தமிழ்ப் புலியும் கவிச் சிங்கமும்!குறளின் குரல் - 92

பழந்தமிழ்ப் புலவர் திருவள்ளுவரை, ஒரு கவிச் சிங்கம் என்று சொல்லலாம். எண்ணற்ற கம்பீரமான கருத்துக்களைக் கூறி எந்நாளும் நிலைத்திருக்கும் இலக்கியத்தைப் படைத்த பெருமை அவருக்கே உண்டு. அவர் சொற்சிக்கனத்தோடு தமிழைக் கையாளும் வல்லமையைப் பார்த்தால் அவரைத் தமிழ்ப்புலி என்றும் கூட சொல்லலாம்! தமிழ் அவர் சொன்னபடியெல்லாம் வளைந்து அவரது கருத்தைத் தெரிவிக்க உதவியுள்ளது. இப்படிக் கவிச்சிங்கமாகவும் தமிழ்ப் புலியாகவும் உள்ள அவர், தம் திருக்குறளில் சிங்கத்தையும் புலியையும் எங்கேனும் உலவ விட்டிருக்கிறாரா? இரண்டு திருக்குறள்களில் அவர் சிங்கத்தைத் தம் கருத்தை விளக்குவதற்குத் துணையாகக் கூப்பிட்டிருக்கிறார். ஒரு குறளில் புலி அவருக்கு உதவியிருக்கிறது! குணத்தில் சிறந்த மனைவியைப் பெற்றவன் கூனிக் குறுகாமல் கம்பீரமாக சிங்கத்தைப்போல் நடப்பான். அப்படிப்பட்ட பேறு வாய்க்காதவர்களுக்கு நடையில் கம்பீரம் இருக்காது. இப்படிச் சொல்லி நல்ல மனைவியின் சிறப்பை விளக்குகிறார் வள்ளுவர்.

'புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.’ (குறள் எண் 59)
 
புகழைக் காக்க விரும்பும் நற்குணங்களை உடைய மனைவி யாருக்கு அமையவில்லையோ அவருக்கு, தன்னை ஏளனம் செய்யும் பகைவர் முன் சிங்கம்போல்
நடக்கும் பெருமித நடை இருக்காது.  ஒரு கணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கிய வள்ளுவர், ஓர் அரசன் எப்படி இருக்க வேண்டும் என்றும் விளக்குகிறார். கணவன் சிங்கம்போல் நடப்பதற்கு மனைவியின் பண்பு நலன் காரணம் என்றாரே? அப்படியானால் அரசன் சிங்கம்போல் திகழ வேண்டுமானால் அவனுக்கு என்னென்ன அமைந்திருக்க வேண்டும்? அவற்றைப் பட்டியலிடுகிறது ஒரு குறள்.

'படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையார் அரசருள் ஏறு.’ (குறள் எண் 381)
 
வீரம் மிகுந்த படை, தேசப் பற்றுடைய மக்கள், குறையாத செல்வம், நல்லவற்றை வலியுறுத்தும் மந்திரிகள், அண்டை நாடுகளின் நட்புறவு, வலுவான காவல் இவை ஆறும் உடைய அரசாட்சி யாருக்கு அமைகிறதோ அந்த அரசன் அரசர்களிடையே வெல்ல இயலாத சிங்கத்தைப் போன்றவனாய்ச் சிறப்படைவான். சிங்கத்தின் கம்பீரமான இயல்புகளை பற்றிச் சிந்தித்த வள்ளுவரின் மனம் புலியைப் பற்றியும் யோசிக்கிறது. புலி பெரிதும் ஊக்கம் கொண்ட ஒரு விலங்கு. ஒன்றை அடித்துச் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அது பாய்ந்து சென்று தன் இலக்கை அடித்து வீழ்த்தி விடும். தந்தங்களைக் கொண்ட மிகப்பெரிய விலங்கான யானை கூட, தன்னளவு பெரிதாக இல்லாத புலியைப் பார்த்தால் அச்சமடையும். காரணம் புலியின், இலக்கை அடிக்கும் ஊக்கத்தைப்பற்றி யானை அறிந்திருப்பதுதான்.  

'பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்!’ (குறள் எண் 599)
 
பெருத்த வடிவை உடையது யானை. கூர்மையான தந்தங்களை உடையது. ஆனாலும், புலி தாக்கினால் புலிக்கு யானை அஞ்சும். இந்தக் குறள், பொருட்பாலில் 'ஊக்கமுடைமை' என்ற அதிகாரத்தில் உள்ளது. வலிமையை விட ஊக்கம் முக்கியமானது என்பதை வலியுறுத்துகிறார் வள்ளுவர். வெறும் வலிமை வலிமையல்ல. ஊக்கமே வலிமை... சிங்கமும் புலியும் திருக்குறளில் மட்டுமல்ல, நம் ஆன்மிகத்திலும் போற்றப்படும் விலங்குகள்தான். சிங்கம் பராசக்தியின் வாகனம். சிங்க வாஹினி அவள். வீரம் செறிந்த மாதரசி, சிங்கத்தை வாகனமாகக் கொண்டதில் வியப்பில்லை. அவளுக்குத் தன் கவிப்பிள்ளை குமரகுருபரன் மேல் அளவற்ற பாசம். அவன் தமிழ் கேட்டுச் சொக்கியவள் அல்லவா அந்தச் சொக்கனின் மனைவி!

மீனாட்சி கோயிலில் மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழை குமரகுருபரர் அரங்கேற்றியபோது, மன்னர் திருமலை நாயக்கர் வியந்து ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது கோயில் சிலையிலிருந்த மீனாட்சி ஒரு சிறுமியாகச் சிரித்தவாறே வெளிப்பட்டாள். ஜல்ஜல் எனக் கொலுசொலிக்க நடந்து வந்து திருமலை நாயக்கரின் மடியில் அமர்ந்து கொண்டாள். அந்த தெய்வீகக் குழந்தை யார் எனத் தெரியாமல் குழந்தையின் பேரெழிலை பக்தியுடன் கண்ணால் பருகிக் கொண்டிருந்தார் நாயக்கர். சிறுமி உரிமையோடு அவர் கழுத்தில் அணிந்திருந்த முத்தாரத்தைக் கழற்றினாள்.  
 
'தொடுக்கும் கடவுட் பழம்பாடல் தொடையின் பயனே’ என்ற பாடலில் 'அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமே’ எனத் தமிழ் மொழியின் சிறப்பு ழகரம் அடுத்தடுத்து மூன்று முறை வருமாறு பாடல் வரிகளைப் பாடினார் குமரகுருபரர். சிறுமி மீனாட்சி முருகப் பெருமானின் வாகனமான மயில்போல் நடந்து சென்று குமரகுருபரர் கழுத்தில் அந்த முத்தாரத்தை அணிவித்தாள். பின் மின்னல் வேகத்தில் சென்று மீனாட்சி சிலையுடன் ஐக்கியமாகி விட்டாள். வந்தது அன்னை மீனாட்சியே என்றறிந்து நாயக்கர் விழிகளிலும் குமரகுருபரர் விழிகளிலும் கண்ணீர் வழிந்தது. பின்னாளில் குமரகுருபரர் காசிக்குச் சென்றார்.

அங்கே ஒரு மடம் நிறுவ எண்ணினார். மடத்திற்கு நிலம் வேண்டுமே? காசியை ஆள்பவன் சுல்தான். அவனிடம் நிலம் கேட்டால் தருவானா? தனித்துப் போய்க் கேட்டால் தர யோசிப்பான். ஏதேனும் அந்தஸ்தோடு போய்க்கேட்டால் கட்டாயம் தருவான். தன் அந்தஸ்தை அவனுக்கு எப்படிப் புலப்படுத்துவது? இந்து மதத்தைப் பரப்பும் உயர்ந்த தமிழ் மடத்திற்கு சுல்தான் நிலம் வழங்கிப் புண்ணியம் தேடிக் கொள்ள அவனுக்கு இது ஒரு வாய்ப்பு. ஆனால் அந்த வாய்ப்பை அவன் உணருமாறு செய்வது எப்படி? அன்றொருநாள் மீனாட்சி ஆலயத்தில் தன் கழுத்தில் முத்துமாலை அணிவித்த அன்னை பராசக்தியைச் சிந்தித்தவாறே உறங்கினார் குமரகுருபரர்.

கனவில் வந்தாள் பராசக்தி. 'நாளை காலை என் வாகனத்தை உனக்கு அனுப்பி வைக்கிறேன். என் வாகனம் சிறிதுநேரம் உன் வாகனமாகட்டும். சிங்கத்தின்மேல் ஏறிப்போய் சுல்தானிடம் நிலம் கேள். உன் எண்ணம் நிறைவேறும்! என்று சொல்லிவிட்டு மறைந்தாள். பின்னர் உறக்கம் பிடிக்கவில்லை குமரகுருபரருக்கு. விடிவதற்காகக் காத்திருந்தார். விடிந்ததும் ஒரு கர்ஜனை கேட்டது. திகைத்துப் போய்ப் பார்த்தார். அவர் அருகே பிரம்மாண்டமான ஒரு சிங்கம் குழந்தைபோல் சமர்த்தாக உட்கார்ந்திருந்தது. அதன் கழுத்தைத் தடவிக் கொடுத்தார். அதன் முதுகின்மேல் ஏறி அமர்ந்தார்.

சிங்கம் காசி நகர வீதிகளின் வழியே கம்பீரமாக நடந்து சென்று சுல்தான் அரண்மனையை அடைந்தது. கண்டவர் எல்லாம் வியந்து வணங்கினார்கள். சுல்தானும் குமரகுருபரரை வணங்கி வரவேற்றான். அவர் கேட்ட நிலத்தை அன்றே அவருக்கு உரிமையாக ஆர்ஜிதம் செய்து வழங்கினான். சிங்கம் வீரத்தைக் காட்டுவது எதிரிகளிடம் தான். தெய்வீகச் சிங்கங்கள் பக்தர்களிடம் சீற்றத்தைக் காட்டுவதில்லை. மாறாக பக்தர்களை அவை காவல் காக்கின்றன.

சிவ குடும்பத்தில் சிங்கம் மட்டுமா உண்டு? சக்தியின் வாகனம் சிங்கம் என்றால் சிவபெருமானின் வாகனம் காளை. ஆனால் காளையும் சிங்கமும் ஒற்றுமையாக வாழ்கின்றன. முருகன் வாகனம் மயில் என்றால் அதற்குப் பகையான பாம்பைக் கழுத்தில் அணிந்திருக்கிறான் சிவபெருமான். ஆனால் பாம்பும் மயிலும் பகைமை மறந்து அன்போடு இணைந்து வாழ்கின்றன. தெய்வீகம் விரோதங்களை மாற்றி அன்பைப் பரப்புகிறது. சிவபெருமான் தன் இடுப்பில் புலித்தோலைத் தான் ஆடையாக அணிந்திருக்கிறார்.

'பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள்
மாணிக்கமே!
அன்னே நின்னையல்லால் வேறு யாரை நினைக்கேனே?
 
என சிவபெருமான் புலித்தோல் அணிந்திருப்பதைச் சொல்லித் தோத்தரிக்கிறது சுந்தரர் பாடிய ஏழாம் திருமுறைப் பாடல். சிங்கத்தைப் பாதி உருவில் கொண்டு காட்சிதரும் திருமாலை, நரசிங்கம் என்ற நாமம் சூட்டி நாம் வழிபடுகிறோம். 'லட்சுமீ நரசிம்ம மமதேஹி கராவலம்பம்’, லட்சுமி நரசிம்மரே, எனக்குக் கைகொடுப்பாய் என நரசிம்மரைத் துதித்தார் ஆதிசங்கரர். பிரகலாதன் வழிபட்ட கடவுள் செங்கட்சீயமான நரசிங்கம். அவன் தந்தை இரணியன் விந்தையான வரங்கள் கேட்டிருந்தான். அவனை இரவிலும் கொல்ல முடியாது. பகலிலும் கொல்ல முடியாது. எனவே, இரவும் பகலுமற்ற சாயங்காலத்தில் அவன் வதம் செய்யப்பட்டான்.

அவனை உயிர் உள்ளதாலும் கொல்ல முடியாது. உயிர் அற்றதாலும் கொல்ல முடியாது. நகம் வளர்வதால் உயிர் உள்ளது. உணர்வற்றதால் உயிர் இல்லாதது. எனவே சிங்கத்தின் நகத்தால் அவன் கொல்லப்பட்டான். அவனை வீட்டுக்கு உள்ளேயும் கொல்ல முடியாது. வீட்டுக்கு வெளியேயும் கொல்ல முடியாது. ஆகையால் வாயில் படியில் வைத்து அவன் வதம் செய்யப்பட்டான். அவனை மனிதனாலோ விலங்காலோ கொல்ல முடியாது என்பதால் மனிதனுமற்ற விலங்குமற்ற நரசிங்கமாக வந்து அவனை வதம் செய்தார் திருமால்.

'உன் திருமால் எங்கே உள்ளான்?’ என இரணியன் கேட்டபோது 'தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்!’ எனத் தன் பக்தன் பிரகலாதன் சொன்னதைக் கேட்டுத் திருமால் பெரும் பரபரப்பு அடைந்தாராம். பக்தன் கூற்றை நிரூபிப்பதற்காக எல்லா இடங்களிலும் புகுந்து அவர் காத்திருந்தாராம். இரணியன் உதைத்த தூணிலிருந்து உடனே வெளிப்பட்டு அவனை வதம் செய்தாராம். லட்சுமியின் மாமியார் ஒரு தூண்தான் என்று சொல்வதுண்டு! லட்சுமியின் கணவனான திருமால் நரசிம்ம அவதாரத்தில் தூணின் வயிற்றிலிருந்துதானே வெளிப்பட்டார்! அப்படியானால் நரசிம்மத்தைப் பெற்ற தாயார் தூண்தானே?

அந்தத் தூண்தான் லட்சுமிக்கு மாமியார் ஆகும் பெருமை பெறுகிறது! அதுசரி, திருமாலின் மாமியார் யார் தெரியுமா? பாற்கடல் தான்! பாற்கடலிலிருந்து தானே லட்சுமிதேவி தோன்றினாள்! சிங்க வாகனம் பராசக்திக்கு உரியது என்றால் புலி வாகனம் ஐயப்பனுக்கு உரியது. பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவன் பந்தள நாட்டு அரசனான ராஜசேகரன். அவனுக்கு நெடுநாட்கள் குழந்தை இல்லாமல் இருந்தது. ஒருநாள் பம்பா நதிதீரத்தில் இருந்த குழந்தை ஐயப்பனை அவன் கண்டெடுத்தான். குழந்தையின் கழுத்தில் மணி இருந்தமையால் மணிகண்டன் எனப் பெயர் வைத்து வளர்க்கலானான்.

வளர்ப்பு மகன் கிடைத்த நேரம், ராஜசேகரனின் மனைவி ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தாள். அவளுக்கு வளர்ப்புப் பிள்ளையை விடப் பெற்ற பிள்ளைமேல் பாசம் அதிகமாக இருந்தது. ஆனால், வளர்ப்பு மகனான மணிகண்டனுக்கே பட்டம் சூட்ட முடிவெடுத்தார் அரசர். அரசிக்கு அது பிடிக்கவில்லை. தனக்கு உடல் நலக் குறைவு என நாடகமாடி, அரண்மனை மருத்துவரிடம் நோய் குணமாக புலிப்பால் வேண்டுமென மணிகண்டனான ஐயப்பனிடம் சொல்லச் செய்தாள். ஐயப்பன் புலியை வாகனமாகக் கொண்டு புலிமேல் ஏறிப் புலிப்பாலோடு வந்தார் என்று இப்படி மேலும் வளர்கிறது ஐயப்பனைப் பற்றிய புராணக் கதை.

உலக அளவில் புகழ்பெற்ற புலி வேட்டைக்காரர் ஜிம் கார்பெட். இமய மலைத் தொடரில் அமைந்துள்ள குமாவுன் என்ற மலைப் பகுதியில் நைனிதால் என்ற இடத்தைச் சேர்ந்தவர். புலிகளைக் கூர்மையாகக் கவனித்து புலிகளைப் பற்றிப் பல நூல்கள் எழுதியுள்ளார். அந்த ஆங்கில நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை. சுமார் ஆயிரத்து முந்நூறு மனிதர்களைக் கொன்ற பன்னிரண்டு புலிகளை வேட்டையாடிக் கொன்றவர் இவர். அதனால் குமாவுன் பகுதி மக்களால் தெய்வம்போல் கொண்டாடப்பட்டவர். தமிழகத்தில் மாரியம்மன் திருவிழாக்களில் புலிவேஷம் போட்டுக்கொண்டு ஆடுவது என்பது முன்னர் இருந்த வழக்கங்களில் ஒன்று.

உடலெல்லாம் புலிபோல் வரிகளை வண்ணத்தில் தீட்டிக்கொண்டு செயற்கை வாலையும் முதுகின் பின்னால் இணைத்துக் கொண்டு உண்மையான புலிபோலவே உறுமியும் பாய்ந்தும் நடிப்பார்கள் அந்தக் கலைஞர்கள். அத்தகைய காதர் என்ற ஒரு புலிவேடக் கலைஞனைக் கதாநாயகனாக்கி பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய 'புலிக் கலைஞன்’ என்ற சிறுகதை, தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றுவிட்டது. திருக்குறளில் உலவும் சிங்கமும் புலியும் பலப்பல நூற்றாண்டுகளாகப் பயணம் செய்து நம் ஆன்மிகத்திலும் தற்கால இலக்கியத்திலும் கூட உலவுகின்றன.

அளவற்ற சீற்றத்தோடு இரணியனை வதம் செய்து குருதியைக் குடித்த சிங்கத்தைப் பற்றிப் புராணம் பேசுகிறது. சிங்கம் கால் ஊனமானாலும் கூடச் சீற்றத்தில் குறையாதது என்று அதன் இயல்பைக் கண்ணதாசன் எழுதிய ஒரு திரைப்பாடல் படம் பிடித்துக் காட்டுகிறது. பாகப் பிரிவினை படத்தில் சிவாஜி கணேசன் ஊனமுற்ற ஒருவராக வேடமேற்றிருப்பார். அவரை மணம் புரிந்து கொள்ளும் கதாநாயகி பாடுவதாக ஒரு பாடல். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் பி. சுசீலாவின் இனிய குரலில் ஒலிக்கும் அந்தப் பாடல், 'தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ?’ என்ற பல்லவியோடு ஆரம்பிக்கிறது. தொடர்ந்து வரும் வரிகள் இவை:

'சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?
சிந்தையும் செயலும் ஒன்று பட்டாலே
மாற்றம் காண்பதுண்டோ?

புலிக்கு எந்த அளவு அறிவிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், அறிவுள்ளவர்களை நாம் புலியோடுதான் ஒப்பிட்டுப் பேசுகிறோம். 'இவர் கணக்கில் புலி! இவர் ஆங்கிலத்தில் புலி!’ என்றெல்லாம் புகழ்கிறோம். இவர் 'கணக்கில் யானை’ என்றோ 'ஆங்கிலத்தில் குதிரை’ என்றோ நாம் சொல்வதில்லை!
 
(குறள் உரைக்கும்)

- திருப்பூர் கிருஷ்ணன்