திருமணத்தில் அரசாணிக்கால் நடுவதன் காரணம் என்ன?



தெளிவு பெறுஓம்

* திருமண மேடையில் அரசமரத்தின் கிளையை அரசாணிக்கால் என்ற பெயரில் நடுவது ஏன்? அலங்கரிக்கப்பட்ட இரண்டு மங்கலப்பானைகளை வைப்பது ஏன்? இதன் தாத்பர்யம் என்ன?
 - அரிமளம் தளவாய் நாராயணசாமி, பெங்களூரு.

திருமண மேடையில் அரசாணிக்கால் நடுவது என்பது வரலாறு, தெய்வீகம் மற்றும் சம்பிரதாயம் ஆகிய மூன்றின் அடிப்படையில் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒவ்வொன்றாகக் காண்போம். அரசு+ஆணை+கால் என்பது அரசாணிக்கால் என்று பெயர் பெற்றது. தமிழக வரலாற்றில் அரசர்களின் ஆட்சிக்காலத்தில் நாட்டில் நடக்கும் ஒவ்வொரு திருமணத்திற்கும் அரசனிடம் இருந்து அனுமதியும், சீர் வரிசையும் வந்து சேரும். அவ்வாறு அரசனின் சீர்வரிசையையும், அனுமதிப் பத்திரத்தையும் கொண்டு வரும் காவலர்கள் கையில் ஒரு மூங்கில் கம்பத்தைக் கொண்டுவருவர்.

அந்த மூங்கிலில் அரசமரத்தின் கிளையை சேர்த்துக் கட்டி அதனை மணவறையில் நட்டு வைப்பார்கள். அதாவது அரசனின் சார்பாக அரசாணிக்கால் அங்கே வீற்றிருக்கும். அரசனின் முன்னிலையில் அந்தத் திருமணம் நடப்பதாகக் கருதுவார்கள். ஒரே நேரத்தில் நாட்டில் நடக்கும் எல்லா திருமணங்களுக்கும் ஒரு அரசனால் நேரில் செல்ல முடியாது என்பதால் இந்த முறையைக் கடைபிடித்தார்கள். இந்த உண்மையை வரலாற்றில் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இந்த நடைமுறையில் தெய்வீக நம்பிக்கையும் உண்டு. அதாவது அரசமரத்தில் மும்மூர்த்திகளும் வாசம் செய்கின்றனர்.

அரச மரத்தின் அடிபாகத்தில் பிரம்மாவும், மத்தியில் மஹாவிஷ்ணுவும், உச்சியில் பரமேஸ்வரனும் வசிக்கிறார்கள் என்பதால் மும்மூர்த்திகளையும் திருமண மேடைக்கு வரவழைக்கும் நோக்கத்தோடு அரசமரக் கிளையை மணவறையில் நட்டு வைக்கிறார்கள். முகூர்த்தம் தொடங்குவதற்கு முன் துவக்க நிகழ்ச்சியாக இந்த அரசமரக் கிளைக்கு பால், தயிர், கோமியம் ஆகியவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டு, வஸ்திரமும் மாலையும் சாற்றி அதனை மும்மூர்த்திகளின் ஸ்வரூபமாக வைத்து பூஜித்து வணங்குவார்கள். மும்மூர்த்திகளின் முன்னிலையில் திருமணம் நடப்பதாக நம்புகிறார்கள்.

மூன்றாவதாக சம்பிரதாயமான ஒரு நம்பிக்கையும் உள்ளது. அதாவது திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்ற சொல்வழக்கு உண்டு. ஆங்கிலத்தில் “Marriages are made in heaven” என்று சொல்வார்கள். திருமண மேடையில் ஸ்வர்க்க லோகம் போன்றதொரு அமைப்பினை உருவாக்கி வைக்கிறார்கள். அதனால்தான் ஏழை முதல் பணக்காரர் வரை யாராக இருந்தாலும் அவரவர் வசதிக்கேற்ப மணவறையை அலங்காரம் செய்து வைத்திருப்பார்கள். வானுலகில் உள்ள சொர்க்க லோகத்தில் கற்பக விருட்சம் என்ற அபூர்வ சக்தியை உடைய மரம் ஒன்று உண்டு.

அந்த மரத்தின் கீழ் அமர்ந்து எதை நினைத்தாலும் நடந்துவிடும், என்ன வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோமோ அந்த வேண்டுதல் நிச்சயமாக நிறைவேறிவிடும் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட கற்பக விருட்சத்தை மணவறையில் வைத்து, அதனடியில் மணமக்கள் அமர்ந்து பிரார்த்தனை செய்து தங்கள் வாழ்வினைத் துவக்கும்போது அவர்களுக்குத் தேவையான செல்வங்கள் அனைத்தும் அவர்களுடைய வாழ்வினில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையினாலும் அரசாணிக்கால் என்பது கற்பக விருட்சமாக மணவறையில் வைத்து பூஜிக்கப்படுகிறது.

அடுத்ததாக மங்கலப்பானைகள் எதற்காக வைக்கப்படுகின்றன என்பதையும் காண்போம். நம் வீட்டினில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும் நமது முன்னோர்களின் ஆசியை அவசியம் பெறவேண்டும். முன்னோர்களின் ஆசியின்றி எந்த செயலைச் செய்தாலும் அதில் வெற்றி கிடைக்காது. அதிலும் திருமணம் என்று வரும்போது, வம்ச விருத்தி என்பது முன்னோர்களின் ஆசியால்தான் உண்டாகும். இங்கும் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்ற சொல்வழக்கு ஆதாரமாகச் சொல்லப்படுகிறது. அதாவது மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இரண்டு குடும்பத்தின் முன்னோர்களும் சொர்க்க லோகத்தில் சந்தித்து இன்னார்க்கு இன்னார் என்று நிச்சயம் செய்து வைத்திருப்பார்களாம்.

அதனை மெய்ப்படுத்தும் விதமாக அந்தப் பானைகளில் இரு குடும்பத்தின் முன்னோர்களையும் ஆவாஹணம் செய்து வைப்பார்கள். மணமக்கள் மனையில் வந்து அமர்வதற்கு முன்னால் இந்த மங்கலப் பானைகளை பூஜித்து அங்கே வைக்கப்பட்டிருக்கும் மணப்பொங்கல், வெல்லம் மற்றும் பழங்களை நிவேதனம் செய்து வணங்குவார்கள். சிறிதளவு அந்த பிரசாதத்தை தேவலோகத்தில் தரப்படுகின்ற அமிர்தமாக எண்ணி உட்கொண்ட பின்பு மனையில் வந்து அமர்ந்து முகூர்த்த நிகழ்வுகளைத் துவங்குவார்கள். மணவறையில் வைக்கப்படுகின்ற மங்கலப் பானைகள் மணமக்களின் முன்னோர்களின் வடிவமாக அமைக்கப்படுகிறது.

இந்த சம்பிரதாயத்தை அந்தண குலத்தினர் நாந்தீ சோபனம் என்ற பெயரில் திருமணத்திற்கு முதல்நாள் விரதத்தின்போது ஒன்பது அந்தணர்களை அமரவைத்து செய்து முடிப்பார்கள். இதர பிரிவினர் மங்கலப்பானைகளில் இந்த நாந்தீ சோபன தேவதைகளை ஆவாஹணம் செய்து வணங்குகிறார்கள். இந்து மத சடங்குகளில் செய்யப்படுகின்ற அனைத்து விதமான சம்பிரதாயங்களுக்கும் அர்த்தமும் உண்டு, ஆதாரமும் உண்டு என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணங்கள் என்று திருமணத்தின்போது அரசாணிக்கால் நடுவதையும், மங்கலப் பானைகள் வைத்து வணங்குவதையும் சொல்லலாம்.

* திதி கொடுக்கும்போது குறைந்தது மூன்று தலைமுறையினரின் பெயர்களைச் சொல்ல வேண்டும் என்கிறார்களே, என்ன காரணம்? பெயர் தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
 - கே. விஸ்வநாத், அல்சூர்.

பித்ருலோகம் என்று அழைக்கப்படும் முன்னோர்களின் உலகத்தில் ஒவ்வொரு வம்சத்திற்கும் மூன்று ஆசனங்கள் உண்டு. இந்த மூன்று ஆசனங்களிலும் மூன்று வடிவத்தைச் சேர்ந்தவர்கள் அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு முறையே வஸூ, ருத்ர, ஆதித்ய ரூபம் என்று பெயர். அதாவது தந்தை, தாத்தா, கொள்ளு தாத்தா இவர்கள் மூவரும் முறையே வஸூ, ருத்ர, ஆதித்ய ரூபங்களில் முன்னோர்களின் உலகத்தில் வசிப்பார்கள். இவர்கள் மூவருக்கும் உணவளிக்க வேண்டிய கடமை அந்த வம்சத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு உண்டு.

எனவே தான் சிராத்தம் செய்யும்போது இவர்கள் மூவரின் பெயர்களைச் சொல்லி பிண்டங்களை வைக்கிறார்கள். தற்காலத்தில் பெரும்பாலானோருக்கு கொள்ளுத் தாத்தாவின் பெயர் சரியாகத் தெரிவதில்லை. அவ்வாறு பெயர் தெரியாத பட்சத்தில் அந்த உறவுமுறையின் பெயரைச் சொல்லி அதாவது ப்ரபிதாமஹம் ஆதித்ய ரூபம் என்று சொல்லிச் செய்ய வேண்டும். பெற்ற தகப்பனுக்கு சிராத்தம் செய்யும்போது, தந்தை - பிதரம் - வஸூ ரூபம், தாத்தா (தந்தையின் தந்தை) -  பிதாமஹம் - ருத்ர ரூபம், கொள்ளுதாத்தா

(தாத்தாவின் தந்தை) - ப்ரபிதாமஹம் - ஆதித்ய ரூபம் என்ற வரிசையில் அவர்களின் பெயர்களைச் சொல்லி மூன்று பிண்டங்கள் வைக்க வேண்டும். பெயர் தெரிந்தால் சொல்லலாம். தெரியாதவர்கள் உறவுமுறையையும், அவருக்கு உரிய ரூபத்தின் பெயரையும் சொல்லிச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதில் எந்தவிதமான தவறும் இல்லை. பெயர் தெரியவில்லை என்ற காரணத்திற்காக சிராத்தம் செய்யாமல் விட்டால்தான் தவறு. சிராத்தம் செய்யாமல் விட்டால் அதற்குரிய பாவம் நிச்சயம் வந்து சேரும். இந்த மூன்று ரூபங்கள் தகப்பன் வழிக்கு மட்டுமல்ல,

தாயார் (மாதரம் - வஸூ ரூபம்), பாட்டி (தாயாரின் மாமியார் - பிதாமஹி - ருத்ர ரூபம்), கொள்ளு பாட்டி (பாட்டிக்கு மாமியார் - ப்ரபிரதாமஹி - ஆதித்ய ரூபம்) என்று பெண்கள் வழியிலும் உண்டு. இறந்து போன தாயாருக்கு சிராத்தம் செய்யும்போது மேற்சொன்ன மூவரின் பெயர்களையும் சொல்லி பிண்டம் வைத்து வழிபட வேண்டும். முன்னோர்கள் உலகில் இந்த மூவரின் ஆன்மாவும் வசித்து வருகிறது என்ற நம்பிக்கையில்தான் மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களின் பெயர்களை திதி கொடுக்கும்போது சொல்கிறார்கள்.

* தினசரி பூஜையின்போது நிவேதனம் முதலில் தீபத்திற்கு காட்ட வேண்டுமா அல்லது விக்கிரகங்களுக்கும் படங்களுக்கும் காட்ட வேண்டுமா?
- ர.சேதுராமன், திருவூர்.

பொதுவாக தினசரி பூஜையின் போது பூஜையறையில் ஏற்றி வைத்திருக்கும் தீபத்திற்கு நிவேதனம் செய்ய வேண்டிய அவசியமில்லை. இறைவனுக்கு செய்யும் உபசாரங்களில் தீபமும் ஒன்று. தூப, தீப, நைவேத்யம் என்று சொல்வார்கள். அதாவது பூஜை செய்து முடிக்கும்போது செய்யப்பட வேண்டிய உபசார பூஜைகளில் முதலில் வருவது தூபம். அதாவது ஊதுவத்தி அல்லது சாம்பிராணி புகையை இறைவனுக்குக் காட்டி வழிபட வேண்டும். அதனைத் தொடர்ந்து வருவது தீப உபசாரம். நெய்திரியை ஏற்றி தீபம் காட்டி வழிபட வேண்டும்.

அல்லது ஏற்றி வைத்திருக்கும் தீபத்தின் பாதங்களில் புஷ்ப அக்ஷதைகளை சமர்ப்பித்து வணங்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நைவேத்யம் செய்ய வேண்டும். நைவேத்யம் என்பது பூஜையறையில் நாம் வைத்து வழிபடும் விக்கிரகங்களுக்கும், படங்களுக்கும்தான் செய்ய வேண்டும். தீபத்திற்கு என்று தனியாக நைவேத்யம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

அதே நேரத்தில் ஆடி வெள்ளி, தை வெள்ளி, நவராத்திரி வெள்ளிக்கிழமைகள் மற்றும் சிறப்பு பூஜையாக திருவிளக்கு பூஜை செய்யும்போது அந்த திருவிளக்கில்தான் அம்பிகையை ஆவாஹனம் செய்வார்கள். அவ்வாறு விளக்கில் அம்பிகையை ஆவாஹனம் செய்து பூஜிக்கும்போது மட்டும் விளக்கிற்கு நைவேத்யம் செய்து வணங்க வேண்டும். மற்றபடி தினசரி பூஜையின்போது விளக்கிற்கு என்று தனியாக நைவேத்யம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

* முன்னோர்களுக்கு திதி கொடுக்க வீட்டில் செய்ய வேண்டுமா அல்லது கோவிலில் செய்வது நல்லதா?
 - எஸ்.எஸ்.வாசன், தென்எலப்பாக்கம்.

வீட்டில் சாப்பிடுவது நல்லதா, அல்லது ஹோட்டலில் சாப்பிடுவது நல்லதா? இரண்டு இடத்தில் சாப்பிட்டாலும் வயிறு நிறையும். ஒரு சிலருக்கு வீட்டுச் சாப்பாட்டை விட ஹோட்டல் சாப்பாடு பிடிக்கும். ஆனால், ஹோட்டல் சாப்பாட்டினை விரும்புவர்கள் கூட விரத நாட்களில் வீட்டினில்தான் சாப்பிடுவார்கள். அதிலும் தனது பிள்ளைகளின் கையால் சமைத்த சாப்பாடு ருசியாக இல்லாவிட்டால் கூட வீட்டினில் அமர்ந்து அவர்கள் கையால் சாப்பிடும்போது மனமும் வயிறும் நிறைகிறது அல்லவா. அதுபோல சிராத்தம் என்பது நாம் குடியிருக்கும் வீட்டில்தான் செய்ய வேண்டும்.

முடிந்தவரை வீட்டினில் செய்ய முயற்சிக்க வேண்டும். உடல்நலமின்மை மற்றும் இடவசதியின்மை காரணமாக வெளியில் சென்று திதி கொடுக்கிறார்கள். கோயிலில் சிராத்தம் செய்யக் கூடாது. கோயிலில் குளம் இருப்பதால் குளக்கரையில் வைத்து சிராத்தம் செய்யலாம். ஆறு, ஏரி, குளம், சமுத்திரம் முதலான தீர்த்தங்களின் கரைகளிலும், புனித ஸ்தலங்களிலும் எப்பொழுது வேண்டுமானாலும் சிராத்தம் செய்யலாம். ஆனால் வருடாந்திர திதி வருகின்ற நாட்களில் வீட்டில் வைத்து சிராத்தம் செய்வதே சாலச் சிறந்தது.

வீட்டில் வைத்து வருடாந்திர திதி வருகின்ற நாட்களில் செய்யும் சிராத்தமானது வீட்டுச் சாப்பாட்டை சாப்பிடுவதற்கு சமமானது. புனித ஸ்தலங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்லும்போது செய்கின்ற சிராத்தமானது என்றோ ஒருநாள் சாப்பிடுகின்ற விருந்து சாப்பாட்டிற்கு ஒப்பானது. இவற்றில் ஒன்றைச் செய்துவிட்டால் மற்றொன்றை செய்யக்கூடாது என்று தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. இரண்டையும் செய்வதால் கூடுதல் நன்மையே கிடைக்கும். அதே நேரத்தில் பிரதி வருடந்தோறும் வருகின்ற அவர்களுக்கு உரிய சிராத்த திதி வருகின்ற நாட்களில் நாம் குடியிருக்கும் வீட்டினில் வைத்து சிராத்தத்தை செய்து முடிப்பதே முழுமையான பலனைத் தரும் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை.

- திருக்கோவிலூர் K.B. ஹரிபிரசாத் சர்மா