அனந்தனுக்கு 1000 நாமங்கள்96. அஜாய நமஹ (Ajaaya namaha)

கோபிகைகள் அனைவரும் கண்ணனுடன் ஆடிப் பாடிக் கூத்தாடுவதும், அவனோடு அனவரதம் உலாவுவதும் அப்பெண்களின் வீட்டுப் பெரியோர்களின் கண்களை உறுத்தின. இவ்வாறு பெண்கள் நடந்து கொள்வது தங்கள் குடும்ப கௌரவத்துக்கு இழுக்கு எனக் கருதிய அவர்கள், “இனி நீங்கள் கண்ணனைப் பார்க்கக் கூடாது, அவனுடன் பேசக் கூடாது, பழகக் கூடாது!” என்று அப்பெண்களைக் கண்டித்துப் பார்த்தனர், அடித்தும் பார்த்தனர். ஆனால் கிருஷ்ண பக்தியே வடிவெடுத்தவர்களான கோபிகைகளால் ஒரு நொடி கூடக் கண்ணனைப் பிரிந்து இருக்கமுடியவில்லை. இவர்கள் கண்ணனோடு பழகுவதைத் தடுக்க என்ன வழி என யோசித்த ஊர்ப் பெரியவர்கள்,

தங்கள் வீட்டுப் பெண்களை நிலவறைகளில் (underground jail) அடைத்து வைத்தனர். அந்த நிலவறைகளில் இருந்து வெளிவர முடியாமல், கண்ணனைக் காண முடியாமல் தவித்த பெண்கள், “கண்ணா! இந்தத் தடைகளையெல்லாம் நீயே தகர்த்து உன்னுடைய தரிசனத்தை எங்களுக்குத் தந்தருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்கள். அவர்களின் பிரார்த்தனையை ஏற்ற கண்ணன் ஒரு லீலை செய்யத் திட்டமிட்டான். ஆயர்பாடியில் பஞ்சம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அதைக் கண்ட ஊர்ப் பெரியவர்கள் கர்கமுனிவரை அணுகினர். பஞ்சம் வராமல் தடுக்க வழி கூறுமாறு பிரார்த்தித்தனர்.

அதற்கு கர்க முனிவர், “மார்கழி மாதம் வரப் போகிறதல்லவா? அப்போது உங்கள் வீட்டுப் பெண்கள் அனைவரையும் கார்த்யாயனி நோன்பு நோற்கச் சொல்லுங்கள். விடியற்காலையில் எழுந்து பஜனை செய்தபடி யமுனைக்குச் சென்று நீராடி நோன்பு நோற்றால் நாட்டில் மழை நன்றாகப் பொழியும். பஞ்சம் ஏற்படாது!” என்றார் கர்கர். அடுத்த நாள் ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டிய பெரியவர்கள், கர்கரின் அறிவுரைப் படி பெண்களை மார்கழி நோன்பு நோற்கச் சொல்வது எனத் தீர்மானித்தார்கள். “அப்பெண்களுக்கு ஓர் ஆண் துணை வேண்டும், இத்தனைக் கன்னிப் பெண்களையும் விடியற்காலையில் தனியாக அனுப்புவது சரியல்ல!” என்று சிலர் கருதினார்கள்.

ஆனால் அவ்வூர்ப் பெரியோர்களுக்கு மார்கழி மாதக் குளிர் என்றாலே பயம். எனவே ஆண் துணையாக யார் செல்வது என யோசித்துக் கொண்டிருக்கையில் ஒருவர், “இந்தக் கண்ணன் எப்போதும் விஷமங்கள் செய்து கொண்டே இருக்கிறானே. அவனை இவர்களுக்கு மெய்க்காப்பாளனாகப் போட்டுத் துணைக்குப் போகச் சொல்வோம். அவன் செய்யும் விஷமங்களுக்கு இதுவே சரியான தண்டனை!” என்றார். அதைப் பலரும் ஆமோதிக்கவே கண்ணனை நோன்பு நோற்கச் செல்லும் பெண்களுக்கு மெய்க்காப்பாளனாக நியமித்தார்கள். இது கோபிகைகளுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுவது போல இருந்தது.

“கண்ணனைப் பார்க்கக் கூடாது, அவனுடன் பேசிப் பழகக் கூடாது என்று தடைபோட்ட பெரியோர்களே இப்போது அவனைப் பார்த்துப் பேசிப் பழக வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துவிட்டார்களே! ஆஹா! கண்ணன் எப்பேர்ப்பட்ட லீலையைச் செய்துள்ளான்!” என்று எண்ணி மனம் மகிழ்ந்தார்கள். மார்கழி மாதம் முழுவதும் நோன்பு என்ற சாக்கில் கண்ணனோடு ஆடிப் பாடி மகிழ்ந்தார்கள். அதை அப்படியே பின்பற்றிய ஆண்டாள், தன்னை ஒரு கோபிகையாகவும், ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆய்ப்பாடியாகவும், வடபத்ரசாயீயைக் கண்ணனாகவும், அவன் கோயிலை நந்தகோபன் திருமாளிகையாகவும், தன் தோழிகளை இடைச்சிகளாகவும் பாவித்து மார்கழி நோன்பு நோற்றுத் திருப்பாவை பாடினாள் என்பது வாசகர்கள் அறிந்ததே.

கோபிகைகள் கண்ணனை அநுபவிக்க முடியாமல் தடுத்த தடைகளைப் போக்க எண்ணிய கண்ணன், ஆயர்பாடியில் பஞ்சம் ஏற்படுவது போன்ற அறிகுறிகளை உண்டாக்கி, அதற்குப் பரிகாரமாகப் பெண்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று கர்கரைச் சொல்ல வைத்து, அவர்களுக்குப் பாதுகாவலனாகக் கண்ணனையே ஊரார்கள் நியமிக்கும்படி லீலைகள் செய்து, கோபிகைகளுக்குத் தன் அநுபவத்தையும் தந்தான். இவ்வாறு தன்னை வழிபடுவதற்கு இடையூறாக வரும் தடைகளைத் தவிடுபொடியாக்கித் தன் அடியார்கள் தடையின்றி வழிபாடு செய்ய வகைசெய்து தருவதால் ‘அஜ:’ என்று திருமால் போற்றப் படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 96-வது திருநாமம். “அஜாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் வாழ்வில் வரும் தடைக்கற்கள் யாவும் படிக்கற்களாக மாறும்.

97. ஸர்வேச்வராய நமஹ (Sarveshwaraaya namaha)

ஜனகரின் குலத்தில் பிறந்த பகுலாச்வன், சீதா கல்யாண மகோற்சவத்தை மிதிலையில் சீரோடும் சிறப்போடும் கொண்டாடத் திட்டமிட்டார். அதற்குச் சிறப்பு விருந்தினராக துவாரகையின் மன்னனான கண்ணனை அழைக்க விழைந்தார். சமீரன் என்பவரிடம் விழா அழைப்பிதழைத் தந்து, தன் சார்பில் கண்ணனை நேரில் சந்தித்து வரவேற்கும்படி அனுப்பி வைத்தார். சமீரன் வசிக்கும் தெருவில் வாழ்ந்த ச்ருததேவர் என்பவர் மிகச் சிறந்த கிருஷ்ண பக்தர். கண்ணன் மேல் அளவில்லாத அன்பு கொண்ட அவர், சமீரனிடம், “நீ மன்னரின் சார்பில் கண்ணனை வரவேற்கையில் அடியேனும் எனது குடிசைக்குக் கண்ணனை வரவேற்றதாகச் சொல்லி விட்டு வா!” என்று சொல்லி ஒரு பனை ஓலையை அவரிடம் தந்தார்.

சமீரன் துவாரகையை அடைந்தார். கண்ணனைச் சந்தித்து மன்னர் தந்த அழைப்பிதழை வழங்கினார். “வேறு ஏதாவது கொடுக்க வேண்டியுள்ளதா?” எனக் கண்ணன் வினவ, ச்ருத தேவர் தந்த பனை ஓலை சமீரனின் நினைவுக்கு வந்தது. அதையும் கண்ணனிடம் வழங்கினார். “ச்ருத தேவரின் வீட்டுக்கும் நான் நிச்சயம் வருவேன் என்று அவரிடம் சொல்லிவிடு!” என்றான் கண்ணன். கண்ணன் மிதிலைக்கு வருவதற்கு முந்தையநாள் இரவே ச்ருத தேவர் பூர்ண கும்பத்தை எல்லாம் தயார் நிலையில் வைத்திருந்தார். விடியற்காலை எழுந்து நகரின் தெற்கு வாசலுக்குச் சென்று கண்ணனை வரவேற்க வேண்டுமெனத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அடுத்த நாள் காலை ச்ருத தேவருக்குக் கடும் காய்ச்சல். படுக்கையை விட்டு எழுந்திருக்கவே முடியவில்லை. “கண்ணா! என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறாய்?” என்று புலம்பினார். அவரது மகன் ஒரு வைத்தியரை அழைத்து வந்தான். வைத்தியரிடம் நோயைப் பற்றிக் கூட ஒன்றும் பேசாத ச்ருத தேவர், “கண்ணன் மிதிலைக்கு வந்துவிட்டானா? மன்னர் அவனை வரவேற்கப் பரிவாரங்களுடன் தெற்கு வாசலை அடைந்துவிட்டாரா?” என்றெல்லாம் வினவினார். “சற்றுப் பொறுங்கள்!” என்று சொல்லிக் கொண்டே அந்த வைத்தியர் ச்ருத தேவரின் கையைப் பிடித்தார்.

உடனே அவருக்கு வியர்வை பெருகியது. காய்ச்சல் குணமாகி விட்டது. “கண்ணன் தெற்கு வாசல் வழியாக வரவில்லை என்ற அறிவிப்பு வந்தது. வடக்கு வாசல் வழியாக வருகிறாராம். அதனால் மன்னர் இப்போது வடக்கு வாசலை நோக்கிப் பூர்ணகும்பங்களை ஏந்திக் கொண்டு பரிவாரங்களுடன் செல்கிறார்!” என்றார் வைத்தியர். “ஆஹா! வடக்கு வாசல் என் வீட்டுக்கு மிக அருகாமையிலேயே இருக்கிறது. மன்னருக்கு முன் நான் சென்று கண்ணனை வரவேற்றுவிடுகிறேன்!” என்றபடி பூர்ணகும்பத்தை எடுத்துக் கொண்டு வடக்கு வாசலை நோக்கி விரைந்தார் ச்ருத தேவர்.

அங்கே மன்னரும் பரிவாரங்களும் இன்னும் வந்தபாடில்லை. கண்ணன் நகருக்குள் நுழைகையில் ச்ருத தேவர் மட்டுமே அங்கே கண்ணனை வரவேற்கக் காத்திருந்தார். பூர்ணகும்ப மரியாதையோடு கண்ணனை வரவேற்றார். தன்னுடைய குடிசைக்கு வரும்படி அழைத்தார். கண்ணனும் மகிழ்ச்சியோடு அவரது குடிசைக்கு எழுந்தருளி அன்றைய பொழுது முழுவதையும் அவருடனேயே கழித்தார். அரண்மனைக்குச் செல்லவில்லையா என ச்ருத தேவரும் கேட்கவில்லை. அதைப் பற்றிக் கண்ணனும் எதுவும் சொல்லாமல், அன்று மாலை துவாரகைக்குப் புறப்பட்டான்.

இதில் ரகசியம் என்னவென்றால், திட்டமிட்டபடித் தெற்கு வாசல் வழியாக மிதிலைக்குள் நுழைந்த கண்ணன், மன்னரின் வரவேற்பு மரியாதைகளை ஏற்று அவரது அரண்மனை விழாவிலும் பங்கேற்றான். ச்ருத தேவருக்கு அருள்புரிவதற்காக மற்றொரு வடிவம் எடுத்துக் கொண்டு அதே நேரத்தில் வடக்கு வாசல் வழியாகவும் வந்து ச்ருத தேவர் இல்லத்தில் தங்கி அவரையும் மகிழ்வித்தான். ச்ருத தேவரின் இல்லத்துக்குக் கண்ணன் சென்றது மன்னருக்குத் தெரியாது. அரண்மனைக்குக் கண்ணன் சென்றது ச்ருத தேவருக்குத் தெரியாது.

ஒரு பக்தரின் இருப்பிடத்துக்கு முதலில் சென்று விட்டு, அதன் பின் மற்றொரு பக்தரின் இருப்பிடத்துக்குச் செல்வதென்றால் இரண்டாம் பக்தர் சில காலம் காத்திருக்க நேரிடுமே என்று கருதிய கண்ணன், தாமதமின்றி அருள்புரியும் எண்ணத்தில் இரு வடிவங்களோடு ஒரே நேரத்தில் இரு பக்தர்களையும் சந்தித்து மகிழ்வித்தான். இவ்வாறு தன் அடியார்களைக் காக்க வைக்காமல் விரைந்து சென்று அவர்களுக்கு அருள்புரிவதால் திருமால் ‘ஸர்வேச்வர:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 97-வது திருநாமம். “ஸர்வேச்வராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் துன்பங்களை விரைவில் திருமால் போக்கி அருளுவார்.

98. ஸித்தாய நமஹ (Siddhaaya namaha)

பிரம்மா தியானம் செய்து திருமாலை நேரில் காண நினைத்தார். ஆனால் எவ்வளவு பயின்றும் அவருக்குத் தியானம் கைகூடவில்லை. காரணம் அறியாது திகைத்தபோது, அசரீரியாகத் திருமால் அவருடன் பேசினார். “பிரம்மனே! நீ முன் பிறவிகளில் செய்த பாபங்கள் உனது தியானத்துக்குத் தடையாக உள்ளன. அந்தப் பாபங்களைத் தீர்க்க நீ ஆயிரம் அச்வமேத யாகங்கள் செய்ய வேண்டும். பாபங்கள் தீர்ந்தபின்னர் தான் நீ இடையூறின்றி தியானம் செய்ய இயலும்!” என்றார். “ஆயிரம் அச்வமேத யாகங்கள் செய்து எப்படிச் சாத்தியம்?” என்று கேட்டார் பிரம்மா.

“அதற்கு ஒரு குறுக்கு வழி சொல்கிறேன். பூமியில் சத்திய விரத க்ஷேத்திரத்தில் ஒரு யாகம் செய்தால் ஆயிரம் யாகங்கள் செய்தமைக்குச் சமம். அங்கே யாகம் செய்!” என்றார் திருமால். பூமிக்கு வந்த பிரம்மா, அந்த சத்திய விரத க்ஷேத்திரத்தை ஆசையுடன் பார்த்தார். ‘க’ எனப்படும் பிரம்மா ஆசையுடன் பார்த்ததால், ‘காஞ்சீ’ என்ற பெயர் அந்த க்ஷேத்திரதுக்கு ஏற்பட்டது. விச்வகர்மாவை விட்டு யாகசாலையை ஏற்படுத்தச் சொல்லி யாகம் செய்யத் தொடங்கினார் பிரம்மா. புரோகிதரான வசிஷ்டர் பிரம்மாவிடம், “தந்தையே! தங்கள் மனைவியான சரஸ்வதி தேவியில்லாமல் தாங்கள் மட்டும் தனியாக யாகம் செய்யக் கூடாது!

சரஸ்வதி தேவியை அழைத்து வாருங்கள்!” என்றார். “அவளுக்கும் எனக்கும் சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவள் கோபித்துக் கொண்டு பாரதத்தின் வடக்கே தவம் புரிகிறாள். நீ வேண்டுமானால் அவளை அழைத்துப் பார்!” என்றார் பிரம்மா. வசிஷ்டர் அழைத்தும் சரஸ்வதி வர மறுத்துவிட்டாள். வேறு வழியின்றி, தனது மற்ற மனைவிகளான சாவித்திரி, காயத்திரியுடன் இணைந்து பிரம்மா யாகம் செய்தார். அந்த யாகத்துக்கு இடையூறு செய்ய நினைத்த அசுரர்கள், காஞ்சி நகரம் இருளில் மூழ்கும் படிச் செய்தார்கள். இருள்சூழ்ந்த இடத்தில் யாகம் செய்ய முடியாமல் தவித்த பிரம்மா திருமாலின் உதவியை நாடினார்.

அப்போது விளக்கொளி எம்பெருமான் என்ற திருநாமத்தோடு திருமால் காட்சி தந்து யாகத்துக்கு ஒளி தந்தார். அசுரர்கள் ஆயுதங்களை ஏந்தியபடி யாக சாலையை அழிக்க வந்தார்கள். மீண்டும் திருமாலின் உதவியை நாடினார் பிரம்மா. எட்டுக் கைகளில் எட்டு ஆயுதங்களுடன்  சக்கரம், அம்பு, கத்தி, தாமரை, சங்கு, வில், கேடயம், கதை  அஷ்டபுஜப் பெருமாளாகத் தோன்றி அசுரர்களை வீழ்த்தினார் திருமால். கலகம் செய்ய எண்ணிய அசுரர்கள், பிரம்மாவின் யாகத்தை நிறுத்தும்படி சரஸ்வதியிடம் வேண்டினார்கள். ஏற்கனவே பிரம்மாவின் மேல் கோபத்தில் இருந்த சரஸ்வதி வேகவதி என்னும் நதியாக யாகசாலையை நோக்கி பெருவெள்ளத்துடன் வந்தாள்.

மீண்டும் திருமாலை உதவிக்கு அழைத்தார் பிரம்மா. வெஃகணைப் பெருமாள் என்ற திருநாமத்துடன் வேகவதி நதியின் குறுக்கே ஓர் அணைபோலத் திருமால் சயனித்தார். அவரைக் கண்டதும் சரஸ்வதியின் வேகம் அடங்கியது. “கணவன் மனைவி இப்படி சண்டை போட்டுக் கொள்வது நல்லதல்ல. சரஸ்வதீ! நீயும் இணைந்து இந்த யாகத்தைச் செய்து முடி!” என்று திருமால் சொல்ல, சரஸ்வதி, சாவித்திரி, காயத்திரி மூவருடனும் இணைந்து பிரம்மா தன் யாகத்தைச் செய்து முடித்தார். அவரது பாபங்கள் அனைத்தும் அதனால் விலகவே, திருமால் அந்த யாகசாலையில் உத்திரவேதியில் தீக்கு நடுவே வரதராஜப் பெருமாளாகக் காட்சி தந்தார்.

 பிரம்மா ஆசைப்பட்டபடித் திருமாலின் தரிசனம் கிட்டியது. இன்றும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளின் முகத்தில் அத் தீக் காயங்களைக் காணலாம். இந்தச் சரித்திரத்தில், திருமாலைக் காண வேண்டும் என்பது பிரம்மாவின் இலக்கு. அந்த இலக்கை அடைவதற்கு வழியாகவும் திருமாலே இருந்தார். ஏனெனில் தியானம் செய்ய வழிகாட்டியது, அதற்கான இடத்தைத் தேர்வு செய்தது, விளக்கொளியாக வந்து இருளைப் போக்கியது, ஆயுதங்களோடு வந்து அசுரரை வீழ்த்தியது, சரஸ்வதி நதியாக வந்தபோது அவளைத் தடுத்தது  இவை அனைத்தையும் திருமாலே செய்து, இறுதியில் தன் தரிசனத்தையும் பிரம்மாவுக்கு வழங்கி விட்டார்.

இவ்வாறு தன்னை அடைவதற்கான வழியாகவும் தானே இருப்பதால் திருமால் ‘ஸித்த:’ என்றழைக்கப்படுகிறார். உலகில் வேறெங்கும் அப்படிக் காண முடியாது. சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்ல வேண்டுமெனில், இலக்கு - மதுரை, அதற்கான வழி - நெடுஞ்சாலை. ஆனால் திருமாலை அடையும் விஷயத்தில் இலக்கும் அவரே, அதை அடைவிக்கும் வழியும் அவரே. “ஸித்தாய நமஹ” என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 98-வது திருநாமத்தைத் தினமும் சொல்லி வரும் அன்பர்கள் செல்லும் பாதையில் தடங்கல்கள் ஏற்படாமல் திருமால் காத்தருள்வார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

- திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்