படித்தோம்! வியந்தோம்!



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

திருமூலர் மந்திர ரகசியம் உடம்பு விலை மதிப்பில்லாத ஆடை. ஆன்மாவை பாதுகாப்பது அவசியம். உயிரின் அவசியத்தை எளிமையாக எடுத்துக்காட்டிய விதம் அருமை. மிகவும் உயர்ந்ததான மனித உடம்பை நாம்தான் போற்றி பாதுகாக்க வேண்டும். உடம்பை நல்ல செயல்களில் ஈடுபடுத்தி நல்வாழ்வு வாழ நல்லனவற்றை செய்வோம். தீயவை அகற்றுவோம். அடுத்தவர் வாழ்வைக் கண்டு பொறாமை கொள்ளாமல், அவதூறு பேசாமல் அடுத்தவர்களுக்கு முடிந்தளவு உதவுங்கள். அறம் செய்து உதவுவோம், உயர்வோம். திருமூலர் மந்திர ரகசியம் காப்போம்.
- A.T. சுந்தரம், சென்னிமலை.

வாசகர் எழுதிய ஆன்மிகப் படைப்புகளை பக்கத்திற்கு பக்கம் வெளியிட்டு வாசகர் பக்தி சிறப்பிதழ் வெளியிட்டிருப்பது இதுவரை ஆன்மிக இதழ்கள் செய்யாத அசத்தலான முயற்சி. வாசகர்களை கௌரவப்படுத்திய தங்களுக்கு அனந்தகோடி நன்றிகள். புரட்டாசியில் அட்டையில் மலையப்பன் தரிசனம் கண்டு மட்டிலா மகிழ்ச்சி அடைந்தோம். பாராட்டுக்கள்.
- அயன்புரம் த.சத்திய நாராயணன்,
- பட்டாபிராம்.

குரு பார்க்க கோடி நன்மை என்ற கவிதையை குரு பெயர்ச்சி சமயத்தில் படிக்க நேர்ந்ததை என் பாக்கியமாகவே கருதுகிறேன். ராஜகிரகத்தின் அருமை பெருமைகளை பொருள்பட விவரித்திருந்தார் விஷ்ணுதாசன். அதேபோன்று குருபெயர்ச்சி நட்சத்திர பலன்கள் 27 நட்சத்திரக்காரர்களுக்கும் பயனளித்திருப்பது சர்வ நிச்சயம்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

வழக்கமான வண்ணத் தொடர்களுடன் வாசகர்களின் எண்ணப் படைப்புகளையும் வெளியிட்டு சிறப்பிதழாக ஆன்மிகம் அனைத்து வாசகர்களும் வாசித்து மகிழ்ந்திருப்பர் என்பது உறுதி.
- ப.மூர்த்தி, பெங்களூரு.

வாசகர் பக்கங்கள் அருமை என்றும் வாசகர் பக்கம் கோவிந்த தரிசனத்தோடு ஆரம்பித்தது நல்ல அருமை. திருமலையப்பனின் கடைக்கண் பார்வை நம்மீது பட்டால் பாவம் பொடிபடும் என கோடானு கோடி பக்தர்கள் பரிதவிக்கையில், சாதாரண சாமானிய ஆவோட்டி மகனுக்கு மலையப்ப சுவாமி தன் முழுப் பார்வையையும் செலுத்தி அருட்பாலித்து வருவது ஆயிரம் நா படைத்த ஆதிசேஷனாலும் சொல்லி முடியாதே. அப்படி இருக்க கோவிந்தனின் பெருமையை உலகறிய உச்சத்தில் ஏற்றி ஆன்மிகம் மெச்சிய விதம் அருமை.
- அரிமளம் இரா.தளவாய் நாராயணசாமி, பெங்களூர்-76.

பகவத் கீதையில் நமது உடல் இயக்கத்தை பற்றியும், சாப்பிடும் ஆகாரங்கள் எவ்விதம் செரிக்கின்றன போன்ற விளக்கங்கள் மிக அருமை. அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.  
- ஆர்.கே.ராமசேஷன், கொத்தாம்பாடி.

வாசகர்(களா)! கொக்கா! ஒவ்வொருவரும் ‘தூள்’ கிளம்பிட்டாங்கய்யா. அட்டையில் திருப்பதி பெருமாள்!  புரட்டாசியின் மகத்துவத்தை உணர்த்த வந்ததுபோலவே இருந்தது. குருபெயர்ச்சிக்குரிய இருபத்தேழு நட்சத்திரங்களுக்கு சுருக்கமான ஒருவருட பலன் பரிகாரம் சற்றும் எதிர்பாராதது. இது குருபெயர்ச்சிக்கு ஒரு ‘போனஸ்’ என்றே சொல்லலாம். எளிய நடை, எளிதில் புரியும் வரிகள் - குருபுகழ் துதி மனதை தொட்டது.
- சுகந்தி நாராயணன், வியாசர்பாடி, சென்னை-39.