நலம் தரும் நவராத்திரிகண்ணில் பாயும் ஒளியோ வைரமணியோ!
காலத்தை முந்திய ஞானமோ விரிகடலோ!
மேளம் கொட்டும் மொழியோ பூவிழியோ!
மேகலை பாடும் ராகமோ
கொடியிடையோ!
கைவிரல்கள் மோனையோ,
பொன்வீணையோ!
கலைச்சுரங்க நாயகியோ காவிய கீற்றோ !
கற்பனை ஊற்றோ கவிகள் கூற்றோ!
காரிருள் விரட்டும் அறிவுச்சுடர் தமிழோ!
கரும்புச்சாறின் சுவையோ மெல்லிதழோ!
கலைவாணியே உனை எப்படி புகழ்வேன்!

வெண்தாமரை அருளால் செந்தாமரை மலரும்!
மன்னாதி மன்னரும் பணிந்திட செய்யும்!
ஆலிலை கண்ணன் அறுசுவை காண
ஆனந்தத்தில் பக்தன் திருமகள் திருவரம்!
மாமகள் புன்னகை குறையாது காக்கும்
மாயவன் பொறுப்பில் மன்னர்கள் களிப்பு!
குறுநகை சிந்திட பொற்காசு உதிரும்
குறுநடை குலமகள் குடிசையில் ஊர்வலம்!
கரையாத செல்வம் திருமகள் கருணை
வரையாத ஓவியம் வறுமை நீக்குவாள்!

வறுமை நீங்கிடில் வெற்றிக்கதவு திறக்கும்
வெற்றிக்கு வித்திடும் சக்தி தத்துவம்!
சாகசம் புரிந்து சமுத்திரம் பருகி
சங்கடம் விலக்கி சாதனை செய்வாள்!
பயமறியாத மனத்தவள் செந்தீ
நிறத்தவள்
பகைவருக்கு காளி பக்தருக்கு பார்வதி!
சத்தியம் காக்க அவதரித்த சண்டி
சகலமும் இயக்கும் ஆற்றல் சக்தி!
காற்றுக்கு உயிராய் உணவுக்கு
வித்தாய்
ஆறாய் நடந்து ஆழியாய் பொங்குவாள்‘

கலை தருவாள் நல்விலை தருவாள்!
கண் அசைவில் கடல் அளப்பாள்!
மண் ஆள்வாள் விண் மீள்வாள்!
பண் இசையில் உயிர் வளர்ப்பாள்!
இயல் தருவாள் நற்செயல் தருவாள்!
இசை தருவாள் மனவிசை வளர்ப்பாள்!
மனம் மகிழ வரும் ஏல வாசமே!
மனையை சிறப்பிக்கும் முத்தாலத்தி கோலமே!
மங்கையர் யாவரும் சக்தி அவதாரம்!
மாண்பு வளர்த்திட வாழ்வு அமுதாகும்!

- விஷ்ணுதாசன்