள். ஆன்மிகச் சேவையும், அதனடிப்படையில் செய்யப் போகும் தொழிலும் முழுமையான மனநிறைவினைத் தரும். செவ்வாய்க்கிழமை மற்றும் கிருத்திகை நாட்களில் பாண்டிச்சேரி கதிர்காமம் பகுதியிலுள்ள சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வருவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். தினமும் கந்த சஷ்டி கவசம் உங்கள் இல்லத்தில் ஒலிப்பதும் சங்கடங்களைத் தீர்க்கும். கந்தனின் அருளால் உங்கள் கவலைகள் தீரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

* எனது மகனுக்கு திருமணம் செய்துவைக்க கடந்த நான்கு வருடங்களாக முயற்சிக்கிறேன். நெருங்கி வருவதுபோல் வந்து தடைபடுகிறது. செய்யாத ஹோமங்கள், பரிகாரங்கள், வழிபாடுகள் இல்லை. அவனது திருமணம் எப்போது கைகூடும்? அவன் பணி செய்து வரும் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிடுவானா? அவனது வாழ்க்கை எப்படி அமையும்?
 - ஸ்ரீநிவாஸன், மும்பை.

உங்கள் மகனின் ஜாதகத்தை வாக்கிய பஞ்சாங்க அடிப்படையில் கணித்துப் பார்த்தபோது பூரம் நட்சத்திரம் (மகம் நான்காம் பாதம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்), சிம்ம ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. அவருடைய ஜாதக கணிதத்தின்படி கடந்த 2015ம் ஆண்டின் பிற்பாதியில் நெருங்கி வந்த ஒரு பெண்ணின் ஜாதகத்தை நீங்கள் வேண்டாம் என்று ஒதுக்கியிருக்கிறீர்கள். மீண்டும் அதே பெண்ணின் ஜாதகம் தற்போது உங்கள் பார்வைக்கு வரக்கூடும். அவ்வாறு வரும் பட்சத்தில் பேசி முடிவு செய்யுங்கள்.

தற்போது அவருடைய ஜாதக ரீதியாக 15.12.2018 வரை சந்திர தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. மனைவியைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி புதன் 12ம் வீட்டில், சூரியன் மற்றும் கேதுவுடன் இணைந்து அமர்ந்திருப்பதால் திருமணம் தடைபட்டு வருகிறது. எதிர்காலத்தில் வருகின்ற தசாபுக்திகளைக் கணக்கிடும்போது அவர் ஜென்ம பூமியில் இருப்பதைவிட அந்நிய தேசத்தில் செட்டில் ஆவதுதான் அவருக்கு நன்மை தரும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

வெளிநாட்டில் செட்டில் ஆவதற்கு தயாராக உள்ள பெண்ணாகவே பாருங்கள். 15.06.2019 முதல் செவ்வாய் தசை துவங்க உள்ளதாலும், செவ்வாய் புத்திர ஸ்தான அதிபதி ஆகி குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் துவங்க உள்ள செவ்வாய் தசையின்போது குடும்பம் என்பது உருவாகிவிடும் என்பதும் திண்ணம். பெண் தேடும் விஷயத்தில் பேதம் எதுவும் பாராமல் நடந்து கொள்ளுங்கள். வருகின்ற 2019ம் வருடத்தின் பிற்பாதியில் அவரது திருமணம் நல்லபடியாக நடப்பதோடு வெளிநாட்டில் பணி செய்து எதிர்காலத்தில் உயர்வாக வாழ்வார் என்பதையே அவரது ஜாதகம் உணர்த்துகிறது.

* 67 வயதாகும் எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. 2006ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் 2008ம் ஆண்டு மே மாதம் வரை என்னுடன் நட்பாக இருந்த அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவர் என்னை விட்டு பிரிந்துவிட்டார். அவர் மீண்டும் என்னுடன் சேர்வாரா? எனது வாழ்வு எவ்வாறு இருக்கும்?
- விஜயானந்தம், கண்டி, இலங்கை.

வயதான காலத்தில் வாழ்க்கைத்துணையின் முக்கியத்துவம் குறித்து உணரத் துவங்கியுள்ளீர்கள். அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இணைந்திருக்கும் ராகு பகவான் உங்களை மனம்போன போக்கில் நடக்கச் செய்திருக்கிறார். ஜென்ம லக்னாதிபதி சனி, தைரிய ஸ்தானாதிபதி செவ்வாயுடன் இணைந்து எட்டில் அமர்ந்திருப்பதால் பலவிதமான எதிர்ப்புகளையும் சமாளித்து உங்கள் விருப்பம்போல் வாழ்ந்து வந்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் கேது அமர்ந்திருந்தாலும் களத்ர ஸ்தானாதிபதி சூரியன் 10ல் அமர்ந்து உத்யோக பலத்தினைத் தந்திருக்கிறார்.

24வது வயது முதல் 30 வயது வரை நடந்த சூரிய தசையின் காலத்திலேயே உங்கள் உத்யோகம் சார்ந்த துறையைச் சேர்ந்த பெண்ணை நீங்கள் திருமணம் செய்திருக்க வேண்டும். கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காமல் எதிர்காலத்தினை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள். 2006 முதல் 2008 வரை உங்களுடன் நட்பாக பழகிய பெண்ணோடு நீங்கள் இனிவரும் காலத்தில் சேரமுடியாது. உங்கள் ஜாதகக் கணிப்பின்படி தற்போது உங்களுக்கு குரு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. குரு பகவான் குடும்ப ஸ்தானமாகிய இரண்டாம் வீட்டில் ஆட்சி பலத்துடன் இருந்தாலும் அவர் சனியின் சாரம் பெற்றுள்ளார். கடந்த காலத்தில் உங்களுக்கு உதவி செய்த நண்பரின் குடும்பத்திற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டியிருக்கும்.

தற்போது ஆதரவற்ற நிலையில் இருக்கும் அந்த நண்பரின் குடும்பத்தை தத்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர் தற்போது உயிருடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரது குடும்பத்தை உங்கள் குடும்பமாக எண்ணி அவர்களின் நல்வாழ்விற்கு உறுதுணையாக இருந்து வாருங்கள். ஆதரவற்றோருக்கு செய்யும் சேவை ஆண்டவனுக்குச் செய்யும் சேவையாக அமையும். அதுவே அந்திம காலத்தில் உங்களது கடமையும் ஆகும். அறிந்தும், அறியாமலும் செய்து வந்த பிழைகளுக்கு பிராயச்சித்தமாகவும் அமையும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படை குணத்தினைக் கொண்டவர் நீங்கள் என்பதால் இதுபோன்ற முயற்சியில் இறங்கும்போது உங்கள் உடலும் உள்ளமும் உறுதி பெறும். பிரதிபலன் எதிர்பாராது உதவி செய்துவருவதே உங்கள் எதிர்கால வாழ்வாக அமையும் என்பதையே உங்கள் ஜாதகம் உணர்த்துகிறது.

- சுபஸ்ரீ சங்கரன்